Tuesday, March 5, 2019

Acche din

Acche din..
The wait is on..

அஞ்சறைப் பெட்டியிலும்
அரிசி டப்பாவிலும்
அடுக்கின புடவையிலும்
அலமாரி இடுக்கிலும்

 மடித்தும் சுருட்டியும்
மறைச்சு வெச்சேனே
மாங்கா நெக்லெஸும்
முத்து வளையலுமா
மாறும் ஒருநாள்
மகளுக்கு சீராகனு

விளக்கேற்றிய மாலை
வீட்டோர் எல்லாம்
விறுவிறு சீரியலில்
வாய்பிளந்த வேளை
அறிக்கை வந்தது
ஆயிரமும் ஐநூறும்
அந்திமக் கிரியையில்

ஆசையாய் வளர்ந்தது
அழுது புலம்பியபடி
அம்மாவைப் பிரிந்தது
அவளருமைக் குழந்தை.

அப்பவும் நம்பிக்கை
'அச்சே தின்'
அதோ வந்திடுமென்று
காத்திருப்பு
கருப்பொழிந்து
வெள்ளைப் பூக்கள்
வாழ்வில் மலருமென்று..

சொந்தக் காசும்
சொந்தமில்லாமல்..
வந்த காசும்
வாழ விடாமல்..

வழியெல்லாம் அடைப்பு
வளர்ச்சியென மார்த்தட்டல்
வருமொரு நல்ல நாள்
வெறும் கனவாகிடுமோ..!!

நம்பிக்கைக் கவிதை
நவம்பர் மாதத்தில்
மன உளைச்சல்
மார்ச் மாதத்தில்
வானிலை மாற்றமாய்
வாக்குகள் மாற
வாக்காளன் பாடு
வீதியிலே..வரிசையிலே..

'அச்சே தின்'
அவ்வப்போது..
அழுத்திச் சொல்கிறேன்..
அப்படியாவது
வராதா என்று..

No comments: