பச்சை மயில் வாகனனே
பழனி மலை பாலகனே
பிச்சை ஏந்தும் பக்தர்தம்
இச்சை ஈந்து அருள்பவனே..
பாகமது கிட்டா வேளை
கோபமது கோட்டைத் தாண்ட
கோபுரம் ஏறி நின்றாய்
கோதண்ட பாணி ஆனாய்.
சித்தராம் போகர் அன்று
செதுக்கிய சிற்பம் நீயே
சக்திகிரி மலை நின்று
பக்தர் பாவம் தீர்ப்பவனே..
முத்துக் குமரன் நீ
மூவுலகும் ஆள்பவன் நீ
சங்கத் தலைவன் நீ
தங்க வடிவேலன் நீ.
அழகன் உனை வேண்ட
ஆறாய் மக்கள் பெருக்கிங்கே
அருமுகன் அருள் பார்வை
ஆற்றுமே தீரா நோயும்.
சுமந்து வந்த காவடிகள்
சுகம் பெறவும் செய்யுமே
சுருட்டி இழுத்த தங்கத்தேரும்
சூழும் வினை தீர்க்குமே..
குலதெய்வம் உனை வேண்ட
குடும்பம் சூழ வந்தேனே
குறை எல்லாம் தீர்த்தெங்கள்
குடி விளங்கச் செய்வாயே.
திரு ஆவினன்குடிப் பெம்மான்
திரு அருள் புரிவாயே
திரு நீறு அணீந்தோமே
வருந் துயர் காப்பாயே…
மருந்தாம் உன் மந்திரமே
தருவாய் தயை புரிவாய்
தரிசனம் தந்து நீயும்
கரிசனம் காட்டு கந்தா..
(தரு-மரம்)
No comments:
Post a Comment