Wednesday, September 9, 2015

எப்போ வரும் என் முறை..!!!!


எப்போ வரும் என் முறை..!!!!

 

இந்தியக் குடிமகன் நானென்றே

இறுமாப்புட னிங்கு சொல்லிடவே

காகித மொன்று வேண்டுமடா

ஆதார அட்டையென்றே அழைப்பாரடா..

 

அரசிட்ட ஆணைக் கிணங்கி

ஆவணங்கள் அடுக்கிச் சென்று

அரசு அலுவலக வாயிலினே

ஆவலாய்க் காத்துக் கிடந்தேன்

அடியேன் முறையுன் தான்

அடுத்தாவது வருமோ என்றே..

 

அசதியுடன் ஒர் கூட்டம்

அடங்காமல் நின்ற நேரம்

அங்கேயும்  வந்தாரே  அழகாய்

காவியங்கி கட்டைச் செருப்பொடு

சேவித்த கரங் கொண்டு

செக்கச் சிவந்த சாமியாரும்..

 

 கால்கடுக்க நின்ற கூட்டமதை

கடுகளவும் மதிக்க வில்லை

கடவுளைக் கண்டது போல்

கைக்கூப்பி காலில் விழுந்து

கடுகடு கண்காணிப் பதிகாரியும்

காவலாய் கூட செல்ல

கச்சிதமாய் நடந்ததுவே வேலை

கை நொடிக்கும் வேளையிலே.

 

கடைசியாய் வந்த அவருக்கோ

கும்பத்துடன் பூரண வரவேற்பு

குடிமகன் நானுந்தானே

குழப்பமாய் இருக்குதடா..

 

காவியுடை யொன்று போதுமா

காரியங்கள் கை கூடிடவே

கேலியாய் சொல்ல வில்லை

வலியில் இங்கே விளம்புகிறேன்

வரிசையில் காத்தி ருக்கேனே

வருமெப்போ என் முறையென்று…!!!..