கவிதை எனக்கு …..??????????????????
கவிதை எனக்கு..என்ன வென்று
கணக்காய் தெரியா தெனக்கிங்கு....
கவிதை எனக்கு சுகமா?-
இதமே என்றும் தருவதனால்..
கவிதை எனக்கு சவாலா?
களமின்றி ஓர் யுத்தம் நடப்பதனால்…
கவிதை எனக்கு தோழனா?
கைக் கோர்த்து என்னோடு நடப்பதனால்
கவிதை எனக்கு துணையா?
தனிமையில் தோளும் கொடுப்பதனால்..
கவிதை எனக்கு காதலா?
தன்னிச்சையாய் வந்து ஒட்டியதால்.
கவிதை எனக்கு ஆறுதலா?
இறகாய் என்னை வருடுவதால்...
கவிதை எனக்கு தத்துவமா?
பிதற்றலாய் என்றும் இருப்பதனால்..
கவிதை எனக்கு கனவா?
கைக்கு எட்டாமலே போய்விடுவதனால்.
உறவென்று சொல்லி
உருகலையே
வரமென்று சொல்லி
வாட்டலையே
எனக்குள்ளே இருக்கும் ஒளியை
என்ன உறவென்றே அழைப்பேன்….?
அழகோ அழுகையோ
அருமையோ பெருமையோ
சோகமோ கோபமோ
நிழலாய் தொடரும்
நினைவாய் இனிக்கும்
சுகமது பலதரும்…
உள்ளத்தின் உள்ளிருந்து
உணர்வினிலே கலந்திங்கே
ஒன்றாய் என்னுள்ளே
ஒற்றிப் பிணைந்த உனை
உறவென்ன சொல்லி அழைப்பேன்?
விருத்தமுண்டு.. வெண்பா வுண்டு
வித விதமாய் இலக்கண முண்டு
வித்தை எனக்கு எப்போ வரும்..
வருத்த மொன்று என்று முண்டு
மருந்தளவும் அறியெனே
மரபு என்ன வென்று-
மறந்தும் எழுதலையே
முறையாய் ஒரு நற்கவிதை…
எனக்கு நீ என்னவென்று
எண்ணி எண்ணி வியக்கிறேன்…
.
வட்டத்துக்குள் சிக்காத வண்ணக்கிளி
வாட்டம் போக்கும் சொந்தக் கிளி-
விட்டுப் போகாதே என்னை
வேண்டுதலும் இதுதானே..
No comments:
Post a Comment