Friday, March 31, 2017

நேற்று போல் இன்றில்லை..

நேற்று போல் இன்றில்லை..
இன்று போய் நாளையில்லை..
என்ன அருமையான பாட்டு..
முப்பத்தொண்ணு மார்ச்
முழி பிதுங்கும் நாள்.
வரவும் செலவும் இடிக்க
வரியும் ஏய்ப்பு வயிற்றை பிசைய
வவுச்சர் போடறதா
வராதுனு மூடறதா..
Suspense ல வைக்கிறதா
Secretல அமுக்கறதா
அட்வான்ஸ் கழிக்கறதா
அடப் போகட்டும்னு விடறதா
Target க்கு ஓடறதா
Trial balance உடன் போராடறதா.
Accountsம் auditம்
ஆடின ஆட்டமெல்லாம்
அடங்கிப் போகுமே
தொடங்குமே வேலை.

தூங்காத விழி ரெண்டோடு
பாங்க் ஊழியர்கள்..
Guidelines எல்லாம்
கடகடனு கொட்டனுமே
Interest rate எல்லாம்
இம்மியும் மறக்கக்கூடாதே

விடிஞ்சதும் வீடு போய்..பல்
விளக்க ஆரம்பிக்கையில்
வீல் வீல்னு அலறும் கைப்பேசி
விஷயம் தெரியுமோ உமக்கு
வாட்ஸப்பில் fb எல்லாம்
விவாதம் ஆரம்பிச்சாச்சே
விதியெல்லாம் மாறியாச்சு
கதி கலங்கி பேதியாச்சு..
Reserve bank ஆ..இல்ல
Reverse bank aa
Respect இல்லையே
Remitters எங்களுக்கு


உத்தரவு(உர்ஜித்) பட்டேல்..
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்..
பெட்ரோலிய ஓனரோ..
பொட்டிக்கடை ஓனரோ
உன் நெஞ்சைத் தொட்டு சொல்லு என் ராசா..
யாருக்காவது balance sheet tally
ஆகி இருக்கா..
பல வருஷமா..நானும்  try பண்றேன்..என் வீட்டு balance sheet tally பண்ண..
முடியலையே..
நான் என்ன பண்ணுவேன்..ஹி..ஹி..ஹி..

Thursday, March 30, 2017

அடுப்படி எனக்கென்ன சொந்தமா

அடுப்படி எனக்கென்ன சொந்தமா.

படை போல் குடும்பம்
பொடிசு முதல் பெரியவர்கள்
பானையில் சோறு
பருப்புக் குழம்பு
பொரியலும்..வறுவலும்..
பொதுவாய் சமையல்.
பந்தியில் அமர்ந்து
பாங்காய் பரிமாறல்
பங்கிட்டு உணவு
பழசுக்கு இடமேது..
பொசுக்கும் வெய்யிலில்
பொழுதும் போகவே
அப்பளமும் வடாமும்
அழகாய் இடுவாளே..
அம்மியும் ஆட்டுக்கல்லும்
அங்கே கைகொடுக்குமே..
தேய்த்தல் துவைத்தல்
துடைத்தல் எல்லாமே
துரிதமா நடக்குமங்கே
தட்ட ஒரு மெஷினில்லாமலே
இப்பவும் யோசனைதான்
எப்படி இப்படி
எல்லாம் முடிஞ்சதென்று..

பள்ளியெழுச்சி முதல்
படுக்கப் போகும் வரை
பம்பரமாய் வேலை
எம்பிரானே ஏனென்றேன்..

காப்பி ஒருத்தருக்கு
காம்ப்ளான் ஒருத்தருக்கு
அருகம்புல் ஜூஸ்
ஆறின கஞ்சி ஒருத்தருக்கு
திரிஃபலா ஒருத்தருக்கு
டீத் தண்ணி ஒருத்தருக்கு


காப்பிக் கடையே..
கதவும் மூடாதே..

சுக்கா ரொட்டி
சுருள வதக்கிய வெண்டை
கடைஞ்ச பருப்பு
கெட்டித் தயிர்..
பன்னீர் பட்டர் ஒருத்தருக்கு
பத்திய சாப்பாடு ஒருத்தருக்கு
பிரியாணி ஒருத்தருக்கு
பாஸ்டா ஒருத்தருக்கு..
என்னதான் ஆனாலும்
ஒட ஒட ரசமும்
ஒரு வடு தொட்ட மோரும்
ஒரு வழி வழிக்கலையோ
ஒரு திருப்தி வராதே
ஓஞ்சு போகுதே
ஒரு வேளை சமைச்சதுமே
வகைகள் இப்போ
வதையும் ஆச்சே
வத்தலும் வடாமும்
வகையாய் நொறுக்கலும்
விலைக்கு வாங்கும்
நிலையும் ஆச்சே..
பகட்டே இல்லா
பழைய வாழ்வு
பகல் கனவுமாச்சே

ஓடி வந்தாச்சு
ஒரு பெருந்தூரம்
திரும்பிப் பார்ப்போம்..
திரும்பிப் போகமுடியாவிட்டாலும்..

தொடுக்கும் கைகள்
வடு 

Tuesday, March 28, 2017

தங்கமணி..எங்கே நீ

தங்கமணி..எங்கே நீ..

2008..ஒரு மத்தியான நேரம். ஃபோன் பெல்லடிக்க..மறுமுனையில் தங்கமணி..(என் மாமியார்)..
என்ன பண்றே அகிலா..
ஒண்ணும் இல்லமா..இப்போதான் ஐஷுவோட ஒரு fight ..ஒரே மூட் அவுட்.
நீங்க சொல்லுங்கோம்மா..என்ன விஷயம்..
நான் சொல்றத கொஞ்சம் செய்வியா..எப்போதும் போல ஒரு அன்பு வழியும் தொனியில்..
ம்ம்ம்ம்..என்னது ம்மா..
ஒரு கவிதை எழுதேன்..தலைப்பு ..'தலைமுறை இடைவெளி'..
ஐயோ சாமி..அம்மா..are you OK? யாரைப் பார்த்து என்ன கேட்கிறேள்..no no no..ஷாருக் ஸ்டைலில் நான் அலற..நாளைக்கு அனுப்பு எனக்கு .bye ..என்றாள்.
இப்படியாக என் முதல் கவிதை அரங்கேறியது ..எனக்குத் தெரியும் உன்னால் முடியும்னு என்று mail அனுப்பினாள்..
அதற்கு பிறகு சந்த வசந்தத்தில் எல்லா கவியரங்கியிலும் என்னை சேர்த்து விடுவாள்..தங்கமணி மருமகளே..கொஞ்சம் இலக்கணம் கத்துக்கோயேன் உன் அம்மாவிடம்..செவிடன் காதில் ஊதிய சங்கு தான்...
நீ எழுது உன் பாணியில் என்பாள்.

கமகமனு சமையல்..
கைவந்த கலை..
கவிதை எழுதி..
கடவுளைக் கண்டாள்.
கணினி அவளுக்கு
கைப் பொம்மை
காமெரா கண்டாலே
காண்பதை படம்பிடிப்பாள்
குழந்தைகள் கண்டால்
குறையும் வயது
கடுகடு முகமே
கண்டதே இல்லை..
கடகடனு சொல்வாள்
கேட்டதும் ராகங்களை
குளுகுளு பானங்கள்
கொழுப்பாய் குடிப்பாள்
கொல்கொல் இருமலில்
கழிப்பாள் இரவுகளை..
ஆட்டோ பாட்டி பேரிலிவள்
ஆடாது அசையாதாள்
ஆட்டும் துன்பத்திலும்..
அன்பு தான் வெல்லும்
ஆணித்தரமாய் சொன்னாளே
அனைவரின் பிரியம்
அன்பின் உயரம்..
ஆண்டாள் அன்பினால்..
அடைந்தாள் அவனடி..
அரைமூச்சிலும்
அரை மயக்கதிலும்
அருகே வா என்றாள்..
அம்மாவை அழைத்துவா.
அருமையா பார்த்துக்கோ
அவளுக்கும் நீ வேணுமென்றாள்.
மனமொன்று வேண்டும்..தங்க
மணி போல் என்றும்.
மாய்ந்து பேசுகிறார்..நீ
மறைந்த பின்னும்..

தங்கமணி..
எங்கே நீ..


Friday, March 24, 2017

Holi hai holi

holi hai holi..
கத்தலோடும் கலரோடும்
காலை ..புலரும்..
வயதுக்கும் வாலிபம் திரும்பும்
வசந்த நாள்.. இன்று

வண்ணங்கள் வாங்கும் விழா
வாரங்களுக்கு முன்பே தொடங்கும்..
உற்சாகம் உல்லாசம்..
ஊரெல்லாம் கொண்டாட்டம்..

உருளை உருண்டு விளையாடும்..
உருவம் பல எடுக்கும்..
வடாமாய்,சிப்ஸாய்,டிக்கியாய்..
போண்டாவாய்,கட்லட்டாய்....
தோழியுடன் ஒப்பந்தம்..
தோசை சாம்பார் கொண்டு வரேன்..
தோதாய் நீ வேலை செய் என்று..(நமக்கு இதெல்லாம் வராதே..சாம்பாரைப் பார்த்ததும் 'shakthimaan' ஆகிடுவா..!!)
அடுத்து..
'குஜியா'... செய்யனும்..'
தோழி சொல்ல..
நதியா மட்டுமே தெரிந்த நான்
திரு திரு நு முழிக்க...
சிரிப்பு தான்..சந்தோஷந் தான்..
செய்யறதுக்குள்ள.. சீவன் பாதி போகும்..
ஆனா..
சொர்க்கம் தெரியும்..சொட்டு நாக்கில பட்டதும்..
சுவையோ ...சுவை....
ருசியோ ...ருசி..

ஹோலி நாள்....
ஒரு ஜாலி நாள்...

பாலிகை கரைக்கறது மறக்காம இருக்க.
பாக்கெட் கலரெல்லாம் தண்ணீரில் கரைச்சு
பக்கெட் டிலும்..பலூனிலும்..
pichkari யிலும் ...ரொப்பித் தள்ள
வாரி இறைத்த வண்ணங்கள்..
வானவில் ஜாலம் காட்ட..

ஒரு வழியாய் ஆடி முடித்து..
அப்பிய கலர் போக..
அட்டகாச குளியல் போட்டு.
அப்பாடா...தூக்கம் போட்டு..
என்னமா..ஒரு பண்டிகை...

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே..
இன்றோ..
no 'holi'day நு school சொல்ல..
நொந்துமே என் பெண்ணும் சென்றுவிட..
நினைவுகளை அசை போட்டு....
ஜோலி ஒன்றும் இல்லா..
காலி ஹோலி..
happy holi my dear friends
enjoy every minute of life..
moments never come back ..
only the memories stay back..

Wednesday, March 22, 2017

தண்ணீர் தண்ணீர்

தண்ணீர்..தண்ணீர்
ஒரு கப் சக்கரையும் காப்பி பொடியும் கடன் வாங்கும் காலம் போய் ஒரு கப் தண்ணீ இருக்கா..அடுத்த மாசம் திருப்பித் தரேந் மாமி எனலாம்..
அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளா..அவள் ஆத்துக்காரர் அரை லிட்டர் தண்ணீ வாங்கிண்டு வந்ததை கேட்டேளா..
பட்டு மாமி பொறாமையில் மூக்கை சிந்தலாம்..
அப்பா..அப்பா..ஏன் எனக்கு தண்ணிகாசலம் னு பேர் வெச்ச..என் friends எல்லாம் கேலி பண்றாப்பா..என்று அடம்பிடிக்கும் மகனிடம்..அது மூதாதையர் பேருடானு சொல்லலாம்..
Demonetization சமயத்தில் ஒரே ஒரு 500 ரூபாயும் ,ஆயிரம் ரூபாயும் தனியா எடுத்து உண்டியல் அடியில் போட்டு  வெச்சு காண்பிச்சோமே..இந்த தண்ணீரை இவங்களுக்கு எப்படி இருக்கும்னு காட்ட எடுத்து வெச்சிருக்கலாமோனு வருந்தலாம்.
கண்ணீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பல உருவாகலாம்..அதிகம் அழுவோர்க்கு மானியம் தரப்படலாம்.
திரவப்பொருளில் தண்ணீர் என்றதும் திருதிருனு முழிக்கலாம்..
நிலத்தடி நீர் தேடப்போனவர்கள் ..நிலத்தடி அபார்ட்மெண்ட்டுகள் கட்டலாம்..
அங்கேயே IT companies ஆரம்பிச்சு..பல மூர்த்திகள் முன்னுக்கு வரலாம்.
Education loan,home loan எல்லாம் போய் water loan வாங்கி அதுக்கு emi கட்டலாம்
கோடை விடுமுறைக்கு தண்ணீர் கிடைக்கும் mars க்கு சுற்றுலாப் பயணம் போகலாம்..
ஐயோ ..
நினைக்கவே நடுங்குதே..
நீயில்லாமல் நானா
நீரில்லாமல் வாழ்வா..?

நிறமில்லா நீர்..
நதியாய்..ஆறாய்
நானிலம் காக்க
சுயநல வாழ்வில்
கயவராய் மாறினோம்
தண்ணீர் தானே...
தாராளமாய்..
தண்ணீராய் செலவு..

விளைவோ..

ஒரு குடம் நீருக்கு
ஒரு மணி காத்திருப்பு

தவிக்கும் வாய்க்கு
தண்ணீர் தரவே
தயக்கமும்  ஆச்சு.

சேமித்த காசு..நீர்
சேந்தித் தரல..
சிந்திய துளிகளும்
சேர்க்க முடியல..

கங்கையும் யமுனையும்
காவிரியும் நர்மதையும்
கைக் கோர்க்கட்டும்..
கண்ணீர் துடைக்கட்டும்

நதியெல்லாம் இணையட்டும்..
நலமெல்லாம் பெருகட்டும்..
நாளை வரும் சந்ததிக்கு
நம்மால் முடிந்த உதவி..
நல்லக் குடிநீரும்
நோயில்லா வாழ்வு

அழகி..நீ..பேரழகி..

அழகி..நீ..பேரழகி..


மஞ்சள் அழகி நீ
மலர்ந்த பூவழகி
தெளித்த சிவப்பழகில்
மிளிரும் மென்மை  நீ..

கண்ணாடியில் காட்டட்டுமா
கவரும் உன்னழகை..தலைக்
கனம் வந்திடாதே
மண்ணில் அழகி நானென்று..

காக்கும் கண்ணிமை..நம்
கண்ணுக்குப் புலப்படுவதில்லை
காக்கும் இறைவனும்..
கண்ணெதிரே வருவதில்லை..
உன்னழகும் என்றுமே..
உனக்குத் தெரிவதில்லை
ஊரார் உரைக்கையிலே
உனக்கிங்கே உறைத்திடுமோ


நாடகமாம் இவ்வுலகில்
நாள்கணக்கு உனக்கு..
நாளும் இருக்கென்ற
நம்பிக்கை வாழ்வெனக்கு..
நானும் இங்கு செய்யணும்..
நல்லது நாலு பேருக்கு..
நாதனவன் பாதமதை..
நானும் அடையுமுன்

Tuesday, March 21, 2017

என்ன வெய்யில்..

என்ன வெய்யில்..
என்ன வெய்யில்..
வருஷா வருஷம்
வரும் புலம்பல்..
ஆனாலும் ..
காத்திருக்கோம்...
கரு வடாமும்
வடு மாங்காயும்
கடைந்த  மோரும்
கவளம் சோறும்..

நுங்கும் இளநீர் வழுக்கையும்
தர்பூஸ் கிர்ணி முலாமுங்கூட
மல்கோவாவும் இமாமபசந்தும்
மலையாய்க் குவியும் ..
மனமோடு உடலும்் குளிரும்..
பத்து காசு பாலைஸ் சுவை
butterscotch இல் இல்லையே
எல்லாக் காலமும்
எல்லாம் கிடைப்பதால்
எள்ளளவும் தெரியலை யே
எல்லாவற்றின் அருமையுமே..

நீயில்லையேல் ..நானில்லையே...

நீயில்லையேல் ..நானில்லையே..


கழுதைக்குத்தெரியுமா
கற்பூர வாசனை ..
கர்வமான  கருத்தோடு
கனலாய்க் கக்கியிருந்தால்
கவிதை ஒரு வதையென்றே
காத தூரம் ஒடியிருப்பேன்..

இலக்கணம் எனும்
இடுக்கியில் சிக்காதே
மரபு எனும்..
வரம்புக்குள் மாட்டாதே..
வெண்பா வரலையென்று
வெறுமே இருக்காதே..
தேமா புளிமா தடுமாறாதே
தெம்பு தரும் கவி எழுது
ஒற்று தப்பினால் என்ன
கற்றுக் கொள் நீயே
விருத்தம் வரலையென
வருத்தம் கொள்ளாதே..

கொச்சகக் கலிப்பா
மெச்சும்படி வராதா என
மருகாதே நீயும்

சீரும் அடியும்
சிறப்பாய் வருமே
சிறு முயற்சி செய்தாலே
எதுகையும் மோனையும்
என்றும் உனதாகுமே
எண்ணத்தில் தெளிவிருந்தால்..

ஊக்குவித்தவள்..
உலகம் வேறில் இன்று..

கவிதை நாள் இன்று..
காணிக்கை இதுவே உனக்கு..
தங்கமணி..
எங்கே நீ..

Monday, March 20, 2017

Rest இல்லா remote

விஜய்யில் ராஜா..
சூரியனில் ரஹ்மான்..
ஆயிரம் கண்டவர் அங்கே
மெரசல் மன்னன் இங்கே..
எழுபதும் எண்பதும்
தட்டி எழுப்புது அங்கே
தப்பிப் போன நினைவுகளை..

இளமை கொப்பளிக்கும்
இத்தனை குரல்கள்
இங்கிருக்கா….
அசந்து போய் நானிருக்க..
அசதி உனக்கில்லை
வசதியாய் படுத்துண்டு
விரல் நுனியால் என்னை
வேலை வாங்குகிறாயே..
கொஞ்சம் இரக்கம் காட்டேன்..
கெஞ்சுகிறது .. என் remote..
என்ன செய்ய..
இரண்டும் வேண்டும்..
இன்று overtime உனக்கு

Sunday, March 19, 2017

நெருடும் நிஜம்

கொளுத்தறது வெய்யில்
குளுகுளு பிரதேசத்துக்கு
குடும்பத்தோட போறேன்..
கொஞ்ச நாள் தப்பிக்க..
நீயெங்கே வரமுடியும்
நீட்டிப் படுத்துடுவியே..
நானும் இவளும்
நண்டும் சிண்டோட
நாளைக்கு கிளம்பணும்..
நீ வேணா..
நாலு மனுஷாளோட
நாளைக் கழிக்கிறயா..
நல்ல பொழுதும் போகும்
நான் வரும் வரைக்கும்..

நனைத்த நார்ப்புடவை
படுக்கையாய் விரித்தபடி
புன்னகைப் பார்வையுடம்
 போய்ட்டு வா நீ
 பார்த்துக்கறேன் நானென்றாள்

ஒத்திகை அத்தனையும்
ஒரு தூசானது..அவள்..
ஒற்றை வார்த்தையில்..
அம்மானா..
சும்மாவா..

Wednesday, March 15, 2017

கூந்தலிலே மேகம்

எப்படி manage பண்ற..இத்தன நீள முடியை..
என்ன ஷாம்பூவில் ஆரம்பித்து என்ன எண்ணெய்..என்ன மாதிரி சீப்பு..எண்ணைக் குளியலுண்டா..
என்ன டயட்..
எப்படி தலை வாரல்..முடியை தூக்கி போடுவியா..இல்ல சவுரி பண்ண குடுப்பியா..காதில் புகையுடன் கேள்விக் கணைகள்..
கூந்தலுள்ள சீமாட்டியோ..அதெல்லாம் ஒன்னுமே இல்ல..இயற்கையிலேயே அப்படித்தான் என்று ஒரு அலட்டு
அலட்டுவா..
கண்ணன் பார்த்தார்..எங்கே இந்த வலையில நம்ம ராதையும் சிக்கிடுவாளோனு ஒரு கலக்கம்..
அவர் அட்வைஸ் ராதைக்கு என் கற்பனையில்..
பிழை பொறுத்தருள்க


கொண்டையும் நீ முடியடி
கண்டவர் கண் படுமுன்னே
பொறாமையில் பொசுங்குவாரடி..
போதும் உன்னலட்டல் என்பாரடி
போடி அசடுன்னும் சொல்வாராடி
பாப் கட் உனக்கு எடுப்பென்பாரடி
செம்பருத்தியும் சீயக்காயும்..
சேர்த்து வைத்த ரோஜாவும்
வாசனை திரவியமெல்லாம்.
வேண்டாமே இப்போ என்பாரடி..

ஷாம்பு போதுமென்பாரடி
சரமாகும் உன் கூந்தலென்று
சொல்லி வீழ்த்துவாரடி
சாயாதே வீசும் மாயவலையில்
மாயக் கண்ணன் எனை
மயக்கும் உன் கூந்தலடி
விரித்தாலும் அழகு..
முடிந்தாலும் அழகு..
ஒரு முழமும் சூடலாம்..
ஒற்றை ரோஜாவும் சொருகலாம்.
உன்னழகைக் கூட்டுமிந்த
கருங்கூந்தலதை..கழிக்காதேடி
ராதே..என் ராதே

காரடையான் நோன்பு

காரடையான் நோன்பு..
'கார் 'அடைய சிலருக்கு
கால்வயிறு கஞ்சிக்கு..பலருக்கு

கடமை பலவுண்டு
காக்கணும் பெத்தவரை
கல்யாணங் கழிக்கணும்
காலாகாலத்தில் தமக்கைக்கு
கண் கலங்காம பாத்துக்கணும்
கரம் பிடித்து வந்தவளை
கல்வி தரணும்..
கண்ணான பிள்ளைக்கு
 கடமை நிமித்தம் அவன்செல்ல
கட்டியவள் கட்டிக்காப்பாள் வீட்டையுமே
அகமுடையானை அனுப்பிவிட்டு
அவளொன்றும் சுகமா இல்லையிங்கே

ஆதியும் அந்தமும்
அவள் பொறுப்பு
பின்னூசி முதல் பீரங்கி வரை
புருஷன் காதில் படாம
பிரச்சனைகள் முடிப்பாள் பொறுப்பாக.

அல்லாடி அலைந்தாலும்
ஆல் ஓகே என்பாளே
பிரிவு தனிமை இருந்தாலும்
சரிவு வராது காப்பாளே
சரடு கட்டி நோற்பாள் நோன்பு..
சிரிப்பவர்கள்..சிரிக்கட்டும்..
அது ஆணவச் சிரிப்பென்று..

Tuesday, March 14, 2017

Urvasi urvasi take it easy policy

urvasi urvasi take it easy policy..
உருகாத வெண்ணையும் ஓரடையும் நான் வைத்தேன்..
(ஊரில் இருக்கும் கணவன்)  ஒருநாளும் பிரியாத வரம் தருவாய் என்று..
உருகி வேண்டும் உமைகள் ..

சைட்டில் (site)இருக்கும் சத்தியவானுடன்
Skype இல் சரடு கட்டிண்டு
கணினி முன் காலில் விழுந்து
காலம் மாறினால் நம் காதல் மாறுமா பாட்டு BGM உடன்..
காரடையான் நோன்பு..


வெல்ல அடை..
வெண்ணையோடு வழிச்சு ..
உப்பு அடை..
ஊ ஊனு ஊதி சூடா..
அப்படியேச் சாப்பிடணும்..
'ஆ'னு அவர் வாய் பார்க்க..

அடடடா..நாழி ஆகிடுத்து..
மெஸ் மூடிடப்போறான்..
காஞ்ச ரொட்டியும்..
கருப்பு தாலும்கூட
கிடைக்காம போய்டப்போறது..
போங்கோ..கிளம்புங்கோ..
நானும் போகணும்..
நாலு வீட்டுக்கு
நம்மாத்து ப்ரசாதம்னா
நண்பிகளுக்கு உசுருனு..

#urvasi urvasi take it easy policy

Monday, March 13, 2017

Holi hai holi

ஹோலி நாளடி இன்று
ஜோலியும் ஏதடி வேறு..
கால நேரம் மறந்ததடி
கவர்ந்ததடி களிப்பாட்டம்

வண்ணம் பல வாரியிறைத்த
வட்ட முகங்க ளிடையே
வஞ்சி உனை காணலையே
எஞ்சிய தெனக்கு ஏமாற்றமே..

அப்பிய வண்ணத்திடையே..உன்
அழகு முகம் மறைந்ததடி
அடையாளம் அழிந்ததடி
ஆகாதடி இந்தக் கோபம்
அப்பிராணி நானடி..

தோப்புக்கரணம் போடவா
தோளில் உன்னை சுமக்கவா
ஆத்து நீரை அள்ளவா..உன்
அகம் வரையில் துணைவரவா

கெஞ்சி மன்றாடி நிற்பேன்
வஞ்சி எனை நம்படி
வஞ்சகனும் நானல்லடி..உன்
விழியின் கனலும் தள்ளடி

Holi hai holi

Holi hai holi
கலர் கலர் பண்டிகை
கலகலக்கும் பண்டிகை.
வசந்த்காலப் பண்டிகை.
விளையாடும் பண்டிகை

கலக்கம் வரும் முதலில்
களமிறங்கினால்..
களிப்பு கொள்ளை அங்கே.
கலர் பூசிய முகமே
கிலி கொடுக்குமங்கே

வீசி எறியும் வண்ணம்
வீதியிங்கு மின்னும்
வயது மறந்து இங்கே
வாலிபமும் திரும்பிடுமே

பொரித்த உருளை வறுவலும்
பொறுமை சோதிக்கும் குஜியாவும்
தயிரில் ஊறிய வடையும்
தாகம் தணிக்க பானமும்.
ஆட்டமது ஓயாதிருக்க
அதி சக்தி தந்திடுமே



ஆடி ஓடி ஓய்ந்த பின்னே
அழுக்கு போக ஓர் குளியல்
அப்பாடானு ஒரு தூக்கம்
அடடே .இதுவோ சொர்க்கம்

கவலை அடுத்து வருமே
கலரில் தோய்ந்த துணி
கசக்கிக் போட வேணுமே
சுவரில் தெளித்த கலரும்
சுவடில்லாமல் அழிக்கணுமே..

வண்ணங்களின் பண்டிகை
எண்ணத்தை தூண்டியதே
வாழ்ந்த காலங்கள் எல்லாம்
வந்து நினைவில் போகிறதே
வணங்கிடுவேன் இறை யவனை
வாய்ப்பு ஒன்று தந்ததற்கு
வாழ்வை நன்கு ரசிப்பதற்கு

Sunday, March 12, 2017

பெளர்ணமி

பெளர்ணமி
கண்ணாம்பூச்சி காட்டும் நிலா
கடமை கண்ணாயிரமாய்
கம்பத்து விளக்கு

Thursday, March 9, 2017

ராதே..என் ராதே

ராதே..என் ராதே

இறக்கடி உன் கோபத்தை
இறகாக்கடி உன் மனத்தை

போகும் பொழுதும் தெரியலையே
பேதையுன் மொழிப் போதையிலே
போதுமென்ற மனமும் இல்லையே
போகா விடில் விழும் பழியே..

காத்திருப்பர் கோபியர் அங்கே
கண்கட்டி விளையாட்டும் ஆட
கொஞ்ச நேரம் போகவேணும்
கோபமேனோ சகியே உயிரே...

காதலன் மட்டுமல்லடி உன்கண்ணன்
காவலனாய் என்றும் காக்கும்
கடமை ஒன்றும் உள்ளதே
களங்கம் வரலாமோடி
கண்ணன் உன் மன்னனுக்கு..

கனல் பார்வை நீ விட்டு
கனிவோடு வழி அனுப்பு
காத்திருப்பும் சுகமென
கண்டறி நீ கண்மணியே..

கோயில் மணியோசை

கோவில் மணியோசை

பிரகாரத்தை சுற்றி முடித்து
பகவானே நான் சொன்னதெல்லாம்
நினைவில் வை..
பாவி எனக்கு உன்னை விட்டா யாரென்று
பக்திப் பரவசத்தில் இன்னோரு மீள் வேண்டல் தொடங்க
படியைத் தொட்டு கும்பிட்டபடி
பவ்வியமாய் நுழைந்த ஒருவர்
பிடித்து அடித்த கோவில் மணி
பரமன் என் அருட்பார்வை
பேதையே உனக்குமுண்டு
பதறாமல் போய் வாவென
பாசமுடன் சொன்னதோ..

கோவில் மணியோசை..
இன்னும் ஒலிக்கிறது..

கண்ணன்

பார்வை ஒன்று போதுமடி
பாரம் யாவும் தீருமடி

பகலும் இரவும் போனதடி
பாவை உந்தன் பிணைப்பினிலே

மையிட்ட உனது கருவிழியோ
மையல் கொள்ளச் செய்யுதடி

மணிகள் கோர்த்த மாலையுமே
மங்கையுன் அழகை உயர்த்துதடி

சிவந்த உந்தன் திருமுகமோ
சீவனை கொல்லத் துணியுதடி

சிரிப்பில் மயக்கும் உன்னிதழோ
கிறக்கத்தில் என்னை வீழ்த்துதடி..

மாயக்கண்ணன் நானென்றால் எனை
மயக்கும் மகராசி நீயன்றோ..

மாலை மயங்கத் தொடங்குதடி
மறுபடி வருவேன் நாளையுமே
மலர்ந்து நீயும் விடைகொடடி
மருகாதே எந்தன் மான்விழியே..

பரீட்சைக்கு நேரமாச்சு..English English 12 th

பலநாளாய்க் காத்திருந்த
பன்னிரெண்டாம் வகுப்பு
பரீட்சை தொடங்கியது
பரீட்சை தொடங்கியது.

ஆங்கிலப் பாடம் இன்று
ஆரம்பம் எளிதில் இருந்து

இலக்கணமும் இலக்கியமும்
இயல்பாக அழகாக
இன்பமாய்ப் படித்தாலே
ஈர்க்குமே காந்தமென..

பத்திகள் பல உண்டு
பக்குவமாய் பதில்கொடு
கடிதங்கள் வகையுண்டு
கருத்தோடு எழுதிடு நீ
குறுஞ்செய்தி மொழியினையே
மறந்திடு நீ அங்கேயும்.

படைப்பாற்றல் சோதிக்க
பாகமொன்று உண்டங்கே
கட்டுக்கதை எழுதாமல்
கட்டுரையை எழுதிடு நீ
பிட்டுபிட்டு வைத்திடு நீ
புரட்சியான சிந்தனையை

எட்டிக்காய் இல்லையது
எகிறியுமே நீ ஓடாதே
கிட்டுமே  மதிப்பெண்ணும்
நாட்டமுடன் எழுதிடு நீ

விடை தெரியா
வினாக்கள் சில
வந்திடுமே சோதிக்க
விதியென எண்ணாது
மதியால் வென்றிடடி..

வேறென்ன  சொல்ல
வெற்றி உன் வாசல் வர
வாழ்த்துக் கவியிதுவே
வாழ்த்தும் கவியிது..

Wednesday, March 8, 2017

வீடும் நாடும்

பரீட்சை க் காய்ச்சல்..
பரவி இருக்கே..
வீட்டிலும் நாட்டிலும்..

பலப் பரீட்சை
படிப்பிலும்..
பொது வாழ்விலும்..


படித்தது நினைவிலிருக்க வேண்டுதல்...வீட்டில்
படிக்கத் தெரியனுமேனு வேண்டுதல்.நாட்டில்

பாதாமும் பழரசமும் பலத்தைக் கூட்ட..வீட்டில்
பாட்டிகலும் ஊறுகாயும் பலவீனப்படுத்த..நாட்டில்

பொழுது விடியலும் சாய்தலும் அறியா ..வீட்டில்
பொழுதே போகாத அடைப்பு..நாட்டில்

விரயம் நேரமென்றே துண்டித்த இணைப்புகள்..வீட்டில்
விவரம் தெரிந்திடுமேனு துண்டித்த இணைப்புகள்..நாட்டில்

தலையைத் தடவி ஆதரவு.. வீட்டில்
தர்ம அடி நகர்ந்தாயோ..நாட்டில்

அமைதியும் அரவணைப்பும் பெருகும்..வீட்டில்
அராஜகமும்,அடியாளும் பெருகுது..நாட்டில்

தீயா வேலை செய்யணும் குமாரு..வீட்டில்
தீவில் நீ அடைஞ்சிடனும் குமாரு.நாட்டில்

வேகம் குறைய் விவேகம் கூட
வெற்றி நிச்சயம் கிட்டிடுமே
விதியிதை மறந்தால்
வீடும் நாடும் சிதைந்திடுமே..

Sunday, March 5, 2017

Acche din

Acche din..
The wait is on..
அஞ்சறைப் பெட்டியிலும்
அரிசி டப்பாவிலும்
அடுக்கின புடவையிலும்
அலமாரி இடுக்கிலும்

 மடித்தும் சுருட்டியும்
மறைச்சு வெச்சேனே
மாங்கா நெக்லெஸும்
முத்து வளையலுமா
மாறும் ஒருநாள்
மகளுக்கு சீராகனு

விளக்கேற்றிய மாலை
வீட்டோர் எல்லாம்
விறுவிறு சீரியலில்
வாய்பிளந்த வேளை
அறிக்கை வந்தது
ஆயிரமும் ஐநூறும்
அந்திமக் கிரியையில்

ஆசையாய் வளர்ந்தது
அழுது புலம்பியபடி
அம்மாவைப் பிரிந்தது
அவளருமைக் குழந்தை.

அப்பவும் நம்பிக்கை
'அச்சே தின்'
அதோ வந்திடுமென்று
காத்திருப்பு
கருப்பொழிந்து
வெள்ளைப் பூக்கள்
வாழ்வில் மலருமென்று..

சொந்தக் காசும்
சொந்தமில்லாமல்..
வந்த காசும்
வாழ விடாமல்..

வழியெல்லாம் அடைப்பு
வளர்ச்சியென மார்த்தட்டல்
வருமொரு நல்ல நாள்
வெறும் கனவாகிடுமோ..!!

நம்பிக்கைக் கவிதை
நவம்பர் மாதத்தில்
மன உளைச்சல்
மார்ச் மாதத்தில்
வானிலை மாற்றமாய்
வாக்குகள் மாற
வாக்காளன் பாடு
வீதியிலே..வரிசையிலே..

'அச்சே தின்'
அவ்வப்போது..
அழுத்திச் சொல்கிறேன்..
அப்படியாவது
வராதா என்று..

Friday, March 3, 2017

#துணுக்குகள்

தங்லீஷ்துணுக்குகள்

'பாட்டில்' லயித்ததில்...எண்ணெய்
'பாட்டில் 'கை நழுவ
'பாட்டும்' கிடைத்தது..
'பாட்டு 'என்ன வேண்டிகிடக்கு
"பாட்டை' பார்க்கும் வேளையிலே
# உடைந்ததுணுக்கு


#துணுக்குகள்
என் 'ஆவி'யில் கலந்தவளே
'ஆவி 'பறக்க அரைக் கப் காபி கலந்து தாம்மா..
(பின்ன என்ன..உண்மையா சொல்ல முடியும்..பேயே..பிசாசேனு)
#பயமிருக்கட்டும்

காசு..பணம்..துட்டு..money..money

காசு..பணம்..துட்டு..money..money

சேர்க்கக் கூடாது
செலவழிக்கக் கூடாது
போடவும் கூடாது
எடுக்கவும் கூடாது
கார்டு கூடாது
காசோலையும் கூடாது
சம்பளக் கணக்கோ
சேமிப்புக் கணக்கோ
சும்மா போட்டெடுத்தா
சுளையா அபராதம்
வரவு வரும்வரை
வருந்தி அழைத்தோர்
வறுத்துவது ஏனோ
வாயில்லா ஜீவன்களை
நாளும் ஒரு சட்டம்
நல்ல குழப்பமப்பா
நடுத்தர வர்க்கமிங்கே
நசுங்கி அழியுதப்பா..

நாளை சந்ததிக் கிங்கே
நாலுகாசு நிற்குமா இங்கே
நல்லா நம்மை ஏசுமப்பா
நாம் பட்ட துன்பமறியாமல்..

பல் டாக்டருக்கொரு 'பா'.

பல் டாக்டருக்கொரு 'பா'..

பல்லு புடுங்கப் போகனும்னா
பல்ஸ் எறங்கிப் போகிடுமே
சொத்தைப் பல் பிடுங்கனும்னா
சொத்தையுந்தான் கேட்பாங்களே..
பல்லு டாக்டர் பலருமிருக்க
பில்லுப் போட்டு கொல்லாமல்
சள்ளு புள்ளுனு விழாமலொரு
சொல்லில் அன்பும் காட்டுமிவர்

பாரில் அரிய டாக்டரிவர்..எங்க
பல்லு டாக்டர் இவர்தானே


ஆனை முகத்தோன் பேரோடு
ஆரவார மில்லா டாக்டரிவர்
அனைவரும் விரும்பும் மனிதரிவர்
அமைதி அறிவின் இருப்பிடமிவர்

மாநகரச் சந்தடி நடுவினிலே
மாபெரும் மருத்துவமனை இல்லையிது
மோதும் கூட்டம் இங்கில்லை
போதும்டா சாமினு புலம்பலில்லை

ஃபினாயில் வாசம் இல்லாது
பீத்தோவன் இசை மணக்குமிங்கே..


மருத்துவம் மனிதம் ஆன்மீகமென
மண்டிக் கிடக்கும் புத்தகங்கள்
 மனதுக்குத் தருமே புத்துணர்ச்சி..

பல்லும் வரிசை ஆகியதால்
 புன்னகை யரசிகள் உருவாக்கல்
நிரப்பப் படுமே இடைவெளிகள் செய்யப்படுமே ..
வேருக்கும் மருத்துவம்..
குழந்தை ,குமரி ,கிழவர் வரை
கூடும் உந்தன் நட்பு வட்டத்திலே

வசை பாட பலரிருக்க
வாழ்த்தொன்று சொல்ல
விழைந்தது என்மனம்
வளமாகட்டும் உன் வாழ்வு
(கை) வரிசை காட்டி நீயும்
கை ராசி டாக்டரென
கிட்டிய நற் பெயரையுமே
கட்டிக் காக்க வாழ்த்துக்கள்

கண்ணா..

பஞ்சு மெத்தை யுந்தான்..
கொஞ்சும் உன்கழல் பாதமன்றோ
காது கொடுத்துக் கேட்பேனே..
காதல்  அதுவும் சொல்வதாலே
பாதம் உனது  பற்றியிங்கே
பாவி நானுன் அடிமையானேன்
பார்க்கா நாளிலும் பரவசமே..உனை
பற்றிய கையின் வாசமுமே
போகாதேடி என்னைவிட்டு
பித்தனாகிப் போவேனே நானுந்தான்

கணவன் அமைவதெல்லாம்

நிச்சயமாகும் திருமணங்கள்
நடக்கும் எல்லாம் சுபமேயாம்.

நல்ல இடமாய் அமைஞ்சதில் தொடங்கி..
ஆசைப்போல அமைஞ்சார் மாப்பிள்ளை..
அன்பாய் இருக்க அமைஞ்ச குடும்பம்
அரவணைத்து  வழிகாட்ட அமைஞ்ச மாமியார்
நானிருக்கேன் அக்காவென அமைஞ்ச நாத்தனார்
விரதம் முதல் மறுவீடு வரை அமைஞ்சது  அம்சமாய் எல்லாமே.
புது ஊரு புதுசாய்க் குடித்தனம்
பழக நல்ல மனிதர்களோடு
பாங்காய் அமைஞ்சது எல்லாமே.

போட்டதை சாப்பிடும் கணவர் ஒருநாள்..
போட்டாரே ஒரு போடுந்தான்..
'அமைஞ்சிடுத்து இன்னிக்கு என்னமோ..எல்லாமே..
அகத்துக்காரி உன் சமையலில் தான்'
அய்யோ பாவம் அப்பாவி மனுஷா
அப்பவே நீரும் சொல்லப் படாதோ
ஆக்கி வைத்ததில் குறைஞ்சது என்னனு...
அழுத்தக் கார சாமினு நினச்சேனே
அமைதிச் சாமியா இருந்தீரோ..

அன்று புரிந்தது உண்மையொன்று..
அமைஞ்சது என்ற பெரிய பட்டியலில்
ஆளுமை இல்லா இவரும் அமைஞ்சது
அமைஞ்சதில் எல்லாம் ஒருபடி
மேலோ..

காத்திருத்திருப்பு

காத்திருத்திருப்பு
உருவான கரு உலகுகாண இன்பக் காத்திருப்பு
உள்ளங்கையில் ஏந்தி ஊர்வலம் வர காத்திருப்ப்பு
உதைக்கும்  பிஞ்சுக் காலை
பிடித்துக் கொஞ்சக் காத்திரிப்பு
ஊட்டி விடுகையிலே ஊர்க்கதை பல  சொல்லக் காத்திரிப்பு
கொஞ்சும் மழலையில் கூப்பிட்டக் குரலுக்கு ஓடிவரக் காத்திருப்பு
 கைப் பிடித்து நீ நடக்கையிலே காலடியில் பூமி நழுவக் காத்திருப்பு
பள்ளியின் முதல் நாள் பாதியிலே
முடியாதா என பரிதவிப்பு காத்திரிப்பு

விடுதியில் விட்டதும் வெறிச்சோடிய வீடு ..வெளிச்சத்துக்கு காத்திருப்பு
படிப்பு பாரத்தின் இடையிலே
பேசவும்  வாராயோனு  காத்திருப்பு
பேசும் குரலில் துன்பமில்லாத் துள்ளல் இருக்கக் காத்திருப்பு.
பணி பளுவிலும் பண்றே என்னனு
பூங்கொத்து செய்திக்கு காத்திருப்பு

களைப்புத் தராக் காத்திருப்பு
கண்மணி அவளுக்கான காத்திருப்பு

ஊர் சொல்லும் உலகமெல்லாம்
உன்னை விடப் பெரிதா ..இல்லை..
உலகம் நீ சுற்றினாலும்..என்
உலகம்  என்றும் நீதானே..

பயணங்கள் ..
புதுப் பாடங்கள்..
பதியணும் மனதில்.
புகைப்படமாய் என்றும்..

புடவைகள் பலவிதம்..

புடவைகள் பலவிதம்..

கடைக்காரர் குவித்தார்
மலைபோல் துணியை..

கட்டம் போட்ட புடவை
படுக்கை விரிப்பாட்டம் என்றாய்.
பூப் போட்ட புடவை..
பூந்தோட்டம் புடவையிலா என்றாய்
கோபுர பார்டர் புடவை
கோவில் வேண்டுதலையா என்றாய்
பட்டை சரிகை புடவை
பட்டுனு வேண்டாம் என்றாய்
காஞ்சிக் காட்டன் புடவை
கஞ்சி மொடமொடப் பென்றாய்
நல்ல நைலான்  புடவை
நழுவுமே வேணுமா என்றாய்
 கல்மணி பதித்த புடவை
குத்திப் பிடுங்குமே என்றாய்
கோரா வகைப் புடவை
கோரமா இருக்கு என்றாய்
மைசூர் பட்டுப் புடவை
மலைப்பா இருக்கே விலை யென்றாய்
சுங்கடிப் புடவை ..
சுருங்கிக் கசங்க காசா என்றாய்
கலர்கலர் கலம்காரிப் புடவை
கண்ணைப் பறிக்குதே என்றாய்
பொட்டலமாய் பாந்தினி புடவை ..
பாந்தமே இல்லை என்றாய்
பத்திக் ப்ரிண்ட் புடவை
பத்திண்டு வரது என்றாய்
இன்றைய இக்கத் புடவை
இருட்டிலும் தெரியுமே என்றாய்.

அளைந்து அலைந்து முடித்தும்
அமையல புடவை ஒண்ணு..ஆனா
அறிவில் எட்டியது ஒண்ணு..

ஆத்துக்காரரையே அழைச்சு வந்திருக்கலாம்..
அமைதியா தலை ஆட்டியபடி
அரைடஜன்  புடவை அடுக்கியிருக்கலாம்..

அருமைப் பெண்ணை நம்பி வந்து
பொறுமை மட்டும் போனது இங்கே
புடவை ஒண்ணும் அமையலையே
புலம்பல் மட்டும் முடியலையே