Saturday, May 22, 2021

#தலை_திவசம்

 #திடீர்_போட்டி


Ganesh Bala sir.

படத்துக்கு கதை எழுதி விட்டேன்.நன்றி


#தலை_திவசம்


தலை தெறிக்கும் வேகத்தில் வீட்டுக்குள் நுழைந்தேன்.


'என்னங்க ..அப்படி என்ன தலைபோற அவசரம்..எங்கியாவது விழுந்து அடிபட்டா என்னாறது..?

இது..என் மனைவி மங்களம்.


"அது என்ன புதுசா ஒரு அட்டை பெட்டி உங்க  கையில்?' 

அவள் கண்ணிலிருந்து எதுவும் தப்ப முடியாது.

 தலையைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்தேன்..

 

நான்..ராகவன்..மங்களத்தின் கணவன்.


'இப்ப என்னங்கற?

அது தெரியாட்டி உன் தலையே வெடிச்சுடுமா என்ன?'


" நான் சொல்றதை கொஞ்சம் தலை மட்டும் ஆட்டாம ஒழுங்கா கேளு..

தலைக்கு நாலு இட்லி பொட்டலம் கட்டு..

நம்ம கொடைக்கானல்  கெஸ்ட் ஹவுஸ் இருக்கே..அங்கே போய் ஒரு வாரம்  இருக்கப்போறோம்..யார்க்கிட்டயும் தம்பட்டம் அடிக்காம..சட்னு கிளம்பற வழியைப் பாரு'..


நான் சொன்னது தான் தாமதம்..


"என்னது..இப்பதான் நான் தலைக்கு டை அடிச்சுண்டு இருக்கேன்..'டை'  காய்ஞ்சு..நான் தலை குளிச்சுட்டு வரணுமே....இப்படி பாதியில ..

எப்படி நான்  வெளியே தலை காட்ட முடியும்?'..

அவள் ஹை பிட்ச்சில் கத்த..


"அதெல்லாம் எனக்குத் தெரியாது..


" அரை மணியில் கிளம்பறோம் அவ்வளவுதான். நான் மத்ததெல்லாம் பார்த்துக்கறேன்.'

நான் நகர..


"எல்லாம் என் தலை எழுத்து..அன்னிக்கே 

தலையால் அடிச்சிண்டேன் எங்கப்பாகிட்ட..

இவரைப் போய் என் தலையில கட்டறயே ப்பானு..கேட்டாதானே...?

இப்பப்பருங்கோ..எப்பப்பாரு தலை கால் புரியாம நீங்க அடிக்கிற கூத்து எனக்கு புரியவே மாட்டேங்கறது..'


நீங்க சொன்னதுமே கிளம்ப முடியாது.. தலைக்கு மேல வேல கிடக்கு..முடிச்சுட்டு தான்  கிளம்புவேன்.'


இப்படி  ஏடாகூட வசனங்கள் எங்க வீட்டில் அடிக்கடி நடக்கும்..


அதுவும் கொஞ்ச நேரம் தான். மீதி பொழுது எல்லாமே அழுகையுடனும் ஆத்திரக் கத்தல்களுடனேயே மங்களத்தின் நாள் கழியும்.


ஒரு மூணு வருஷமாத்தான் இப்படி...

வீட்டில் இருந்த சந்தோஷம் ஆட்டம் பாட்டம் எல்லாம் அடங்கிப் போச்சு.

கண்களை துடைத்தபடி ராகவன் காரை வெளியே நிறுத்தினார்.


அந்த நாளை மறக்க் முடியுமா?

பொத்திப் பொத்தி வெச்சு வளர்த்த பொண்ணு.. ..தன்னோட ரூமுக்குள் தற்கொலை செஞ்சுண்டதை பார்த்த பின்னும் இன்னும் நாங்க எதுக்காக உயிரோட இருக்கோம் என்றே எனக்கு புரியலை.


எங்க கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம். எவனோ ஒரு பையன்..இப்படி இவளுக்கு எமனா வருவான்னு நாங்க கனவில கூட நினைக்கலை..


அன்னிலேர்ந்து  நடைப்பிணமா ஆனவள் தான்  மங்களம்.

 ஆனால்..இன்னிக்கு அதிசயமா வெளியே கிளம்ப ஒத்துக் கொண்டதே பெரிய விஷயம்.


ஒரு வழியாக ரெடியாகி கிளம்பினாள் மங்களம்.


"ஆமா..அது சரி..அந்த பெட்டி?'


"தலை வெடிச்சுடுமே உனக்கு..

நீ கிளம்பு..அங்கே  போனதும் சொல்றேன்.'


ரொம்ப நாள் ஆசை தான் மங்களத்துக்கு அந்த கெஸ்ட் ஹவுஸ் போகணும்னு..


இத்தனை நாள் தலைகீழ நின்னாலும் கூட்டிண்டு போக மாட்டேன்னு பிடிவாதம் பிடிச்ச மனுஷர் ..இப்படி தலை கீழா மாறிட்டாரே.. என்று மங்களத்துக்கும் ஆச்சரியம்.


என்னவோ எனக்கு அந்த கெஸ்ட் ஹவுஸ் பிடிப்பதில்லை.. ஆனால் இந்த முறை அங்கே தான் போகணும்னு கிளம்பிட்டேன்.


"எல்லாம் நல்லபடியா நடக்கணுமே பகவானே..என்னை கை விட்டுடாதே..'

வேண்டியபடி கிளம்பினேன்.


காரில் ..கேரியருடனும் அந்த கார்ட்டன் டப்பாவுடன் கிளம்பியாச்சு.

கார் கிளம்பியதுமே  கண்ணை மூடி லேசா தலையை சாய்த்து தூங்க ஆரம்பித்தாள் மங்களம்.

எனக்கு ஒரு பக்கம்.அவளைப் பார்க்க பாவமாக இருந்தது..


ப்ரேக் போட்ட வேகத்தில், தலை நங்குனு ஜன்னல்ல இடிச்சப்பதான் முழித்துக் கொண்டாள்..

 "அடடே..வந்தாச்சு..என்னம்மா 

தலை முடியை பிச்சுக் கொண்டு போகிற காற்று..'

ரசித்தபடி இறங்கி ரூமுக்குள் சென்றாள்.


'ஏம்ப்பா..தலையே வெடிக்கறாப் போல  வலிக்கறது..கொஞ்சம்  நல்ல ஸ்ட்ராங்க் காஃபி ஒன்ணு அந்த கெஸ்ட் ஹவுஸ் ரூம் சர்வீஸ்கிட்ட சொல்லுங்கோளேன்.

நான் சித்த தலையை சாய்க்கிறேன்னு'


..மங்களம் தலையில் ஒரு துண்டை இறுக்க கட்டிண்டு மெத்து மெத்துனு சாஃப்ட் தலகாணியை தேடி படுக்கப் போய்ட்டாள்.


அப்பாடா..இதுதான் சரியான டைம்.அந்த டப்பாவை பிரிச்சிடுவோம்..


மெதுவா..மெதுவா..அலுங்காமல் 

அந்தத் தலையை வெளியே எடுக்க..பிசுபிசுனு..கையில  ஒட்டித்து ..


மனசும் உடம்பும் வலிக்க..அப்படியே கட்டிலில் சாய்ந்தான் ராகவன்.


பக்கத்தில் இருந்த அந்தத் தலையை தடவிக் கொடுத்தான்..


' காஃபி வந்துடுத்தா'  ..ரூமிலிருந்து தலை காட்டியவள்..

" அங்கே அந்த தலையைப் பார்த்துதான் தாமதம்..தன் தலையைப் பிடித்து அப்படியே சரிந்தாள்..கத்த ஆரம்பித்தாள்.


"இந்த ராக்ஷசனோட தலை கொண்டு வந்துட்டேளா..?

இடி இடி என்று சிரித்தாள் மங்களம்..

" நான் சொன்னால் நீங்க கண்டிப்பா செஞ்சுடுவீங்கனு எனக்கு தெரியும்'..அவள் குரலில் வெறி ஏறியது..


"ஆமாம்'....' அழுகையும் ஆனந்தம் கலந்து என் குரல் நடுங்கியது.


"கொடுங்கோ..ஒரு நிமிஷம் அந்தத் தலையை நான் தொட்டுப் பார்க்கறேன்'..

அவள் வேகமாக வர..

" அதெல்லாம் நீ தொடாதே மங்களம்..ப்ளீஸ்'..

நான் தடுத்தேன்.

சரி..சரி..நீ கிளம்பு ...அந்த சூசைட் பாய்ண்ட் லோகேஷன்ல போய் இந்த தலையை உன் கையாலேயே உருட்டி விடு மங்களம்..நீ ஆசைப்பட்டது அதுதானே'..


மங்களம் ரூமுக்குள் சென்று தலை வாரி கிளம்பத் தயாரானாள்.


பெட்டியிலிருந்து தன் ஒரே பெண் சரளாவின் ஃபோட்டோவை எடுத்தாள்.


"நீயும் வாடா என்னோட..அவன் தலை உருள்றதை நீயும் பார்க்க வேண்டாமா?

இன்னியோட நீ எங்கள விட்டுப் போய் மூணு வருஷம் ஆச்சு..ஆனால் உண்மையான தலை திவசம் இன்னிக்குத் தாண்டா நான் செய்யப் போறேன்'


 பைக்குள் ஃபோட்டோவை வைத்தாள்.

குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தாள்.


என் ஃபோன் சிணுங்கியது.

" டேய்..ராகவா..என்ன ப்ளான் படி எல்லாம் நடக்கிறதா..? மன்னி எப்படி இருக்கா?


ராகவனின் தம்பி கிச்சா பேசப் பேச..

அழுகையை அடக்கியபடி..


"நம்பிட்டாடா..இது அந்தப் பாவியோட தலைனு ..இந்த களிமண் தலை பீஸ் பீஸாகும்போது .. இவளோட மன நிலையும் சரியாகிடும் தானேடா..அவாளோட பண பலத்துக்கும் செல்வாக்குக்கும் முன்னாடி நாம எம்மாத்திரம்?  ஊருக்குள்ள அவன் சுதந்திரமா சுத்தினாலும்..

என் மங்களத்தை பொறுத்தவரை ,அவன் செத்துப் போகணும்டா..டாக்டர் சொன்ன அட்வைஸ் இது..அவ பழையபடி சரியாகணும். இன்னிக்குத் தாண்டா என் பெண்ணுக்கு தலை திவசம்..'

குலுங்கிக் குலுங்கி  அழ ஆரம்பித்தார்.


 ,காஃபி எடுத்துக் கொண்டு வந்த அந்த வேலையாளுக்கு அந்தத் தலையைப் பார்த்ததும் தலையே சுற்றியது  .


ராகவனின் பேச்சை கேட்டபடி நின்றவன்..

"அம்மா குணமாகிடுவாங்க சார்..கவலைப்படாதீங்க...நல்லா போட்டு சுக்கு நூறா உடைச்சுட்டு வாங்க' 

சொல்லியபடி காஃபியை வைத்து விட்டுச் சென்றான்.

No comments: