Sunday, July 3, 2022

அவள் வருவாளா?"

 நிலாமுற்றம் கதைக்களம்

சித்திரக்கதை..

14-07-21

" அவள் வருவாளா?"


"ஏங்க..ஞாபகம் இருக்குல்ல..

ஆபீஸ் முடிஞ்சு நேரா வீட்டுக்கு வந்துடுங்க..

 நம்ம  மாரியம்மன் கோயிலுக்கு போய்ட்டு,  வழக்கமா போகிற இடத்துக்கும் போய்ட்டு வந்துடலாங்க..கரெக்டா ஆறு மணிக்கு அங்கே இருக்கணும்..லேட்டாக்காதீங்க"..

 நானும் ஜானு குட்டியும் தயாராக இருப்போம்"..வாசலில் வழி அனுப்ப வந்த புவனா..கணவன் தியாகுவுக்கு கட்டளை இட்டுக் கொண்டிருந்தாள்.

 " ஏம்மா..மூணு வருஷமா..இதே நாள் ..இதே நேரம்.. தேவையா..யோசி'..

 சொல்லியபடி ஸ்கூட்டரை கிளப்பினான்.

அன்று ஆடி மூன்றாம் வெள்ளி.. பூஜை முடித்து,ஜானு குட்டிக்கும் சாப்பாடு கொடுத்து தூங்க வைத்தபின்னும், ஏனோ புவனாவுக்கு சாப்பிட மனமில்லை..

 ஏதோ ஒரு துக்கம் தொண்டையை அடைத்தது. ஜானுவையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

 ஜானு குட்டிதான் அவள் உலகம்.

 

 டாண்ணென்று வந்தான் தியாகு.

 கைப்பையும், ஜானுவின் பையையும் அவன் காலுக்கடியில் வைத்தாள்.

 கோயிலிலிருந்து கிளம்பும்போது மீண்டும் கேட்டான் தியாகு..'  குழந்தையை அங்கே கட்டாயம் அழைச்சுக்கிட்டு போகத்தான் வேணுமா?"..

 அவள் மெளனம்.. அவனுக்கு புரிந்தது.

 அதோ..மதுரைக்கு செல்லும் ரயில் எப்போதும் போல அந்த இடத்தில் சிக்னலுக்காக காத்துக் கொண்டிருந்தது.

 ஊருக்குள் செல்லும் பலர் ,இங்கேயே வண்டியிலிருந்து குதித்து இறங்கி நடையைக் கட்ட ஆரம்பிப்பார்கள்.


 புவனாவும் தியாகுவும் கூட இப்படித்தான். ஸ்டேஷன் சென்று வீட்டுக்கு போகும் நேரத்தை விட,இந்த வழி சுலபம் என்று குதித்து நடக்க ஆரம்பித்து விடுவார்கள்..


அங்கே வந்து நின்றதும்.புவனாவின்  நினைவு பின்னோக்கி நகர்ந்தது.


 நான்கு வருடத்துக்கு முன் , இதே போல ஒரு இரண்டாம் ஆடி வெள்ளிக்கிழமை

 மதுரைக்கு செல்லும் அந்த ரயிலில் , புவனாவும் தியாகுவும் தங்கள் இறங்கும் இடம் வரக் காத்திருந்தார்கள். அன்று ஏனோ கூட்டமே இல்லை.

 

 அப்போது ஒரு குழந்தையின் அழும் குரல் எங்கிருந்தோ கேட்டது.

 சத்தம் வந்த அடுத்த பெட்டி நோக்கி நடந்தார்கள். யாருமே இல்லை ..ஒரு பிஞ்சுக் குழந்தை மட்டும் அங்கே.

 ' யாருங்க அங்கே..குழந்தை அழுகிறதே..வந்து பாருங்க..'..

 அவர்கள் இருவருக்கும் பதில் சொல்ல யாரும் அங்கில்லை..

குழந்தையை அங்கே தனியாக விடவும் மனமில்லை.

" இங்கே இறங்க வேண்டாங்க..ஸ்டேஷன்ல போய் இறங்கலாம். அதுவரைக்கும் இந்தக் குழந்தையோட இருக்கலாம். அவங்க அப்பா இங்கே தான் இருப்பாங்க"


வண்டியிலிருந்து இறங்கி, ஸ்டேஷன் மாஸ்டர் ரூம் நோக்கி நடந்தார்கள்.


தியாகு ரயில்வே பணியில் இருப்பதால், அங்கு ஸ்டேஷன் மாஸ்டரிடம் விவரத்தை சொன்னான். 

" பச்சிளங் குழந்தை சார். எங்க வீட்டுக்கு எடுத்துட்டு போறோம். யாராவது வந்து கேட்டால்,எங்க வீட்டுக்கு அனுப்புங்க..'..

குழந்தையை எடுத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார்கள்.


ஜானு என்ற பெயர் சூட்டி,அந்த வீட்டில் ஜம்மென்று வளர்ந்தாள்.

குழந்தையில்லாத அவர்கள் வீட்டில், கொஞ்சி விளையாட ஒரு ஜானு கிடைத்த மகிழ்ச்சியில் தியாகு புவனாவின் நாட்கள் பறந்தது..


போலீஸ் ஸ்டேஷனுக்கு பல முறை அலைந்தது தான் மிச்சம். குழந்தையைக் கேட்டு யாரும் வரவே இல்லை.


ஆனாலும், வருடா வருடம் இந்த நாள், குழந்தையைத் தூக்கிக் கொண்டு ரயில் வந்து நிற்கும் நேரம் வந்து விடுவாள்.

ஜானுவைப் பெற்ற தாய் வந்து காத்திருப்பாளோ என்ற ஒரு உணர்வுதான் காரணம்..


இன்றும் அதே போல வந்தாள்.

யாரும் அங்கே காணவில்லை..

அந்தி மயங்கும் மாலையில், தன் வாழ்வின் ஒளி மங்கி விடுமோ என்ற பயத்தில் இருந்தாள் புவனா..


ரயில் கிளம்பத் துவங்கியது.

குழந்தையை இறுக்க அணைத்தபடி

 வேக வேகமாகத் திரும்பி வந்தவள்..நிம்மதி பெருமூச்சுடன்..' அங்கே யாரும் இவளைத் தேடி வந்து நிக்கலைங்க' ..

 சந்தோஷமும் நிம்மதியும் கலந்த கண்ணீருடன் நின்றாள் புவனா..இங்கே..

 

 

அங்கே..

கிளம்பிய ரயிலின் பெட்டியிலிருந்து இரண்டு கண்கள்..ஆனந்தக் கண்ணீரில்..


வளர்ப்பு அம்மாவின் தோளில் இருந்து தன்னை  திரும்பிப் பார்க்காத , ஜானுவுக்கு கை காட்டியபடி..


அகிலா ராமசாமி

எண்; 1892

என்ன_பொருத்தம்

 #படம்_பார்த்து_க(வி)தை

#பதிவு_1


#என்ன_பொருத்தம்


மெட்ரோ ரயிலில் சந்திப்பு

மேட்ரிமோனி எதுவும்  இல்லாத ..

மேட்ச் மேக்கர்ஸ் மூக்கு நுழைக்காத..

மனசு மட்டுமே பொருந்திய மேரேஜு..


Match நல்ல match என்று

அட்சதை போட்டு வாழ்த்து..


மூட்டையும் கட்டியே...

"Mail" ல்  ஊரை விட்டு கிளம்பியாச்சு..

"Express" போல வாழ்க்கை..

"Duronto" வேகத்தில் நிற்காமல்..நீர் ஓட

துரத்தித் துரத்தி நானுமிங்கே..


March past ல் ஓடி ஓடி..என்

மூச்சும் நின்னுடும் போல இருக்கே..


"சப்தபதி'யையே..

"சதாப்தி" வேகத்தில் சுத்தினவரு நீரு..

இப்போ..சஷ்டி 

அப்தபூர்த்தி வரப்போகுது..

அட்டகாசம் ஓயலையே..


 பைக்கை தேடி ஓடுறீரே..

 கைப்பையைத் தூக்கி ..

 வைஃப் நானு ஓடியாறேன்..

 லைஃப் பார்ட்னரே..நில்லும்மையா..


மனசுக்குள்ளே சிரிச்ச மச்சான்.

மனக்கணக்கு  போட்டாரே..


" பாரியாள்" உன் பாதம் நோக..

பர்த்தா நானும் விடுவேனா..?


வேகமாக போவேனே..

வாகனத்தில் வருவேனே..

பாதி தூரம் நீ கடக்குமுன்னே..

பில்லியனில்.. உன்னை அமர வைப்பேனே..😀😀


எப்படி என் ஐடியா..என்றே..

ஐயாவும் ....கேட்க..

அசடு ரொம்ப வழியாதீரும்..

ஆடு ஒண்ணு பாக்குதங்கேனு..

அம்மணியுஞ் சொன்னாளாம்..

சென்னை

 #ஸண்டே_ஸ்பெஷல்

#சென்னை

காவேரிக்கரையில் பிறந்து..கூவம் நதிக்கரை வந்து சேர்ந்தபோது குழப்பம் தான் ரொம்ப அதிகம்.


படபடக்க வைத்த பட்டிணம் தான்..கூட்டுக்குள் புழுவாய் இருந்த என்னை..பட்டாம்பூச்சியாய் பறக்க வைத்தது நம்ம மெட்ராஸ் தானுங்கோ..


குரோம்பேட்டை ராதா நகருக்குள் ஒரு #மினி_இந்தியா

#பாரத_விலாஸ்


 குருவிக்கூடு வீடு தான் எங்கள் சொர்க்கம்.

சுருள் மாடி வீடு  ..சிம்ப்பிள் அடையாளம்.

மூன்றடுக்கு மாடி..


One India அப்போதே கண்டேன் அங்கிருந்த ஒன்பது வீடுகளில்..


சுந்தரத் தெலுங்கு கேட்கும் ஒரு வீட்டில்..

மலையாள மணம் வீசும் ஒரு வீட்டில்

மார்வாடி ஆண்ட்டியின் சப்பாத்தி சப்ஜியின் மணம் இன்னொர் வீட்டில்..

தம் ஆலு காந்தமாய் இழுக்கும் ஒரு வீட்டில்..

பிஸுபேளா..ப்ளேட்டில் தருவர் ஒரு வீட்டில்..

அன்புக்கு பஞ்சமில்லை..

பயமொன்று இருந்ததே இல்லை..


#கற்றதும்_பெற்றதும்_ஏராளம்.


வீடு பெரிசா இருந்தாலும் மனசு சின்னதாக இருக்கும் இந்த உலகத்தில்..

வேலைக்கு போகும் அம்மாக்களின் குழந்தகளை எந்த வித எதிர்ப்பார்ப்புமின்றி தன் குழந்தைகள் போல பார்த்துக் கொண்ட வீட்டுக்கார மாமியின் #வாத்ஸல்யம்.


பாட்டியின் புடவைத் தலைப்பில் ஒளிந்திருந்த நாட்கள் போய்..

வாழ்க்கைப் பாடம் கற்றுத் தந்த பட்டணம் இது.. என் வாழ்வில் #பட்டறையாய்..


பரீட்சையில் மார்க்கு வரதுக்கு முன்னாடி..ராமாஞ்சனேயர் கோவிலும்..ஸ்டேஷன் ரோட் பிள்ளையார் கோயில் என வளர்ந்தது #பக்தி.


மாம்பலம் போவது என்றால் #Manhattan போன ஸ்ரீதேவி மாதிரி..ட்ரெயின் ஏறி..foot board நின்று காற்று வாங்கிய #சந்தோஷம்.


சங்கீதம் என்பது ஸ்வரங்களின் ஜாலம் மட்டுமல்ல...அது ஒரு #தியானம்

என்று சொல்லிக் கொடுத்த வீணை மாமி.


வடாம்களுக்கு காவலோடு..விடலை அக்கா அண்ணாக்களுக்கு.. மெசெஞ்சர்..ஸ்பை..எல்லாமே எங்க வாண்டு க்ரூப்பு தான்.

அந்தக் கால 'அஞ்சலி' படம் போல எங்கள் அட்டகாசமான கூட்டம்.


நட்பு வட்டம்..நட்பு சங்கிலி..துவங்கியது இங்கே தான்.


Restaurants அப்போதெல்லாம் ஒன்று கூடகிடையாது..swiggy க்கு எதிர்பாக்காது ரெஸ்ட்டே எடுக்காமல் ..

அம்மாக்களின் கைமணத்திலும் காரியங்கள் கற்றபடி #வளர்ப்பு.


'வெற்றி'யின் வாசலில் அடிக்கடி நின்றதாலோ என்னவோ..

MIT..மண்ணைக் கூட மிதிச்சதில்லை.


முக்கியமாக..

வாழ்க்கையில் கடல் தண்ணீர் தவிர..உப்பு தண்ணீர் என்பது பைப்பிலும் வரும் என்ற உண்மை புரிய ..

ஒரு குடம் நல்ல தண்ணிக்கு...நடையாய் நடந்தது...தண்ணீர் சேமிப்புக்கு வித்தானது..


கிரோம்பேட்டை ..குறும்புடன் கூடிய கதம்ப வன வாச எண்ணங்களுடன் இன்றும் மனசில் .


எத்தனை வரவேற்புகள், எத்தனை வழியனுப்பதல்..கண்ட இந்த எங்க குடும்பத்து ஸ்டேஷன் இந்த கிரோம்பேட்டை ஸ்டேஷன்.


என் வாழ்க்கைப் பயணமும் தடம் புரளாமல்  சில நேரம் கூட்ஸ் வண்டி போலவும், சில நேரம் தடக் தடக் பயணமாக இருந்தாலும் இலக்கை அடைந்தே தீரணும்னு திடம் தந்த புடம் போட்ட இடம்.


புலம்பலில்லை..பொழுது போனதே தெரிந்ததில்லை.


க்ரோம் லெதர் கம்பெனிகள் இருந்ததால்  இந்தப் பெயர் வந்தது என்றால்..அவர்கள் தள்ளி விட்ட கழிவு நீர் உடலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தியது ஒரு காலத்தில் என்பது ஒரு வருத்தமே..இப்போது இல்லை என்று நினைக்கிறேன்.


கிரோம்பேட்டை க்கு #கும்மி அடித்து ஒரு #குறவஞ்சி பாடிட ஆசையும் தோணுது..

அமானுஷ்யமா

 அமானுஷ்யமா..தெரியவில்லை..

எனக்கு ஒரு அனுபவம் என்றே சொல்வேன்


1993. டிசம்பர் கடைசியில் ஒரு மத்தியானம்.

சுருக் சுருக்னு லேசா வலி.. ஒண்ணும் புரியல.


இன்னும் 15 நாளிருக்கு டெலிவரிக்கு என்று இரண்டு நாள் முன்னாடி கூட டாக்டர் சொன்னாரே? கொஞ்சம் கலவரம்.


அம்மா ஆஃபீஸ் போய்ட்டதால் துணைக்கு இருந்த சித்தி ஜீரகக் கஷாயம் கொடுத்தும் ஒண்ணும் முடியல.


அப்போதெல்லாம்..அஸ்தினாபுரத்திலேர்ந்து ஒரு ஒரு ஆட்டோ கிடைக்கணும்னா..உலக மகா கஷ்டம்.

டிராவல்ஸ் எல்லாம் ரொம்ப கம்மியும் கூட

ஒரு வழியா ஒரு ஆட்டோ கிடைக்க குலுக்கலுடன் ஒரு பயணம்.


MIT gate ..மூடினால் திறக்கவே திறக்காது. எங்க சித்தி எல்லா ஸ்லோகமும் சொல்லிண்டே வர..கேட்ட வரம் கிடைத்தது .'கேட்டு'ம் திறந்தது.


குண்டும் குழியும் ரோட்டில்  ஆடி ஆடி..ஒரு வழியாக st.Thomas Mount gate வந்தாச்சு. பழவந்தாங்கலில் இருக்கும் ஒரு மகப் பேறு மருத்துவமனைக்கு போகணும்.


அங்கே..இம்மி கூட நகர முடியாமல் அப்படி ஒர் traffic. gate repair என்பதே நாங்கள் இருந்த தூரத்திலிருந்து அறிய ஒரு மணி நேரம் ஆச்சு. நேரம் கடக்க..கடக்க..படு பயம் .


இதுவரை போன போதெல்லாம் பழவந்தாங்கலுக்கு train ல போய் இறங்கி அங்கேர்ந்து பொடி நடையில் போய்டுவேன். இந்த Mount வழி ஆட்டோக்காரருக்கும் தெரியல.


சைடில் ஒரு ஆட்டோ.. அதுக்குள்ள ஒரு மத்திய வயது பெண்மணி. சித்தியுடன் பேச்சு கொடுத்தார்கள். 

நிலைமை பார்த்து ..' ஒண்ணும் கவலைப் படாதீங்கோ..அந்த அம்பாள் ஒரு குறையும் வெக்க மாட்டா..கேட்டு திறந்திடும் ..என் பின்னாலேயே வந்துடுப்பா..நான் வழி காண்பிக்கிறேன் என்று சொன்னபடி.


சிறிது நேரத்தில் வண்டிகள் நகரும் சலசலப்பு. இன்னிக்கு திறக்கவே திறக்காது என்ற கேட் திறந்து..அந்த மாமியின் ஆட்டோ முன்னே..நாங்கள் பின்னே.

கொஞ்ச தூரம் பயணம் அவர்கள் வழிகாட்டலில். 

ஆட்டோவிலிருந்து தலையை வெளியே நீட்டி..' இதோ ஆஸ்பத்திரி அடுத்த கட்டடம் தான்.

பொண்ணு பிறந்தா மறக்காம 'ராஜேஸ்வரி' நு.பேர் வெச்சுடுங்கோ காற்றில் மிதந்த பெயர்.


thanks maami என்று தலை நீட்டி என் சித்தி சொல்ல ஒரு நொடியில் எந்த சந்தில் நுழைந்தது் அவர்கள் சென்ற ஆட்டோ புரியலை..


இதெல்லாம் சரி.. 

புண்யாஹ வாசனம் நாள்.

மாமியார் வந்தார்கள் ஊரிலிருந்து. 

அம்மா கேட்டாள் ' மாமி பேத்திக்கு என்ன பேர் வைக்கப் போறேள்.?

அவள் சொன்ன பெயர்..?

' ராஜேஸ்வரி'..!!!

( இப்போது போல ஃபோனில்லை..அம்மாவுக்கு நடந்த எந்த விஷயமும் தெரியாது..அவர்கள் பழவந்தாங்கல் போனது கூட இல்லை..

எப்படி?

இன்னும் கேள்வி என் மனசில் உண்டு?

கூட்ஸ் வண்டியிலே..ஒரு காதல் வந்துருச்சு

 கூட்ஸ் வண்டியிலே..ஒரு காதல் வந்துருச்சு


 '25 தானே.'.

இல்ல்..லை 32..

டாட்டா காட்டி முடித்தபின் ..தொடங்கும் டிஷ்யூம்..டுஷ்யூம்..தோழிகளுடன் எப்போதும்.

என்னிக்கு ஒழுங்கா எண்ணி இருக்கோம் இந்த பாரம் ஏற்றி..ப்ளாட்ஃபார்மில் ஊர்ந்து செல்லும் கூட்ஸ் வண்டி பெட்டிகளை

  tally ஆனதே இல்லை..

சில இடத்தில் பாரம் குறைக்கப்படும்..சில இடத்தில் ஏறும்..

சில நேரம் வேகம்..சில நேரம் ஊரல்..

வண்டியும் சொல்லும் வாழ்க்கைப் பாடம்..

அரைக்கிழம் ஆனபோதும்..

ஆசை விடுவதில்லை..

ஆடி அசைந்து செல்லும்..

பெட்டிகளின் கணக்கு

பெரும் புதிரே என்றுமெனக்கு..

ஒண்ணு.இரண்டு ..மூணு..

எண்ணத் தொடங்க..

அம்மா..ப்ளீஸ் என்றாள்..

அவளுக்கென்ன தெரியும்..

அதிலிருக்கும் மகிழ்ச்சி..

அடப்போடா..

யார் பார்த்தால் என்ன..

தொடர்ந்தேன்..

நாலு..அஞ்சு..ஆறு..


கடைசி பெட்டி போயாச்சு..கணக்கு மட்டும் இன்னும் முடியல..போன வண்டியும் திரும்பி வராது..

கடைசி மாசமும் முடிவுக்கு வரப்போக..

கடந்த நாட்கள் கசப்போ..தித்திப்போ..

போனது போகட்டும்..

புதுசாய் துவங்குவோம்..

புது வருடக் கணக்கை

Advance happy new year friends

எங்கே அவள் என்றே மனம்..

 எங்கே அவள் என்றே மனம்..


ஏம்மா..டல்லா இருக்கே..ஊருக்கு போணுமேன்னா..நான் தான் winter vacation ல வரப் போறேனே..சமாதானம் சொல்ல..அதெல்லாம் இல்ல ..எனக்கு ஒரே ஒரு குறை..கம்ப்யூட்டர் use பண்ணவே தெரியலையே எனக்கு..சின்ன குழந்தைகளுக்கு தெரியறது கூட எனக்குத் தெரியலையே..so இதுதான் உன் mood off க்கு reason aa..ஏதாவது செய்யலாம் இரு.. சொல்லிட்டேனே தவிர..இன்னும் ஒரு நாள் தான் இருக்கு ஊருக்கு கிளம்ப..

ஆஃபிஸிலிருந்து வந்த பிராண நாதர் கிட்ட சொன்னேன்..ஜுஜுபி matter ..அந்த பழைய laptop ஒண்ணு இருக்கே ..அதை எடு.. சொல்லிக் கொடுத்துடலாம்.. மூணு மணி நேரம் class. இந்தாங்கோ..இனிமே இது உங்க laptop..enjoy ..என்றார்.


அம்மாவுக்கு ஒரே குஷி. சொன்னதெல்லாம் நோட்ஸ் எடுத்து வெச்சிண்டா.. doubt வரச்சே ஃபோன் பண்ணி கேட்டுக்கறேன்..ஊருக்கு போகறதுக்குள்ளே செம்ம practice.

ஊருக்கு போய் , laptop திறந்து நோட்ஸ் படி எல்லாம் step by step follow பண்ணி..

school student மாதிரி ஆனா..

சாப்பிட்டியா ல ஆரம்பிச்சு..எல்லாம் மெயில் தான்..எல்லாருக்கும் மெயில் மெயில் தான். ஓய்வூதியம் பத்தின எல்லா rules ம் அவள் விரல் நுனியில்.consultancy through mail தான்.

திடீர் திடீர்னு சந்தேகம் வரும் பொது எனக்கு ஃபோனெ வரும்..எதோ cookies..cookies நு வரதே..என்ன பண்ணனும்..அது Dehradun famous இல்லயோ..என்பாள்.its time to clean your PC ..என்ன பண்ணலாம்..அம்மா..விட்டுடு அதல்லாம் என்பேன்.


எல்லா நியூஸ் பேப்பரும் படிச்சுடுவா..முதல்ல பார்க்கிறது bullion rate. local, national, international news எல்லாம் படிச்சுட்டு எனக்கு update பண்ணிடுவா..அதோட ரொம்ப முக்கியம்.. சீரியல் எல்லாம் பாக்க கத்துண்டாச்சு..you tube ல எல்லா ஸ்லோகம் கேட்பது..Skype ல வாயேன்..பார்த்து ஒரு வாரமாச்சு என்பாள்..இப்படி வாழ்க்கையில் ஒரு புது தெம்போடு ஓடிக் கொண்டிருந்த நேரம்..

MND ( motor neuron disease) என்ற எமன்..

வரவேற்பில்லாமலே வீட்டில் நுழைந்தான்..

பேசித் தள்ளிய அம்மா..லேசா குழற ஆரம்பித்தாள். தண்ணீ கூட குடிக்க முடியல இப்பொ எல்லாம். ..கொஞ்ச வேலை பண்ணாலே ரொம்ப weak ஆ இருக்கென்றாள்..பட பட பேச்சு..குடு குடு ஒட்டம்..எல்லாவற்றையும் தூக்கிப் போட்ட கொடுரன் இந்த MND.

மருந்தே இல்லா..குணமே ஆகாத ஒரு அரக்கன்..சொட்டு சொட்டா அம்மா சுரத்தில்லாமல் போனாள். பேச்சு நின்றது.. பேச நினைத்ததெல்லாம் எழுதி எழுதி காண்பிப்பாள். சகோதரிகளுடன் பேசும் சந்தோஷம் நின்று..எல்லாருடனும் இறுதி மூச்சு வரை மெயிலில் தொடர்பு கொண்டாள்..

் அவள் கணினியில் எழுதி அனுப்பிய மடல்கள்..அதில் அவள் அன்பு, வாஞ்சை எல்லாம் கொட்டித் தீர்த்த விதம்..

இன்றோடு மூன்று வருடம் ஆச்சு..அவள் என்னை விட்டுப் போய்..

ஆனால்..இன்னும் எழும் கேள்வி..எந்த உந்துதல் அவளைக் கணினி கற்க வைத்தது? ஏன் இந்த அவள் முதல் முயற்சி ஒரு முடிவுக்கா..

விடை தெரியல..

மந்திரக்கதை

 #நிலாமுற்றம்_கதைக்களம்..

#மந்திரக்கதை..


#வள்ளி_காட்டிய_வழி


மதியம் 1 மணி..

செங்கல்பட்டிலிருந்து பீச் வரை செல்லும் மின்சார ரயில் ..தாம்பரம் ஸ்டேஷனில் சிறிது நேரம் இளைப்பாற நின்றது..


"வள்ளி..ஓடிப்போய் அங்கன பைப்பிலேர்ந்து இந்த பாட்டில்ல தண்ணி ரொப்பியாந்துரு..பக்கத்திலே குந்திகினு இருப்பாரே. அந்த சமோஸா விக்கற அண்ணன் கிட்ட ரெண்டு வாங்கியாந்துரு..'


வண்டியிலிருந்து இறங்கி ஓடினாள் வள்ளிக் குட்டி..


வள்ளிக்குட்டி..

அவள் அம்மாவுடன் தினமும் இதே ட்ரெயினில் காலையிலிருந்து இரவு வரை..அவள் அம்மா வேணியுடன்  பழ வியாபாரம் செய்வாள்.


இந்த நேரம் விட்டால் அப்புறம் சோறு தின்ன முடியாது..இந்தா..துன்னு..

வேணி அவள் தட்டை நிரப்பிக் கொடுக்க..


"அம்மா..தாயே..வயிறு பசிக்குதம்மா.."..


ஒரு வயதான தாத்தாவின் இந்தக் குரல்..

வள்ளிக் குட்டியை என்னமோ செய்தது..


கடகடனு எழுந்தவள்..

' இந்தாங்க தாத்தா..சாப்பிடுங்க'..

அவள் குரலில் இருந்த கருணை..

' ரொம்ப நன்றி கண்ணு..உன்னோட சோறைக் குடுத்துட்டியே கண்ணு'..

அவர் சொல்ல..

ஐயோ தாத்தா..எங்கம்மா வேற சோறு எனக்கு தரும்..உங்களுக்கு தெரியாதா என்ன?..ஒவ்வொரு 🍛 அரிசியிலும் அவரவர் பெயர் இருக்குமாம் உண்மையா தாத்தா..உங்களுக்குத் தான் இது..'

துள்ளிக் கொண்டு ஓடி விட்டாள்.


ஏம்புள்ள சோறு எங்க?..கேட்ட அம்மாவுக்கு அதோனு..தாத்தாவைக் காட்டினாள்..


மின்சார ரயில் கிளம்ப.." அக்கா..சூப்பர் டேஸ்ட்க்கா.." கொய்யாப்பழத்தை அங்கிருந்த பயணிகளிடம் நீட்டிக் கொண்டிருந்தாள்.

 அந்த ரயிலில் லேடீஸ் கம்பார்ட்மெண்டில் பலருக்கும் வள்ளி செல்லக் குட்டி..

பிறந்தநாள், வீட்டு விசேஷம் என்றால்..வள்ளிக்கு குட்டி குட்டியாக பரிசும் உணவும் கொண்டு வந்து தருமளவுக்கு.. வள்ளி அந்த ரூட்டில் பிரசித்தம்.


"அம்மா..கொஞ்சம் ஜாஸ்தி சோறு வைம்மா..இன்னிக்கும் அந்த தாத்தா வந்தாங்கனா..தரலாம் இல்ல.."..

வேணியும் அவளும் அரக்க பரக்க ரெயில் ஏற..


தாம்பரம்..

" அம்மா..பசிக்குது'..

அதே தாத்தா..புளி சோறு கை மாற..அவர் ப்ளாட்பார்மில் நடந்து ..ஒரு இடத்தில் உட்காருவதைப் பார்த்து..

அம்மா..இரு வரேன்..

ஓடினாள்.


" இந்தாப்பா.சாப்பிடு'..

தாத்தா..தன் கையிலிருந்த தட்டை..அங்கே நடக்க முடியாமல் வண்டியில் உட்கார்ந்திருந்த ஒரு பையனிடம் கொடுப்பதை பார்த்தாள் வள்ளி..


மூச்சு வாங்க ஓடி வந்தவள்.." தாத்தா..உங்களுக்கு பசிக்குதுனு சொன்னீங்களே?'..கேட்க..

"இது என் 👦 பையன் வீரா.. என் மனைவி இவன் பொறந்ததுமே கண்ணை மூடிட்டா..பிறவியிலேயே கால் ஊனம்'..

அவர் சொல்வது பாதி புரிந்து பாதி புரியாமல் இருக்க..

அங்கே ஒரு கப்பில் அரிசியும் , ஒரு சில கண்ணாடி குமிழ்களும், கீ செயின்களும் இருப்பதைக் கண்டாள்..


வண்டி விசில் கொடுக்கவே. ஓடிப் போய் ஏறிக் கொண்டாள்..

அடுத்தநாள்.. தாத்தாவின் தட்டை நிரப்ப..

"வள்ளி..இந்தா கண்ணு.. " நடுங்கிய கைகளுடன் அவர் அவள் கையில் எதையோ திணிக்க...


ஒரு கீ செயின்...அதன் நுனியில் கண்ணாடிக் குமிழில்.வள்ளி என்று அவள் பெயரை சிவப்பு நிறத்தில்  எழுதிய   🍛 அரிசி ஒன்று..


" இக்குணூண்டு அரிசிக்குள்ள இது  என் பேரா..தாத்தா?..துள்ளிக் குதித்து ஓடினாள்.


"அக்கா அக்கா இங்கே பாருங்களேன்..இதுல என் பேர் இருக்கு..'..

அந்தப் பெட்டிக்குள் எல்லாருக்கும் காட்டி மகிழ்ந்தாள்..


தாத்தாவும் வள்ளியும் இப்போ ரொம்ப நெருக்கமானார்கள்..


" தாத்தா..ஒரு அரை மணி நேரம் இவளைப் பார்த்துக்கோங்க..நான் ஒரு சீட்டுப் பணம் கட்டிட்டு ஓடியாந்துடறேன்..'..

தாம்பரம் ப்ளாட்பார்மில் வள்ளியை விட்டு ஓடினாள் வேணி.


 "வீரா அண்ணா..நான் சொல்ற பேரெல்லாம் அரிசில எழுதித் தரீங்களா?'..

கீதா,ராணி,பாக்யா,சிவா..

பெயர்களை அவள் அடுக்கிக் கொண்டே போக.....


கடகடவென்று வீரா ஆசையாக செய்து கொடுத்தான்..


அவள் அம்மா வர..ட்ரெயினில் ஏறியவள்..

கீதாக்கா..இந்தாங்க..உங்களுக்கு..


அங்கே உட்கார்ந்திருந்த அவள் ரயில் ஸ்னேகங்களுக்கு கொடுக்க..

" ஐயோ..எவ்வளவு அழகா இருக்கு?..


ஹேய்..வள்ளிக் குட்டி..இந்தா..'..

அவள் கொடுத்த அரிசி கீ செயினுக்கு ஆளாளுக்கு ஐந்து பத்து ரூபாய் என்று கொடுக்க..

'வேண்டாங்க்கா..' என்று நெளிந்தவள்..கை நிரம்பியது.


அடுத்த நாள்..

எப்போதும் போல தாம்பரம் ஸ்டேஷன்..

தட்டில் சோற்றுடன்.. தனக்கு கிடைத்த பணத்தையும் சேர்த்து கொடுத்தாள்..

" உன் கையால சோறு போதும்மா..காசு வேணாம்'..

தாத்தா சொல்ல...


" ஒவ்வொரு அரிசியிலும் அவங்கவங்க பேரு எழுதித் தாங்க வீரா அண்ணா..'..


பழத்தோடு இப்போது அவள் அரிசி கீசெயினுக்கும் ஏக டிமாண்ட்..


உட்கார்ந்த இடத்திலிருந்து..வீரா பணம் சம்பாதிக்க ஆரம்பித்தான்..அவனுக்கு கை வந்த கலை கொண்டு..


ஆனால்..இன்னும் தாத்தாவுக்கு வள்ளிக் குட்டியின் கையிலிருந்து சோறு வாங்கிச் சாப்பிட்டால் தான் திருப்தி..


"தேவதை..ஒரு தேவதை..பறந்து வந்தாள்.."

எங்கோ ரேடியோவில் பாட்டு ஒலித்துக் கொண்டிருந்தது..


அகிலா ராமசாமி

எண் 1892

சும்மா..ஒக்கார முடியல..

 சும்மா..ஒக்கார முடியல..


காபி டீ போண்டா கூவல் ஒருபுறம் .

காள்  காள் கத்தும் சத்தம் மறுபுறம்


சிணுங்கும் செல்ஃபோன்  காதோடு ஒருபுறம்

சின்ன குழந்தை செல்லம் மறுபுறம்


சீனியர் சிட்டிசன் சீற்றம் ஒருபுறம்.

சீறிப்பாயும் சிறுபிள்ளத்தனம் மறுபுறம்..


குறட்டை விட்ட் கூட்டம் ஒருபுறம்.

கூவி வித்ததை கொறித்தது மறுபுறம்..


ஊர்க்கதை பேசிய உறவுகள் ஒருபுறம்..

உப்பு பெறாததை ஊதியது மறுபுறம்..


வயதான அம்மா..வாஞ்சை ஒருபுறம்..

வாயத் திறவென மிரட்டல் மறுபுறம்..


ஆபீஸ் வேலையில் ஆழ்ந்தோர் ஒருபுறம்..

அனந்த பத்மனாப சயனம் மறுபுறம்..


விடாது ஒலித்த ஒம் பூர்புவஸ்வ ஒருபுறம்..

விட்டதை பேசியே வீணான காசு மறுபுறம்..


வருமான வரி விவரித்தல் ஒருபுறம்

வரிசையில் நிக்கணுமே கவலை மறுபுறம்


அடைபட்ட இருக்கையில் நெளிந்தது ஒருபுறம்..

கொட்டுதா மழை யங்கே..கேள்வி மறுபுறம்..


சென்ட்ரல் வந்ததும்

சிதறும் இக்கூட்டம்..

சுவாரசியம் என்றும்..இந்த

சிக்கு புக்கு ரயில் பயணம்

Retro

 #ஸண்டே_ஸ்பெஷல்

#ரெட்ரோ..


' இந்தாங்கோ..இன்னிக்கு வந்த கடுதாசி..'..


பாட்டி தருவாள்.


கடிதத்தை  பிரித்து படித்து..தாத்தா  சொல்ல்ப் போகும் விஷயத்திற்காக ஆவலுடன் பாட்டியுடன் சேர்ந்து நாங்களும் காத்துக் கொண்டிருப்போம்.


பாட்டிக்கு படிக்கத் தெரியாது என்றெல்லாம் இல்லை... அது என்னவோ ஒரு discipline. 

"வெள்ளிக்கிழமை ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸ் ல  விசாலம் வராளாம்...'

இந்த வாசகம் கேட்டதும் என் காதில் தேன் வந்து பாயும்..

ஏன் தெரியுமா..?..


விசாலம் வந்தா என்ன..விச்சு வந்தா என்ன?..

நமக்கு ரயில்வே ஸ்டேஷன் போகறதுக்கு ரொம்ப பிடிக்கும்..


திருச்சி ஜங்ஷனுக்கு  டாண்ணு அஞ்சு மணிக்கு முன்னாடியே ட்ரெயின் வந்துடும்..


மெளனராகம் தங்கை மாதிரி..' தாத்தா..தாத்தா..நானும் உங்க கூட ஸ்டேஷனுக்கு வரேனே'...


" காலங்காத்தால..பனியில எதுக்கு?..

பாட்டி இழுக்க..

திருச்சில என்ன பனி..அவ வரட்டும்..

தாத்தா..green signal கொடுக்க..


வீட்டுப்பாடம் எல்லாம் சூப்பரா முடிச்சு வைச்சு..

நாலு மணிக்கே எழுந்து குளிச்சு முடிச்சு..fresh aa ready ஆகி..தாத்தாவோட 🚲 சைக்கிள் பின்னாடி உட்கார்ந்து..அப்படியே ஜில்லுனு அடிக்கும் காற்றை எஞ்சாய் பண்ணி..


ஆஹா..


தாத்தா 🚲 ஸ்டாண்ட்ல வண்டியை நிறுத்திட்டு வரதுக்குள்ள..ஓடிப் போய் பிளாட்பார்ம் டிக்கட் வாங்கிண்டு வர..

" கடவுளே..கடவுளே..ஒரே ஒரு goods வண்டி வரணுமே..' 

ஒண்ணு ரெண்டு மூணுனு எண்றதில இருக்கற சுகம் இருக்குப் பாருங்க..

அன்னிக்கு ஸ்கூலில் போய் பெருமையா சொல்லிக்கலாமே..


காஃபி காஃபி..இட்லி வடை பொங்கல்..

கமகமனு மூக்கைத் துளைக்கும்.


கறந்த பாலில் ☕ பாட்டி சுடச் சுடச் காஃபி கலந்து வெச்சிருப்பா..மனசு..சமாதானம் பண்ணும்.


ஆனா..அந்த இட்லி வடை பொங்கல் வாசனை இருக்கே..

மூக்கு ..மூணு முழம் நீளும்.. ஜொள்ளு..ஜொள்ளு..ஜொள்ளோ..

ஜொள்ளு..😋😋😋😋


ம்ம்ம்ம்ம்..அதெல்லாம் எங்க..

வீட்டுக்கு போனால்.. பாட்டி பண்ணி வெச்சிருக்கும் இட்லியும் வெங்காயச் சட்னியும் ரெடியா இருக்கும்..

இருந்தாலும்.....


🏀 🍪 பிஸ்கட்  வண்டி....ஆஹா..😛😛😛


தாத்தா..கருமமே கண்ணாயினாரா..

கண்மணி நீ வரக் காத்திருந்தேன்..🌻ஸ்டேஷனில் காத்திருக்கேன்னு..'..

காதை தீட்டி announcement க்கு காத்திருப்பார்..


அடிக்கடி இப்படி கூப்பிட போவதால்..எந்த பெட்டி எந்த எடத்தில நிக்கும்னு எங்களுக்கு மனப்பாடம்.


அதுக்குள்ள..


"மெட்ராஸ் ஸே ஆனேவாலி ராக்ஃபோர்ர்ட் எக்ஸ்பிரஸ்..'....ஹிந்தியில் அறிவிப்பு வர..

அட்டென்ஷன் mode க்கு போய்டுவோம்.


ஒரு வழியா ட்ரெயினேலேர்ந்து பார்ட்டிகள் இறங்க ..

' நான் தூக்கறேன்..நான் தூக்கறேன்னு' ஒரே ஓவர் enthu..வில் இருப்பேன்..

ஒவ்வொரு ஊரிலேர்ந்து வருபவர்கள் பையில் ஒவ்வொரு ஸ்பெஷல் ஐட்டம் இருக்குமே..


தாத்தா சைக்கிளில் இரண்டு பை மாட்ட..

வந்த அத்தையோ..பாட்டியோ..சித்தியோ..

ஓடிப் போய் TST பஸ்ல உட்கார்ந்துடுவோம்.


செல்லாத்தா..செல்ல மாரியாத்தா..பாட்டு ஆரம்புச்சு..

கரெக்டா நாம் எறங்கும் போது..

"வசந்த கால நதிகளிலே..வைர மணி நீரலைகள்.." கமலும் ஸ்ரீதேவி யும் கண்ணில் தெரிய..

கோர்ட் ..எறங்கு எறங்குனு..கண்டக்டர் கூவ..

மூட்டை தூக்கி வீட்டுக்கு வந்ததும்..

அந்தப் பைக்குள்ள எல்லாம் என்ன இருக்கும்னு மனசு ஆலாய்ப் பறக்கும்..


" காஃபி உறிஞ்சபடி ..எல்லாரும் வட்டமாய் உட்கார்ந்து ஊர்க் கதை கேட்போம்'..

" கிளம்பு..கிளம்பு..சாயங்காலம் பார்க்கலாம்னு..விரட்ட ..சோகமா ஸ்கூலுக்கு கிளம்புவேன்..


நமக்குதான் guide duty. மலைக்கோட்டை..ஸ்ரீரங்கம் திருவானைக்கா எல்லாம் வந்தவர்கள் கூட போகணும்..

அப்படியே..

"இங்கே சமோஸா சூப்பரா இருக்கும்னு.".சிந்தாமணி சூப்பர் மார்க்கெட் காண்பித்து சொல்ல..ஹி..ஹி..ஹி..😃😃😃😃


தெப்பக்குள பஜ்ஜி மாமா..' ஏன் மாமி ரெண்டு வாங்கிண்டு போங்கோளேன்" சொல்ல..💪💪💪😀😀

..

ஆஹா..ஓஹோ..ஹே..ஹே..ஹே தான்..


அந்த கொண்டாட்ட நாட்கள்..


வந்த பார்ட்டி வேற வழியில்லாமல் வீட்ட்ல இருக்கும் டிக்கட் எண்ணிக்கை கேட்டு..

பொட்டலம் அங்கே கட்டப்பட..


வீட்ல ..பாட்டி சமையல் கெஸ்ட்டுக்கு..😃😃

பார்ட்டி தந்த சொந்தத்தை வாழ்த்தி..நாங்க சிந்து பாடுவோம்ல..


அவங்க கிளம்பும் நாள் வரும்..


வீட்ல இருக்கற எல்லாரும் ஆளுக்கொரு மூட்டை எடுத்து..இப்ப்போ மாவடு மாகாளினு ,நார்த்தங்காய்னு பைகள் ரொம்பி..

ஏலேலோ ஐலஸா பாடி பஸ் ஸ்டாண்டில் கொண்டு போய் விட்டு..

அப்படியே ஸ்டேஷனுக்கும் போய்..

கட்டை சீட்ல உட்கார்த்து வைத்து..😭 கண்ணீர் மல்க..விடை கொடுத்து..ட்ரெயின் கண் மறையும் வரை கைகாட்டி, கார்டுக்கும் டாடா காட்டிவிட்டு 

வீட்டுக்கு வர..


வீடே வெறிச்சுனு போய்டும்.அடுத்து வரும் லெட்டர்..அடுத்து வரப் போகும் ஆள் யாருனு..ஆவலாய்க் காத்திருப்போம்..


ஊரிலேர்ந்து வருபவர்கள் மட்டுமல்ல...பக்கத்து ஸ்டாப்பில் வீடு இருக்கும் சித்தி வந்தாலுமே..பஸ் ஸ்டாண்டுக்கு ஓடிப் போய் கூட்டிக் கொண்டு வர நிற்பது....


இரு இரு அடுத்த பஸ்ல போலாம்னு ..பஸ்

ஸ்டாப்பில் நின்று..விட்டுப் போன கதை பேசி..


இப்போ எல்லாம் இதெல்லாம் சாத்தியமா?..

' ஊருக்கு வரேன்னு'வாட்ஸப்பில் மெசேஜ் வர..கூகுள் மேப்பில் வழியை அனுப்பி விட்டு நம்ம வேலையைப் பார்க்க போய் விடுகிறோம்.


' வெளியே போகணுமா..ஓலா ஊபர் app  இருக்குல்ல..அதுதான் செளகரியம்.'..என்று நழுவி விடுகிறோம்..


வட்டமா உட்கார்ந்து..அப்ப்டியே ஒரு நாலு வேர்க்கடலையை மென்று கொண்டு..வந்தவர்கள் பேசறதை...ஆசையாகக் கேட்ட காலம் இனி வருமா?


 நொடிக்கொரு தகவல் பரிமாற்றம் இருப்பதால்..

யாராவது வந்தால் கூட..அதான் தெரியுமே..நீ போன இடம் பேசின பேச்சுனு...உன் status ல பார்த்துட்டேன்..bye ..சொல்லி கிளம்பிடறோமே....


என்னமோ போங்க..

வரவேற்பும் இல்லை..வழி அனுப்புதலும் இல்லை..

அவங்கவங்க வேலையைப் பார்த்துக் கொண்டு..


ஆனால்..எனக்கு இன்னிக்கும் ரொம்ப பிடிச்ச விஷயம்..ஸ்டேஷனோ பஸ் ஸ்டாப்ப்போ..போய் நின்னு கூட்டிக் கொண்டு வருவது..

டாடா காட்ட போறது ....😃😃😃

..


ரெட்ரோ..

Thursday, June 30, 2022

அவர்_அப்படித்தான்

 #அவர்_அப்படித்தான்...

கொஞ்ச நாளாகவே காலையில் வாக்கிங் கிளம்பி  போகும் வழியில் அந்தாளைப் பார்ப்பேன்.

என்னடா..இப்படி எல்லாம் கூடவா இருப்பாங்கனு பெண்ணிடம் புலம்பினேன். 

'உனக்கு இதே வேலையாப் போச்சு..போனோமா வந்தோமானு இல்லாம யாரையாவது பார்த்து CID வேலை பண்ணாதே' என்று வெடுக்கென்றாள்.

அன்றும் அப்படித்தான்..கீழே இறங்கியதும் கண்ணில் பட்டவர் அவரே..அவரே..

' அவர் கையில் வெச்சு ஆங்கிள் பார்க்கறதை பாரு..வர எரிச்சலுக்கு நாலு கேள்வி போய் கேட்கப் போறேன்னு கூட வந்த என் தோழியிடம் சொல்ல..' ஊர் வம்புக்குனே அலைவ .நீ ஏதாவது சொல்லப் போய் அவன் கன்னடத்தில் உன்னை திட்ட ஆரம்பிச்சா என்ன செய்வே..ஒழுங்கா வீட்டுக்குள்ள போனு என்னை விரட்டிட்டு விர்ருனு கிளம்பிட்டா..

'என்னடா இது ..எப்படி இந்த ஆளுக்கு பாடம்.சொல்லித் தரதுனு ஒரே கவலை மண்டையில..

"பின்ன என்ன காலங்கார்த்தால கடுப்பேத்தினா ..கோவம் வராதா எனக்கு? எவ்வளவு பிஸி ஏரியா? 


இன்று புத்திரியுடன் கீழே இறங்க..

இன்னிக்கு ஒரு வழி பண்ண போறேன்..அவர் கையில் இருக்கிறதை 'பிடுங்கி'..


'பிடுங்கி...'? ஐயோ அம்மானு பேந்தப் பேந்த அவள் முழிக்க..

.....

பின்ன என்னடா.?

.ஒழுங்கா பெருக்க வேண்டாம்..தரையிலேயே ஒட்டாமல் இப்படி 'துடப்பத்தை 'ஆட்டி ஆட்டி நடந்தா..கோவம் வராது பின்ன எனக்கு? 


"அவரு அப்படிதானாம் ' 

பல வருஷமா அந்த 99 வெரைட்டி தோசை கடையில் வேலையாம். பாவம் பிழைச்சு போட்டும் விடுங்கனு பக்கத்தில் இருந்த டீ குடித்தபடி ஒருவர் சொல்ல..


எப்புடி..கடைசியில டைட்டிலுக்கு வந்தேன் பாருங்க..

Saturday, June 18, 2022

Happy father's day

 சும்மா எதாவது அவளைச் சொல்லிண்டே இருக்காதே...

அன்று என் அப்பா..இன்று என் பெண்களின் அப்பா..

மாறவே மாட்டீங்களா ..அப்பாக்களே!!


திரையின் பின் நின்று

திறமைகளை வளர்க்கும்

நானிருக்கேன்டா என்று

நல்லூக்கம் நாளும் தரும்

அடக்கி வாசித்தாலும்

ஆட்சி புரிபவர் என்றும்

தந்தை எனும் மந்திரம்

தடைகளைச் தாண்டச் சொல்லும்

வாழ்த்துக்கள் ..

இந்நாளுக்கு மட்டுமல்ல்

நீ வாழும் வரைக்கும்..

நீ வாழ்ந்த பின்னரும்..


Happy father's day


Happy Father's day

Tuesday, June 14, 2022

very_easy_vadai

 #வாங்க_சாப்பிடலாம்

#very_easy_vadai



உளுந்து ஊற வைக்கணுமா?

No..

அரைச்சு எடுக்கும் வேலை இருக்கா?

No.

தண்ணி ஜாஸ்தியா..கம்மியா? டென்ஷனா?

No..No..

அப்போ என்னதான் செய்யணும்?

சொல்றேன் சொல்றேன்.


நம்ம கிச்சன்ல , ஃப்ரிட்ஜில இருக்கிற ஐட்டம்ஸ் எல்லாம் எடுங்க..

கலக்குங்க..

காட்டுங்க உங்க creativity😋


For 15 vada

Soft dosai  -2 ( fresh ஆ ரெண்டு பண்ணுங்க)

Bread -2

புளிக்காத தயிர் ஒரு 2கரண்டி

தோசையும் ப்ரெட்டும் தயிரில் ஊறவைக்கவும்.( thanks Raghupathy N sir for the idea 🙏)

உளுத்தம் மாவு - ஒரு கரண்டி

அரிசி மாவு - 1 ஸ்பூன்

உருளை ஒன்று சின்னதா வேகவைத்தது

(Optional)

வெங்காயம்

பச்சை மிளகாய்

இஞ்சி

தேங்காய்ப் பல்

மிளகு

கொத்த்மல்லி

தேவையான உப்பு.

எலாவற்றையும் நன்றாக மிக்ஸ் செய்யுங்க.


( உளுத்தம் மாவு last ஆ சேர்க்கணும்.)

எண்ணெய் காய்ந்ததும் போட்டு எடுங்க..

Crispy tasty vada ready😀


இதை உதிர்த்து வெங்காயம் பச்சை மிளகாய் தாளித்து கொட்ட 

#வடை_உப்புமா ரெடி Bala Hari

Monday, June 13, 2022

மனதில்_உறுதி_வேண்டும்

 #மனதில்_உறுதி_வேண்டும்


தடுக்கி விழுந்தால் "உடுப்பி'

ப்ரேக் எடுக்கும் வாசல் ' பேக்கரி'

ஜேஜேனு கூட்டத்துடன்  "ஜூஸ் கடை'

ஜொள்ளு வரவழைக்கும் ' lassi shop'

தட்டு பல கைமாறும்  ' chaat corners'

மம்மிகளும் yummyநு முழுங்கும் மோமோ கடை.

குச்சி முதல் கோபுரம் கொண்ட ஐஸ்கிரீம் பார்லர்


தள்ளுவண்டியில தொண்ணூறு தோசை 

வாசனை மூக்கை துளைக்க வறுபடும் "வேர்க்கடலை வண்டி"

போளிகள் பலவகைனு போர்டுடன் ' holige mane'

ஆவி பறக்கும் அமெரிக்கன் கார்ன்

சேவைகள் சாம்ப்பிளுக்கொன்றாய் ' 'நைவேத்தியம்'

என்னை மயக்கும் " benne dosa' கடை.


கமகமக்கும் கர்நாடக காஃபி கடை..


...

கடிவாளம் கட்டி 

நடையை நான் கட்ட..

கை தட்டி கொண்டாடியது..


கைப்பேசியில் இருந்த..

எனதருமை..

Fit app தானே

Friday, June 10, 2022

மன்னிப்பா

 மன்னிப்பா..

(ஒரு ஜாலி போஸ்ட்)


மன்னிப்பா..என் அகராதியில.. இவங்களுக்கு கிடையவே கிடையாது.


1. உனக்கென்னப்பா ..housewife ..நீ எப்ப வேணாசமைக்கலாம்,சாப்பிடலாம்.தூங்கலாம், ஃபேஸ்புக்ல குடியிருக்கலாம்..watsapp ல் வாடகை இல்லாமலே இருக்கலாம் எனும்போது


2. அதே முன்கூறியவர் அப்பப்பா..எப்படித்தான் எல்லா நேரமும் வீட்டில இருக்கீங்களோ..எனக்கு ஒரு நாள் தள்றதே பெரிய பாடா இருக்கு எனும்போது..


3. நாம் செய்ததை எல்லாம் மூக்கைப் பிடிக்க சாப்பிட்டுவிட்டு , அந்த பக்கத்து வீட்டு மாமி தந்த புளிக்கொழம்பு ஒரு ஸ்பூன் விடேன்னு சொல்லும்போது..


4. aunty நு எப்போதும் கூப்பிட்டு ஓடி வரும் அபார்ட்மென்ட் குட்டி, பாட்டினு திடீர்னு  கூப்பிடும். அவள் அம்மா நமுட்டுச் சிரிப்பு சிரித்தபடி ' சாரிப்பா..நீங்க இந்த கண்ணாடில அசப்பில எங்க மாமியார் மாதிரியே இருக்கீங்க' சொல்லியபடி பின்பக்கம் இருக்கும் தோழிக்கு வெற்றிச் சின்னம் காட்டும்போது..


5. நல்ல தைப்பார் துணி எல்லாம் என்று தோழியை நம் ஆஸ்தான டைலருக்கு அறிமுகப்படுத்த..அவர் அவளுக்கு மட்டும் டிஸ்கவுண்ட் கொடுக்கும்போது..


6.நான் தான் எப்பவும் உங்க வீட்டுக்கு வரேன்.நீங்க ஒரு தடவை கூட வரதே இல்லைனு சொன்னதை நம்பிப் போனால்..டீவியில் கதறி அலறும் சீரியலோடு ஐக்கியமாகி..நீங்க பார்க்கறது இல்ல இந்த சீரியல்னு ஒரு கேள்வி கேட்பாங்க பாருங்க அவர்களை....


7. நம்ம கல்யாண ஃபோட்டோவை பார்த்துட்டு ' எப்படி இருந்த நீங்க ..இப்படி ஆகிட்டீங்கனு' மனசை பீஸ் பீஸா ஆக்குபவரை..

இந்த சின்ன மனசை பீஸ் பீஸாக்க எத்தனையோ பேர் காத்திருக்காங்க..

but going strong as always.

உங்களோடதையும் பகிருங்களேன்..

சும்மா இருக்காதே மனசு

 #மத்யமர்_கவிதைப்போட்டி

#பதிவு 2

#எடுத்துக்கொண்ட_வரி

#சும்மா_இருக்காதே_மனசு.


உரையாடல்கள் உறங்கிப் போன இந்நாளில்.. இந்த ஐயா,அம்மணியின் கவிதை நடை படியுங்களேன்.


நான் கொடுத்த தலைப்பு

#சொல்லத்_துடிக்குது_மனசு


#அம்மணி: 

கூடப்பிறந்தவன் கலியாணம்

கூப்பிடாமலே போகோணும்

கூடத்தான் வாருமையா..

கூடுமே மருவாதை யுந்தான்..

 

#ஐயா:

களத்து மேட்டு வேலையுமே

கழுத்து வரை இருக்குதிங்கே

கை கொடுக்க யாருமில்ல..

கண்ணே..நீ கிளம்பிடம்மா 


#அம்மணி:

நானில்லா அந்நேரம்

நாவையுமே அடக்கிடோணும்

நாலும்  திண்னு போட்டிங்கே

நோயில  விழுந்திடாதீரும்..


#ஐயா:

ஐயங் கொள்ளாதே பெண்ணே

ஐயர் மெஸ்ஸும் இருக்குதிங்கே

ஆவியில் வெந்த இட்டிலியுடன்

அடங்கிக் கிடப்பேனிங்கே 


#அம்மணி;

சக்கரையும் ஏறிடுமே

அக்கரையில் சொன்னேனே..

செவி சாய்க்க மாட்டீரென்று

சத்தியமாய் புரிந்தாலும்

#சும்மா_இருக்காதே_மனசு

சும்மா இருக்காதே..


#ஐயா:

ஒப்பாரி வைக்காதடி..

உன் பேச்சை தட்டேனடி

ஒழுங்கா இருப்பேனடி

ஒவ்வாததை உண்ணேனடி..


#அம்மணி;

கிளப்புறதே குறியாய் போச்சே

கும்மாள மடிக்க திட்டமுண்டோ

கிடந்த டிக்குதே என் மனசு

கிழவனையும் விட்டுப் போக..


ஐயாவின் மனசுக்குள்

ஆயிரம் யோசனையும்..


பற்றி வந்தாலே..எனைச்

சுற்றியே வருவாயே 

சுற்றம் மறப்பாயே..

பழித்துச் சிரிப்பாரே..


சண்டிராணி இல்லாது

சலிப்பூட்டு மென்றாலும்

#சும்மா_இருக்காதே_மனசு..

சுத்தி வருமே உன் நினைவு 


தேன்சொட்டும் சொல்லில்லை

செயலிலே அன்பிருந்தால்..

சன்மமிங்கே வாழ்ந்திடலாம்..வரும்

 சந்ததிக்கு சொல்லிடுவேன்..ஆதர்ச

 தம்பதியும் ..நாமென்று .

Thursday, June 2, 2022

Raaja sir

 உனக்கு ரொம்ப பிடிச்ச ராஜாவின் பாட்டு எது?..

உடனே பதில் சொல்ல முடியுமா ...யாராவது..?

இது இல்ல..அது..

ஐயோ.. அந்த பாட்டு இதை விட பிடிக்கும்.

இப்படியே..அடுக்கிண்டே போவோம்..

ஏனா..நாம எந்த mood ல இருக்குமோ..அந்த situation க்கு ஒரு பாட்டு உண்டு..ஒரு BGM உண்டு..

இப்படி யாதுமாகி நம் வாழ்வில்..ஒரு இசைப் பிணைப்பு..


ஒரு ஜீவன் நீ அழைத்தாய்...

உன் இசையால்..

ஓராயிரம் உள்ளம் இணைந்தோம்..


அகத்துள் நுழைந்து..

ஆவியுடன் கலந்தது...உன்னிசை..

வரிக்காக பாடல் கேட்டது போய்..

வாத்தியங்கள்...வருடும் மாயம்..

விந்தையாய்..உணர்வு..


பின்னனி இசையோ..

பேசி மாளாது..

வருடங்கள் போனாலும்

வருடல் உன் பாடல்..


 நம்முடனே..நடை போடும்..ராஜ நடை..அது ராஜாவின் இசை..


உன் இசையில் தொடங்கும்..

எம்

புத்தம் புது காலை..

நித்தமும் புதுசாய்த் தெரியும்

பொன்மாலைப் பொழுதுகள்..


ராக தேவனே..

உன் நாள் இன்று..

சங்கீத மேகம் தேன் சிந்தட்டும்..

ஆகாயம் பூக்கள் தூவட்டும்..

என்னாளும் பொன்னாளாய்..

உன்..

பொழுதுகள் விடியட்டும்..

வாழ்த்த வயதில்லை..

வணங்குகிறேன்..

Happy birthday raaja sir..

Happy birthday Raaja sir

 என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்

உன்னை விட்டு வேறு எங்கும் ஓட மாட்டேன்.


இது தான் நமக்கும் இளையராஜா சாருக்கும் உள்ள பந்தம்


அன்னக்கிளி பாட்டு முதன் முதலில் கேட்டபோது..ஆட்ட ஆரம்பித்த தலை இன்னும் நிற்கவில்லை..நிற்காது..

lyrics க்காக பாட்டு கேட்ட காலம் கொஞ்சம் கொஞ்சமாய் மறைய ..இசைக்கருவிகள் செவியை வருடி..சேதிகள் சொல்ல ஆரம்பித்தன..

வயலின் இசையில் வசமிழந்தேன்

தபேலாவில் தாளம் அறிந்தேன்

கோரஸ் பாடும் குரல்கள்..கொள்ளை இன்பம்

guitar .. காண்பிக்கும் சொர்க்கம்.


"ராகமென்ன..தாளமென்ன..அறிஞ்சா நான் பொறந்தேன்.."இல்லவே இல்லை..

ராகதேவன் பாடல்களின் மூலம் கற்றேன் கொஞ்சம் கொஞ்மாய் ராகங்களின் ரீங்காரம்.


புதுசு புதுசாய் அவர்.கையாளும் techniques..

 ஒரே பாட்டுக்குள் ஒராயிரம் சங்கதிகள் இருக்கும்.

எல்லாரையும் தாளம் போட வைத்து இணைத்த அவர் இசை..

தமிழ் இசை என்பது எட்டுத் திக்கும் சென்றடைந்த பொற்காலத்தின் தலைவன்..

அவர் கடைபிடிக்கும் punctuality..


காலையில் கண் விழிக்கும் போதே..' புத்தம் புது காலை பொன்னிற வேளை' பாட்டு மனசில் ஓடத் துவங்கும். தாலாட்டும் ராகத்துடுடன் என் நாள் முடியும்.

ஒரு நாளும் உனை மறவாத ரசிகர் கூட்டம் இங்கே..

எந்த வாகனத்தில் போனாலும்..வரும் கூடவே அவர் இசை தான்.

அவர் இசையால் எனக்கு கிடைத்த நட்பு வட்டங்கள் தான் எத்தனை எத்தனை..


' நன்றி சொல்லவே ..எங்கள் இசை 🎵 மன்னவா..வார்த்தை இல்லையே..


பிறந்தநாள் காணும் உன்னை..

' நலம் வாழ எந்நாளும் எங்கள் வாழ்த்துக்கள்'

பல கூறி..

வாழ்த்தும் பல உள்ளங்களுடன் நானும் இணைகிறேன்.


"என்னோடு பாட்டு பாடுங்கள்..எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்..இசைக்கோலங்கள் தந்த ராஜ ராகத்துக்கு வாழ்த்து சொல்ல..

happy birthday raaja sir

Happy birthday Raaja sir

 Happy birthday ராஜா சார்..


Forever company என்று ஒன்று  உண்டென்றால் உங்க பாட்டுத்தான் எப்போதும்.


அண்ணாமலையானை் அருகே கண்டேன்

மூகாம்பிகையின் முக தரிசனம் கண்டேன்


பாபாவின் புகழ் மாலையில் பரவசம் அடைந்தேன்.


ரமண மாலை நீ  இசையால் கோர்க்க

ரணமெல்லாம் என் மனதில் ஆறக் கண்டேன்.


திருவாசகம் உன் இசையில்

தெவிட்டாத இன்பமாச்சு


'how to name it  ' கேட்ட போது

ஹா..என்று வாய் பிளந்தேன்


nothing but wind .

nostalgic ஆனது என்றும்.


காத்திருக்கேன் இப்போது..

காது குளிர திவ்யப் பிரபந்தம் கேட்க..


ஒரே ஒரு ஆசையுண்டு.

 

செளந்தர்ய லஹரியை எப்போது ஐயா உங்கள் இசையில் பாடப் போகிறோம்.


ராஜா..ராஜாதி ராஜா எங்கள் ராஜா.

பல்லாண்டு இசையோடு இணைந்து..

இன்பக்கடலில் எம்மை ஆழ்த்தணும் நீங்க..


Happy birthday இசை ஞானியே💐💐🙏🙏🙏

Tuesday, May 31, 2022

வெய்யில்

 wishing all 

NOT a MUNDANE..

but a. 

MIND BLOWING..

MANGAL VAAR..


சீலைத் தலைப்பில் ஒளிந்து..

சிறு விழி ஜாலம் காட்டும்..

சின்னக் குழந்தை போல...

வெள்ளித்திரை நீக்கி..

வெளி வர யோசனையோ..


'என்ன வெய்யில்'..

'என்ன வெய்யில'்..

வெய்யாமல் நானிருக்க..

வியர்வை கொட்டா..

வெளிச்ச மட்டுமேந்தி..

வெளியே வா..

வெஞ்சுடரே..

Sunday, May 1, 2022

what to talk?

 what to talk?


maa...

tiffin box ready ?

water bottle ?

uniform ironed ?

  shoe polish?

oh..ma..forgot to tell u..

field trip tomorrow..

five hundred rupees..

what to talk..?

this is what we talk..


tired from school

ironical reply..

day was fine..

anything special..

amma..

what to talk ?

ll'catch up later

time for nap..

wake me up soon..

amma..

a human alarm ..

without snooze..

study time..

strenuous time..

then..

what to talk..


dinner time.

that's TV time..

watsapp time..

FB time..

SPACE.. proudly said..!!


'the voice does the Buddha work'..

voice losing value..

then what to talk..??

(Burning topic of this gen moms)

Tuesday, April 19, 2022

Action reaction

 challenge accepted Shanthi Srinivasan


ஆக்‌ஷ்ன்களைவிட ரியாக்‌ஷன்கள் அதிகம் ஆக்ரமித்த காலம் ஒரு வகை.


கால் கிலோ கத்திரிக்காய் வாங்க கடுமையா பயிற்சி எடுத்து கடைக்குப் போனப்போ,  கடைக்காரருடன் பேரம் பேசி கேட்டதுக்கு மேல அதிகமா கொடுத்த போது, இந்த ஏமாந்த சோணகிரி  எடுத்த challenge. 

ஹிந்தி கத்துண்டே ஆகணும்..நான் பேசறதைக் கேட்டு அவங்க காது பொத்திண்டாலும்.


ஊர் ஊராகப் போன போது என் வீடு எதுனே தெரியாம தத்தளிச்ச காலம் உண்டு. என்ன பெரிய விஷயம் என்று ஒவ்வொரு struggle ம் புன்னகையோடு challenge பண்ணி இருக்கேன்.


 challenge என்பது ஒண்ணு ரெண்டா இருந்தா  பரவாயில்லை.  அதனால் ..challenge எல்லாம் chocolate ஆ பாவிக்க ஆரம்பிச்சேன்.


 சுவையாக்கினேன் வாழ்க்கையை.

தத்தளிச்சு நீந்தி வந்து இலக்கை அடையும்போது அடுத்த ஆப்பு காத்திருக்கும். 


இப்போது நிஜமாகவே நான் challenge செய்ய நினைப்பது என் வயோதிகம் that's is my third stage of life. I determine to live with dignity.

கண் மங்கும்..(அது இப்பவே இருக்கு).காது கொஞ்சம் வேலை பார்க்காது..கால் சொல்ற இடம் போக மக்கர் பண்ணலாம். கையும் கொஞ்சம் கைகொடுக்காமல் போகலாம். வாயைக் கட்டி போட வேண்டி இருக்கலாம்.

ஆனா..மனசு மட்டும் எப்போதும் சந்தோஷமா இருக்கணும். என் சந்தோஷம்..என் high life condition என்னைப் போல இந்த கட்டத்தை கடக்கும் பலருக்கு ஊக்கமளிக்கணும்.


எப்படி இருந்த நான்..அப்படியே இன்னும் அதே பாஸிடிவ் attitude உடன் இருக்கேன் என்று எனக்கு நானே தட்டிக் கொடுத்து எந்த இடத்தில் இருந்தாலும் சந்தோஷ மணம் வீசணும்.

Challenge ..to be cheerful

Shyamala Raghavendra mam..next நீங்க தான்

Monday, April 11, 2022

மாவடு

 கிச்சனுக்குள் நுழையும் போதே

கமகம கமகம...கம..கம..கம..


உப்பு காரத்தில் ஊறியபடி

ஊரைக் கூட்டும் வாசனையுடன்


மாவடுதான்..வேறென்ன..

எப்போ கடா வெட்டுவாங்கனு செந்தில் ஸ்டைலில் நான்..


'ஊறும் வரை காத்திரு'னு டையலாக் பேசியபடி மாவடார்.

Saturday, April 9, 2022

பண்டிகை நாள்.

 பண்டிகை நாள்...


ஆசையா கேட்டேன்..பொண்ணு கிட்ட..

kheer பண்ணட்டுமா..?

calorie ஜாஸ்தி மா..

வடை..?

weight போடும்..

அவியல்..?

அது ஒரு சொதப்பல் டிஷ்..

பருப்பு உசிலி..?

பேரே சகிக்கல..

பிட்லை..?

இது என்ன லை..

puran போளி..?

பொறுமை சோதிக்காதேம்மா..


அரைமணி argument..

அமைதி ஒப்பந்தம்..


பகவானுக்கு ...

பாலும் பழமும்..

பக்தைக்கு..

பருப்பும் ரொட்டியும்..


கொஞ்ச நேரம் கழிச்சு..

கொஞ்சலுடன்..பெண் சொன்னாள்..

பிறந்த நாள் இன்று..

பிரியாத் தோழிக்கு..


இப்போ..

பார்ட்டிக்கு போகனும்..

பிட்சா சாப்பிடணும்

பெப்சி குடிக்கனும்..

பாப்கார்ன் கொறிக்கனும்..

விட்டதை பிடிக்க்

வேகமாய் கிளம்பல்..


அடப் பாவிகளா..

(விவேக் style ல் நான் ..)

மீந்த ரொட்டி..

மறுபடியுமா...

விட்டேன்..ஜூட்..

Tuesday, April 5, 2022

ஒரே ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே..

 :ஒரே ஒரு வார்த்தை  கேட்டிருக்கலாமே..'


'இந்த வாண்டைத் தூக்கிண்டு ஏற முடியலையே..ஒரு வார்த்தை என்னைக் கேட்கமாட்டியாம்மா ...என்ன வேண்டுதல் இதெல்லாம்..

தாயும் சொன்னாள் ...

'தலைப் பிரசவம்...

தாயும் சேயும் நலமா இருக்க

திருமலையானை தரிசனம் பண்ண

குழந்தையைத்  தூக்கிண்டுனு நடந்து வரேன்னு பிரார்த்தனனை..

இனிமே இப்படி வேண்டிக்க மாட்டேன்..உன்னை கஷ்டப்படுத்தற மாதிரி..

சோக முகத்துடன ்என்னிடம்  சொன்ன  அம்மா..

இந்த மாதிரி எத்தனை முறை சொல்றோம்..'ஒரே ஒரு வார்த்தை என்னை கேட்டிருக்கலாமே/சொல்லி இருக்கலாமே..

மகன் தந்தையிடம் சொல்வான்..

'அப்பா..ஏம்ப்பா இந்த மாடல் ஃபோன் ஆர்டர் பண்ணின..ஒரு வார்த்தை என்னை கேட்க மாட்டியா...

நண்பர் சொல்வார்..ஏன் சார் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே ..எனக்கு தெரிஞ்ச ஆள் கிட்ட சொல்லி வேலையை முடிச்சிருக்கலாமே

ஆத்துக்காரி புலம்பலுக்கு பயந்து டூர் போன இடத்தில ஒரு புடவை வாங்கிண்டு வந்தா..ஏண்ணா..ஒரு வார்த்தை என்கிட்ட கேட்டிருக்கலாமே...என்கிட்ட இல்லாத கலரைச் சொல்லி இருப்பேனே..

கல்யாணத் தரகர் சொல்வார்..எதுக்கும் ஒரு வார்த்தை பைய்யன்/பொண்ணு கிட்ட கேட்டுடுங்கோ..வாழப் போறவா அவா..என்பார்.

கண்ணா.. இன்னிக்கு சாயந்திரம் ராஜி aunty ஆத்துக்கு போகணும்..சீக்கிரமா படிச்சு முடிச்சுடறயா என்று புத்திர /புத்திரி சிகாமணிகளை கேட்க..குபீர்னு பாய்ஞ்சு..என் கிட்ட ஒரு வார்த்தை கேட்க மாட்டியா..நான் மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்க..


இப்படி எல்லாரும் பிடிச்சிண்ட 'என்னை ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே' dialogue..

ஏன் தோணவே இல்லை..இந்த ராமபிரானுக்கும், அந்த சீதா பிராட்டிக்கும்..


Sriram Jayaram Jaya Jaya ram

Monday, April 4, 2022

சந்தை

 #சந்தை


#அம்மி குத்தலையோ..ஆட்டுக்கல் குத்தலையோ ..


இந்தக் குரல் நம் வீடு ,தெரு வாசல்களில் கேட்டு எத்தனை நாளாச்சு.


கரண்ட் இல்லை என்று எந்த ஒரு பதார்த்தம் செய்வதும் நின்றதில்லை சில வருடங்கள் முன் வரை.


அம்மி இருக்க..அருமையான சட்னி


ஆட்டுக்கல் இருக்க..அளவளாபியபடி இட்லி மாவு, அடை மாவு....


இந்த ருசி மறக்கடிக்க வந்தது மிக்ஸியும் கிரைண்டரும்.


அடுத்து நம் திருமணகளில் இன்றும் பின்பற்றப் படும் ஒரு சடங்கு.

அம்மி மிதிப்பது:

மணமகன் மணமகளின் வலக்கால் கட்டைவிரலைப் பிடித்து, அக்னிக்கு வலதுபுறம் அம்மி மீது ஏற்றி வைக்கிறான். "இந்தக் கல்லின் மீது ஏறி நிற்பாயாக. இந்தக் கல்லைப்போல நீ மனம்கலங்காமல் உறுதியாக இருக்க வேண்டும். இல்லறவாழ்வில் உனக்கு ஏற்படும் இடர்களைப் பொறுத்துச் சகித்துக் கொள்ள வேண்டும். எது வந்தாலும் அசையாமல் ஏற்றுக்கொள்" என்று கூறி, மனோதத்துவ அடிப்படையில் அவளுக்கு மனோபலம் அளிக்கிறான். 

எந்த உலோகத்தையும்விடக் கல் உறுதியானது. வளைக்கவோ, உருக்கவோ முடியாதது. அதனால்தான் இந்த பாவனைக்கு மிக உறுதியான கல்லான அம்மியை வைத்து உபயோகிக்கிறார்கள்.


சரி..சரி..நேரம் யாருக்கு இருக்கு என்று நீங்கள் புலம்புவது காதில் விழுகிறது.


ஆனால்..மீண்டும் பழைய சுவைக்கு நாக்கு ஏங்க..எல்லாக் கோயில் வாசலிலும் மார்க்கெட்களிலும் இப்போது அம்மி ஆட்டுக்கல் வியாபாரம் அபாரமா நடக்கிறது.


கிச்சனும் இவைகளைப் பொருத்த வடிவமைக்கப் படுகிறது.

உடம்புக்கு நல்ல பயிற்சி..எந்த ஜிம்முக்கும் போக வேண்டாம்.


என்ன..சின்ன சைஸ் பெரிய விலை.

நேரம் கிடைக்கும் போது இதில் அரைத்து..நம்ம குடும்பத்துக்கு நல்ல சுவையும் காண்பிப்போமே.


சந்தையில் கிடைக்கும் வாங்குவோம்..மீண்டும் ஆரோக்கிய அறுசுவை வாழ்வுக்கு திரும்புவோம்.


(இந்தப் முதல் படம்..என் அம்மா வீட்டில் தலை குப்புற படுத்து கிடக்கும் ஆட்டுக்கல்..

அரைக்க ஆள் தேடும் அம்மி..)