#VPKP_3
#படக்கதை 1
(Word count 280)
#என்_இனிய_அரவிந்தா
...
"டேய்..அரவிந்தா..வெயிலு வீணாப் போகாம ஏண்டா இப்படி அங்கேயே நிக்குற??.
வள்ளியம்மாள் குரல் அவனுக்கு கேட்டால் தானே..
"அம்மா...இன்னிக்கு என்ன கிழமை?
"அதுக்கென்னடா இப்போ?"
"உனக்கு எல்லாம் மறந்துடும் இன்னிக்கு செல்வி பெரியம்மா வர நாளு..அது கூட மறந்துட்டீங்களா?.."
"அட ஆமாம் ராசா.. எங்க ஞாபகம் இருக்கு எல்லாம்..'
மனசுக்குள் சொல்லியபடி தன் வேலையைப் பார்க்க நகர்ந்தாள்.
" இந்த ரெட் கலர் டீ ஷர்ட் தான் பெரிம்மாவுக்கு ரொம்ப பிடிக்கும். வாட்ஸப்பில அன்னிக்கு என்னோட ஃபோட்டோ அனுப்பினதும்..என் கண்ணே பட்டுடும் போல இருக்குனு சொன்னாங்களாம்.'
அரவிந்த் சந்தோஷத்தின் உச்சியில் இருந்தான்.
" பாருங்க நம் அரவிந்தை..
இன்னிக்கு ஒரு சேட்டையும் செய்யாம ...அழகா பவுடர் பூசி தலை வாரி ..ஒழுங்கா டிஃபனை சாப்பிட்டுட்டு.
காலையிலேர்ந்து இந்த கேட்டைப் பிடிச்சுகிட்டு காத்து கிடக்கான்"..
சனிக்கிழமை வந்தா போதும்..அரவிந்திற்கு இருப்பே கொள்ளாது..
வெறென்ன ..அவன் செல்ல பெரிம்மா செல்வி வரும் நாளாச்சே.
" அம்மா..மணி என்ன ஆச்சு..?
பஸ் வந்திருக்குமா?..
எங்க வந்திட்டு இருக்காங்கனு கேளுமா??'
" கண்ணா..பஸ் சத்தத்தில ஃபோன் சரியா கேட்காதுடா'..
தவித்தான்.
" என்ன கண்ணு....தனியா எதுக்கு வாசல்ல நிக்குற??"..
போற வரவங்க கேட்ட கேள்விக்கெல்லாம் ..ஒரே பதில்..
" இன்னிக்கு எங்க பெரியம்மா வராங்களே"..பெருமித பதில் தான்.
பெரிம்மா வந்தாச்சு.
என் செல்லமே..வாரி அணைத்து ..
கொஞ்சினாள்.
தான் செய்த சேட்டை முதல்..போட்டுக் கொண்ட சட்டை வரை எல்லாத்தையும் ஒப்பித்தான்.
பையிலிருந்து பண்டங்கள் எல்லாம்.எடுத்துக் கொடுத்து ..
' அரவிந்து..உன் ஃப்ரண்ட்ஸ்க்கெல்லாமும் கொடுக்கணும் என்ன.."..அன்பாய் ஆணையிட்டாள்.
மடியில் வந்து படுத்துக் கொண்ட அரவிந்தின் தலையைக் கோதி விட்டாள்.
" இவனுக்குத்தான் என் மேலே எத்தனை உசுரு"..சந்தோஷமாய் இருந்தது செல்விக்கு.
கிளம்பியவளிடம்..
" அடுத்த வாரம் எனக்கு கேக் கண்டிப்பா வேணும் பெரியம்மா"...
அவள் கிளம்புவது பிடிக்கலை என்றாலும்..இது வாரா வாரம் நடப்பது தானே..
கேட்டில் நின்றபடி டாட்டா காட்டிக் கொண்டே இருந்தவன்....
"திங்கட்கிழமை சரண்யா சித்தி என்னைப் பார்க்க வருவாங்களே. என்னை பார்க் கூட்டிட்டு போவாங்களே .."நையாண்டியாய் சொல்ல..
நீ..போ..போ..என்னைப் பார்க்க நிறைய பேர் வரதுக்கு இருக்காங்க..என்ற தோரணை அவன் குரலில்.
திரும்பித் திரும்பி பார்த்த படியே நடந்த செல்வியின் கண்ணில்
' அன்பு அனாதை இல்லம்'..என்று
அந்த வீட்டு போர்டின் எழுத்துக்கள் அவளை அறியாமல் வடிந்த கண்ணீரில் மங்கலாகத் தெரிந்தது.
ஆம்..
அன்பு இல்லத்தில் இருக்கும் குழந்தைகள் எல்லாருக்குமே அங்கு அவர்களைப் பார்க்க வரும் எல்லாருமே ..பெரியம்மா, சித்தி,அத்தை, மாமா தான் .
அம்மாவாய் வள்ளியம்மையும் அவளுக்கு வலதுகரமாய் கைகொடுக்கும் அவள் கணவனும் இருக்கையில்....அரவிந்த் மட்டுமல்ல ..அங்கே இருக்கும் அத்தனை குழந்தைகளுக்கும் வாழ்க்கை அன்பு சூழ்ந்தது தான் .
அடுத்த வாரத்திற்காக..
காத்திருக்காள் செல்வி பெரியம்மாவும் தான்.


No comments:
Post a Comment