Sunday, April 12, 2009

காலமது.. காலமது..

காத்திருந்த அந்நாளும்
கடைசியாய் வந்தது..
பரீட்சையும் முடிந்தது..
பாட்டி வீடு நான்போக.

fan இல்லை..
phone இல்லை..
கணிணிதான் அங்கில்லை..
கண்கவரும் தொலைக்காட்சி ..
கண்டதும் தானில்லை.

வீடெங்கும் கும்மாளம்
மழலைகளின் பட்டாளம்
மேகமின்றி இடிமுழக்கம்....

சுவைதரும் கூட்டஞ்சோறு
கூடியே பெரியோர் சமைக்க
வட்டமாய் முற்றத்தில்
சட்டமாய் அமர்ந்தேதான்
உருட்டியும் தருவாளே
பாட்டியும் அன்புடனே..

நான் நீ என்றே போட்டி..
சிரிப்பாளே பாட்டி
காலியான பாத்திரம் காட்டி..!!!

கட்டிலில்லை.. மெத்தையில்லை
கட்டாந் தரையினிலே
கையே தலையணையாய்
கொள்ளை சிரிப்புடனே..
கிண்டல் கேலி கூத்துடனே..
கண்ணுறங்கிய நாட்களது..


அந்த நாளும் வந்திடாதோ..
ஆனந்தமது தந்திடாதோ!!!!
நினைத்தே ஏங்குகிறேன்....
திரும்பிவாரா தினங்கள் எண்ணி!!!!

Monday, January 19, 2009

கண்ணீர் சொல்லும் கதை..


வானமது அழுகிறது- அது
சிந்தும் கண்ணீர் மழையென்பார்..
மனமது அழுகிறது..அது
சிந்தும் கண்ணீர் கவிதையென்பார்..
எண்ணத்தின் ப்ரதிபலிப்பு..அது
எட்டிப்பார்க்கும் கண்ணீராம்..

ஆனந்த கண்ணீராய்..
அழையாமல் அரும்புமது..
அழுகைக்கு ஆலாபனையாய்..
அருவியாக கொட்டுமது..
நிஜத்தை மறைக்கும்..
நீலிக்கண்ணீர் ஒன்றுண்டு
அடங்கா சிரிப்பினிலே..
துள்ளிவரும் கண்ணீரது..

கண்ணீரும் கவிதையும்
உள்ளத்தின் ஊற்றுகளாம்..
அடைகுந்தாழ் ஒன்றுன்டோ..
வற்றா இச்சுரப்பிகட்கு..




.