Monday, September 21, 2020

வாட்ச்மேன் தாத்தா.

 #எளியமனிதர்கள்


என்னடா இது..இந்த மத்யமருக்கு வந்த சோதனைனு ..உங்க மைண்ட் வாய்ஸ் வசனம் பேசினாலும் ப்ளீஸ் ..ப்ளீஸ் ..இவரை மட்டும் பற்றி கொஞ்சம் சொல்லிடறேன். 


வாட்ச்மேன் தாத்தா..


" அப்பா ..முதல்ல இந்த வீட்டை காலி பண்ணலாம்ப்பா..சொந்த வீடெல்லாம் வேண்டாம் . பழையபடி மார்க்கெட் ரோட் வாடகை வீட்டுக்கே போய்டலாம்னு ' ஒரே அழுகை அடம்..


80 களில் அத்வானத்தில் வீடு கட்டி, வெளியே போனால் வீடு வந்து சேரவே யுகமாகும்.நாலரை மணிக்கு விட்ட ஸ்கூலிலிருந்து வீட்டுக்கு வர ஆறரை மணியாகும். பஸ் என்பது இரண்டு மணி நேரத்துக்கு ஒண்ணு .அதுவும் கூட்டம் பிதுங்கி வழியும்.


வீட்டு கிட்ட வர வர கிலி பிடிக்கும். லாந்தரை விட டிம்மா எரியும் பல்பு..அதைவிட தெரு முனையில் லுங்கியை மடிச்சு கட்டியபடி பீடி பிடித்துக் கொண்டு போற வருபவர்களை ஆபாசமாகப் பேசும் ஒரு ரெளடி கும்பல்..


நடுங்கியபடி வீட்டு வாசல் வந்தால் ..மல்லாந்து மப்பில் படுத்துக் கிடக்கும் குடிமகன்கள். காலை ஜாக்கிரதையா வெச்சு போய் அந்த மூங்கில் கேட்டை திறந்து உள்ளே ஓடி க்ரில் கேட்டை தாண்டி போய் பூட்டு போட்டு உள்ளே போகும்வரை லப்..டப்..சத்தம் அதிகமாகி உயிரே போய் வெளியே வரும்.


அப்பா அம்மா ஆபீஸிலிருந்து வரும் வரை நடுக்கம் தான்.

இதுதான் என் அழுகைக்கு காரணமும் கூட.


அப்பாவின் ஃப்ரண்ட் என் பயத்தை கேள்விப்பட்டு ' சார் நம்ம கிட்ட ஒரு ஆள் இருக்கார்..அவரை வாட்ச்மேனா போடுங்க. அவரு ரொம்ப நம்பகமான ஆளு சார்னு சொல்லி அவரைக்் கூட்டி வந்தார்.


கருகருனு எலும்பு மட்டும் தெரியும் உடம்பு.குச்சி ஒண்ணு ஊன்றியபடி.

'என்ன இவரானு 'நாங்க கேட்க..'நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க..இவரு எல்லாம் பார்த்துப்பார் என்றார்.


ஃப்ரண்ட் பேச்சை தட்ட முடியல அப்பாவுக்கும்.


என் வீட்டுத் திண்ணைதான் அவருக்கு ஜாகை.குச்சியோட எப்பவும் இருப்பார்.


 தெரு முனையில் நான் வரும் நேரம் வந்து நின்று என்னைக் கூட்டி வருவார். ரெளடி கும்பல் எல்லாரும் ' ஏய் பெர்சு.இன்னா பெரிய பயில்வானா நீ ' நு கேட்டால் ஒரு முரை விட்டுட்டு நீ வாம்மா..என்று Z security மாதிரி எனக்கு காவலாக வருவார்


வீட்டுக்குள் என்னை விட்டு விட்டு ..'நீ பூட்டிகோ தாயி..நா இங்கன தான் குந்திகினுகிறேனு ' திண்ணையிலேயே உட்கார்ந்திருப்பார்.


அவரைப் பார்த்ததும் தள்ளாடி வந்தவனெல்லாம் தண்ணி தெளிச்ச மாதிரி நகர்ந்து வேறு பிளாட்டில் போய் விழுந்து கிடப்பான். ( ஒரு காலத்தில் அவரு பேட்டை தாதாவாம்..அப்படி எல்லாம் நான் சினிமா கதை சொல்ல மாட்டேன்)


மோர் சாதம் மட்டும் இரவு சாப்பிடுவார். கை தான் தலகாணி..என் வீட்டு வராண்டாவிலே படுத்து தூங்குவார். காலையில் பூ பறிச்சு கொடுத்து அம்மா கொடுக்கும் டீயும் பிஸ்கட்டும் சாப்பிட்டு  போய்டுவார்.


தாத்தா..தாத்தானு எல்லாருக்கும் அவரிடம் ஒரு பிரியம்.


அப்புறம் எதிர்த்த வீட்டு சுபாவுக்கும் அவர் தான் காவல். பக்கத்து வீட்டு அம்மாவும் சொல்லிட்டு போவாள்.' புள்ளங்க உள்ள இருக்கு ..கொஞ்சம் பார்த்துக்கோங்க தாத்தா' என்று


பெரிசா ஒண்ணும் சம்பளமெல்லாம் இல்லை..ஆனால் அவரோட நேரம் தவறாமை, பொறுப்பு , அவர் எங்களை பத்திரமாக பார்த்துக் கொண்ட விதம்.. 

இன்னும் நாங்கள் அவரைப் பற்றி பேசக் காரணமாக இருக்கு.

காலனி வளர..அவருக்கும்் வயசு ரொம்ப ஏறிபோக ..முடிவும் வந்தது அவருக்கு. 


நாம் கும்பிடும் தெய்வங்கள் இப்படி மனித உருவில் நம்மை காக்க கண்டிப்பாக வருகிறார்கள் என்பதில் அதீத நம்பிக்கை எனக்கு.


என்னைப் பொறுத்தவரை அவர் என்னையும் எங்கள் புதுசாய் முளைத்த காலனியில் உள்ள பெண் குழந்தைகளைக்  காத்த ஒரு மதுரை வீரனும், கருப்பசாமியும் தான்.

No comments: