Sunday, May 30, 2021

ஓம் நமச்சிவாய

 அருவே..உருவே..அரனே..சிவனே..

தருதரும் நிழலாய்த் தொழுவோர்க் கருள்வன்..

வருத்தும் வல்வினை வீழ்த்திட வருவன்..

நீறு புனைந்தோன் நிம்மதி அளிப்போன்.

பாதம் பணிவோம்...பாவம் பறந்திட..

Om nama shivaya..Om..nama Shivaya..

எழுதுகிறேன் ஒர் கடிதம்- சீஸன் 3

 #எழுதுகிறேன் ஒர் கடிதம்- சீஸன் 3

2 வது கடிதம்


அன்புள்ள ஆனந்திக்கு


அம்மா எழுதுவது. புது ஊர் எப்படி இருக்கு?

கடையெல்லாம் பக்கத்தில் இருக்கா? குழந்தைகளுக்கு புது இடம் பிடிச்சிருக்கா?

ஸ்கூல் போய்ட்டு வருவது வசதியா இருக்கா?

அங்கே குளிர்காலம் முடியட்டும். நானும் அப்பாவும் வந்து கொஞ்ச நாள் இருக்கணும்னு ஆசையா இருக்கு.


நீ இருக்கிற ஊரில் தான் இப்போ நம்ம சுப்பு அத்தை இருக்கா. அங்கே புதுசா , நிறைய வசதியோட முதியோர் இல்லம் ஒண்ணு இருக்கே. அதிலதான் இப்போ இருக்கா. மணி,ரவி ரெண்டு பேரும் அமெரிக்காவில் செட்டில் ஆகியாச்சு. மீனா துபாய்ல் இருக்கா. அத்திம்பேர் தவறிப் போனப்பறம் பாவம் அத்தையை இங்கே பார்த்த்துக்க யாரும் இல்ல. பெரிய வீட்டில் தனியாவும் இருக்க முடியாது. அப்பா கூட இங்கே எங்களோட வந்து இருக்கச் சொன்னா. ஆனா..வீட்டை வித்து எல்லாரும் பங்கு போட்டு இப்போ அத்தையை உங்கூரில் அந்த இல்லத்தில் சேர்த்துட்டு போய் இருக்கா.


நீ அங்கே வந்ததை சொன்னப்போ அத்தை ரொம்ப சந்தோஷப்பட்டா.

உனக்கு இது பிடிக்காதுனு தெரியும். இன்னும் பழசையே நினைச்சு உறவுகளை ..அதுவும் வயசானவர்களை நாம உதாசீனப் படுத்த கூடாது. 


அந்த நாள்ல எல்லாரும் அத்தையை சுத்தி இருந்த காலத்தில் உன்னை  'ஒத்தை பொண்ணு நீ..உறவெல்லாம் உனக்கென்ன தெரியும்'னு எதோ ஒரு வேகத்தில் சொன்னதை இன்னும் மனசில வெச்சுண்டு உழப்பிக்க கூடாது. அந்த வார்த்தை அவா சொன்னப்பறம் நீ அத்தை கூட பேசறத நிறுத்தி பல வருஷமாச்சுனு எனக்கு தெரியும். 


தள்ளாமையை விட தனிமை ரொம்ப கொடுமை ஆனந்தி. 

பழசெல்லாம் மறந்துட்டு அத்தையை இந்த வாரம் போய் பார். வாய்க்கு பிடிச்சா மாதிரி எதாவது பண்ணி எடுத்துண்டு போ.

முடிஞ்ச போது ஒரு ரெண்டு மூணு நாள் கூட்டி கொண்டு வந்து உன்னோட வெச்சுக்கோ.

நீ போய் பார்த்துட்டு வந்த விவரத்திற்கு கடுதாசு போடு. மாப்பிள்ளையை விசாரித்தாக சொல்.

கண்டிப்பா நீ போவேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.

அன்புடன் 

அம்மா.

Saturday, May 29, 2021

மால்கள்

 மால்கள்...

மயக்க வைக்கும்..

மாயாஜால உலகம்..

மாசச் சம்பளம் பூராவும்..

மாயமாகும் அவலம்..


வாராந்திர விடுமுறை

வெட்டியா..வீணாக..

விரயமாகும் பணம்..

வீட்டில் நிரம்பும் குப்பை...


வளைஞ்சு..வளைஞ்சு..

வந்த வழி மறக்க...

வாய் பிளந்தே வேடிக்கை..

விழுவோம்..பாதாள உலகில்.


பகவானே..

buy one get one..

படு குழியில் விழாம..

பத்திரமாய் வெளியேரணுமே..


(பால்)பாட்டில் ஒரு கையும்..

பாப்பா மறுகையும்..

'பர்ஸே'ந்தி பின்தொடரும்

பரிதாப 'பதி'கள்..


ஒவ்வாத உடுப்புகளில்.

ஒய்யார நடை போட்டு..

ஒரு முறை முறைத்து

ஓகே சொல்ல வைக்கும்..

ஒன்றில் கலந்த பத்தினிகள்..


சாப்பாடு வகைகளோ..

சகட்டு மேனிக்கு..

வாயில் நுழையா பெயர்கள்..

விறுவிறு வியாபாரம்..

வீங்கும் வயிறுகள்..


அம்மாக்கள் பாடோ..

அது மிகத் திண்டாட்டம்..

coat stand ஆ மாறணும்..

கோபமே கூடாதங்கே..


காமிரா ஒளிச்சிருக்காணு..

கவனமாப் பார்க்கணும்..

காவலாய் இருக்கணும்..

கால் கடுப்பை பொறுக்கணும்..


ஒரு  மூட்டையிலிருந்து..

ஒண்ணே ஒண்ணு..

ஒரு வழியாப் பிடிக்கும்..

ஒம் சாந்தி மனஞ் சொல்லும் .


அங்கே ..

காலை முதல்..

கால் கடுக்க நின்னு..

கசக்கிப் போட்டு..

குப்பை மேடாக்கி்யதை

கரிசனமா..மடித்து..

கடமை செய்யும்..

காவல் பெண்ணுக்கு...

கைக் கொடுக்கத் தோணும்..


'மணி'யும்..

'money 'யும் ..

மதிப்பிழந்த ஓர் இடம்..

மால்களே..மால்களே..மால்களே..

Happy shopping Sunday..

Saturday, May 22, 2021

ரிசல்ட்டுக்கு நேரமாச்சு

 Its result time . all the best to 12 th students. Count down has started.


ரிசல்ட்டுக்கு நேரமாச்சு


முடிவு வருமுன்னே

மூச்சடைத்து போகும்

தேர்வோ..வாழ்வோ

தேறுவது நம்மிடமில்லை.


சுற்றித் திரிந்த சிட்டுகள்

சுருட்டும் வாலை இப்போது

சுற்றும் கோயில் பிரகாரம்

சமத்தா யிருக்க பிரயத்தனங்கள்.


தெரியா விடையைத்

தேடுதல் வாழ்க்கை.

முறையீடு இல்லாத

 முடிவான தீர்ப்புகளங்கே.


தேர்வின் முடிவோ..

தெரிந்ததே விடையானாலும்

திருத்துவோர் கையில்தானே

திரும்பும் பல வாழ்க்கை.


keyword இருந்தால்தான்

கிடைக்கும் மதிப்பெண்ணும்

கிலியில் குழந்தைகள்

கிழியும் திரையென்றே..


வாழ்க்கை நிற்காது என்றும்

வெறும் மதிப்பெண்ணால் மட்டும்

வாழணும் நீ என்றும்

வரும் புயலையும் எதிர்த்தென்று

வழங்குவோம் அறிவுரை இன்று

வரும் சந்ததி இவருக்கே..


(அம்மாக்கள் தவிப்பு..அதானிங்கே)

ஒரு கலகல போஸ்ட்..

 ஒரு கலகல போஸ்ட்..

கைகலப்பு இல்லை..ஆமாஞ் சொல்லிட்டேன்..


அடுப்படி எனக்குச் சொந்தமானு இப்போ எல்லாரும் பாட ஆரம்பிச்சாச்சு..


சும்மா..ஒரு கற்பனை..


பாத்திரம் தேய்க்கும்போது இவர்கள் மை.வாய்ஸ் என்ன நினைக்கும்?


#கம்ப்யூட்டர்_எஞ்சினியர்: code எழுதினால்  promotion கிடைக்கும். இங்கே பாத்திரத்தில் கோடு விழுந்ததோ..பீஸ்..பீஸ் தான்..


#Mechanical_engineer; " குக்கர் ..கைப்பிடி ஸ்க்ரூ.. ..இந்த structural analysis பண்ணுவாரோ.


#Automobile_engineer: கடாய் கைப்பிடியில் கார் ஓட்டி பார்ப்பாரோ?


#நடிகை: சின்ன பாத்திரமோ..பெரிய பாத்திரமோ.. ஜொலிக்கணும்..


#பல்_டாக்டர்: ஒவ்வொரு பல்லுக்கும் டாக்டர் வந்தாச்சு..இத்தனை பாத்திரத்தை எப்படி பிரிச்சு .எப்படி தேய்க்கிறது?

.


#நடிகர்: இதுக்கு டூப் போட்டால் எவ்வளவு நல்லா இருக்கும்?


#ஜோசியர்: இன்னிக்கு குக்கர்..மக்கர்

கரண்டி..வலிமை , பால் பாத்திரம்..பழுது


#மார்கெட்டிங்_executive; காலையிலே target சொல்லிட்டா பெட்டரா இருக்கும்..


#Bank_manager; ATM கூட இப்படி ரொப்ப முடியறதில்லையே .


#Accountant: tally ஆகவே மாட்டேங்கிறதே..சமைச்ச ஐட்டமும் உபயோகிச்ச பாத்திரமும்..


#வக்கீல்: வாதம் விவாதமே இல்லாமல் சரண்டர் தான் இங்கே..


#சிவில்_எஞ்சினியர்: இந்தப் பாத்திரத்துக்கு ..எத்தனை சிமிண்ட்..sorry.. Sabena வேணும்னு யோசிப்பாரோ.


#அரசியல்வாதி: இலவச அடுக்கு செட்  கொடுக்கிற டெண்டரை இப்பவே நிறுத்தி யாகணும்..


#காப்பிப்_பொடி_கடைக்காரர்: இனிமே சத்தியமா ஸ்பூனும் கப்பும் ஆஃபர் தரமாட்டேண்டா சாமி


#காலேஜ்_பெண்: இந்த நெயில் பாலிஷ் அழியாமல்  இருக்கணுமே ..தேவுடா


#டைலர்: இந்த்க ஜல்லிக் கரண்டி, ரிப்பர் அச்சு எல்லாம் வெச்சு ஒரு லாக்டவுன் டிஸைன் ஒண்ணு போட்டுட வேண்டியதுதான்..


#பால்காரர்: தண்ணி நல்லா கலந்து வைக்கலாம் இந்த டிஷ் வாஷ் லிக்விட்ல..


வேற யாரையாவது விட்டேனா?

#தலை_திவசம்

 #திடீர்_போட்டி


Ganesh Bala sir.

படத்துக்கு கதை எழுதி விட்டேன்.நன்றி


#தலை_திவசம்


தலை தெறிக்கும் வேகத்தில் வீட்டுக்குள் நுழைந்தேன்.


'என்னங்க ..அப்படி என்ன தலைபோற அவசரம்..எங்கியாவது விழுந்து அடிபட்டா என்னாறது..?

இது..என் மனைவி மங்களம்.


"அது என்ன புதுசா ஒரு அட்டை பெட்டி உங்க  கையில்?' 

அவள் கண்ணிலிருந்து எதுவும் தப்ப முடியாது.

 தலையைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்தேன்..

 

நான்..ராகவன்..மங்களத்தின் கணவன்.


'இப்ப என்னங்கற?

அது தெரியாட்டி உன் தலையே வெடிச்சுடுமா என்ன?'


" நான் சொல்றதை கொஞ்சம் தலை மட்டும் ஆட்டாம ஒழுங்கா கேளு..

தலைக்கு நாலு இட்லி பொட்டலம் கட்டு..

நம்ம கொடைக்கானல்  கெஸ்ட் ஹவுஸ் இருக்கே..அங்கே போய் ஒரு வாரம்  இருக்கப்போறோம்..யார்க்கிட்டயும் தம்பட்டம் அடிக்காம..சட்னு கிளம்பற வழியைப் பாரு'..


நான் சொன்னது தான் தாமதம்..


"என்னது..இப்பதான் நான் தலைக்கு டை அடிச்சுண்டு இருக்கேன்..'டை'  காய்ஞ்சு..நான் தலை குளிச்சுட்டு வரணுமே....இப்படி பாதியில ..

எப்படி நான்  வெளியே தலை காட்ட முடியும்?'..

அவள் ஹை பிட்ச்சில் கத்த..


"அதெல்லாம் எனக்குத் தெரியாது..


" அரை மணியில் கிளம்பறோம் அவ்வளவுதான். நான் மத்ததெல்லாம் பார்த்துக்கறேன்.'

நான் நகர..


"எல்லாம் என் தலை எழுத்து..அன்னிக்கே 

தலையால் அடிச்சிண்டேன் எங்கப்பாகிட்ட..

இவரைப் போய் என் தலையில கட்டறயே ப்பானு..கேட்டாதானே...?

இப்பப்பருங்கோ..எப்பப்பாரு தலை கால் புரியாம நீங்க அடிக்கிற கூத்து எனக்கு புரியவே மாட்டேங்கறது..'


நீங்க சொன்னதுமே கிளம்ப முடியாது.. தலைக்கு மேல வேல கிடக்கு..முடிச்சுட்டு தான்  கிளம்புவேன்.'


இப்படி  ஏடாகூட வசனங்கள் எங்க வீட்டில் அடிக்கடி நடக்கும்..


அதுவும் கொஞ்ச நேரம் தான். மீதி பொழுது எல்லாமே அழுகையுடனும் ஆத்திரக் கத்தல்களுடனேயே மங்களத்தின் நாள் கழியும்.


ஒரு மூணு வருஷமாத்தான் இப்படி...

வீட்டில் இருந்த சந்தோஷம் ஆட்டம் பாட்டம் எல்லாம் அடங்கிப் போச்சு.

கண்களை துடைத்தபடி ராகவன் காரை வெளியே நிறுத்தினார்.


அந்த நாளை மறக்க் முடியுமா?

பொத்திப் பொத்தி வெச்சு வளர்த்த பொண்ணு.. ..தன்னோட ரூமுக்குள் தற்கொலை செஞ்சுண்டதை பார்த்த பின்னும் இன்னும் நாங்க எதுக்காக உயிரோட இருக்கோம் என்றே எனக்கு புரியலை.


எங்க கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம். எவனோ ஒரு பையன்..இப்படி இவளுக்கு எமனா வருவான்னு நாங்க கனவில கூட நினைக்கலை..


அன்னிலேர்ந்து  நடைப்பிணமா ஆனவள் தான்  மங்களம்.

 ஆனால்..இன்னிக்கு அதிசயமா வெளியே கிளம்ப ஒத்துக் கொண்டதே பெரிய விஷயம்.


ஒரு வழியாக ரெடியாகி கிளம்பினாள் மங்களம்.


"ஆமா..அது சரி..அந்த பெட்டி?'


"தலை வெடிச்சுடுமே உனக்கு..

நீ கிளம்பு..அங்கே  போனதும் சொல்றேன்.'


ரொம்ப நாள் ஆசை தான் மங்களத்துக்கு அந்த கெஸ்ட் ஹவுஸ் போகணும்னு..


இத்தனை நாள் தலைகீழ நின்னாலும் கூட்டிண்டு போக மாட்டேன்னு பிடிவாதம் பிடிச்ச மனுஷர் ..இப்படி தலை கீழா மாறிட்டாரே.. என்று மங்களத்துக்கும் ஆச்சரியம்.


என்னவோ எனக்கு அந்த கெஸ்ட் ஹவுஸ் பிடிப்பதில்லை.. ஆனால் இந்த முறை அங்கே தான் போகணும்னு கிளம்பிட்டேன்.


"எல்லாம் நல்லபடியா நடக்கணுமே பகவானே..என்னை கை விட்டுடாதே..'

வேண்டியபடி கிளம்பினேன்.


காரில் ..கேரியருடனும் அந்த கார்ட்டன் டப்பாவுடன் கிளம்பியாச்சு.

கார் கிளம்பியதுமே  கண்ணை மூடி லேசா தலையை சாய்த்து தூங்க ஆரம்பித்தாள் மங்களம்.

எனக்கு ஒரு பக்கம்.அவளைப் பார்க்க பாவமாக இருந்தது..


ப்ரேக் போட்ட வேகத்தில், தலை நங்குனு ஜன்னல்ல இடிச்சப்பதான் முழித்துக் கொண்டாள்..

 "அடடே..வந்தாச்சு..என்னம்மா 

தலை முடியை பிச்சுக் கொண்டு போகிற காற்று..'

ரசித்தபடி இறங்கி ரூமுக்குள் சென்றாள்.


'ஏம்ப்பா..தலையே வெடிக்கறாப் போல  வலிக்கறது..கொஞ்சம்  நல்ல ஸ்ட்ராங்க் காஃபி ஒன்ணு அந்த கெஸ்ட் ஹவுஸ் ரூம் சர்வீஸ்கிட்ட சொல்லுங்கோளேன்.

நான் சித்த தலையை சாய்க்கிறேன்னு'


..மங்களம் தலையில் ஒரு துண்டை இறுக்க கட்டிண்டு மெத்து மெத்துனு சாஃப்ட் தலகாணியை தேடி படுக்கப் போய்ட்டாள்.


அப்பாடா..இதுதான் சரியான டைம்.அந்த டப்பாவை பிரிச்சிடுவோம்..


மெதுவா..மெதுவா..அலுங்காமல் 

அந்தத் தலையை வெளியே எடுக்க..பிசுபிசுனு..கையில  ஒட்டித்து ..


மனசும் உடம்பும் வலிக்க..அப்படியே கட்டிலில் சாய்ந்தான் ராகவன்.


பக்கத்தில் இருந்த அந்தத் தலையை தடவிக் கொடுத்தான்..


' காஃபி வந்துடுத்தா'  ..ரூமிலிருந்து தலை காட்டியவள்..

" அங்கே அந்த தலையைப் பார்த்துதான் தாமதம்..தன் தலையைப் பிடித்து அப்படியே சரிந்தாள்..கத்த ஆரம்பித்தாள்.


"இந்த ராக்ஷசனோட தலை கொண்டு வந்துட்டேளா..?

இடி இடி என்று சிரித்தாள் மங்களம்..

" நான் சொன்னால் நீங்க கண்டிப்பா செஞ்சுடுவீங்கனு எனக்கு தெரியும்'..அவள் குரலில் வெறி ஏறியது..


"ஆமாம்'....' அழுகையும் ஆனந்தம் கலந்து என் குரல் நடுங்கியது.


"கொடுங்கோ..ஒரு நிமிஷம் அந்தத் தலையை நான் தொட்டுப் பார்க்கறேன்'..

அவள் வேகமாக வர..

" அதெல்லாம் நீ தொடாதே மங்களம்..ப்ளீஸ்'..

நான் தடுத்தேன்.

சரி..சரி..நீ கிளம்பு ...அந்த சூசைட் பாய்ண்ட் லோகேஷன்ல போய் இந்த தலையை உன் கையாலேயே உருட்டி விடு மங்களம்..நீ ஆசைப்பட்டது அதுதானே'..


மங்களம் ரூமுக்குள் சென்று தலை வாரி கிளம்பத் தயாரானாள்.


பெட்டியிலிருந்து தன் ஒரே பெண் சரளாவின் ஃபோட்டோவை எடுத்தாள்.


"நீயும் வாடா என்னோட..அவன் தலை உருள்றதை நீயும் பார்க்க வேண்டாமா?

இன்னியோட நீ எங்கள விட்டுப் போய் மூணு வருஷம் ஆச்சு..ஆனால் உண்மையான தலை திவசம் இன்னிக்குத் தாண்டா நான் செய்யப் போறேன்'


 பைக்குள் ஃபோட்டோவை வைத்தாள்.

குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தாள்.


என் ஃபோன் சிணுங்கியது.

" டேய்..ராகவா..என்ன ப்ளான் படி எல்லாம் நடக்கிறதா..? மன்னி எப்படி இருக்கா?


ராகவனின் தம்பி கிச்சா பேசப் பேச..

அழுகையை அடக்கியபடி..


"நம்பிட்டாடா..இது அந்தப் பாவியோட தலைனு ..இந்த களிமண் தலை பீஸ் பீஸாகும்போது .. இவளோட மன நிலையும் சரியாகிடும் தானேடா..அவாளோட பண பலத்துக்கும் செல்வாக்குக்கும் முன்னாடி நாம எம்மாத்திரம்?  ஊருக்குள்ள அவன் சுதந்திரமா சுத்தினாலும்..

என் மங்களத்தை பொறுத்தவரை ,அவன் செத்துப் போகணும்டா..டாக்டர் சொன்ன அட்வைஸ் இது..அவ பழையபடி சரியாகணும். இன்னிக்குத் தாண்டா என் பெண்ணுக்கு தலை திவசம்..'

குலுங்கிக் குலுங்கி  அழ ஆரம்பித்தார்.


 ,காஃபி எடுத்துக் கொண்டு வந்த அந்த வேலையாளுக்கு அந்தத் தலையைப் பார்த்ததும் தலையே சுற்றியது  .


ராகவனின் பேச்சை கேட்டபடி நின்றவன்..

"அம்மா குணமாகிடுவாங்க சார்..கவலைப்படாதீங்க...நல்லா போட்டு சுக்கு நூறா உடைச்சுட்டு வாங்க' 

சொல்லியபடி காஃபியை வைத்து விட்டுச் சென்றான்.

Thursday, May 20, 2021

dignity @ end of life..

 dignity @ end of life..


do we have time to think about this?..in the race for material things and dignity misconstrued.. are we ready to face this phase of life? and more than that do we give thought to provide a dignified end to our own parents ,near and dears? this question daunts me always.

I had just moved to the rented apartment ,sipping my filter coffee and gazing at the unusual lazy morning traffic ,down the floor an old man in his 90s relaxing  with his morning dose of nicotine  and throwing the piece at the neighbour's compound caught my attention..

OK..OK..let him enjoy..rushed to the morning market and on the way back ,was waiting for the lift..generally waiting time near the lift gives you an opportunity to make friends.. I could see an old lady with her shopping bag in one hand and holding her knees on another,approaching the lift. I rushed to  help her out..but as a custom she refused with a friendly smile.. no exchange of words..hurried and restless she left the lift.. something struck me? is she related to that man i saw in the morning..?

I was lucky enough to get the answer the next day itself..the old man is the brother in law of that aunty . 

his biography..

 neither principled nor worthy of respect..a chain smoker ,jobless...and all the negatives in one man.. his wife bid goodbye during his middle phase of life..no issues..no commitment in life..

but blessed with a younger brother and brother's wife who started shouldering him..again a second innings of funfilled life..

 dependant ..but dominating as ever.. demanding food of his choice ,stealing money and what all atrocities...with the walking stick he never missed his daily fitness routine.

one fine day he had a very bad fall and was rushed to the hospital..a new twist in his life..the care taker family was waiting to get rid of him.. and this chance they never wanted to miss..semi conscious he was sent directly to an old age home.. expenses were met ..but his people never met him after that..the awaited end came...no last rites..no condolence..mass cremation...electric crematorium swallowed him in a second.. "we have done everything ,more than everything for several years..enough is enough ..a sigh of relief...

but i was not convinced..for so many years somebody  had  the patience to handle such a person.. why not a kind heart to bid adieu to the departed soul..

the soul needs the solace ..

the old man never straightened his bend!!..the family bending to their own logic..


there might be arguments for and against.. but..my thoughts wandering..

how quintessential is to lead a life with an unfettered dignity especially during the final chapters ...concluding days..

..inviting A glorious sunset at the twilight years....that's  called a perfect life..

Akila

Friday, May 7, 2021

மழை

 வருந்தி வருந்தி அழைத்தும் 

வராமல் படுத்திய நீ

வந்தால் வா..

வராவிட்டால் போ

வேதனைதான் விதி என்றால்..

வேண்டுதலா..மாற்றப் போகிறதென

மனம் துவண்ட வேளை..

வாசனையுடன் வந்து ..

வாசல் தட்டினாயே

வேகமான காற்றுடன்


வான் மழையே..

வான் மழையே