Thursday, April 23, 2015

மேகத்தின் தாகம்




மேகத்தின் தாகம்

எத்தனை அழகு இந்த பூமி
எட்டி மேலிருந்து பார்க்கையிலே
ஏக்க மொன்று தோன்றுதே
எப்பொ கீழே போவொமென்றே

வானை எட்டும் தென்னையும்
வளைந்து ஓடும் ஆறுகளும்
வண்ணஞ் சிந்தும் வனங்களும்
வாசந் தரும் பூக்களும்

துள்ளி யோடும் மான்களும்
தாவித் திரியும் வண்டுகளும்
துவண்டே போகா கடலலையும்
தரையில் விரிந்த பசும்புல்லும்

தள்ளி நின்று பார்க்கையிலே
தவிப்பு மாகுதே மனமிங்கே
எட்டா உயரத்தில் நானிங்கே
தொட்டுப் பார்க்க ஏங்குவனே

அதனால் தானோ அலைகின்றேன்
அடைமழையாய்க் கண்ணீர் சிந்துகிறேன்
ஆண்டவன் அவனை வேண்டுவேனே
அடுத்த பிறவி உண்டு எனில்
மண்ணில் மைந்தனாய்ப் பிறப்பதற்கே
அதுவரை கொஞ்சம் பொறுத்திடுங்க
அன்னை இயற்கையை காத்திடுங்க..
அன்பாய் ஒரு வேண்டுகோளும்
அவனி மாந்தர்க்கு விடுப்பேனே..


Monday, April 13, 2015

கவிதை எனக்கு …..??????????????????

கவிதை எனக்கு …..??????????????????

கவிதை எனக்கு..என்ன வென்று
கணக்காய் தெரியா தெனக்கிங்கு....

கவிதை எனக்கு சுகமா?-
இதமே என்றும் தருவதனால்..

கவிதை எனக்கு சவாலா?
களமின்றி ஓர் யுத்தம் நடப்பதனால்

கவிதை எனக்கு தோழனா?
கைக் கோர்த்து  என்னோடு  நடப்பதனால்

கவிதை எனக்கு துணையா?
தனிமையில் தோளும் கொடுப்பதனால்..

கவிதை எனக்கு காதலா?
தன்னிச்சையாய் வந்து  ஒட்டியதால்.

கவிதை எனக்கு ஆறுதலா?
இறகாய் என்னை வருடுவதால்...

கவிதை எனக்கு தத்துவமா?
பிதற்றலாய்  என்றும் இருப்பதனால்..

கவிதை எனக்கு கனவா?
கைக்கு எட்டாமலே போய்விடுவதனால்.

உறவென்று  சொல்லி  உருகலையே
வரமென்று  சொல்லி வாட்டலையே
எனக்குள்ளே  இருக்கும்  ஒளியை
என்ன  உறவென்றே  அழைப்பேன்….?

அழகோ அழுகையோ
அருமையோ பெருமையோ
சோகமோ  கோபமோ
நிழலாய்  தொடரும்
 நினைவாய்        இனிக்கும்
சுகமது பலதரும்
 உள்ளத்தின் உள்ளிருந்து
உணர்வினிலே கலந்திங்கே
ஒன்றாய் என்னுள்ளே
ஒற்றிப் பிணைந்த உனை
உறவென்ன சொல்லி அழைப்பேன்?


விருத்தமுண்டு.. வெண்பா வுண்டு
வித விதமாய்  இலக்கண முண்டு
வித்தை  எனக்கு  எப்போ  வரும்..
வருத்த மொன்று என்று முண்டு


மருந்தளவும் அறியெனே
மரபு என்ன வென்று-
மறந்தும் எழுதலையே
முறையாய் ஒரு நற்கவிதை


எனக்கு நீ என்னவென்று
எண்ணி எண்ணி வியக்கிறேன்

.
வட்டத்துக்குள்  சிக்காத வண்ணக்கிளி
வாட்டம் போக்கும் சொந்தக் கிளி-
விட்டுப் போகாதே என்னை
வேண்டுதலும் இதுதானே..