Wednesday, September 23, 2020

நிலா முற்றம்- மந்திரக் கதை

 மந்திரக்கதை


#மாய(யை) உலகமடா..


ஜீபூம்பா புரி..ஒரு மாயாபுரி என்றே சொல்லலாம்.


ஆனந்தமும் ஆரவாரமும் மகிழ்ச்சியும் பொங்கும் பூலோகத்தின் சொர்க்கபுரி.

அதற்கு காரணம்..

அந்த நாட்டின் மன்னன் ஜெய்சங்கர வர்மன் . அவன் பட்டத்து ராணி ஜமுனா தேவி.

மக்கள் நலனில் மட்டுமே நாட்டம் கொண்ட ஒரு அரசன். வளமை பெருகி வறுமை என்ற பெயரே தெரியாத மக்கள்.

 தம்பி உடையான் படைக்கு அஞ்சான். 

ஆம்..தம்பி முத்துராம வர்மன் தளபதியாய் தோள் கொடுக்க..அரசாட்சி அமர்க்களமாக நடந்த பொற்காலம்.


ஜெய்சங்கர வர்மனின் ஒரே புதல்வன் விஜயவர்மன். ஆயகலைகள் கற்று..குருகுல வாசம் முடிந்து வந்தவனிடத்தில்  ராஜ்ஜியத்தின் ஆளுமை பொறுப்பை ஒப்படைக்கக்  காத்துக் கொண்டிருந்தார் தந்தை ஜெய்சங்கர வர்மன்.


அன்று..


 அரசவையில் ஆடல் பாடல் கேளிக்கையுடன் நவராத்திரி விழா மிகச் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது.

 

 மக்களும் மன்னர் குடும்பமும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த வேளை..

 நெஞ்சைப் பிடித்துக் கொண்டு தன் அரியணையிலிருந்து உருண்டு விழுந்தார் மகாராஜா..

 

 ' ஐயோ நம்ம ராஜாவுக்கு என்னாச்சு? நாடே பதறியது.

 

 அரசவை வைத்தியர் உடனே தன் சிகிச்சையை ஆரம்பித்தார். இரண்டு நாளாகியும் எந்த முன்னேற்றமும் இல்லை.

தளபதியும் ,தம்பியுமான முத்துராம வர்மன் எல்லாத் திசைகளிலிருந்தும் வைத்தியர்கள் வரவழைத்தான்.


 ஒருவராலும் அரசனின் வியாதியை குணமாக்கும் மருந்து புலப்படவில்லை.

மகாராணி என்ன செய்வது என்று அறியாது தவித்த வேளை , அரச வைத்தியர் வந்து வணங்கினார். 


 "மகாராணி..என் அறிவுக்கு எட்டின வரையில் ஒரே ஒரு மருந்து உள்ளது. ஆனால் அதைத் தேடுவதும் கொண்டு வருவதும் மிகக் கடினம்' என்று தயங்கித் தயங்கி சொன்னார்.

 

முத்துராம வர்மன் கொதித்தான்.."இந்த மாயாபுரியில் கிடைக்காத ஒன்று உண்டா?.அது என்ன மருந்து? எங்கே கிடைக்கும் என்று சொல்லுங்கள்..நானே கொண்டு வருகிறேன் " கர்ஜித்தான்.


" தளபதியாரே..நான் ஒரு முறை மருந்துகள் தேடி ஒரு காட்டுக்குச் சென்றேன். அங்கே ஒரு அதிசய மரம் கண்டேன்.அந்த மரத்தில் இலைகளே இல்லை.ஆனால் கிளை முழுவதும் பூக்களால் நிரம்பியிருந்தது.அந்தப் பூவிலிருந்து கிடைக்கும் சாறு தான் அரசன் உயிரைக் காப்பாற்றும்..அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. பதினாறு வயது காளை ஒருவனால் மட்டுமே அந்தப் பூக்களை பறிக்க முடியும்..' 

அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே..ஓடோடி வந்தான் விஜய வர்மன்.


 "சித்தப்பா..நானே செல்கிறேன்..என் வயது இப்போது அதுதானே..உடனே புறப்படுகிறேன்..' அவன் கூற..தளபதியும் சித்தப்பாவுமான முத்துராம வர்மன்... "வேண்டாம் விஜயா..அந்தக் காட்டுக்குள் நீ போக நான் சம்மதிக்க மாட்டேன் ' என்று அவனைத் தடுக்க.."விடை கொடுங்கள் தாயே" என்று அன்னையிடம் ஆசி பெற்று/யார் சொல்லும் கேளாமல் .. கிளம்பினான் இளவரசன்.

 

அடர்ந்த காடு அது..எப்படிச் செல்வது என்று திகைத்து நின்ற வேளை..அங்கே பல விலங்குளின் ஒலிகள் அவனுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.


மனித வாசம் உணர்ந்து ஓடி வந்த மிருகமெல்லாம்..இந்த இளவரசனைப் பார்த்தும் மண்டியிட்டு வணங்கி..

 . ' விஜய வர்மரே..வணக்கம்..உங்களுக்கு என்ன உதவி வேண்டும் கேளுங்கள். இந்தக் காட்டை ஒரு ரம்மியமான சரணாலயம் போல் ஆக்கி , எந்த வித இடையூறும் இல்லாமல் எங்களைக் காக்கும் அரசருக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயார் ' என்று பணிந்து நின்றன.

 

 இளவரசன் ,அரசரின் உடல்நிலை பற்றி சொல்ல..' நாங்கள் காட்டிக் கொடுக்கிறோம் அந்த மரங்களை'.. பணிந்து வணங்கி வழிகாட்டின.

 

 பூக்கள் அடர்ந்த மந்திர மரங்கள்...அதில் ஒரே ஒரு மரத்தில் மட்டும் ஒரு இலை கூட இல்லை." 

 

"என்னை பறித்துக் கொள் இளவரசே..என்னைப் பறித்துக் கொண்டு போ இளவரசே..எங்கள் மன்னனுக்கு மருந்தாக நாங்கள் உபயோகமாக இருப்போம் எனில் எங்கள் எல்லாரையும் பறித்து எடுத்துப் போங்கள் ' ஒவ்வொரு பூவும் தலையாட்டி பேசியது.


 ஒரே ஒரு பூ மட்டும்..சோகமாக எதுவும் பேசாமல் இருந்தது.

 

 " அழகிய பூவே..உன்னை விட்டு விடுகிறேன்..ஏன் இத்தனை சோகம் உனக்கு' இளவரசன் கேட்க..

 

 " ஐயோ..இளவரசே....எப்படிச் சொல்வேன்..நீங்கள் சித்தப்பா என்று ஆசையுடன் அன்பு காட்டும் முத்துராம வர்மன்..அரசரைக் கொல்லத் திட்டமிட்டு ,அவர் உணவில் தினமும் விஷம் வைத்து வந்தான். அரச வைத்தியரிடமே அதற்கு மருந்து உள்ளது.

 ஆனால் அவரும்  உடந்தை இந்த திட்டத்தில்...உங்களையும் இந்தக் காட்டுக்கு அனுப்பி விட்டால் ,நீங்கள் திரும்பியே போக மாட்டீர்கள்.. அரியணையைக் கைப்பற்ற அவர் போட்ட திட்டம் இது.. விரைந்து சென்று தந்தையைக் காப்பாற்றுங்கள். அரசரால் தான் நாங்கள் அனைவரும் இங்கே நிம்மதியாக வாழ்கிறோம்'..

 மந்திர மரப் பூ சொல்லிக் கொண்டே போக..

 காட்டு விலங்குகள் நாட்டுக்கு வழி காட்ட..

 வந்து சேர்ந்த இளவரசனைப் பார்த்து அதிர்ந்தான் முத்துராம வர்மன்.

 

 அவன் சூழ்ச்சி முறியடிக்கப்பட்டது... அரசர் பூரண உடல் நலம் பெற்ற்றார்..முடி சூடினான் விஜயவர்மன். 

 

 "முத்துராம வர்மன் ஒழிக".."முத்துராம வர்மன் ஒழிக" என்ற கோஷம் போடும் மக்கள் கூட்டத்தின் நடுவில் .

 "ஜீபூம்பாபுரி ..ஜீபூம்பாபுரி..சித்தப்பா கெட்டவன்..சித்தப்பா கெட்டவன்'..

மந்திரக்கதை எழுத்தாளர்  அகிலனும் ஆழ்ந்த உறக்கத்தில் அவன் கனவில் .. ஊர் மக்களுடன் கோஷம் எழுப்ப..

எதுவும் புரியாமல் திகைத்தாள் அவன் மனைவி ஸரஸ்வதி.

 

அகிலா ராமசாமி

எண்; 1892




No comments: