Saturday, September 23, 2023

Ganapathi Bappa Moriya

 "தலை'யாய( போகிற) பிரச்சனை.


எங்க அபார்ட்மென்ட் புல்வெளியில் இப்போ ஒரு மாசமா ..ஒரே மாநாடு தான். வேற என்ன? பிள்ளையார் சதுர்த்திக்கு நடக்கப் போகும் cultural events க்கு செம்ம ப்ளான்.


குட்டீஸ்களின் குறும்பு..'aunty .நீங்க போடற ப்ளானை அங்கே போய் சொல்லிடட்டுமா " எந்று பயமுறுத்தியே.bribe ஆ chocolate வாங்கிண்டு போன சிட்டூஸ்.


இப்படியே போனால் தள்ளுவண்டி, சுண்டல் சுண்டல்னு வியாபாரம் ஆரம்பிக்கலாமோனு சில start up க்கள் யோசிக்க ஆரம்பிக்க..


மாஸ்டர் ப்ளான் மல்லிகாக்கள் எக்கச்சக்கம்.(சுருக்கமா..மா.பி.ம)


ஒரு குரூப்புக்கு பெரிய ப்ரச்சனை..இதிகாச காலத்திலேர்ந்து இருக்கிற அதே கூந்தல் பிரச்சனை.


:" என்னோடது step cut ஆச்சே ..இதுல எப்படி சவுரி முடி வைப்பேன்.

அட .அது ஒரு ப்ராப்ளமே இல்லை.. நிறைய pins நிறைய ஜெல் ( ஜொள் ..இல்லப்பா) போட்டு செட் பண்ணிடலாம்  .என் சுருள் முடிக்குள் எப்படி இந்த சவுரியை சொருகுவேன் பகவானே..ஆனை முகத்தோனை ஆஜராக வேண்ட..


அப்போதான் ஜோதியில ஐக்கியமாக வந்தவர்

i love your curly hair நு கடுப்பேத்த ஆரம்பிச்சா..


ஏய் ப்ளீஸ்ப்பா..i will do French plait. நு அடுத்தவ ஆலாபனை பிடிக்க  ஆரம்பிக்க...no...no..fish tail braid will suit you நு அவளை மீனம்மா ஆக்க முடிவோ(யோ) ட. ஒரு ஜால்ராஸ்.


"நான் பன் கொண்டை..அதை சுற்றி நல்லா கெட்டியா தொடுத்த மல்லி..that's my favourite நு அடுத்த பார்ட்டி..


ஐயோ.நல்ல வேளை ஞாபகப் படுத்தினே ப்பா..சவுரிக்கு பூ சுத்தணுமே..( நமக்கு காதுல பூ சுத்திதான் பழக்கம்னு மை.வா. வேற )


ஒரு ரவுண்டு கனகாம்பரம் ஒரு ரவுண்டு மல்லி will look stunning நு பழைய காலத்து ஐடியா எடுத்துக் கொடுத்த ஒரு மா.பி.மல்லிகா பெருமையா ஒரு ரவுண்டு பார்க்க..

she always comes out with an ethnic idea நு புகழ் மழையில் அவளை நனைய வைக்க...ஓகே..girls..i will supply flowers for all  நு சொல்லி அவள் பாலை வார்க்க.


.(பின்ன ..பண்டிகைன்னா..என்ன விலை தெரியுமா பூ...ஒரே ஒரு ஐஸ்..எப்படி நம்ம டெக்னிக்னு ..கண் ஜாடை பரிமாறல்கள😉்)


YouTube ல செக் பண்ணிட்டு , we will do it for each other நு முதல் நாள் எடுத்த முடிவு எப்போதும் போல மூலைக்கு தள்ளப்பட்டு ..

நம்ம  beautician பானுவை கூப்பிட்டுடலாம்நு ஏகபோக முடிவு.


பொட்டு, ஜிமிக்கி, வளையல் ..நெத்திச் சூட்டி வேணுமா வேண்டாமா..


அப்போது மூச்சிரைக்க ஓடி வந்த ..மா.பி.மல்லிகாவில் இன்னோருத்தி.."hey listen carefully .very important..எல்லாரும் ஒழுங்கா வகிடு எடுக்கணும். அதுக்கும் மார்க்க் உண்டாம். நம்ம ஜட்ஜ் பேசிண்டதா கேள்வி..ம்ம்ம்ம்..be careful. our team should not lose at any cost..


watsapp group ஒண்ணு " ஜடையும் ஜாடையும்" நு create பண்ணியாச்சு.

என்ன display pic வெக்கலாம்னு தீவிர ஆலோசனை..

சவுரியா, கொண்டையா, ஃபிஷ் டைலா..?


அதெல்லாம வேண்டாம்.. என்கிட்ட ஒரு cute ganesha pic இருக்கு..அதையே போடறேன்னு ஒரு சுப நாளில் create ஆன க்ருப்புக்கு வந்த முதல் msg..


' hey girls..இது மடிசார் புடவை competition. we forgot to discuss' .


பிள்ளையார் சதுர்த்தியில் ஆரம்பித்து பொங்கல் வரைக்கும் பண்டிகையோ பண்டிகைதான்.

இங்கே பதிவுகள் குவித்து பொழுதை பொன்னாக்கும் மத்யமர் அனைவர் வாழ்விலும் இன்பம் நிரம்பிய வழிய வாழ்த்துக்கள்.


Ganapathi Bappa Moriya

Friday, September 15, 2023

எழுதுகிறேன்_ஒரு_கடிதம்_சீஸன்_4

 #எழுதுகிறேன்_ஒரு_கடிதம்_சீஸன்_4


என் அன்பு பேரன் ராசாவுக்கு,


நல்லா இருக்கியாப்பா? உன் நினப்புத்தான் ராசா எப்பவும் இந்த அப்பத்தாவுக்கு.

 என்னடா இது...ஃபோன் தான் இருக்கே ..எதுக்கு அப்பத்தா கடிதாசி எழுதுதுனு உன் மனசில கேள்வி வருதா?

என்ன செய்ய ராசா?

நீ கொடுத்த ஃபோன் இப்போ என் கையில இல்ல . பசங்க படிப்பேல்லாம் மொபைல்ல தான் நடக்குது இங்கே. கிழவி உனக்கெதுக்கு இதுனு உன் சித்தப்பன் புடுங்கி அவன் பொண்ணுகிட்ட கொடுத்துட்டான்..

நீ வீடியோ வந்து பேசும்போதும் என்னய கூப்பிடறது இல்ல.." கிழவி உனக்கெங்கே காதுல விழப்போகுதுனு " சிரிக்கறானுக..


உங்கப்பா ..தலைச்சன்னாப் பொறந்த பாவத்துக்கு  இந்த குடும்பத்துக்கு ஓடா உழச்சு தேய்ஞ்சு..போயே சேர்ந்துட்டான். உன் ஆத்தா..என் ஆசை மருமவ ..அவளும் அவன் பின்னாடியே போய்ச் சேர்ந்தா.. இப்போ உன் இரண்டு சித்தப்பன் அத்தை நடுவில நீ மாட்டிக்கின..


அவங்களுக்கெல்லாம் உன் துபாய் பணந்தான் வேணும் ராசா..

உன் சித்தி அவ உறவுக்கார பொண்ணு ஒருத்த்திய உனக்கு பேசி முடிக்கணும்னு ஒத்தக் கால்ல நிக்குறா..உன் அத்தை..இருக்காளே..அவ பொண்ணை உனக்கு தரணும்னு நிதமும் சண்டை போடுறா..

எனக்கு அந்த பொண்ணுக உனக்கு செட்டாவாதுனு தோணுது ராசா..


முக்கியமா ஒரு விசயம் சொல்லத்தான் இந்தக் கடுதாசி..

நீ மாசா மாசம் அனுப்பற பணம் போதாதுனு உன் அம்மா நகைங்க மேல  ஒரு கண்  இவங்களுக்கு. 

நான் என்னா செஞ்சேன் தெரியுமா? அவங்களுக்கு தெரியாம நம்ம வீட்டு துளசி மாடத்துக்குள்ள ஒரு சொம்புல போட்டு அந்த நகைங்கள புதைச்சு வெச்சிருக்கேன்.  உன் ஆத்தா அவ மருமவளுக்கு கொடுக்கச் சொல்லி என் கிட்ட தந்துட்டு கண்ணை மூடிட்டா..

அது உன் சொத்து..உன் கையில ஒப்படைக்கணும்ப்பா..

இந்த வீடும் ரொம்ப ஓட்டையா இருக்காம்..இடிக்கணும்னு ஒரே புடியா இருக்கானுங்க.. அவங்க வீட்டை உடைச்சா..இந்த நகையும் அவனுங்க கையில கிடச்சுடும்.

உங்கிட்ட பணம் மட்டும் வாங்கிக்கிறது போதாதுனு....இந்த சொத்துல பங்கும் வேணாம்னு எழுதி வாங்கப் போறாகளாம்.


நான் கண்ணை மூடற வரைக்கும் இதெல்லாம் காப்பாத்துவேன். அதுக்கப்பறம் அவனுங்க ஓட்டல் கட்டப் போறாங்களா..இல்ல பத்து பதினஞ்சு வீடு கட்டி பிரிச்சுக்கப் போறாங்களோ தெரில..


இதெல்லாம் உனக்குத் தெரியணும் தம்பி. வெள்ளந்தியா இப்படியே எத்தனை நாளு இந்தக் குடும்பத்துக்குனு சம்பாரிப்ப?

இந்த அப்பத்தா கண்ணு மூடறதுக்குள்ள ஒரு வாட்டி வந்துட்டு போய்டு ராசா.


போன மாசம் ரொம்ப உடம்புக்கு முடியாம போச்சு..என்னை ஆஸுபத்திரியில் சேர்த்து விட்டுட்டு ஒருத்தனும் எட்டிக் கூட பாக்கல. அங்கே ஒரு நர்ஸு பொண்ணு தான் ' பாட்டி..பாட்டினு' என்னை நல்லா கவனிச்சுது.. பொண்ணும் நல்ல குணம்மா இருக்கு..அந்தப் பொண்ணை உனக்கு பேசலாமானு எனக்கு ஒரே ஆசை..


ஆனா..அன்னிக்கு  பக்கத்து வீட்டு சண்பகம் உன்னோட பேஸ் புக்காமே..அதுல ஒரு பொண்ணோட  நீ இருக்கற போட்டோ காட்டுச்சு..பொண்ணு லட்சணமா நல்லா இருக்குதுப்பா..அவளையே நீ கல்யாணம் கட்டிக்கிறயா?


உன் விருப்பம் என்னனு கடுதாசி போடு. 

இப்போ இருக்கும் தள்ளாமையில ஒவ்வொரு நாளு தள்ளுறதே பெரும் பாடா இருக்கு ராசா..


உன்ன ஒரே ஒரு முறை பார்த்துட்டு கண்ணை மூடணும்னு இந்த கிழவிக்கு ஆசை..

நம்ம குலதெய்வம் கோயிலுக்கு நேர்ந்துக்கிட்டு இருக்கேன்.

உன் உடம்பை நல்லா கவனிச்சுக்கப்பா. கெட்ட பழக்கம் ,கெட்ட சகவாசம் எதுலயும் மாட்டிக்கிடாதே..


நீ வர நாளுக்காக ஆசையா காத்திருக்கும்

 உன் அப்பத்தா..