#தனித்திறமைகள் சிறுகதை
#GovindarajLakshminarayanan sir..
அவர் ஓவியங்கள்..எல்லாரும் இங்கே கதை எழுத ஆசைப்படும் ஒரு தூண்டுதல் கொடுக்கும் அற்புத உயிரோவியங்கள்..
என்னுடைய முதல் முயற்சி அவர் ஓவியத்திற்கு.. அவரின் ஓப்புதலுடன் அவர் படத்தை வைத்து எழுதிய கதை
#பந்தம்
"ஏம்மா ..குரல் ரொம்ப டல்லா இருக்கு?'..அமெரிக்காவிலிருந்து ரகுவின் கேள்விக்கு என்ன சொல்வது என்று புரியாமல் தவித்தாள் பார்வதி.
' அப்பாவுக்கு ஒரு நடை ரிஷிகேஷ் போய்ட்டு வரணுமாம்டா'..
"ஏன்மா ..இப்போ அவருக்கு இருக்கற உடம்புல இதெல்லாம் சாத்தியமா?..குரலில் கவலை.
" ரொம்ப ஆசைப்படறார் டா..ஒரே ஒரு தடவை அந்த கங்கையை போய் பார்த்துட்டு வரணும்னு புலம்பறார்'.
வேத மூர்த்தி ..வேலை செய்யும் காலத்தில் சுற்றாத ஊரில்லை..
ரிடையர் ஆவதற்கு இரண்டு வருஷம் முன்னாடி கிடைத்த போஸ்ட்டிங் ...கங்கை நதி பாய்ந்தோடும் ரிஷிகேஷில் இருக்கும் வங்கிக் கிளைக்கு.
பார்வதி புலம்பியபடியே மூட்டை கட்டினாலே ஒழிய.ஒரு அழகான வீடு பார்த்து செட்டில் ஆனார்கள்.
ஒரே பையன் ரகு ,அமெரிக்காவில் படிக்க கிளம்பி விட்டான்.
ரிஷிகேஷ்..இந்த ஊருக்கே ஒரு தனி அழகு.
லக்ஷ்மண் ஜூலாவில் நின்றபடி கங்கா மையா ஓடும் அமைதியை பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
கரைகட்டி தெரியும் இமாலயத்தின் யெளவனமும்...அதை ரசிக்க வரும் கூட்டத்தையும் பார்த்துக் கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது. கங்கா ஆரத்தியை பார்க்க காணக் கண் கோடி வேணும்..
சார் தாம் யாத்திரை வரும் உறவுக்கும் நட்புக்கும் ..பார்வதியின் வீடுதான் guest house.
அப்படி கிடைத்த நட்பும் ஏராளம்.
ஓய்வு பெற்று இரண்டு வருஷம் ஆன போது கூட..அங்கேயே இருந்துடலாம்னு ஒரு ஆசையில் இருந்தார்கள்....ஹிமாலயன் ஆஸ்பத்திரியில் அந்த செக் அப் செய்யும் வரை..
கங்கை கரையிலேயே கடைசி காலத்தை கழிக்கணும்னு இருந்த ஆசையை..மூட்டை கட்டி ஓரம் வைத்து விட்டு..
அப்புறம் என்ன?..
சென்னை வாசம்..ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியாக ஏறி இறங்கியும் ..பயனில்லை.
ஆனால்..
வேத மூர்த்திக்கு எப்போதும் அந்த கங்காவின் நினைப்பு தான். எதோ ஒரு அதீத பந்தம் அவளுடன்.
பார்வதியின் மன ஓட்டத்தை திருப்பியது ரகுவின் குரல்..
"அந்த இடத்தை விட்டுட்டு வந்து இருபது வருஷமாச்சு..இன்னும் என்னம்மா?"நான் சொன்னால் அப்பா கேட்கவா போகறா..அப்பா ஆசைப்படற மாதிரி கூட்டிண்டு போய்ட்டு வந்துடுமா"
"நான் எல்லா ஏற்பாடும் பண்றேன். நம்ம சாரதியை எதுக்கும் கூட அழைச்சுண்டு போ'..
சாரதி ரகுவின் நண்பன்.
"அதெல்லாம் யாரும் வேண்டாம்டா..அப்பாவுக்கு யாரும் சரிப்படாது'..என்றாள்
பார்வதிக்கு தெரியும்..எத்தனை பேர் கூட இருந்தாலும்..வேதமூர்த்திக்கு பார்வதி தான் எல்லாம் செய்து கொடுக்கணும். அது கல்யாணம் ஆன நாளிலேர்ந்தே அப்படித்தான்.
பொண்டாட்டி தாசன்னு எல்லாரும் ஏளனம் செஞ்சா கூட ..கண்டுக்கவே மாட்டார்.
ஆச்சு..ப்ளான் படி கிளம்பியாச்சு.
டெஹ்ராடூன் ஏர்ப்போர்ட்டில் அவர்களுக்காக புக் செய்த கார் காத்துக் கொண்டிருந்தது..
" விண்டோ திறந்தே இருக்கட்டும்ப்பா'..
"ஐயா..வெய்யிலா இருக்கே..ஏஸில போடலாமே '..
தமிழ் தெரிந்த் டிரைவர் இழுக்க..
பார்வதி ,டிரைவரை சைகையால் அமைதியா இருக்கும்படி சொன்னாள்.
"ஞாபகம் இருக்கா பாரு...ஹிமாலயன் ஆஸ்பத்திரில போய் முதன் முதல்ல டெஸ்ட் எடுத்தோமே.." அவர் பேச..
" அதெல்லாம் இப்போ எதுக்கு"..
கொஞ்சம் கோபமாக சொன்னாள் பாரு என்கிற பார்வதி
" அப்பப்பா..இந்த தேவபூமிக்கே எத்தனை வாசனை பாரு..இந்தக் காத்து முகத்துல படும்போது இருக்கற சுகம் இருக்கே'...
அந்த அரைமணி நேர கார் பயணத்தை ..அணு அணுவாய் ரசித்தார்.
" கெஸ்ட் ஹவுஸில் இறங்கினது தான் தாமதம்..
" எப்போ போகலாம் கங்கையை பார்க்க"...குழந்தை போல தவிக்க ஆரம்பித்தார்.
அது என்னமோ, காவேரிக்கரையில் பிறந்து வளர்ந்தவராக இருந்தாலும் ,இந்த கங்கை மேல அவருக்கு ஒரு அதீத பாசம். ஆபீஸ் முடிஞ்சு நேரே படித்துறைக்கு வந்து உட்கார்ந்து ..காலை நனைத்து..அப்படியே அந்த காற்றை உள்ளிழுத்து..எதிரே சலனமே இல்லாமல் ஓடும் கங்கையை பார்த்து ...ரசித்து...எழுந்திருக்கவே மனமில்லாமல் உட்கார்ந்திருப்பார்.
வீட்டுக்கு கிளம்பும்போது அப்படியே chotiwala ஹோட்டல்ல ஒரு ஜலேபி சாப்பிட்ட சுகத்தை நினைத்தவர்..
" சோட்டிவாலா போலாமா பாரு' என்றார்.
"ரெடியா அம்மா..." இவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்த டிரைவர்..
" முன்னாடி மாதிரி இப்போ இல்ல சார்..சாப்பாடு சுமார் தான் ...நான் வேற நல்ல ஹோட்டல் கூட்டிக்கிட்டு போறேன்".. தன் மார்க்கெட்டிங் அஸ்திரத்தை ஏவினார்.
ஆள் நடமாட்டம் குறைவாக இருந்த படித்துறைக்கு அருகில் கார் நின்றது.
பார்வதியின் கையை இறுக்க பிடித்த வேதமூர்த்தி...
அதில் ஒரு சந்தோஷம் கலந்த நடுக்கம் ..
" நாலு படிதான்..பார்த்து கீழ காலை வையுங்கோ'..
அவரின் கையை பிடித்தபடி ..
அடுத்த படி..வழுக்காமல் இருக்கா என்று செக் செய்தபடி..பார்வதி .
அவருக்கு இருக்கும் சந்தோஷத்தில் கையை விட்டால் ஓடிவிடுவாரோ என்று பயம் அவளுக்கு.
கடைசி படி...கங்கை லேசாக கால் வருட...
"சலசலசலனு நீ மெதுவா பேசற சங்கேத மொழி கேட்கத்தான்ம்மா வந்தேன்னு".. உணர்ச்சிப் பிரவாகத்தில்....
"இமயமலைலேர்ந்து நேரா இங்க தான் வருவா.."..
எதோ தன் வீட்டுப் பெண் ..தேடி ஓடி வருவது போல பேசினார்.
நின்று கொண்டே இருந்தவரை
"கிளம்பலாமா?".என்று பார்வதி கேட்க..
" உன்னைப் பார்க்காமயே போய்டுவேனோனு நினைச்சேன்'..
எப்படி என் காலுல வந்து ஜில்லுனு தொட்டுட்டு போகறா பாரு'...
" பாரு...அன்னிக்கு நம்ம பார்த்து ரசித்தோமே..அதே போலத்தானே இன்னிக்கும் இருக்காளா?"
பார்வதியின் தொண்டையில் பந்தொன்று அடைத்தது..
" அன்னிக்கு பார்த்த மாதிரியே தான் இருக்கா...அவ என்னிக்கும் மாற மாட்டா'...
கையில் கொஞ்சம் அந்த புனித நீரை எடுத்து..
அவர் கண்ணில் ஒற்றினாள்..
என்ன காரணம் என்றே தெரியாமல் கண் பார்வை இழந்த கணவருக்கு..இந்த கங்கையின் ஸ்பரிசம்..ஒரு தாயின் வாத்ஸல்யம் போல இருந்தது.
இருவர் கண்களிலும் கங்கை பிரவாகமா வழிந்தது..
ரகுவின் ஃபோன். அப்பாவின் விசும்பல் மட்டுமே அவனுக்கு கேட்டது
கங்கை ...வெறும் நதியல்ல..அது ஒரு உணர்வு..
புரிந்து கொண்டான் ரகு..
இன்று #தண்ணீர்_தினம்
'

No comments:
Post a Comment