Friday, March 3, 2017

புடவைகள் பலவிதம்..

புடவைகள் பலவிதம்..

கடைக்காரர் குவித்தார்
மலைபோல் துணியை..

கட்டம் போட்ட புடவை
படுக்கை விரிப்பாட்டம் என்றாய்.
பூப் போட்ட புடவை..
பூந்தோட்டம் புடவையிலா என்றாய்
கோபுர பார்டர் புடவை
கோவில் வேண்டுதலையா என்றாய்
பட்டை சரிகை புடவை
பட்டுனு வேண்டாம் என்றாய்
காஞ்சிக் காட்டன் புடவை
கஞ்சி மொடமொடப் பென்றாய்
நல்ல நைலான்  புடவை
நழுவுமே வேணுமா என்றாய்
 கல்மணி பதித்த புடவை
குத்திப் பிடுங்குமே என்றாய்
கோரா வகைப் புடவை
கோரமா இருக்கு என்றாய்
மைசூர் பட்டுப் புடவை
மலைப்பா இருக்கே விலை யென்றாய்
சுங்கடிப் புடவை ..
சுருங்கிக் கசங்க காசா என்றாய்
கலர்கலர் கலம்காரிப் புடவை
கண்ணைப் பறிக்குதே என்றாய்
பொட்டலமாய் பாந்தினி புடவை ..
பாந்தமே இல்லை என்றாய்
பத்திக் ப்ரிண்ட் புடவை
பத்திண்டு வரது என்றாய்
இன்றைய இக்கத் புடவை
இருட்டிலும் தெரியுமே என்றாய்.

அளைந்து அலைந்து முடித்தும்
அமையல புடவை ஒண்ணு..ஆனா
அறிவில் எட்டியது ஒண்ணு..

ஆத்துக்காரரையே அழைச்சு வந்திருக்கலாம்..
அமைதியா தலை ஆட்டியபடி
அரைடஜன்  புடவை அடுக்கியிருக்கலாம்..

அருமைப் பெண்ணை நம்பி வந்து
பொறுமை மட்டும் போனது இங்கே
புடவை ஒண்ணும் அமையலையே
புலம்பல் மட்டும் முடியலையே

No comments: