Monday, October 24, 2016

என்னையும் எங்கூர எட்டி பார்க்க வைச்சது. Shiv K Kumar sir

திருச்சி வாசம்..
TST bus..
TMS பாட்டு..
ஓர சீட்டில் ..
ஊரை வேடிக்கை..

மலைக்கோட்டை வரும்..
மாங்கு..மாங்குனு..
தெப்பகுளம் வழியா..
தாயுமானவருக்கு..
தோப்புக்கரணம் போட்டு..
சாரதாஸிலும்..கீதாஸிலும்..
கிடீஸ் கார்னரிலும்..
துணி வாங்கி..
பசியாற..போவோம்..
வசந்த் பவனுக்கு..
குடும்பம்..ரொம்ப ஒத்துமையா..
எல்லாரும்..ஒரே அயிட்டம்..
மசாலா தோசை ஆர்டர் பண்ணி..
முடிக்க முடியாம ..முழுங்கி..
தின்ன தோசை..
சீரணமாக..
பொடி நடையா நடந்து ..

மைக்கேல்ஸில் ..
ஐஸ்கிரீம் முடித்து

வீடு வந்து சேர்வோம்..
வாங்கி வந்த துணியை
தினமும் எடுத்து பார்த்து..
புது வாசம் முகர்ந்து பார்த்து..
எப்போ தீபாவளி வரும்..
முதல் ஆளா..ரெடி ஆகி..
புதுத் துணி போட்டு
பட்டாசு வெடிச்சு..
ஊரை எழுப்பிய கதையெல்லாம்..
இப்போ சொன்னா..
So cheap ங்கறாங்க..
திரும்பிப் பார்த்தேன்..
திரும்பி வரா நாட்களை..

Thursday, October 20, 2016

Diwali sweets

சட்டியிலேயே  ஒட்டிய..
அல்வாவும்..
பல்லை உடைக்கும்.
பர்ஃபிக்களும்...
கோணிப் போன
முறுக்குகளும்..
கல்லாய்ப் போன..
மைசூர் பாக்களும்..
பாதி வெந்த
பாதுஷாக்களும்..
பிறவிப் பயனை அடையா
(லட்டு)பூந்திகளும்..
கோல்ட் நிறம் மாறிய..
globe(gulab)..ஜாமுன்களும்..
உருட்டுக் கட்டைகளாய்..
ரவா..பயத்தம் உருண்டகளும்
வெந்த புண்ணில் வேல் போல..
நெட்டில் கண்ட ரெசிப்பிக்களும்
நிஜத்தில்..நோகடிக்க
போன வருஷம்..
பட்டது போதும்..
ஃபோனைப் போடு..
'மாமி...மிக்ஸரும்..மைசூர்ப்பாவும்..
முதல் நாளே அனுப்பிடுங்கோ..
இனிமே...நிம்மதியா.
போத்தீஸ்..நல்லி..குமரன்..
ஷாப்பிங்...ஷாப்பிங்..ஷாப்பிங்..

Wednesday, October 19, 2016

Karwa chauth

karan johar படங்கள்..
karwa chauth பாடங்கள்..
கையில் மெஹந்தி
கல்யாண lehenga
கலகலக்கும் வளையல்
காய்ந்த வயிறு..
'அந்த நிலாவைத்தான்..
நான் சல்லடையில் பிடிப்பேன்..
என் ராசாவுக்காக' ...
கையில் விளக்கேந்தி
நிலவுக்கு வெளிச்சம் காட்டுவர்..
கண்ணாமூச்சி காட்டுமே..
கள்ள நிலாவும்..
ஒவராய் senti போடும்..
over makeup மங்கைகள்..
'ஓ...வெண்ணிலாவே..
வா ஓடி வா ...னு பாட..
(karan johar படத்தில..எப்படி .ilayaraja sir ...situation song ..இசைஞானி இல்லாமலா..)
சண்டித்தன நிலவு..
சமயம் கழித்து
கீற்றாய் கண்ணில் பட..

கண்ணாளனுக்கு..
ஆரத்தி எடுத்து..
அவன் கையால் ..
நீர் அருந்தி...
நமஸ்கரித்து..(ஒரு நாள் கூத்து)
கடையில் வாங்கிய லட்டுவை.
கிள்ளி வாயில் போட்டு..
karwa  chauth....
பண்டிகை முடிய..
பழைய அவதாரத்துக்கு..
தாரம் ..மாற....
'பசி உயிர் போறது..
போலாம் வாங்க..
பக்கத்து ஹோட்டலுக்கு..
முடிஞ்சது ராஜாங்கம்..
order பண்ணிய உணவுக்கெல்லாம்..
தலையாட்டியபடி...
வரும்..வரும்..
 karwa   chauth
அடுத்த வருஷம்...
அதுவரை...

Monday, October 17, 2016

பூம்பூம் மாட்டுக்காரன்

பூம்பூம் மாட்டுக்காரன்..
பார்த்ததுமே..
பயந்து நகருவேன்..
அவன் விதவித முண்டாசும்..
அவன் சொல்லுவதெற்கெல்லாம்..
புரிந்ததோ..இல்லையோ..
பூரிப்பாய் தலை யாட்டும்
பூம்பூம் மாடும்...

இன்றும் கண்டேன்...
சின்னத் தெருவொன்றில்..
நகர்ந்து ஓடிடலாம்..
நினைத்த நேரம்..
நிற்க வைத்தது..
அவன் சின்ன நாதஸ்வரம்..
அதிலிருந்து எழுந்த நாதம்..

ஆனந்த பைரவியில்..
palukke bangaramayena.வை
பிசகாமல் வாசித்து..
அவனோடு அழகாய்
தலையாட்டிய மாடு..

கற்றதா..
காற்றில் கேட்டதா....

அம்மணி...
எதனாச்சும் இருந்தா கொடு...
அவன் குரல்...
எண்ணத்தை..கலைக்க..


கோதண்டராமா..
எப்போ உன் கடைக்கண் அருள் கிட்டும்.?

Sunday, October 16, 2016

கல்யாணி அக்காக்கள்

கல்யாணி அக்காக்கள்..
காப்பினா..
கல்யாணி போடறதுதான்..
கோலம் போட்டா..
கண்ணுலயே நிக்கும்..
அவ சமையல்..
ஊரே மணக்கும்..
எம்பிராய்டரி பண்றதுல..
எமகாதகி..
எதுக்கு படிப்பு..
எட்டாங்கிளாஸ் போதும்..
எப்படியும்..
எங்காத்துல ..
எசமானி அவதான்..
எம் புள்ளை..
என்னிக்கும்
என் பேச்சை தட்ட மாட்டான்..
அத்தை assurance கொடுக்க..
அவள் வயசு பொண்கள்..
கல்யாணக் கவலையில் ..
இவளோ...கனவுலகில்..
CA முடித்தான் கிட்டு..
எம் புள்ளைக்கு
எட்டாங்கிளாஸ் பொண்ணா..
ஜாதகம் பொருந்தலை..
சால்ஜாப்பு சொல்லி..
ஜோடிய பிரிச்சு..
அவ உனக்கு சரியில்லடானு..
வேதம் ஓதி..
வேறு இடத்தில் சம்பந்தம்..
நிச்சயதார்த்தம் அன்று..
 கோலம் போட..
காப்பி கொடுக்க..
அடுக்களை சமாளிக்க..
அழைப்பு..
 கல்யாணிக்கு..

Tuesday, October 11, 2016

தசமி நாள்


சூலமேந்திய..
சக்தி நானும் தான்
தேடும் அசுரன் ..
வேறெங்குமில்லை..

என் கோபத்திலே..
என் குரூரத்திலே..
என் ஆசையிலே..
விளையும் பேராசையிலே..
என் எண்ணத்திலே..
என் செயல்களிலே...
என் பேச்சினிலே..
என்னை ஆட்டுமிவனை..
தசமி நாளிதில்..
தகனம் செய்கிறேன்..
தேவியே..
உயிர்த்தெழுதல்...
வேண்டாமே இவனுக்கு..


Monday, October 10, 2016

சக்தி தரிசனம்

அரசுப் பணி வேலை..என்
அம்மா ஞாபகம் வரவைத்தது..
SSLC தேர்வில் ..
மாவட்ட முதலவள்..
தலைமை ஆசியிரியை.
தாராளமாக சொன்னார்..
மருத்துவ படிப்புக்கு..
மானியம் நான் தரேன்னு..
குடும்ப நிலமை..
கூறாமல் புரிய..
அரசு வேலை..
அவள் பருவம் பதினாறில்
குட்டிப் பெண்ணவளுக்கு.
எட்டா மேசை..
உயரமாய் நாற்காலி..
சிறிய வேலையில் சேர்ந்து
பெரிய பதவி வரை.
அம்மா..ஒரு all rounder
உள்ளத்தில் உறுதியோடு..
ஊறுகள் வந்த போதும்..
உறுதியாய் நின்று..
உடன் பிறந்தோருக்கு
புது உலகம் அமைத்தவள்..
என்னைப் பொறுத்தவரை..
இவளும் ...
 சக்தியின் வடிவந்தான்..
இவள் போல்..
பல சக்திகள் இங்குண்டு..(உன்னையும் சேர்த்தே)
வெளியே வராத..
வெளிச்சம் போட்டு காட்டப்படா..
எத்தனையோ..
சாதனையாளிகள்..

நவராத்திரி.. நினைவுகள்

நவராத்திரி..
சில நினைவுகள்..
சாயங்காலம்  நேரம்
சக தோழிகளோடு..
சரசரக்கும் பாவாடையும்.
சரமாய்த் தொடுத்த மல்லியும்..
சளைக்காமல் அலங்கரித்து..
சுண்டல் மாமி ..சுண்டல்னு..
சுத்து சுத்துனு..சுத்தி வந்து..
சரளி வரிசையை..
சிரத்தையாய் பாடி..
சுருக்கு பையிலே..
சில்லறை சேர்த்துண்டு..(தீபாவளிக்கு யானை வெடி வாங்க)
தினங்கள் ஓடும்..

சரஸ்வதி பூஜை..
பிடிச்ச பண்டிகை
பூஜையறையில்..
புகலும்.. புத்தகங்கள்

ஆஹா..படிப்பில்லை..
படி படினு தொல்லையில்லை..
நகரக் கூடாதே
இந்த நாள்னு வேண்டிப்போம்..

விஜயதசமி பூஜை..
விழிக்குமுன்னே..
விறுவிறுனு பண்ணும் அம்மா.
புத்தகங்கள் எடுத்து கொடுத்து..
போய் படி இப்போ என்பாள்..
விரியும் புத்தகம்..
சுருங்கும் முகம்..

குரு ஆசி வாங்க..
கூட்டமாய் போவோம்..
வீணை மாமி வீட்டில்..
கலை வாணி அவளுக்கு
வாழ்த்தொன்று வாசித்து..
வழிபாடும் முடித்துவிட்டு..
வீடு வந்து சேர்வோம்..

விடுமுறையும் முடியும்..
விடிஞ்சா பள்ளிக்கூடம்..
காலாண்டுத் தேர்வின்..
வண்டவாளம் தண்டவாளமேறும்..
கவலையுடன் கண்மூட
கணக்கு மார்க்கு ..
காலைக் கனவில் வர
கலங்கி விழித்து..
காத்து போன பலூனாய்
விடுமுறையின் சந்தோஷம்..
நடுக்கத்தில் முடியும்..

முப்பெரும் தேவியும்..
மீண்டும் வருவாள்..
அம்மா..சித்திகளின் வடிவில்..

Thursday, October 6, 2016

தாயுமானவன்

தந்தை..
தட்டிக் கேட்பவன்
தோளில் சாய்த்து..
தட்டி வளர்ப்பவன்..
உள்ளங்கையில்
பிள்ளை பாதம்..
முள் தைக்காமல்..
முன்னேறச் செய்பவன்..
கொட்டித் தீர்க்க மாட்டான்..(தேள் போல)
கொட்டித் துன்புறுத்த அறியான்..
சட்டியில் இல்லாவிடினும்..
ஆப்பையில் வரவைப்பான்..
மன(ண்) கோட்டையும்..
கட்டிடமாகும் இவன்
விடாத உழைப்பில்..
இவன்..
கண்டிப்பின் பின்னே
கருணை உண்டு..
கண்ணுருட்டல் பின்னே
கண்ணீரும் உண்டு..
இவன்..
மெளனத்தின் பின்னே..
மன உறுதியுண்டு..
தகப்பன் ...சாமிதான்..
கண்டேன் இங்கே..
என் தந்தையிலும்..
என் பிள்ளைகளின்
தந்தையிடமும்..

நவராத்திரி ....

அட்டவணை போட்டு..
வரிசையாய்...பாராயணம்..
அழைத்த இல்லமெல்லாம்..
ஆசையாய் சென்று வந்து...
அவரசரமாய் பிரிக்கிறேன்..
அவர்கள் தந்த பையை..
என்ன கொடுத்திருப்பா..
நான் வாங்கி வைத்திருப்பதையே..
அவர்களும் தந்திருக்க கூடாதே..
..கவலையில்..நான்..
( இதுக்கு கூட நாங்க கவலைப் படுவோம்..!!!)

நவராத்திரி

நவராத்திரி..
்(அவரவர்)..அம்மா அலமாரி முதல் (முன் ஜாக்கிரதை தான்)
அன்றையத் தேதி
டிசைன் புடவைகள் வரை..
பாதுகாப்பு பெட்டகதிலிருந்து..
புது விடுதலை காணும்..
பளிச்சிடும் நகைகள்..
பாப் வெட்டிய சுட்டிகள்..
பட்டு கட்டிய பட்டாம்பூச்சிகள்..
அபார்ட்மெண்ட் வாழ்க்கை..
அலுப்பே இல்லா கொண்டாட்டங்கள்.
குஜராத்தியும்..கன்னடரும்..
தமிழரும்..தெலுங்கரும்..
மலையாளமும் மராட்டியரும்..
ஓரிடம் கூடி..
அம்பாள் நாமம்..
ஆயிரமதை
அவரவர் மொழி வடிவில்
அழகாய்ச் சொல்லி..
ஆரத்தி எடுத்து..
அவனியில் அன்பைத் தா என்று..
பாடி முடித்து..
பாக்கும்  வெத்தலையும்..
பாங்காய் பெற்றுக் கொண்டு..
நாளை என் வீட்டில்..
ஞாபகமாய் வரணும்னு சொல்லி..
நங்கைகள் நயமாய்
விடை பெறுவோம்..
எங்கிருந்தோ வந்தோம்.
இணைந்தோம்...
இவள் அருள் வேண்டி..
ஒன்பது நாள் ..
ஓடியேப் போகும்
ஒன்றிப் போகுமே
உள்ளங்கள்..

நவராத்திரி....நாயகிகள்
நம்மில்லம் வரட்டும்.
நல்லருள் தரட்டும்..
நன்மைகள் பெருகட்டு.