Thursday, August 3, 2017

எந்தன் பொன் வண்ணமே..

எந்தன் பொன் வண்ணமே..
ஓடி யாடும் இவள் பின்னே
ஓடுமென் காலம் ஓர் நொடியில்..

கொலுசின் ஓசை சொல்லிடுமே
குறும்பாய்  இவளும்  ஒளிந்தாலும்..
கலகல சிரிப்பில் கவலை பறக்கும்
கண்ணும் கலங்கையில் பூமி நழுவும்.

பூப்போட்ட பாவடை சரசரக்க
பார்த்துப் பார்த்து நடந்தபடி
புன்னகை பூத்து வருவாளே
புவியின்பம் யாவும் தருவாளே

உற்றத் தோழி இவளெனக்கு
ஊர்கதை பேசும் வேளையிலே..
கையும் கோர்த்திவள் நடக்கையிலே
கோடியின்பம் வந்து கூடுமங்கே..

கல்வி,கடமை, கல்யாணமென்றே
கடலும் கடப்பாள் ஒருநாளில்

உடுத்திய உடைகளும் புகைப்படமும்
உள்ளத்தில் என்றும் பசுமையாகும்.

நாட்கள் ஓட நரையும் கூட
நடையும் தளரும் நாளும் வரும்
தாயாய் அவ ளங்கே மாறிடுவாள்
தள்ளாமை எனக்கும் வரும் போது..







பூபாளம்...இசைக்கும்..

பூபாளம்...இசைக்கும்..
பூபாளம்...இசைக்கும்..

இளங் காற்று  இசைபாட
கூவிக் குயில் அழைக்க
பூக்கள் சோம்பல் முறிக்க
காலை நடை துவக்கம்.
சுப்ரபாதமும் சினிமாப் பாடலும்
சத்தமாய் அலறிய தள்ளுவண்டிகள்
காயும் பூவும் கட்டவிழ்த்து
கடவுளை வேண்டும் வியாபாரிகள்
'coffee mane'க்கள் க்யூவில்
கால்கடுக்க  காப்பி பிரியர்கள்
கைப்பேசியில் கட்டளை இட்டபடி
கணிணி உபாசகர்கள்
கைக் கோர்த்து நடந்தபடி
காலத்தை அசைப்போட்ட முதியோர்கள்
புகார் பல சொல்லியபடி
பொரிந்து தள்ளிய மனைவிகள்
கையும் காலும் முறுக்கியபடி
கடும் பயிற்சியில் ராம்தேவ் பாபாக்கள்
காலைக் கடன் முடிக்க
எசமனை இழுத்த செல்லக் குட்டிகள்
வாசல்கள் எல்லாம் வழியடைத்த
வால் சுருட்டிய  வாண்டுகள்
வாயைப் பிளந்த கொட்டாவியுடன்
வாய் மூடா பொதிமூட்டையுடன்
வரப் போகும் பஸ்ஸுக்காக.
சூரியனும் சுறுசுறுப்பாக
சுற்றியது போதுமென்றெ
வேகமாய்  வீடு வந்தேன்
வீதி் உலா முடித்தபடி
இளங் காற்று  இசைபாட
கூவிக் குயில் அழைக்க
பூக்கள் சோம்பல் முறிக்க
காலை நடை துவக்கம்.
சுப்ரபாதமும் சினிமாப் பாடலும்
சத்தமாய் அலறிய தள்ளுவண்டிகள்
காயும் பூவும் கட்டவிழ்த்து
கடவுளை வேண்டும் வியாபாரிகள்
'coffee mane'க்கள் க்யூவில்
கால்கடுக்க  காப்பி பிரியர்கள்
கைப்பேசியில் கட்டளை இட்டபடி
கணிணி உபாசகர்கள்
கைக் கோர்த்து நடந்தபடி
காலத்தை அசைப்போட்ட முதியோர்கள்
புகார் பல சொல்லியபடி
பொரிந்து தள்ளிய மனைவிகள்
கையும் காலும் முறுக்கியபடி
கடும் பயிற்சியில் ராம்தேவ் பாபாக்கள்
காலைக் கடன் முடிக்க
எசமனை இழுத்த செல்லக் குட்டிகள்
வாசல்கள் எல்லாம் வழியடைத்த
வால் சுருட்டிய  வாண்டுகள்
வாயைப் பிளந்த கொட்டாவியுடன்
வாய் மூடா பொதிமூட்டையுடன்
வரப் போகும் பஸ்ஸுக்காக.
சூரியனும் சுறுசுறுப்பாக
சுற்றியது போதுமென்றெ
வேகமாய்  வீடு வந்தேன்
வீதி் உலா முடித்தபடி

அம்மா..

லிஸ்ட் படி எல்லாம் எடுத்துக்கணும்.அங்கே போய் திண்டாடக் கூடாது. கடை கண்ணிக்கு ஒரு குறைச்சலில்லை..ஆனா நேரம் எங்கே. போனவுடன் ஒரு காப்பி குடிக்கணும் . காப்பி பவுடர் ஒரு நாலு ஸ்பூன் எடுத்து வெச்சாச்சு. ஃபில்ட்டர் ஞாபகமா எடுத்துக்கணும். சக்கரை அங்கே எப்படியும் இருக்கும். வெளில கிளம்பறத்துக்கு முன்னாடி ஒரு ஸிம்ப்பிள் டிஃபன் சாப்பிடணும். வெண்பொங்கல் கூட ஒரு பருப்பு கொத்சு பண்ணிடலாம். ஒரு டம்ளர் அரிசி, பயத்தம்பருப்பு, இஞ்சி,பச்சை மிளகா, இரண்டு வெங்காயம்,தக்காளி கடுகு,ஜீரகம்,மிளகு ஒரு குட்டி பாட்டில்ல எண்ணெய், நெய் எல்லாம் மூட்டை கட்டியாச்சு. கிளம்பியாச்சு . விடியகாலம் ஊர் வந்து சேர்ந்தாச்சு. plan பண்ணினபடி ஒவ்வொரு வேலையும் சென்ஞு ரொம்ப நாளா பட்டினியா ் காத்திண்டு இருக்கும் சாமிக்கு நைவேத்தியம் பண்ணிட்டு காக்காவை கூப்பிட ஒண்ணு கூட திரும்பிப் பார்க்கலை. பழக்கமான காக்கா எல்லாம் இப்போ எங்கே போச்சு. என்னோட குரல் மறந்து போச்சா..
நான் கரைஞ்சது தான் மிச்சம் .  வாசலில் காவலுக்கு உட்கார்ந்திருந்த சுந்தரம் ஐயாவைக் கூப்பிடு டிஃபனையும் கொடுத்து அவரோட ஆஸ்தான கப்பில் காப்பி கொடுத்த போது...'எம்புட்டு நாளாச்சும்மா..அம்மாவுக்கு அப்பறம் இப்படி கூப்பிட்டு சாப்பாடு போட ஆளே இல்லாம போச்சு.அம்மா இருக்க சொல்ல இந்த கப்பில கரீட்டா நான் அருகம்புல் பறிச்சு வெக்கவும் காப்பி குடுத்துடும். அதெல்லாம் ஒரு காலமா போய்டிச்சு. இப்போ கூட இங்கே நம்ம அம்மா நடமாடற மாதிரியே இருக்கும்மா..அவர் சொல்லவும் மளுக் கென்று என் கண்ணில் நீர்..
ஆமாம்..அம்மா இல்லா அம்மா வீட்டுக்கு வருவது ..்இப்போ பழகிப் போனாலும் ..அவள் சுற்றி சுற்றி வந்த வீடு, அவள் சுவாசம் நிறைந்த வீடு,அவள் குரல் எதிரொலித்து கொண்டிருந்த வீடு,அவள் தொடாமல் ஏங்கிக் கொண்டிருந்த பாத்திரங்கள்..வாசனை பரப்பிய கருவேப்பிலை மரம் ..
 கலைக்க மனமில்லாமல் சிந்தனைகளுடன் நான்.
வருடங்கள் ஓடினாலும்...நீ விட்டு சென்ற வெற்றிடம்..

வந்திடு வந்திடு

வந்திடு வந்திடு
கலர் பார்த்து டிசைன் பார்த்து
போட்டுக்கற டிரஸுக்கு ஒத்துப் போகுமானு பார்த்து ,லைட் வெயிட்டா இருக்கானு பார்த்து , நொடிச்சுக்காம உறுதியா இருக்கானு பார்த்து..
பார்த்து பார்த்து வாங்கினியே..
உபயோகமே படுத்தாம இருக்கறதுக்கு பேசாம என்னையும் சேர்த்து உன்னோட antique collections கூட பாங்க் லாக்கரில் வெச்சுடு..
பொருமித் தள்ளியது பூஞ்சை காளான் புடிச்சுடுமேனு பவுடர் போட்டு வைக்கப்பட்ட என்னருமை குடை..
வருணா..வந்திடு வந்திடு..தானா வந்திடு..இல்லனா..

Father's day

Happy father's day
அப்பாவும் நானும்..
மோட்டார் ரிப்பேரா..
த்ண்ணீர் ஊற்றி அவர் air lock சரிபண்ண..
தண்ணீர் வருதானு மொட்டை மாடியில் நான் பார்ப்பேன்.
TV ல கோடு கோடாய் வரும்..
திருப்பிச் சரி செய்வார் ஆண்ட்டெனாவை..
இன்னும் கொஞ்சம் திருப்பு..தெளிவா இல்லையென்பேன்.
சைக்கிள் துடைத்தால்..
துணியோடும் எண்ணோயோடும்
துணையாய் இருப்பேன்..
புதிதாய் செடி வைத்தால்..
அழகாய் அவர் குழி தோண்ட
அதில் உரமும் நான் இடுவேன்.
பரணியில் சாமான் எடுத்தாலோ
படுகெட்டியாய் ஏணியைப் பிடித்திடுவேன்.
ட்யூப் லைட் மாற்றயிலே
டார்ச்சாய் நான் இருப்பேன்
இரண்டு சக்கர வாகனத்தில்
இருவரும் வலம் வந்தோம்..

அன்று கற்றது
இன்றும் கைக்கொடுக்குது.

பழுதென்றவுடன் பதறாமல்
பார்ப்போம் ஒருகையென்று
மராமத்து வேலையெல்லாம்
மகிழ்ச்சியாய் செய்வேனிங்கே

மழையும் ரசித்தோம்..
மாட்சும் ரசித்தோம்.
எதிரணி அடித்தாலோ
எகிறிடும் இவர் ரத்த அழுத்தம்
இந்தியா விளையாடையிலே
இருப்புக் கொள்ளாமல் தவிப்பு
இன்றும் அப்படியே
மழையும் இங்கே..
மாட்ச்சும் அங்கே.
எண்பதை தாண்டினாலும்
இளமை திரும்பும் இவருக்கு
இந்தியா- பாக் மாட்ச் என்றால்..

Father's day

சும்மா எதாவது அவளைச் சொல்லிண்டே இருக்காதே...
அன்று என் அப்பா..இன்று என் பெண்களின் அப்பா..
மாறவே மாட்டீங்களா ..அப்பாக்களே!!


திரையின் பின் நின்று
திறமைகளை வளர்க்கும்
நானிருக்கேன்டா என்று
நல்லூக்கம் நாளும் தரும்
அடக்கி வாசித்தாலும்
ஆட்சி புரிபவர் என்றும்
தந்தை எனும் மந்திரம்
தடைகளைச் தாண்டச் சொல்லும்
வாழ்த்துக்கள் ..
இந்நாளுக்கு மட்டுமல்ல்
நீ வாழும் வரைக்கும்..
நீ வாழ்ந்த பின்னரும்..

ஜீவனானது ..இசை நாதமென்பது

ஜீவனானது ..இசை நாதமென்பது
ஜீவனானது ..இசை நாதமென்பது

தலையணைக் கடியில் இருக்கும் அலாரம்..'சக்தி கொடு ..இறைவா..இறைவா ' என்று எனை எழுப்பும். டிகாக்‌ஷன் இறங்கி என் தூக்கமும் இறக்க 'குறையொன்றுமில்லை..மறை மூர்த்தி கண்ணா' என்று எம் எஸ் அம்மா எனக்கு தெம்பூட்டுவாள்.
.என் சமையலறையில் உப்பும் சக்கரையோடு..ஒரு சின்ன music player உண்டு. கடவுள் எல்லாரும் காலையில் இசையாய் வலம் வருவர்.
பண்பலை வரிசைகள் இங்கே பல. அலைவரிசை மாற்றுவேன் என் மன ஓட்டத்திற்கேற்றபடி..
இசை இல்லையேல் நம் இயக்கம் எப்படி இருந்திருக்கும்?
ஜீவனானது இசை நாதமென்பது..முடிவில்லாதது..என்ன ஒரு அருமையான வரிகள்..
இசையோடு இணைவோம்..இன்னல் மறப்போம்..இனிமையாய் வாழ்வை அமைத்துக் கொள்வோம்.
இசையில் யாகம் வளர்த்து ..வாழ்க்கையை நமக்கு கிடைத்த யோகமாய் மாற்றிய இசை ஜாம்பவாஙள் பலர் இங்கே
எனக்கு பிடித்த ராஜா சார் பாடல்..இதோ..கேட்டு மகிழுங்கள்
தலையணைக் கடியில் இருக்கும் அலாரம்..'சக்தி கொடு ..இறைவா..இறைவா ' என்று எனை எழுப்பும். டிகாக்‌ஷன் இறங்கி என் தூக்கமும் இறக்க 'குறையொன்றுமில்லை..மறை மூர்த்தி கண்ணா' என்று எம் எஸ் அம்மா எனக்கு தெம்பூட்டுவாள்.
.என் சமையலறையில் உப்பும் சக்கரையோடு..ஒரு சின்ன music player உண்டு. கடவுள் எல்லாரும் காலையில் இசையாய் வலம் வருவர்.
பண்பலை வரிசைகள் இங்கே பல. அலைவரிசை மாற்றுவேன் என் மன ஓட்டத்திற்கேற்றபடி..
இசை இல்லையேல் நம் இயக்கம் எப்படி இருந்திருக்கும்?
ஜீவனானது இசை நாதமென்பது..முடிவில்லாதது..என்ன ஒரு அருமையான வரிகள்..
இசையோடு இணைவோம்..இன்னல் மறப்போம்..இனிமையாய் வாழ்வை அமைத்துக் கொள்வோம்.
இசையில் யாகம் வளர்த்து ..வாழ்க்கையை நமக்கு கிடைத்த யோகமாய் மாற்றிய இசை ஜாம்பவாஙள் பலர் இங்கே
எனக்கு பிடித்த ராஜா சார் பாடல்..இதோ..கேட்டு மகிழுங்கள்

Swacch bharath

swachh bharath
வாசல் விட்டு இறங்கியதும்
வரவேற்கும் ..
வாரி அள்ளப்படாத குப்பைகள்
கண்ணும் முக்கும் மூடி
கடப்போம் கண்டு கொள்ளாமல்.
காரிலிருந்து வீசி எறிவார்..
காரிருளில் வந்து வீசுவார்..
காய்கறிக் காரம்மாவும் வீசுவார்.
குப்பை மேடு கோபுரமாகும்
கொஞ்சிக் குலாவும் நாயுமங்கே.
பக்கத்தில் பானி பூரிக்கடை
பறக்கும் ஈயும் கொசுவும்.
பிழிந்த பழங்களும் தோலுமங்கே
பசியாற்றுமே பல உயிருக்கங்கே
எட்டிப் பார்ப்பாரே எலியாரும்
என் பங்கு எங்கேயென்றே..
பச்சை சிவப்பு டப்பாவென்றே
பிரிக்கச் சொல்லி சட்டம்
நேரம் ஏது இத்ற்கென்றே
நியதிகள் உடையும் சாபம்.
garden city அன்று
garbage city அல்லவோ இன்று.
swachh bharath திட்டமெல்லாம்
சரிப் படாது நமக்கென்று
சுத்தமா என் வீடிருக்க..
சுத்தி எப்படி இருந்தாலென்னெ?
நாடும் வீடும் ஒன்றென்ற
நல்ல சிந்தனை பிறக்கணுமே
நானென்ன செய்ய முடியுமென்று
நாமும் தப்பித்து ஓடாமல்..
நம்மால் முடிந்ததை செய்வோமென்று
நல்ல நினைவும் செய்கையுமே
நல்ல் பாதை காட்டிடுமே

போதனை

போதனை..

ஈஸிச்சேரில் படுத்தபடி மோட்டுவளையை பார்த்துண்டே அப்படி என்ன யோசனைப்பா உங்களுக்கு? கேட்டபடி வந்தான் கிட்டு. லாப்ட்டாப் பையை பவ்யமா வைத்தபடி ,'சொல்லுங்கோப்பா ..
இன்னிக்கு பொழுது எப்படி போச்சு. வாக்கிங் போனேளா? புஸ்தகம் படிச்சேளா? கொஞ்ச நேரமாவது Casio வாசிச்சேளா?அந்த பழைய பாட்டோட ஸ்வரம் printout எடுத்துக் கொடுத்தேனே..பழகினேளா..ஈஸியா இருந்ததா? வயிறு எதுவும் தொல்லையில்லையே? மாத்திரை ஒழுங்கா போட்டுண்டேளா?
அடுக்கிக் கொண்டே போனான்..அந்தப் பக்கத்திலேர்ந்து பதிலே இல்லை.. என்னப்பா..என்னதான் ஆச்சு.. சொன்னாதானே தெரியும்..பொறுமை எல்லை மீறும் வேளையில் வாய் திறந்தார் அப்பா..' எனக்கு எதுக்கும் இன்னிக்கு மூட் இல்ல' ஒரே வரியில் கிட்டுவின் வாய் அடைத்தார்.
ஒரு வாரமா இதே கதை தான். 'அப்பா என்னாச்சு உங்களுக்கு..உன்னை வுட பெரிப்பா எத்தனை பெரியவர் . ஸ்டிக் வெச்சுண்டு எல்லா எடத்துக்கும் தானே போய்ட்டு வரார். அத்தைய பாரு..எல்லா வீட்டு வேலையும் தானே செய்யறா..கீழாத்து மாமா ..மாமிக்கு எல்லா வேலையும் அவர் தான் செஞ்சு தரார். இப்படியே ஈஸி சேரில் உட்கார்ந்தா நீ டல்லா தான் இருப்பே..you should make an effort to move from the comfort zone. அப்ப்போ இந்த வேண்டாத சிந்தனையெல்லாம் வரவே வராது'. பிரசங்கம் பண்ணி முடிச்சு ஆபீஸ் வேலையைத் தொடர உள்ளே போனான் கிட்டு. 'எனக்கும் வயசாகறது டா..முன்னாடி மாதிரி ஒரு தைரியம் இல்ல' ..தொண்டைக் குழியில் நின்றது வார்த்தைகள் ..தொடர்ந்தது அவர் மோட்டுவளைப் பயணம்..அதில் தெரிந்தது ் flash back . 'கண்ணா..ராஜா..பக்கத்தாத்து ராமுவைப் பாருடா..எப்பவுமே அவன் தான் ஸ்கூல் ஃபர்ஸ்ட். அதோ ..அந்த முக்கு வீட்டுல முனிசிபல் ஆபீஸர் பைய்யன் என்னமா பாடறான்..படிப்பிலயும் கெட்டியாம் அவன். அதெல்லாம் வுடு உன் அண்ணாவைப் பாரு ஆத்து வேலையிலும் கூட மாட ஒத்தாசை பண்ணிண்டு எல்லா பொறுப்பையும் எடுத்துக்கறான் பாரு' .. சுகவாசியா இப்படியே இருக்க முடியாதுடா..'.. black and white  படம் ஓட..கூடவே திரண்டு வந்தது அவர் கண்ணில் நீரும்.
நடத்திய பாடங்கள் ..நமக்கே திருப்பி வருதோ..இனிமே..no மோட்டுவளை..
வேகமாக ஈஸிச் சேரை மடித்தபடி..மருமகளுக்கு குரல் கொடுத்தார்..'அம்மா..பக்கத்து கடையில் என்னமோ வாங்கணும்னு சொன்னியே..நான் போய் வாங்கிண்டு வரேன்'. விறு விறு நடையில் நடையில் அவர் செல்ல..வாயைப் பிளந்து ஆச்சரியத்தில் ' என்னண்ணா..இங்கே வாங்கோளேன் சீக்கிரம்'..அவள் குரல் .

நானென்றால்..அது இவர்களும்..நானும்..

நானென்றால்..அது
இவர்களும்..நானும்..

புகைப்படக் குவியலகள்
புகை மூட்டத்தில் ..
பின்னோக்கிய வருடங்கள்

மடியில் தாலாட்டியபடி
மார்பில் அணைத்தபடி..

சாதம் ஊட்டியபடி
சாய்ந்தாடம்மா ஆடியபடி

முதுகி லேற்றியபடி
மூலையில் ஒளிந்தபடி..

கை கோர்த்தபடி
காலைப் பிடித்தபடி..

அலங்காரம் செய்தபடி
ஆடிப் பாடியபடி.

பின்னால் ஓடியபடி..
பிரிவை அறியாதபடி..

காலம் சுழலும்..

கழுத்தைக் கட்டியபடி கேட்டாள்
' நானாம்மா ..இது என்றே'
நானும் சொன்னேன்..
'நாம் தான் இதுவென்றே'

மேல் படிப்பு

our dear Madhu
you are very samaththu
மேலே மேலே படித்து
 may your dream come truevu
வெளியுலகம் நிறைய சுத்து
பெட்டி நிறைய சேரு சொத்து
this is a small vaazththu
to wish u all the beshttu

அரிசி மாவு

அரிசி மாவு..
முறுக்கினால் முறுக்கு
பிழிந்தால் தேன்குழல்
தட்டினால் தட்டை
உருட்டினால் சீடை..
கடலை மாவு கலந்தாலோ
கிடைக்குமே பலசுவை.

அளவென்பது அதிமுக்கியம்
அமைந்தால்..அது அதிர்ஷ்டம்.

வாயில் போட்டதும்...
வெண்ணெயாய் கரையும்..
கல்லாய்ப் போகும்.. நம்
பல்லும் பதம் பார்க்கும்.
உப்பும் உறைக்கும்..சிலசமயம்
சப்பென்று போகும்.

சூடான எண்ணெயில்
சிக்கித் தவித்தாலும்
வென்று வெளிவருமே
சுவைமிகு பதார்த்தமாய்..

மூலப் பொருள் ஒன்றேதான்..
முகம் பல காட்டும் மாவுமிங்கே..

வாழ்க்கைத் தத்துவம் இதுதானோ?
வெறும் மாவாய் இருந்திடல் வீணன்றோ?

ஆடிப் பெருக்கு

அடடே..பொழுது விடியப் போகுது..எல்லாரும் வர ஆரம்பிச்சுடுவாங்களே..எல்லாப் பக்கம்மும் சுத்தமா இருக்கா...ஒரு வருசம் ஓடிப் போச்சு...
அட..யாரது அங்கனே..புதுப் பவுனு பளபளனு..நம்ம பொன்னாத்தாவா..ஆளே அடையாளம் தெரியாமா பெருத்து கிடக்காளே..
அதோ அவ கூட யாரு...செவந்தியா.. கூட யாரு..புது மாப்பிள்ள.. சரி சரி..தாலி பிரிச்சு கட்ட வந்திருக்காக போல இருக்கு..என் கால்ல விழுந்து கும்பிட்டப்போ..அடுத்த வருசம்..கையில் ஒண்ணு கூட கூட்டியானேன்..வெக்கபட்டு போச்சு... அதுக்குள்ள ஒரு பரிச்சயமான குரல்..என்ன ஆத்தா..என்னை மறந்துட்டியா..போன தபா வர முடியாம போச்சு..உடம்புக்கு முடியாம கிடந்தேன்..இந்த தடம் எப்படியும் உன்னை பார்த்தே ஆவணும்னு புள்ளைய கூட்டிகிட்டு வந்தேன் ஆத்தா..அடுத்த முறை இந்த கட்டை இருக்குமோ..இருக்காதோ..புலம்பியபடி நாச்சியம்மை..எல்லாம் நல்லா இருப்பே போ..சீக்கிரம் மவனுக்கு ஒரு கால் கட்டு போடு...ராசா..கால்ல விழுந்து கும்பிட்டுக்கப்பா...
அங்கிட்டும் இங்கிட்டும் குழந்தங்கள  ஓட.. துரத்தியபடி மாடசாமி.. .. . எலேய்..நில்லுங்கடா...கூட்டத்தில எங்கினாச்சும் தொலஞ்சு போயிறப்போறீக...அத்தை ,மாமா எங்கேடா..சாமி கும்பிட்டு ..பொறவு..கொண்டு வந்த சோத்தை தின்னுட்டு..ஊரப் பாக்க போவனுமப்பா..சோலி இருக்கில்ல..
எப்பவுமே இவனுக்கு அவசரந்தான்.. இருப்பா..ஒரு நா..கொஞ்சம் என் கூட இருந்திட்டு போயேன் ...நான் சொல்வதை காதில் வாங்கவே இல்ல..
இந்த செம்பகம் புள்ளை எங்கே காணும்னு்...நினைச்ச நேரம் ...ஆத்தா...உன்னை பார்க்க வராம இருப்பேனா..இப்பொ அப்பாவுக்கு வேற ஊர்க்கு மாத்தலாகிடுச்சு..அழுது பொரண்டு உன்ன பாக்கனும்னு கூட்டியாந்தேன்..எத்தனை ஆசை..ராசாத்தி..நல்லா இருப்பே..
ஈ எறும்பு க்கு கூட இடமில்லாம கூட்டம்..
வெளக்கு வச்சு..பூ,தாம்பூலம் ,கலந்த சோறு எல்லாம் வச்சு படயலாச்சு..
. சனம் பூரா ஒத்துமையா..வந்துட்டு போறத பார்க்க ..இன்னொரு நாள் இருந்துட்டு போமாட்டாங்களானு ஏக்கமாச்சு..
பொழுது சாய ஆரம்பிக்க... அவுங்கவுங்க..ஊருக்கு பஸ் ஏறி..புறபட்டாச்சு..
ஒரே வெறிச்சோடி போச்சு..
என்னை சுத்தி இப்பொ இருக்கறது...இவுக எல்லாம் விட்டறிஞ்சிட்டு போன ...குப்பை தான்
எம்புட்டு சுத்தமா காலைல  இருந்த இந்த இடம்..
கும்பிடத்தானே வந்தீக..
என்னை..இப்படி
குப்பை மேடாக்கிட்டு போக ..
எப்படி மனசு வந்துச்சு..
குமுறலில்..
காவிரித்தாய்...

படம்

இரை கிடைத்தப் பறவையொன்று
இருக்கைத் தேடி அலையுதோ?
பரபரக்கும் சாலை ஓரம்
புல்வெளி யொன்று கிடைத்ததோ..?
பிடித்த இரை கவ்வியபடி
பதறி நீ நடந்ததையே
வேடிக்கைப் பார்த்த எனக்கு
வேகம் உனது பிடித்ததே..
படம் பிடித்து வைத்தேனே..
பற்றி நீ நடந்த அழகையுமே..