Wednesday, September 23, 2020

Pratilipi story

 Pratilipi story

நினைவோ ஒரு பறவை.. 2011


கிளியைப் புடிச்சு கூண்டில் அடைச்சு


" அம்மா..எனக்கு  நாய் வளர்க்கணும்னு ' என் சின்ன பொண்ணு சொன்னப்போ..

எனக்கு..'ஆத்தா ..ஆடு வளர்த்துச்சு..கோழி வளத்துச்சுனு' பதினாறு வயதினிலே கமல் 

மாதிரி .. ..டயலாக் நினைவுக்கு வர..

' கண்ணே..மணியே..உன்னை வளர்க்கறது போறாதா.. புது வேலை எல்லாம் கொடுக்காதே டா' ஒரே கெஞ்சலும் கொஞ்சலும்..


நான் இப்படி ஒரு ட்ராக்கில் போக.." அம்மா..அக்ஷயா வீட்டில் அழகா ஒரு குட்டி இருக்கும்மா..ஸ்ருதி கிட்ட..சூப்பரா சிங்கம் போல்..சிங்கம் போலனு  ஒண்ணு இருக்கும்மா..இல்லாட்டி..வோடஃபோன் குட்டி வாங்கலாமா?.

வோட ஃபோன் குட்டியா..விலை என்ன தெரியுமா..எனக்கு வெறியே பிடிக்க ஆரம்பித்த கால கட்டம்..

" நாய்க் குட்டி வந்தால் எத்தனை வேலை தெரியுமா..வாக்கிங் கூட்டிண்டு போகணும்..செளகரியமா அதுக்கு ஒரு மரம் இல்ல..கார் அடியைக் காட்டணும்..

பெடிக்ரீ கொடுக்கணும்...முடியை ட்ரிம் பண்ணணும்..குளிச்சு விடணும்..டாக்டர்கிட்ட கூட்டிண்டு போகணும்' மூச்சு விடாமல் SPB போல நான் பேச..

" அவ்வளவுதானே ம்மா..எனக்கு பண்றதை அதுக்கும் சேர்த்து பண்ணிடு ..அவ்வளவு தானேனு" குண்டைத் தூக்கிப் போட..

ஐயா..மாட்டிக்கிட்டாரு..வசமா மாட்டிகிட்டாருனு பாட்டு மனசில் ஓட..

மிக நீண்ட நாள் யோசனைக்குப் பிறகு..

' நாயெல்லாம் வேண்டாம்டா..கிளி வளர்ப்போமா?..என்று சமாதானப் புறாவை  அனுப்ப..

நாயிடமிருந்து தப்பிச்சு..கிளியிடம் நானே போய் மாட்டிக் கொண்டேன்..

Pet shop ல் போய் " ஜோடிக் கிளி எங்கே ..பக்கத்திலேனு' தேட ஆரம்பிக்க..

மூக்கும் முழியுமா ஒரு கிளி ஜோடி ..இப்ப அந்த ஜோடிக்கு ஒரு ஜாடி..சாரி..சாரி..ஒரு கூண்டு வாங்கணுமே..' கிளியைப் புடிச்சு கூட்டில் அடைச்சுனு' துக்கம் தொண்டை யடைக்க..

' ஜோடிக் கிளிகள் ஜாலியாக எங்க வீட்டுக்குள் வந்தனர்.

கொள்ளையழகு இரண்டும்..

ஜாலியா பேசிப்பாங்க..சில நேரம் சண்டை மண்டை பிச்சுக்கும்..சில நேரம் உர் உர்ருனு ..ஊடலும் கூடலும் அந்தக்  கூண்டுக்குள்ளே..

சாப்பாடு குடுக்கறது முதல் பிரச்சனை. காரட் போடறதா..காரமான பச்சை மிளகாயா..ப்ரெட்டா..பிஸ்கட்டா..தயிர் சாதமா..ரொட்டியா..நூடுல்ஸானு ..ஒரே குழப்பம்.

நம்ம வீட்டு குழந்தைகள் போலத்தான்..ஒரு நாளைக்கு பிடிச்சது..அடுத்த நாள் தொடாது..

மம்மினு கூப்பிடும்..சொக்கிப் போய்டுவேன்..

என் பொண்ணு பேர் சொல்லிக் கூப்பிடும்போது.."கிளியே கிளியே..கிளியக்கா..கூட்டுக்குள்ள யாரக்கானு" சுஹாசினி ஆகிடுவேன்..

யாரோ கூட துணைக்கு இருக்கற மாதிரி ஒரு எண்ணம்..வடக்கில் இருந்ததால்..குளிருக்கு அதன் கூண்டிலும் கம்பளி போர்த்தி..பொத்திப் பொத்தி வளர்த்தோம்.

ஒரே ஒரு விஷயம்..அதோட கழிவுகளை சுத்தப்படுத்தும் போதுதான்..கோபம் வரும்..

இப்படி..கிளியும் நாங்களும் ஒரே குடும்பமாக..

இருந்தாலும் எனக்கு ஒரு உறுத்தல்..

ஆகாசத்தில் பறக்க வேண்டியதை அடைத்து வைத்திருக்கோமே என்று..

என் பெண்ணிடம் சொன்ன  போது..

" அம்மா..அது நம்மளோட சந்தோஷமா தானே இருக்கு..நீ வீணாக ஏன் டென்ஷன் ஆகிறே" என்று சமாதானம் சொல்வாள்.

அன்று..பொங்கல் தினம். பண்டிகை கொண்டாட என் பெண்ணின் வட இந்தியத் தோழி தோழர்கள் எல்லாரும் ஆஜர்.

எல்லாரும் முக்கியமாக ஒரு ஃபோட்டோ கிளிக் கூண்டோடு எடுத்துக் கொண்டாச்சு..


மொட்டை மாடியில் அவர்கள் எல்லாரும் ஆட்டம் போட்டபடி இருக்க..கிளிகளும்  ஜாலியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தன..

"அம்மா..அம்மா..சீக்கிரம் மேலே வாயேன் '

என் பெண் குரல் கேட்கவும்.. 

என் சப்த நாடியும் ஒடுங்கி..யாருக்கு என்ன ஆச்சோ என்று படபடப்பில் ஓடினேன்..


அங்கே..நான் கண்ட காட்சி..

கூண்டைச் சுற்றி குழந்தைகள்..

இன்னும் படபடப்பு அதிகமாக..

ஐயோ..கிளிகளுக்கு என்ன ஆச்சோனு என் லப்டப் அதிகமாக..




"ரெடி..ஒன்..டூ..த்ரீ.."என்று கோரஸில் இவர்கள் கத்த..


கூண்டைக் கையில் தூக்கி.. என் பெண்...மெதுவாக அதன் கதவைத்  திறக்க..

படபடவென்று அடித்துக் கொண்டு..நீ முந்தி நான் முந்தி என இரண்டு கிளிகளும் விண்ணை நோக்கி "சிறகுகள் விரித்தே..போகிறேன்..நான் போகிறேன் "

என்று விட்டுப் பிரிந்து வந்த குடும்பத்தை தேடிப் பறக்க..

ஒரே கைத்தட்டு மழை..


' இப்போ..சந்தோஷமா அம்மா..' என் பெண் கேட்டபோது ..கண்ணோரேம் துளிர்த்த கண்ணீர்..

" இவள் வளர்ந்து விட்டாள்'..நிம்மதி பெருமூச்சில் நான்..


பல நாட்கள்..எங்கள் வீட்டு மொட்டை மாடிக்கு சென்று..மேலே பறக்கும் கிளிக்கூட்டத்தின் நம் வீட்டுக் கிளி எது என்று தேடும் வேளையில்..


" நாம இங்கே தானே இருந்தோம்' என்று நம் வீட்டைத் தாண்டும்போது நினைத்துக் கொள்ளுமோ என்று ஒரு ஆதங்கத்துடன் அவர்கள் ஆரவாரத்தை ரசிப்போம்.



கிளிப் பேச்சு ..பிறகு கேட்கவே இல்லை..














நிலா முற்றம்- மந்திரக் கதை

 மந்திரக்கதை


#மாய(யை) உலகமடா..


ஜீபூம்பா புரி..ஒரு மாயாபுரி என்றே சொல்லலாம்.


ஆனந்தமும் ஆரவாரமும் மகிழ்ச்சியும் பொங்கும் பூலோகத்தின் சொர்க்கபுரி.

அதற்கு காரணம்..

அந்த நாட்டின் மன்னன் ஜெய்சங்கர வர்மன் . அவன் பட்டத்து ராணி ஜமுனா தேவி.

மக்கள் நலனில் மட்டுமே நாட்டம் கொண்ட ஒரு அரசன். வளமை பெருகி வறுமை என்ற பெயரே தெரியாத மக்கள்.

 தம்பி உடையான் படைக்கு அஞ்சான். 

ஆம்..தம்பி முத்துராம வர்மன் தளபதியாய் தோள் கொடுக்க..அரசாட்சி அமர்க்களமாக நடந்த பொற்காலம்.


ஜெய்சங்கர வர்மனின் ஒரே புதல்வன் விஜயவர்மன். ஆயகலைகள் கற்று..குருகுல வாசம் முடிந்து வந்தவனிடத்தில்  ராஜ்ஜியத்தின் ஆளுமை பொறுப்பை ஒப்படைக்கக்  காத்துக் கொண்டிருந்தார் தந்தை ஜெய்சங்கர வர்மன்.


அன்று..


 அரசவையில் ஆடல் பாடல் கேளிக்கையுடன் நவராத்திரி விழா மிகச் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது.

 

 மக்களும் மன்னர் குடும்பமும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த வேளை..

 நெஞ்சைப் பிடித்துக் கொண்டு தன் அரியணையிலிருந்து உருண்டு விழுந்தார் மகாராஜா..

 

 ' ஐயோ நம்ம ராஜாவுக்கு என்னாச்சு? நாடே பதறியது.

 

 அரசவை வைத்தியர் உடனே தன் சிகிச்சையை ஆரம்பித்தார். இரண்டு நாளாகியும் எந்த முன்னேற்றமும் இல்லை.

தளபதியும் ,தம்பியுமான முத்துராம வர்மன் எல்லாத் திசைகளிலிருந்தும் வைத்தியர்கள் வரவழைத்தான்.


 ஒருவராலும் அரசனின் வியாதியை குணமாக்கும் மருந்து புலப்படவில்லை.

மகாராணி என்ன செய்வது என்று அறியாது தவித்த வேளை , அரச வைத்தியர் வந்து வணங்கினார். 


 "மகாராணி..என் அறிவுக்கு எட்டின வரையில் ஒரே ஒரு மருந்து உள்ளது. ஆனால் அதைத் தேடுவதும் கொண்டு வருவதும் மிகக் கடினம்' என்று தயங்கித் தயங்கி சொன்னார்.

 

முத்துராம வர்மன் கொதித்தான்.."இந்த மாயாபுரியில் கிடைக்காத ஒன்று உண்டா?.அது என்ன மருந்து? எங்கே கிடைக்கும் என்று சொல்லுங்கள்..நானே கொண்டு வருகிறேன் " கர்ஜித்தான்.


" தளபதியாரே..நான் ஒரு முறை மருந்துகள் தேடி ஒரு காட்டுக்குச் சென்றேன். அங்கே ஒரு அதிசய மரம் கண்டேன்.அந்த மரத்தில் இலைகளே இல்லை.ஆனால் கிளை முழுவதும் பூக்களால் நிரம்பியிருந்தது.அந்தப் பூவிலிருந்து கிடைக்கும் சாறு தான் அரசன் உயிரைக் காப்பாற்றும்..அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. பதினாறு வயது காளை ஒருவனால் மட்டுமே அந்தப் பூக்களை பறிக்க முடியும்..' 

அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே..ஓடோடி வந்தான் விஜய வர்மன்.


 "சித்தப்பா..நானே செல்கிறேன்..என் வயது இப்போது அதுதானே..உடனே புறப்படுகிறேன்..' அவன் கூற..தளபதியும் சித்தப்பாவுமான முத்துராம வர்மன்... "வேண்டாம் விஜயா..அந்தக் காட்டுக்குள் நீ போக நான் சம்மதிக்க மாட்டேன் ' என்று அவனைத் தடுக்க.."விடை கொடுங்கள் தாயே" என்று அன்னையிடம் ஆசி பெற்று/யார் சொல்லும் கேளாமல் .. கிளம்பினான் இளவரசன்.

 

அடர்ந்த காடு அது..எப்படிச் செல்வது என்று திகைத்து நின்ற வேளை..அங்கே பல விலங்குளின் ஒலிகள் அவனுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.


மனித வாசம் உணர்ந்து ஓடி வந்த மிருகமெல்லாம்..இந்த இளவரசனைப் பார்த்தும் மண்டியிட்டு வணங்கி..

 . ' விஜய வர்மரே..வணக்கம்..உங்களுக்கு என்ன உதவி வேண்டும் கேளுங்கள். இந்தக் காட்டை ஒரு ரம்மியமான சரணாலயம் போல் ஆக்கி , எந்த வித இடையூறும் இல்லாமல் எங்களைக் காக்கும் அரசருக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயார் ' என்று பணிந்து நின்றன.

 

 இளவரசன் ,அரசரின் உடல்நிலை பற்றி சொல்ல..' நாங்கள் காட்டிக் கொடுக்கிறோம் அந்த மரங்களை'.. பணிந்து வணங்கி வழிகாட்டின.

 

 பூக்கள் அடர்ந்த மந்திர மரங்கள்...அதில் ஒரே ஒரு மரத்தில் மட்டும் ஒரு இலை கூட இல்லை." 

 

"என்னை பறித்துக் கொள் இளவரசே..என்னைப் பறித்துக் கொண்டு போ இளவரசே..எங்கள் மன்னனுக்கு மருந்தாக நாங்கள் உபயோகமாக இருப்போம் எனில் எங்கள் எல்லாரையும் பறித்து எடுத்துப் போங்கள் ' ஒவ்வொரு பூவும் தலையாட்டி பேசியது.


 ஒரே ஒரு பூ மட்டும்..சோகமாக எதுவும் பேசாமல் இருந்தது.

 

 " அழகிய பூவே..உன்னை விட்டு விடுகிறேன்..ஏன் இத்தனை சோகம் உனக்கு' இளவரசன் கேட்க..

 

 " ஐயோ..இளவரசே....எப்படிச் சொல்வேன்..நீங்கள் சித்தப்பா என்று ஆசையுடன் அன்பு காட்டும் முத்துராம வர்மன்..அரசரைக் கொல்லத் திட்டமிட்டு ,அவர் உணவில் தினமும் விஷம் வைத்து வந்தான். அரச வைத்தியரிடமே அதற்கு மருந்து உள்ளது.

 ஆனால் அவரும்  உடந்தை இந்த திட்டத்தில்...உங்களையும் இந்தக் காட்டுக்கு அனுப்பி விட்டால் ,நீங்கள் திரும்பியே போக மாட்டீர்கள்.. அரியணையைக் கைப்பற்ற அவர் போட்ட திட்டம் இது.. விரைந்து சென்று தந்தையைக் காப்பாற்றுங்கள். அரசரால் தான் நாங்கள் அனைவரும் இங்கே நிம்மதியாக வாழ்கிறோம்'..

 மந்திர மரப் பூ சொல்லிக் கொண்டே போக..

 காட்டு விலங்குகள் நாட்டுக்கு வழி காட்ட..

 வந்து சேர்ந்த இளவரசனைப் பார்த்து அதிர்ந்தான் முத்துராம வர்மன்.

 

 அவன் சூழ்ச்சி முறியடிக்கப்பட்டது... அரசர் பூரண உடல் நலம் பெற்ற்றார்..முடி சூடினான் விஜயவர்மன். 

 

 "முத்துராம வர்மன் ஒழிக".."முத்துராம வர்மன் ஒழிக" என்ற கோஷம் போடும் மக்கள் கூட்டத்தின் நடுவில் .

 "ஜீபூம்பாபுரி ..ஜீபூம்பாபுரி..சித்தப்பா கெட்டவன்..சித்தப்பா கெட்டவன்'..

மந்திரக்கதை எழுத்தாளர்  அகிலனும் ஆழ்ந்த உறக்கத்தில் அவன் கனவில் .. ஊர் மக்களுடன் கோஷம் எழுப்ப..

எதுவும் புரியாமல் திகைத்தாள் அவன் மனைவி ஸரஸ்வதி.

 

அகிலா ராமசாமி

எண்; 1892




Tuesday, September 22, 2020

Daughters day

 Happy daughter's day..


என்ன பேசுவார்கள்?

எதுக்காக சண்டை போடுவார்கள்..

இதுவரைக்கும் புரிந்ததில்லை..


இவர்களுக்காக 

புதுப் புது சமையல் கற்றேன்..

மொழி கற்றேன்..

புதுப் புது நட்பு கிட்டியது..


என் பெயர் மறந்து..

இவர்களின் அம்மா என்று அழைக்கப்படுகிறேன்..

வேறென்ன ஆனந்தம் வேண்டும்.


'கப்'புகள் வாங்கிக் குவித்தாலும்..

ஒரு கப் காபியோ தண்ணியோ..

இவர்கள் கொடுக்கும்போது அலாதி இன்பம் தான்.

Stay blessed my chellams.


எனக்கு பிடித்த ராஜா சார் பாட்டு..

'அழகிய கண்ணே..உறவுகள் நீயே'..

Is the song i cherish on every daughter's day.


https://youtu.be/q2C4Su0ohOU

Monday, September 21, 2020

பாபா விஜயம்

 மத்யமர் நண்பர் Ramani யின் பதிவுக்கு என் பழைய புலம்பலை எச யாக சமர்ப்பிக்கிறேன்.


Madhya Pradesh life..


பாபா விஜயம்..


குரோம்பேட்டை குச்சு வீட்டிலும்..கரோல் பாக் கிடங்கிலும் இருந்து...மத்திய பிரதேசம் transfer.. Indore station எறங்கி நல்ல தமிழ் ஹோட்டலில் மூக்க புடிக்க மொக்கிட்டு..கடைத்தெரு எல்லாம் பராக்கு பார்த்துண்டு..பயணம் மண்டலேஷ்வர் என்ற project site நோக்கி....நாங்க போற கார் தவிர..

ஆள் அரவமே இல்லாத ரோடுகள்..இரண்டு பக்கமும் கண்ணும்கெட்டிய வரை ஒரு மனுஷப் பிறவி தெரில..

என் கூட வந்த உடன் பிறவா தம்பி..'அக்கா..நாம எங்க போறோம்.. 'என் அம்மாவோ..'இந்த எடத்துல கைக்குழந்தைய வெச்சுண்டு. எப்படி?


 'அதோ ..அந்த மலைக்கு பின்னாடி தெரியுதே..அங்கதான்..நம்ம வீடு..'

அகத்துக்காரர் சொல்ல...ஆர்வமாய் தலை ஆட்ட..ஒரு குட்டித் தூக்கம் முழிச்சு..இப்போ நாம எங்கே இருக்கோம்....திரு திரு முழியுடன் நான்


கம்பெனி கேட்டில் security salute அடிக்க..ஓ..வீடு வந்தாச்சு..

ஒரு வீட்டுக்கும் இன்னொரு வீட்டுக்கும்..போ....திய இடைவெளி... மைக் போட்டு தான் கூப்பிடணும்.


 அத்வானம்..அமைதி..இதெல்லாம் பழகாத ஒன்று..கடைத்தெருவிலே குடி இருந்து.. காட்டுக்கு நுழஞ்சாச்சு..

பக்கத்து வீட்டு பம்ப்பா(Bengali)..ஓடி வந்தாள்..அறிமுகம்..'bhabhiji ..dhyan rakhna..babaji idhar bahut hai.'...பய பக்தியோட தலையாட்டினேன்..பூச்சாண்டி பயம் ரொம்ப போல இருக்கு..கதவ சாத்தியே வைக்கணும்...


வந்து போனவரெல்லாம் இதே பாட்டு..எங்கடா..வந்து மாட்டிண்டோம்..

காலைல கண் விழிச்சா..விந்திய மலை தரிசனம்..காம்பவுண்டுக்குள் இருக்கும் கோயில் மணி..ஆஹா..சுகமோ..சுகம்..


தோட்டக்காரன் 'கல்லு'...என் பேர் என்றான்..madam..

babaji idhar bahut hai..கதவ சாத்தி வைனு..அதே பாட்டை சுருதி பிசகாம பாடினான்..


என்னடா இது வம்பு...

வேலை செய்யும் மன்னு பாய் வந்தாள் அவள் பெண் சந்தா வோடு..அவளும் அதே பாட்டு பாடினாள்..


கதவிற்க்கு அடியில் துணி அடை என்றாள்..ஷெல்ப் எல்லாம் மூடி வை..babaji ..என்றாள்..


பத்து மணி..பக்கத்து (so called) வீடு..state bank..பியூன் வந்தார்..திறந்தார்..கதவை..ஓடி வெளில வந்து நின்னார்..அட ராமா..இப்படி என்ன ஓட்டம்..கேட்டேன் அவரை..

பணப்பெட்டி திறக்குமுன்..babaji வெளிய போகணும் என்றார்..யோவ்..பூட்டின வீட்டில எங்கடா உங்க babaji....நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் நீனு..ஒரு லுக் விட்டார்....


என்னமோ போ..குழந்தை க்கு ஜுஸ் குடுக்கணும்..ஆரஞ்சு புழிஞ்சு தோலை வீசி எறிய..ஒரு army சத்தம் சரசரனு..குப்பைலேர்ந்து..


கிச்சன்கார்டன்ல..கத்திரிக்காய்..கண்ணைப் பறிக்க..பாத்தியில் கால் வைக்க..கருப்பா..பெருசா ஒண்ணு நகருது..ஐயோ..ஒட்டம் தான்..சீ..சீ..எதோ பிரம்மை..


செம்ம வெயில் கொளுத்தும்.. தண்ணீ ரொப்ப கூலருக்குள் பைப்பை சொருக....குபீர்னு எதோ ஒன்னு வெளிய ஓடித்து..ஐயோ..மூச்சே நின்னு போச்சு..


கல்லு வந்தான்..கதையெல்லாம் சொல்ல..நக்கலாய் ஒரு சிரிப்பு..woh  kuch  nahi kartha  madam..இது எங்கள் குல தெய்வம் என்றான்..


என் குட்டி வால்..காலுக்கு பின்னாடியே..babaji..ஊர்வார்....எங்க எப்பொ..ப்ரசன்னமாவார்னே தெரியாது..


பால்காரர்் வருவார்..பாபாஜி..இன்னிக்கு எங்க என்பார்..அதோ ..அந்த தண்ணி வெளிய வர குழாயில் என்பேன்..போ..ஊதுவத்தி கொண்டா என்பார்..சாக்கடைக்கு..சந்தன அகர்பத்தி காட்டுவார்..பாபாஜியோ..தலைய மட்டும் வெளியே காட்டிட்டு..உனக்கும் பேப்பே..உங்கப்பனுக்கும் பேப்பேனு..உல்லாசமா..பைப்புக்குள்ளே..


சாயந்திரம் 5 மணிக்கு கரெண்ட் கட் ஆகிடும்..அப்பறம் அடுத்த நாள் 12 மணிக்கு தான் வரும்..

காத்துக்கு கதவும் திறக்க முடியாது..காலை கீழ வைக்க கூடபயம்.வழவழனு ..எங்கியாவது..பாபாஜி..விஜயம்..பாமா விஜயம் மாதிரி..


இது என்ன மர்ம தேசம் மாதிரி.....

பயத்தில் ..பூசைகள்...இன்னிக்கு யார் உங்க வீட்ல விருந்தாளினு கேலிகள்....

இன்னிக்கு concrete jungle ல ....எந்த புத்துலேர்ந்து எந்த. பா......இருக்கும்னு புரியாமல் வாழ்க்கை ஒட்ட்ம்..

மறக்க முடியாதது..அந்த

ரம்மியமான சூழல்..நர்மதை நதி சலசலப்பு...

அமைதியான மக்கள்..கொட்டும் மழை ஒருபக்கம்..காய்ந்த பூமி மறுபக்கம்..அஹில்யா தேவி கோட்டை..chanderi புடவைகள்..

எத்தனை நினைவுகள்..

சென்னை

 #ஸண்டே_ஸ்பெஷல்

#சென்னை

காவேரிக்கரையில் பிறந்து..கூவம் நதிக்கரை வந்து சேர்ந்தபோது குழப்பம் தான் ரொம்ப அதிகம்.


படபடக்க வைத்த பட்டிணம் தான்..கூட்டுக்குள் புழுவாய் இருந்த என்னை..பட்டாம்பூச்சியாய் பறக்க வைத்தது நம்ம மெட்ராஸ் தானுங்கோ..


குரோம்பேட்டை ராதா நகருக்குள் ஒரு #மினி_இந்தியா

#பாரத_விலாஸ்


 குருவிக்கூடு வீடு தான் எங்கள் சொர்க்கம்.

சுருள் மாடி வீடு  ..சிம்ப்பிள் அடையாளம்.

மூன்றடுக்கு மாடி..


One India அப்போதே கண்டேன் அங்கிருந்த ஒன்பது வீடுகளில்..


சுந்தரத் தெலுங்கு கேட்கும் ஒரு வீட்டில்..

மலையாள மணம் வீசும் ஒரு வீட்டில்

மார்வாடி ஆண்ட்டியின் சப்பாத்தி சப்ஜியின் மணம் இன்னொர் வீட்டில்..

தம் ஆலு காந்தமாய் இழுக்கும் ஒரு வீட்டில்..

பிஸுபேளா..ப்ளேட்டில் தருவர் ஒரு வீட்டில்..

அன்புக்கு பஞ்சமில்லை..

பயமொன்று இருந்ததே இல்லை..


#கற்றதும்_பெற்றதும்_ஏராளம்.


வீடு பெரிசா இருந்தாலும் மனசு சின்னதாக இருக்கும் இந்த உலகத்தில்..

வேலைக்கு போகும் அம்மாக்களின் குழந்தகளை எந்த வித எதிர்ப்பார்ப்புமின்றி தன் குழந்தைகள் போல பார்த்துக் கொண்ட வீட்டுக்கார மாமியின் #வாத்ஸல்யம்.


பாட்டியின் புடவைத் தலைப்பில் ஒளிந்திருந்த நாட்கள் போய்..

வாழ்க்கைப் பாடம் கற்றுத் தந்த பட்டணம் இது.. என் வாழ்வில் #பட்டறையாய்..


பரீட்சையில் மார்க்கு வரதுக்கு முன்னாடி..ராமாஞ்சனேயர் கோவிலும்..ஸ்டேஷன் ரோட் பிள்ளையார் கோயில் என வளர்ந்தது #பக்தி.


மாம்பலம் போவது என்றால் #Manhattan போன ஸ்ரீதேவி மாதிரி..ட்ரெயின் ஏறி..foot board நின்று காற்று வாங்கிய #சந்தோஷம்.


சங்கீதம் என்பது ஸ்வரங்களின் ஜாலம் மட்டுமல்ல...அது ஒரு #தியானம்

என்று சொல்லிக் கொடுத்த வீணை மாமி.


வடாம்களுக்கு காவலோடு..விடலை அக்கா அண்ணாக்களுக்கு.. மெசெஞ்சர்..ஸ்பை..எல்லாமே எங்க வாண்டு க்ரூப்பு தான்.

அந்தக் கால 'அஞ்சலி' படம் போல எங்கள் அட்டகாசமான கூட்டம்.


நட்பு வட்டம்..நட்பு சங்கிலி..துவங்கியது இங்கே தான்.


Restaurants அப்போதெல்லாம் ஒன்று கூடகிடையாது..swiggy க்கு எதிர்பாக்காது ரெஸ்ட்டே எடுக்காமல் ..

அம்மாக்களின் கைமணத்திலும் காரியங்கள் கற்றபடி #வளர்ப்பு.


'வெற்றி'யின் வாசலில் அடிக்கடி நின்றதாலோ என்னவோ..

MIT..மண்ணைக் கூட மிதிச்சதில்லை.


முக்கியமாக..

வாழ்க்கையில் கடல் தண்ணீர் தவிர..உப்பு தண்ணீர் என்பது பைப்பிலும் வரும் என்ற உண்மை புரிய ..

ஒரு குடம் நல்ல தண்ணிக்கு...நடையாய் நடந்தது...தண்ணீர் சேமிப்புக்கு வித்தானது..


கிரோம்பேட்டை ..குறும்புடன் கூடிய கதம்ப வன வாச எண்ணங்களுடன் இன்றும் மனசில் .


எத்தனை வரவேற்புகள், எத்தனை வழியனுப்பதல்..கண்ட இந்த எங்க குடும்பத்து ஸ்டேஷன் இந்த கிரோம்பேட்டை ஸ்டேஷன்.


என் வாழ்க்கைப் பயணமும் தடம் புரளாமல்  சில நேரம் கூட்ஸ் வண்டி போலவும், சில நேரம் தடக் தடக் பயணமாக இருந்தாலும் இலக்கை அடைந்தே தீரணும்னு திடம் தந்த புடம் போட்ட இடம்.


புலம்பலில்லை..பொழுது போனதே தெரிந்ததில்லை.


க்ரோம் லெதர் கம்பெனிகள் இருந்ததால்  இந்தப் பெயர் வந்தது என்றால்..அவர்கள் தள்ளி விட்ட கழிவு நீர் உடலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தியது ஒரு காலத்தில் என்பது ஒரு வருத்தமே..இப்போது இல்லை என்று நினைக்கிறேன்.


கிரோம்பேட்டை க்கு #கும்மி அடித்து ஒரு #குறவஞ்சி பாடிட ஆசையும் தோணுது..

மன்னிப்பா..

 மன்னிப்பா..

(ஒரு ஜாலி போஸ்ட்)


மன்னிப்பா..என் அகராதியில.. இவங்களுக்கு கிடையவே கிடையாது.


1. உனக்கென்னப்பா ..housewife ..நீ எப்ப வேணாசமைக்கலாம்,சாப்பிடலாம்.தூங்கலாம், ஃபேஸ்புக்ல குடியிருக்கலாம், watsapp ல் வாடகையே இல்லாமல் இருக்கலாம் எனும்போது


2. அதே முன்கூறியவர் அப்பப்பா..எப்படித்தான் எல்லா நேரமும் வீட்டில இருக்கீங்களோ..எனக்கு ஒரு நாள் தள்றதே பெரிய பாடா இருக்கு எனும்போது..


3. நாம் செய்ததை எல்லாம் மூக்கைப் பிடிக்க சாப்பிட்டுவிட்டு , அந்த பக்கத்து வீட்டு மாமி தந்த புளிக்கொழம்பு ஒரு ஸ்பூன் விடேன்னு சொல்லும்போது..


4. aunty நு எப்போதும் கூப்பிட்டு ஓடி வரும் அபார்ட்மென்ட் குட்டி, பாட்டினு திடீர்னு  கூப்பிடும். அவள் அம்மா நமுட்டுச் சிரிப்பு சிரித்தபடி ' சாரிப்பா..நீங்க இந்த கண்ணாடில அசப்பில எங்க மாமியார் மாதிரியே இருக்கீங்க' சொல்லியபடி பின்பக்கம் இருக்கும் தோழிக்கு வெற்றிச் சின்னம் காட்டும்போது..


5. நல்ல தைப்பார் துணி எல்லாம் என்று தோழியை நம் ஆஸ்தான டைலருக்கு அறிமுகப்படுத்த..அவர் அவளுக்கு மட்டும் டிஸ்கவுண்ட் கொடுக்கும்போது..


6.நான் தான் எப்பவும் உங்க வீட்டுக்கு வரேன்.நீங்க ஒரு தடவை கூட வரதே இல்லைனு சொன்னதை நம்பிப் போனால்..டீவியில் கதறி அலறும் சீரியலோடு ஐக்கியமாகி..நீங்க பார்க்கறது இல்ல இந்த சீரியல்னு ஒரு கேள்வி கேட்பாங்க பாருங்க அவர்களை....


7. நம்ம கல்யாண ஃபோட்டோவை பார்த்துட்டு ' எப்படி இருந்த நீங்க ..இப்படி ஆகிட்டீங்கனு' மனசை பீஸ் பீஸா ஆக்குபவரை..

இந்த சின்ன மனசை பீஸ் பீஸாக்க எத்தனையோ பேர் காத்திருக்காங்க..

but going strong as always.

உங்களோடதையும் பகிருங்களேன்..

Live the present

 live the present


வெளியூரிலிருந்து வந்த வூட்டுக்காரர் டமால்னு ஒரு வெடிகுண்டு போட்டார்.


ஆட்டோக்காரருக்கு இன்னிக்கு இரண்டாயிரம் ரூபாய் கொடுத்தேன்.


' ஐயோ ராசா..மெளனராகம் கார்த்திக் ஸ்டைலில் Mr. ராமசாமி..Mr.ராமசாமினு முள்ளங்கி பத்தை மாதிரி இரண்டாயிரமானு நானு துரத்த..என் BP high ஆகிட்டு சொல்றேன் இருனு ஆரம்பிச்சார்.


வழக்கம்போல ட்ரெயின் லேட்டா வர ஆட்டோ தேடிய வேளையில் எல்லாரும் சகட்டு மேனிக்கு விலை ஏத்த ..ஒரு முஸ்லீம் ஆட்டோக்காரர் ( இங்கே அவர் மதம் நமக்கு தேவையில்லை) 

'சார் வாங்க இருனூற்றைம்பது கொடுங்க போதும் என்றாராம். இவரும் ஏற..வழியெல்லாம் ஒரே டென்சனாய் அவர் ஓட்ட..தானே என்ன தோன்றியதோ இவரிடம் புலம்ப் ஆரம்பித்தாராம்.


 ' என் மனைவியை இப்போ டெலிவரிக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கேன் . மூவாயிரம் காலைல பத்து மணிக்குள் க்ட்டணும் . சிசேரியன் செய்யணுமாம். என்கிட்ட காசு இல்ல சார். சொந்த பந்தம் நட்பு எல்லார்க்கிட்டயும் கேட்டேன் ..கை விரிச்சுட்டாங்க..இன்னிக்கு ராத்திரி பூரா ஓட்டினா எனக்கு எப்படியும் காசு கிடைச்சுடும். அதுக்காக அடாவடியா காசு கேட்க மாட்டேன். 

ஒரு தகப்பன் , கணவனுக்குரிய பதட்டத்துடன் அவர் பேசிக் கொண்டே வந்திருக்கார்.


வீடு வந்தாச்சு. இவர் எடுத்துத் தந்தார்..இரண்டாயிரம் ரூபாய். 'சார்..என்கிட்ட சேஞ்ச் இல்லையே..என்று அவர் சொல்ல..சீக்கிரம் மீதியை சம்பாதிச்சுட்டு ஹாஸ்பிடல் போங்க என்று கூறிய இவர் 

..' பொண்ணு பிறந்தால் 'சோனா'(sona) நு வைங்க என்று வாழ்த்திட்டு வந்திருக்கார்.

sona  என்றால் ஹிந்தியில் தங்கம்..


தன்னுடைய அம்மாவின் திதிக்காக வந்தவர் ..தன்னலமே இன்றி வாழ்ந்த அவர் அம்மாவுக்காக இதை விட வேறு என்ன செய்ய முடியும்?

அவர் அம்மா..என் மாமியாரின் பெயர் தங்கமணி.


எப்பவும் ஃபோட்டோவில் இருந்தபடி சிரித்துக் கொண்டு இருக்கும் என் அம்மா..அன்பை அள்ளித் தந்த என் மாமிியார் இருவருடனும்  அடிக்கடி பேசுவேன்.


நேற்று கூட கேட்டேன்..' தங்கமணி..நீ நாளைக்கு வருவியே..உன்னை எப்படி நான் அடையாளம் கண்டு பிடிக்கிறது ' என்று.

அவள் ..எப்போதும்போல் அவள் பாணியில் காட்டி விட்டாள் போலிருக்கு.


'ஏம்ம்ப்பா..ஃபோன் நம்பர் வாங்கிண்டேளா'னு நான் கேட்டேன்.

' எதுக்கு ..உனக்கு செக் பண்ணணுமா ' என்றார்.

இல்லை இல்லை...அங்கே 'சோனா'  வா..இல்ல 'சோனு' வானு தெரிஞ்சிக்கத்தான் ' என்றேன்.


இது என்ன சொந்த சிந்து பாடவா இந்த்க தளம்னு கேட்க்கலாம்.


நம் ..மத்யமர் மனம்.. ' செய்த தர்மம் தலை காக்கும் ' அது future tense


 தக்க சமயத்தில் உயிர் காக்கும் ..காக்கணும்னு ' என்பது present.


(ஆட்டோக்காரரே..நீங்க நல்லவரா இருக்கணும்..நல்லபடியா இருக்கணும்..

என் அம்மாவும்( மாமியாரும்) இன்று உன் குடும்பத்தை வாழ்த்துவாள்.

வாட்ச்மேன் தாத்தா.

 #எளியமனிதர்கள்


என்னடா இது..இந்த மத்யமருக்கு வந்த சோதனைனு ..உங்க மைண்ட் வாய்ஸ் வசனம் பேசினாலும் ப்ளீஸ் ..ப்ளீஸ் ..இவரை மட்டும் பற்றி கொஞ்சம் சொல்லிடறேன். 


வாட்ச்மேன் தாத்தா..


" அப்பா ..முதல்ல இந்த வீட்டை காலி பண்ணலாம்ப்பா..சொந்த வீடெல்லாம் வேண்டாம் . பழையபடி மார்க்கெட் ரோட் வாடகை வீட்டுக்கே போய்டலாம்னு ' ஒரே அழுகை அடம்..


80 களில் அத்வானத்தில் வீடு கட்டி, வெளியே போனால் வீடு வந்து சேரவே யுகமாகும்.நாலரை மணிக்கு விட்ட ஸ்கூலிலிருந்து வீட்டுக்கு வர ஆறரை மணியாகும். பஸ் என்பது இரண்டு மணி நேரத்துக்கு ஒண்ணு .அதுவும் கூட்டம் பிதுங்கி வழியும்.


வீட்டு கிட்ட வர வர கிலி பிடிக்கும். லாந்தரை விட டிம்மா எரியும் பல்பு..அதைவிட தெரு முனையில் லுங்கியை மடிச்சு கட்டியபடி பீடி பிடித்துக் கொண்டு போற வருபவர்களை ஆபாசமாகப் பேசும் ஒரு ரெளடி கும்பல்..


நடுங்கியபடி வீட்டு வாசல் வந்தால் ..மல்லாந்து மப்பில் படுத்துக் கிடக்கும் குடிமகன்கள். காலை ஜாக்கிரதையா வெச்சு போய் அந்த மூங்கில் கேட்டை திறந்து உள்ளே ஓடி க்ரில் கேட்டை தாண்டி போய் பூட்டு போட்டு உள்ளே போகும்வரை லப்..டப்..சத்தம் அதிகமாகி உயிரே போய் வெளியே வரும்.


அப்பா அம்மா ஆபீஸிலிருந்து வரும் வரை நடுக்கம் தான்.

இதுதான் என் அழுகைக்கு காரணமும் கூட.


அப்பாவின் ஃப்ரண்ட் என் பயத்தை கேள்விப்பட்டு ' சார் நம்ம கிட்ட ஒரு ஆள் இருக்கார்..அவரை வாட்ச்மேனா போடுங்க. அவரு ரொம்ப நம்பகமான ஆளு சார்னு சொல்லி அவரைக்் கூட்டி வந்தார்.


கருகருனு எலும்பு மட்டும் தெரியும் உடம்பு.குச்சி ஒண்ணு ஊன்றியபடி.

'என்ன இவரானு 'நாங்க கேட்க..'நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க..இவரு எல்லாம் பார்த்துப்பார் என்றார்.


ஃப்ரண்ட் பேச்சை தட்ட முடியல அப்பாவுக்கும்.


என் வீட்டுத் திண்ணைதான் அவருக்கு ஜாகை.குச்சியோட எப்பவும் இருப்பார்.


 தெரு முனையில் நான் வரும் நேரம் வந்து நின்று என்னைக் கூட்டி வருவார். ரெளடி கும்பல் எல்லாரும் ' ஏய் பெர்சு.இன்னா பெரிய பயில்வானா நீ ' நு கேட்டால் ஒரு முரை விட்டுட்டு நீ வாம்மா..என்று Z security மாதிரி எனக்கு காவலாக வருவார்


வீட்டுக்குள் என்னை விட்டு விட்டு ..'நீ பூட்டிகோ தாயி..நா இங்கன தான் குந்திகினுகிறேனு ' திண்ணையிலேயே உட்கார்ந்திருப்பார்.


அவரைப் பார்த்ததும் தள்ளாடி வந்தவனெல்லாம் தண்ணி தெளிச்ச மாதிரி நகர்ந்து வேறு பிளாட்டில் போய் விழுந்து கிடப்பான். ( ஒரு காலத்தில் அவரு பேட்டை தாதாவாம்..அப்படி எல்லாம் நான் சினிமா கதை சொல்ல மாட்டேன்)


மோர் சாதம் மட்டும் இரவு சாப்பிடுவார். கை தான் தலகாணி..என் வீட்டு வராண்டாவிலே படுத்து தூங்குவார். காலையில் பூ பறிச்சு கொடுத்து அம்மா கொடுக்கும் டீயும் பிஸ்கட்டும் சாப்பிட்டு  போய்டுவார்.


தாத்தா..தாத்தானு எல்லாருக்கும் அவரிடம் ஒரு பிரியம்.


அப்புறம் எதிர்த்த வீட்டு சுபாவுக்கும் அவர் தான் காவல். பக்கத்து வீட்டு அம்மாவும் சொல்லிட்டு போவாள்.' புள்ளங்க உள்ள இருக்கு ..கொஞ்சம் பார்த்துக்கோங்க தாத்தா' என்று


பெரிசா ஒண்ணும் சம்பளமெல்லாம் இல்லை..ஆனால் அவரோட நேரம் தவறாமை, பொறுப்பு , அவர் எங்களை பத்திரமாக பார்த்துக் கொண்ட விதம்.. 

இன்னும் நாங்கள் அவரைப் பற்றி பேசக் காரணமாக இருக்கு.

காலனி வளர..அவருக்கும்் வயசு ரொம்ப ஏறிபோக ..முடிவும் வந்தது அவருக்கு. 


நாம் கும்பிடும் தெய்வங்கள் இப்படி மனித உருவில் நம்மை காக்க கண்டிப்பாக வருகிறார்கள் என்பதில் அதீத நம்பிக்கை எனக்கு.


என்னைப் பொறுத்தவரை அவர் என்னையும் எங்கள் புதுசாய் முளைத்த காலனியில் உள்ள பெண் குழந்தைகளைக்  காத்த ஒரு மதுரை வீரனும், கருப்பசாமியும் தான்.

Sunday, September 20, 2020

நன்றி சொல்லவே

 நன்றி சொல்லவே'..


"பெட்டிஷன் பெரிய நாயகியா' இருக்கக் கூடாதென்று..

பிரகாரத்துக்குள் நுழையும் முன் எடுத்த பிரதிக்ஞை எல்லாம் பொடிப் பொடியாக..

 பிரார்த்தனைகள் போட்டியில் நிற்க..

 

நமஸ்கரித்த வேளையில்..

நினைவில் வந்தது..


அடடா..

நன்றி சொல்ல மறந்தேனே..நீ

நீ நடத்திக் கொடுத்த நல்லதற்கெல்லாமென்று..


'நல்ல பக்தை தான்  போ' ...நீ

நிந்திக்க மாட்டாய் ..நம்பிக்கையுண்டு..


சன்னதி தேடி ஓடினேன்..இதெல்லாம்

சகஜம் என்ற தோரணையில்

சிரித்தபடி நீ ..

சுண்டல் 2 ம் நாள்..

 மாமி சுண்டல் -2


பிக் பாஸ் day 2 மாதிரி இன்னிக்கு மாமி சுண்டல் 2 ம் நாள்..

அகம் டீவியெல்லாம் இங்கே இல்ல..அக்கம் பக்கம் எல்லாம் ஒண்ணா ஒரே frame க்குள் இந்த ஒன்பது நாளும்.

சீதாப்பழ பாயசம் ..புடவை நாளைக்கு என்ன கலர்னு எல்லாரும் பேசறத்துக்கு complan தெம்பு தர..

பச்சைக்கு ஒரு சிலர் பச்சை கொடி..மஞ்சள் தான் மங்கலம் ..இன்னொரு க்ரூப்..ரெட்டுக்கு TRP ரொம்ப கம்மி..ஒரு வழியா தலைய பிச்சுண்டு ப்ளூனு முடிவு..கூட்டம் இங்கே கலைந்து...watsapp ல் மீண்டும் கூடியது..

என் கிட்ட இருக்கிற ப்ளூ..கொஞ்சம் பழசு..ear ring என்கிட்ட quillling wala தான் இருக்கு..என்கிட்ட மயில் கழுத்து ப்ளூ தான் இருக்கு..இந்த புடவையில் இப்போதான் வாட்ஸப் profile ..no way..

ஒரே பிரச்சினை..

கடைசியில் முடிவு செய்தபடி..எல்லாரும் அவரவர்களுக்கு பிடித்த கலர் புடவையில் ப்ரகாசமாக ..பிரசன்னம்..

என்ன ஒத்துமை..ஒருத்தர் கூட ப்ளூ கட்டிக்கல..

சஹஸ்ரநாமம் படிக்க ஆரம்பிச்சாச்சு. எப்பவுமே yummy பிரசாதம் கொண்டு வரும் மாமி , டப்பாவோடு உள்ளே நுழைய ..எல்லாரும் அந்த டப்பாக்குள் என்ன இருக்கும்னு ஒரு question mark லுக் விட்டபடி தொடர்ந்தோம்..முடித்தோம்..ஆரத்தி ஆச்சு..

டப்பா திறந்தா..

நூல்கண்டா மெல்லிசா ஃபேணி..அது மேல அப்படியே சக்கரை பொடி தூவி..

இங்கே தான் மாமியின் கை வண்ணம்..

 எப்போதும்போல் அதோட ஒரு ஙேனு ஒரு சக்கரை கம்மி பால் இல்லாமல்..சூப்பரா ரோஸ் மில்க்கோடு.

( உங்க மெனுவை மாத்தி பண்ணி பாருங்கோ லேடீஸ்...மழையா பாராட்டு கொட்டும்..நான் guarantee)

ஒரு பால் ஃபேணி..

ஆஹா..பேஷ் பேஷ் ரொம்ப நன்னாருக்குனு உறிஞ்சு குடித்த வண்ணம்.

மீண்டும் ஆரம்பித்தோம் நேற்று விட்ட இடத்திலிருந்து புடவை கலர் கதை..


நவராத்திரி... நளபாகத்தோடு ...

Happy navarathri

Sunday, September 13, 2020

சதாப்தி

 வாட்ஸப்பிருக்க..வாய்ஸ் கால் எதற்கு?


சதாப்தியில் செட்டில் ஆனதுமே..

சகலருக்கும் சகட்டு மேனிக்கு ஞானம் வரும்.

ஹலோ ஹலோக்கள் லோ லோ என்று முழங்க


லோக க்ஷேமத்தில் தொடங்கி..

லோக்கல் பாலிடிக்ஸ் வரை..


பக்கத்து சீட்டு மாமா..மாமிக்கு போட்ட ஃபோன்..( ஒட்டு கேக்கலைப்பா..அவர் பேசினது ஊருக்கே கேட்டது)😀


ஒண்ணு கேட்க மறந்துட்டேனு ஆரம்பிச்சவர் தான்..


ஒருலிட்டர் பாக்கெட்டா?

இரண்டு அரை லிட்டரா.? 


ஃப்ரீஸரில் வைக்கணுமா..

Chill tray லயா?..அந்த


a2b பக்கோடா..

அந்தரா..பாஹரா..?


கல்யாண முறுக்கு

கடக்குனு போய்டாதா..?


வலது கரம் வந்தால்

வார்க்கணுமா தோசை?


அரிசிக்கு ஜலம் எத்தனை?

பருப்பும் வைக்கணுமா?..


அடுக்கிக் கொண்டே போக..

ஆவேசக் குரலில் மாமி..

'அட ராமா..

நல்லி கடையிலே..

நாலாயிரம். புடவை குவிய்லில்

நல்லதா ஒண்ணு தேடிண்டு இருக்கேன்

நிம்மதியா ஷாப்பிங் பண்ண விட மாட்டீரோ..

நானே வந்து எல்லாம் பார்த்துக்கறேன் என்று இணைப்பை துண்டிக்க..


'அவள் அப்படித்தான்" என்று ஒரு ஸ்மைலில் சொல்லி..அசடு வழிய..


அடுத்தடுத்து..செல் ஃபோன் மணிகள் சிணுங்க..

ஆறு மணி நேரம்..அட்டகாச entertainment எனக்கு.


வண்டியில் ஏறினதும் கவச குண்டலமான hearing aid ஐ switch off செய்துவிட்டு..

அப்பா..அமைதியாய்..ஜன்னலோர சீட்டில் 

தாண்டிச் செல்லும் மரம் செடியை ரசித்தபடி..பழைய நினைவுகளை அசை போட்டபடி..

Sunday, September 6, 2020

என் ஜீவன் நீதானே- கதை

 #படம்_பார்த்து_கதை


என் ஜீவன் நீதானே

"ஏங்க..அந்த நியூஸ் பேப்பரை நொட்டுறு பண்ணது போதும்.மடமடனு குளிச்சு டிஃபன் சாப்பிட்டு கிளம்பலாம் .


 மார்க்கெட்டில் போய் ஃப்ரஷ்ஷா காய் வாங்கிட்டு, அப்படியே அரிசி மண்டில சாமான் லிஸ்ட் கொடுக்கணும். பாங்க் வேற நாலு நாள் இருக்காதாம் . கொஞ்சம் பணம்  எடுக்கணும். ஒரேடியா முடிச்சுட்டு வந்துடலாம்' கட்டளை பறந்தது காவேரி அம்மாளிடமிருந்து.


"ஏம்மா..உன்னோட வேடிக்கை பார்த்துண்டு வரதுக்கு ..நீ ஒரு ஒரு காயும் பழமும் வாங்கறதுக்குள்ள காலெல்லாம் வலிக்க ஆரம்பிச்சுடுமே..


நான் பாட்டு அக்கடானு டீவி பார்த்துண்டு இருப்பேனே' ..சுந்தரம் சொன்னதை கண்டுக்காமல் ஜருகண்டியில் இறங்கினாள் காவேரி.


சுந்தரம் ஒரு துணிக் கடையில் வேலை பார்த்தார். காலையில் போனால்..வீடு வர பாதி ராத்திரி ஆகிடும். பசங்க படிப்பு, ஸ்கூல், வீடு ,உள் வேலை, வெளி வேலை எல்லாம் காவேரி தான். பையன்கள் ரெண்டு பேரும் நல்ல வேலையில் வந்த பிறகு ..வயதும் ஆகி விட்டதால் கடை வேலைக்கு போவதை நிறுத்தி இரண்டு வருடமாச்சு.


தினமும் இதே கூத்துதான். தினமும் குறைந்தது 2 மணி நேரம் வெளியே இழுத்துச் சென்று விடுவாள். 


அன்றும் அப்படித்தான்..வெளியே போய் வந்து..சாப்பிட்டு கொஞ்சம் கண்ணசர, ஏதோ முனகல் சத்தம் அவரை எழுப்பியது. காவேரி தான். நெஞ்சைப் பிடித்துக் கொண்டு தவித்துக் கொண்டிருந்தாள்.


மின்னல் வேகத்தில் எல்லாம் நடந்து முடிந்தது. "காவேரி.".. "காவேரி"..அவர் குரல் காதில் விழவில்லை அவளுக்கு...கண் மூடினாள். 

சுந்தரம் சுருண்டு போனார். தன் அறைக்குள்ளேயே முடங்கிப் போனார். விட்டத்தை் பார்த்தபடி..


" நாளையிலேர்ந்து காரியம் ஆரம்பிக்கணும். காய்கறி லிஸ்ட் எல்லாம் போட்டாச்சு..சாமான் ஒண்ணு விடாம ரெடி பண்ணி வெச்சுக்கணும்.." 

மருமகள்கள் பேச்சுக் குரல்..


ஏதோ மண்டையில் அடித்தாற்போல ஒரு உணர்வு. வேகமாக எழுந்து எப்போதும் எடுத்துப் போகும் பைகளை எடுத்தார்.

"கொடுங்கம்மா..எல்லாத்தையும் பார்த்து நான் வாங்கி வந்துடறேன்.."..


"மாமா..நீங்க?...மருமகள்கள் கேட்க..

" எனக்கு ஒவ்வொண்ணும் உன் மாமியார் சொல்லிக் கொடுத்திருக்காம்மா..நீங்க உள் வேலையை கவனிங்கோ..நான் போய்ட்டு வரேன்".

அவர்கள் எப்போது காய்கறி வாங்கும் பெருமாள் கடை முன் நின்றார்..


"நல்ல பிஞ்சா பார்த்து நானே பொறுக்கி எடுத்துக்கறேனேப்பா..'..காவேரியின் குரல் அங்கே அவருக்கு மட்டும் கேட்டது..


(வாழ்க்கையில் நாம் சந்திப்பவர்கள் தானே..நம் கதைகளுக்கும் கருவாகிறார்கள்...சென்ற வருடம் எழுதியது)


நட்பூஸ்..நீங்களும் எழுதுங்களேன்