Thursday, October 5, 2023

Madhyamar-நானே_வருவேன்

 #PVPK-1

#நானே_வருவேன்



"எப்படி இதை தடுக்கறது?"இதே கேள்விதான் சாமிக்கண்ணுவின் மனசை ஒரு வாரமாக குடைந்து கொண்டிருந்தது.


பஞ்சாயத்து கூடி எடுத்த முடிவு. இது தான் நம்மூருக்கு நல்லதுனு பெரியவர்கள் சொல்லி, ஊரே தலையாட்டி முடிச்ச ஒரு விஷயத்துக்கு எப்படி நான் முட்டுக்கட்டை போடுறது?...நிலை கொள்ளாத் தவிப்பில் அவன் .


" போய் வேலை வெட்டி பாருய்யா..புள்ளைங்களுக்கு பீஸ் கட்டோணும்.... புதுத் துணி எடுத்து கொடுக்கோணும்..'..சீறினாள் அவன் மனைவி ராசாத்தி.


"மனசாட்சியே இல்லாம பேசுறாளே...சாமி ..எனக்கு ஒரு வழி காட்டு'..

ஆழ் மனசு இதையே நினைக்க..

அன்றிரவு தூங்க ஆரம்பித்தவன்..எதோ ஒரு குரல் கேட்டு தன்னை மறந்து குரல் வந்த திசை பின்னே நடக்கலானான். 


" ம்ம்ம்..நான் சொல்றதைச் செய்..'

ஆணைக்கு அடி பணிந்து

சொன்னதை முடித்த கையோடு வீடு திரும்பினான்.


"யோவ்..எந்திரிய்யா..ஊரே அல்லோலகல்லோலப் படுது..நீ பாட்டுக்கு தூங்கினு இருக்க'

என்னான்னு போய் பார்த்துட்டு வருவோம்

ராசாத்தியின் மிரட்டலால் கண்ணைக் கசக்கி விழித்தவன்..எல்லோருடனும் சேர்ந்து ஓடினான்.


 ஆத்தா...ஆத்தா..'எப்புடிய்யா சாத்தியம்?

எல்லார் கண்ணிலும் பக்தியின் உச்சம் . ஊரே ஆச்சரியத்தில்..


மஞ்சள் புடவை, வேப்பிலை மாலை அணிந்து உக்கிரக் கண்ணுடன் ..

"என்னை நானே காத்துக் கொள்வேன்..

இனி உங்களையும் காப்பேன்" என்ற பார்வையில் ..

வேப்பமரத்தில் ..ஆத்தாளின் உருவம்.


"ஆத்தா ..எங்களை மன்னிச்சுடு..காசுக்கு ஆசைப்பட்டு ..எங்க நிலத்தை மட்டுமில்ல..காலங்காலமா எங்களோட இருந்த இந்த மரங்களையும் வெட்டச் சொன்ன பாவிகள் நாங்க...'


தூரத்தில் தெரிந்த பன்னாட்டு நிறுவன அதிகாரியின் வாகனம்,  ஊருக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.


அன்றிரவு...நீண்ட நாளுக்குப் பிறகு ..சாமிக்கண்ணு அமைதியாக உறங்கினான்.

No comments: