Thursday, June 21, 2018

சந்தோஷம் பொங்குதே..

சந்தோஷம் பொங்குதே..

கண் விழிச்ச நேரம்..சூரியன் கொஞ்சம் இன்னிக்கு நான் ரெஸ்ட் எடுத்துவிட்டு லேட்டா வருவேன்னு பர்மிஷன் போட்டப்போது ஒரு சந்தோஷம்😃

 சமையல் experiment இன்னிக்கு மீண்டும் செய்து..மீந்த சப்பாத்தி மோர்க்கூழாகி ..fb ல ஃபோட்டோ போட்டதும் லைக்கும் கமெண்ட்டும் புது ரெசிபிகளும்  நட்பூஸ் ஷேர் செய்ய ஒரு சின்ன  சந்தோஷம்😃.

கோயில் கதவு மூடுமுன் ஓடிப் போய் தரிசனம் பண்ணி, கடைசி ஆளாய் ஒட்ட வழித்த புளியோதரை.. தொன்னையில் கிடைக்க ..பெரிய சந்தோஷம்😃.

பாங்க்கில் பேனா கடன் வாங்கியவர் மூடியுடன் திருப்பிக் கொடுத்தபோது ஒரு வெற்றி  சந்தோஷம்😃

'அம்மா..என் ஃப்ரண்ட்க்கு கஷ்டம். எல்லாம் சரியாகணும்னு நீயும்  வேண்டிக்கோ ' பெண் தொலைபேசியில் சொன்னபோது ,அவள் அக்கறையில் சந்தோஷம் 😃

ரோடெல்லாம் மெட்ரோவுக்காக தோண்டிப் போட..மாலுக்குள் காலார நடந்து . ஒவ்வொரு வளையமாய் சுற்றி வந்து, ஹோம் டெக்கார்ஸ்ஸில் புத்தரும்,பிள்ளையாரும், செடிகளும்..was 2995 now 999 என்ற price tag உடன் சுண்டியிழுக்க..வலையில் விழாமல் வெறுங்கையுடன் வெளியே வந்த சந்தோஷம் 😃.

எஸ்கலேட்டரில் ஏறப்  பயந்த நடுத்தர வயது பெண்ணை ,கைபிடித்து, தைரியம் சொல்லி அவள் முதல் எஸ்கலேட்டர் பயணத்திற்கு உதவியதுி (எவெரெஸ்ட்  ஏற உதவினது போல பெரிய சந்தோஷம் 😃

நாலு நாளாய் வேலை பெண்டு நிமிர்த்த..மத்யமர் தரிசனம் ஜன்னல் வழியா நடக்க.. ஒரு பதிவு போட்டு ஓடிடலாம் என்று எழுத உட்கார்ந்த  சந்தோஷம்😃.

முல்லையும் மல்லியும் உதிரியாய் வாங்கி ,கைப்பழக்கம் மறக்காது லாவகமாக தொடுத்தபோது வந்த சந்தோஷ வாசனை..
மனதில் வந்த சிந்தனை..
மத்யமரும் ..இப்படி கோர்த்த மாலையாய் எங்கும் மணம் வீசணும்னு மனமும் வேண்டிய போது ..ஒரு திருப்தியான  சந்தோஷம்😃.

எத்தனை மகிழ்ச்சி நம்மை சுற்றி.
உங்களோட இன்றைய சந்தோஷம் என்ன..கொஞ்சம் அசை போடுங்களேன்

Monday, June 18, 2018

Airport

airport...

வானூர்தி நிலையம்..
வழக்கமான ...
வழி அனுப்புதலும்..
வரவேற்புகளும்..

விடை கொடுக்க மனமின்றி..
விம்மும் நெஞ்சங்கள்..
'பத்திரமா போய் வா' க்கள்..
நினைவுகளை படம்பிடித்து
miss you என்ற
status update கள்..

கண்ணில் வழியும் நீரை..
யாரும் காணாமல் துடைக்கும்..
நட்பும்..
கைகாட்டி வழி அனுப்பி..
கண் எட்டும் வரை..
எம்பி எம்பி பார்த்து
எட்டாத் தூரம் செல்லும்வரை..
விட்டுச் செல்ல மனமில்லாத
பிணைப்புகள்..

வருவோரை வரவேற்க..
வருமே ஒரு கூட்டம்..

சொர்க்க வாசல் திறப்பு போல..
அர்த்த ராவிலும்..
அசராது காத்திருக்கும்..
அன்புள்ளங்கள்..

தள்ள முடியா trolley யுடன்..
தன் சொந்தங்களைத் தேடும் கண்கள்..
ஆனந்த கண்ணீரோடு..
அள்ளிக் கொண்டாட
ஆசையாய் ஓடிச் செல்லும்
அம்மா ..அப்பாக்கள்..

பத்து வயது குறைந்திடும்..
பேரக் குழந்தைகளைப் கண்டதும்..
துள்ளியோடிய தாத்தா பாட்டிகள்..
பிஞ்சுக் கை பிடித்து...அது
கொஞ்சும் மொழி கேட்டு..
தனை மறக்குந் தருணங்கள்..

பன்மொழியில்..
பாச வரிகள்..
வீசிய..பாச வலைகள்..

கணிணிப் பையுடன்.
காலை மாலை மறந்து..
களைப்புக் கண்ணோடு..
கார் டிரைவரைத் தேடும்..
கடமைக் கண்ணாயிரங்கள்...

அடைப்பே பாராத கடைகள்
காபி டீ முதல்..
continental வரை..
காசு மட்டுமே பேசுமிடம். .

சிரத்தையாய் கூட்டிப் பெருக்கி..
மீண்டும் தூக்கத்தை தொடரும்..
துப்புரவுப் பணியாளர்கள்..
அவர்களின் வேலைப் பளுவைக் குறைத்த..
swachh bharath abhiyan..

 மிடுக்காய் உடையணிந்து..
மலர்ந்த முகத்தோடு..
இரவையும் பகலாக்கும்..
புன்னகை குத்தகையெடுத்த
புதுயுக சுறுசுறு இளைஞர்கள்..

மகள் வரவுக்காக..
காத்திருந்த மூன்று மணி நேரம்..
பாலு மகேந்திரா இயக்கத்தில்..
ராஜாவின் பின்னனியில்..
மனிதர்கள்..
மனங்கள்..எல்லாம் கலந்த..
airport..ஒரு
art film போல..
எண்ணத்தை விட்டகல மறுக்கிறது..

முன்ன மாதிரி இப்போ..
யாரும் இல்லனு..
புலம்புவர்களுக்கு...
இந்த விமான நிலையக் காட்சி..
ஒரு எதிர் தரப்பு சாட்சி...

Saturday, June 16, 2018

சிரிப்பாசிரிப்போம்- மத்யமர்

#சிரிப்பாசிரிப்போம்

' காரும் கசந்ததையா..வர வர காரும் கசந்ததையா'..

வாசல் திண்ணையை தேச்சபடி உட்கார்ந்திருந்த ஒரு ரம்மியமான சாயங்கால வேளை..
விளையாடிண்டு இருந்த பெண் ..' அம்மா.கார்..அம்மா கார்'னு என் கையை பிடிச்சு இழுத்து காண்பிச்சா..
ரொம்ப மெதுவா ஒரு அம்மா கை நடுங்க ஒட்டிண்டு..கார் தலை மேல ஒரு போர்ட்.' ராதிகா ட்ரைவிங் ஸ்கூல்'
மனசில ஒரு பல்பு..எத்தனை நாள் இந்த ஸ்கூட்டியில 8 போட்டு பல பேருக்கு ஏழரையா இருந்தாச்சு..இப்போ நாலு சக்கரத்துக்கு ப்ரமோஷன் ஆகலாமா..

ஒரு சுபயோக தினத்தில் டிரைவிங் ஸ்கூல்ல முள்ளங்கி ்பத்தையாட்டம் 1500 பணமும் கட்டியாச்சு.
' வாங்க மேடம்..என்று கார் கதவை திறக்க..மனசு அப்படியே பறக்க ஆரம்பிச்சது. சீட்ல உட்கார்ந்ததுமே அந்த இன்ஸ்ட்ரக்டரை பார்த்து ' சார் எனக்கு வருமா இதெல்லாம் ' நு சிந்து பைரவி சுலக்‌ஷணா ஸ்டைலில் கேட்ட் மாத்திரம்..'மேடம்..பாருங்க நீங்க வேணா..ஒரு கார் என்ன..நாலு கார்  ஓட்டுவீங்க' என்று வீர சபதம் எடுத்தார்.

உட்கார்ந்ததும் பார்த்தா அங்கே குட்டி பிள்ளையார் ஒட்டிண்டு உட்கார்ந்திருக்க..அனுமார் சஞ்சீவினி மலையைத் தூக்கிண்டு ஊஞ்சலாட..சீரியல் லைட்டில் சீனிவாச பெருமாளும் தாயாரும் அருள் பாலிக்க..'கஜானனம் பூத ஆரம்பிச்சு காக்க காக்க கனகவேல் காக்க சொல்லி அஸாத்ய சாதகஸ் ஸ்வாமின் சொல்லி பைரவரையும் மதுரை வீரா..கருப்பானு நான் சொல்லிண்டே போக..'மேடம்...அரை மணி முடிஞ்சுடிச்சு..இன்னும் அரை மணி நேரம் தான் உங்களுக்கு .
இப்போ basics ஆரம்பிக்கலாமா?
வேகமா நான் தலையாட்ட
' முதல்ல  அந்த கண்ணாடியைக் கொஞ்சம் சரி பண்ணுங்க..சரியா view கிடைக்கும்"
 ஓ..ஓகே சார்னு சொல்லிட்டு ...என் கண்ணாடியை சரி பண்ணியபடி.. ம்ம்ம்..எனக்கு view சரியா தெரியறதே'.. நான் சொல்ல..சொல்ல.." மேடம்..உங்க கண்ணாடியைச் சொல்லலை..அந்த rear view mirror ஐ சொன்னேன்..அவர் அந்த கண்ணாடியை முன்னாடி காண்பிச்சதும்..உடனே ' ஓ என் பொட்டு கொஞ்சம் ஓரமா போயிருக்கே..இருப்பா சரி பண்ணிடறேன்'..
கடுப்பில் கொந்தளித்த கார் டீச்சர்..' மேடம் ..'இது கதக்..இது குச்சிப்புடி'ங்கற ஸ்டைல இது க்ளட்சு, இது ஆக்ஸ்லேட்டர் , இது ப்ரேக்குனு சொல்ல ஆரம்பிச்சார்.
ஐயோ ஆண்டவா..என்கிட்ட இருப்பதோ ரெண்டே கால்..இந்த மூணுல எப்படி காலை வைக்கிறதுனு அவரை பாவமா பார்த்தேன். 'இருங்க இது காலுக்கு..இப்போ நீங்க இந்த கையும் இப்படி இப்படி சுத்தணும்நு அது பேரு என்ன..ஆங்..அந்த ஸ்டியரிங்கை காட்ட.(இது என்னடா இந்த அகிலாவுக்கு வந்த சோதனை.' கற்பூரம் காண்பிச்சிண்டே மணியும் அடிங்கற' மாதிரி ஏதோ சொல்றாரேனு பயத்தில் நான்.)

ஐயோ..இது என்ன சேவை நாழி மாதிரி இருக்கு..இதை ஃபுல்லா சுத்தணுமா..கேட்டுண்டே எதேச்சையாக வலது காலை அழுத்த ..வண்டி வேகம் எடுத்து டிஸ்கோ டான்ஸ் ஆட ஆரம்பிச்சது..
'மேடம்..மேடம்..லேசா அந்த ஸ்டியரிங்கை லெஃப்டல ஒடைங்க..
'ஒடைக்கணுமா'..ஐயோ என்கிட்ட சுத்தியல் இல்லையேனு மை.வா புலம்ப..பின்னாடி உயிருக்கு பயந்து நெருக்கி உட்கார்ந்துண்டு இருந்த மத்த ஸ்டூடண்ட்ஸ் எல்லாம் உயிருக்கு பயந்து கதவை திறந்து இறங்கி ஓட ஆரம்பிச்சுட்டாங்க.
.வெயிட்டெல்லாம் குறைஞ்ச வண்டி ..சல்லுனு காத்து மாதிரி சைடில் வெட்டியிருந்த பாதாள சாக்கடை நோக்கி வேகமா படையெடுக்க..
'.ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருதுனு என்னைப் பார்த்து கிண்டலடிச்சபடி ஒரு விடலைப் பைய்யன் எதிரே வர..
கார் டீச்சர்..' ப்ரேக் ப்ரேக்னு கத்தி அவர் கால்ல இருக்க்ற ப்ரேக்கை அழுத்த முயற்சிக்க..நான் சும்மா இல்லாமல் இன்னும் வேகமா ஆக்ஸ்லேட்டரை அழுத்த..
பைய்யன் பயத்தில் கீழே விழுந்துட்டான்.

தன்னிச்சையா என் கை சேவை நாழியை அதான் ஸ்டியரிங்கை ஒரு திருப்பு திருப்பி டங்குனு ட்ரைவிங் ஸ்கூல் சுவற்றில்  மோதி..குத்துயிரும் கொலையுயிருமா கார் நிற்க...
நான் பக்கத்தில் கதி கலங்கி போய் உட்கார்ந்திருந்த இன்ஸ்ட்ரக்டரிடம்..
' சார்..இடிச்சுடுச்சு' நு 'ஆண்பாவம்' படத்தில பாண்டியராஜன் டையலாக் சொல்ல
அப்புறமென்ன..எனக்கு சொல்லித்தரவே பல ஓட்டைக் கார்கள் முதலாளி வாங்க ஆரம்பிச்சார்.
அவர் வாக்கு பலித்தது..' ஒண்ணு என்னங்க..நாலு காரு ஓட்டுவீங்கனு' அவர் சொன்ன வாக்கு அவருக்கே பலிச்சது.
நான் வரேன்னு சொன்னதுமே கடையை மூடிண்டு RTO office க்கு போறேன்னு ஜகா வாங்கிடுவாங்க.

அப்படியும் விடாக் கண்டணாய்..கொஞ்சம் ஓட்ட கத்துண்டாச்சு. என் ஸ்கூட்டி நான் அதை வெளியேவே அழைச்சிண்டு போறதில்லைனு ஒரே துக்கமாகிடுத்து.

ஆனா பாவம்..என்னால நிறைய பேருக்கு வேலை போச்சு..முதலாளிக்கு நஷ்டம் வேற..ஏன்னா..நான் கத்துக்கற ட்ரிப்ல யாரும் உயிரைப் பணயம் வெச்சு வரத் தயாராக இல்ல..எனக்கே எனக்கு மட்டும் காசு வாங்கின தோஷத்துக்கு கார் சொல்லிக் கொடுத்த அந்த எந்தரோ மஹானுபாவர்.

இந்த கத்துக்குட்டி , காட்டில் இருந்த போதெல்லாம் கார் ஓட்டினேன். ஆனால் இப்போது ந(ர)கர வாழ்க்கை.
நமக்கு கார் ஓட்டணும்னா ரோடெல்லாம் காலியா இருக்கணும்..நடக்குமா இந்த பெங்களூர்ல..
அதான் என் செல்ல ஸ்கூட்டியோட ..' 'உன்னை விட மாட்டேன்..காரும் இனி வேண்டேன்' நு பவதாரிணி குரல்ல பாடிண்டு நானும் என் உடன் பிறவா பெப்போடு(pep)..நாளும் நகர்வலம் தான்.

மது வாங்கித் தந்த கடிகாரம்

விலை மதிப்பில்லாதது..
நேரம் மட்டுமல்ல..
நீ பொழியும் அன்பும் தான்..
இதைப் பொக்கிஷமா..பூட்டிவைக்கலாமா..?..
போட்டு மகிழலாமா..??
ஒரு இன்பக் குழப்பம்..
Thanks Madhu Ramasami .

என் வீட்டுத் தோட்டத்தின்...

என் வீட்டுத் தோட்டத்தின்...

வருட மொரு விடுமுறை வரும்
விடாமல் செல்லும் அம்மா இடம்.
வளர்ச்சிப் பாதையில் ஊர் செல்ல
வாயைப் பிளந்து நான் பார்ப்பேன்.

மாறிப் போச்சே ஊர் என்றே
மலைப்பும் மகிழ்ச்சியும் தான் கூடும்.
அடிக்கொரு கடையென களை கட்டி
அணிவகுத்த பல மாடிக் கட்டிடங்கள்
நகையும் ஜவுளியும் நடக்கும் தொலைவில்
நள பாகமெல்லாம் செயலி வழியில்.

அல்லாடிய நாட்கள் இப்போ இல்லை
இல்லை என்பதெ இங்கு எதுவுமில்லை.
பாலைவனமாய் இருந்த இடம்..
பளபளப்பாய் இப்போ மாறிப்போச்சே.

வரவு அறிந்து வந்தார் பலர்.
'ஆளே மாறிட்டே' என் கண்ணே
அழுத்தி தலையை வார லையோ
அம்புட்டு முடியும் கொட்டிப் போச்சேனு
ஆதரவாய் என் தலை தடவி
அன்பில் அணைத்தாள் அம்மாவின் வலக்கரம்.

தோட்டத்தை சுற்றி வந்தேன்
தோண்டிய பல நினைவோடு..
புயலும் மழையும் வந்தாலும்
பூமியும்  காய்ந்தே போனாலும்
மாறாதது என்றும் ஒன்றுண்டு
மண்ணின் வாசத்துடன் என்வீடு
அதில்.
மலரத் தயாரான மல்லிமொட்டு.

Thursday, June 14, 2018

ஓடும் மேகங்களே..ஒரு சொல் கேளீரோ..

ஓடும் மேகங்களே..ஒரு சொல் கேளீரோ..

பஞ்சு பஞ்சாய் மேகங்கள்
பரபரப்பாய் ஓட்டமெங்கே
பருவ மழை பெய்யுமெப்போ?
பாவி சனமும் வாடுதிங்கே..

கூடிக் கூடி கும்மியடித்து
கொட்டாமல் கலையும் கர்வமென்ன
மாநாடு கள் போதும்
மசோதாக்கள் போதும்
நிறைவேறட்டும் தீர்மானம்
நிறையட்டும் குளமும் ஏரியும்
வருத்தியது போதும் வருணா
வரம் தா நீயும்
வான்மழை பொழிந்திடவே
வையகம் உயிர் பெறவே..

Sunday, June 3, 2018

நான் வள்ர்கிறேனே மம்மி

நான் வளர்கிறேனே..மம்மி..

வளரும் பிள்ளைகள்..
தளரும்..நம் கைப்பிடி..
விலகும்..நம்மைவிட்டு..
விரும்பியே ஏற்கணுமிதை..
பக்குவமாகணும்..
கோபத்தைக் குறைக்கணும்..
தோழி போல இருக்கணும்..

புடவை தலைப்பில் ஒளிந்தது போய்..
புது உலகம் காணப் புறப்படும்..

கடைகடையாய்  சுற்றியது போய்..
கார்டுடன் தனியாய்ப் போகும்..

அரவணைப்பில் அயர்ந்தது போய்
அடுத்த அறை தள்ளிப் போகும்..

வாய் ஓயாத பேச்செல்லாம்..
வரலாறாய் ஓர் நாள் ஆகும்..

இஷ்ட்டமேனு செய்த தெல்லாம்..
இப்ப வேணாம் அப்பற மாகும்..

ஆசையாய் சேர்த்த தெல்லாம்..
அய்யோ... old fashion ஆகும்

குழந்தடா..நீ என்றால்..
குமுறிக் கொந்தளிக்கும்..

வளர்ந்தும் இப்படியா என்றால்..
வளைந்து கழுத்து கட்டிக் கொஞ்சும்..

தோழியாட்டம்  சமத்தா இருன்னா..
அவள் அம்மா போல் நீ மாறு என்கும்..

அடுக்கிய அலமாரி அலங்கோலமாகும் ..
அழகிப்போட்டி நடை நடக்கும் ..அறைக்குள்ளே..

செக்கிழுத் தெண்ணை செழிப்பாகிய கூந்தல்..
சிக்கெடுக்கா..செம்பட்டை யாகும்.

எங்கே போறே ங்கற கேள்வி..
எதிரியாய் நமை எடுத்துக் காட்டும்..

யாரோடு போறே நு கேட்டாலோ..
ஆறாத சீன மாகும்..

பத்திரமா போ என்றால்..
பாப்பாவா நான் ..பதிலடிக்கும்..

பழைய புராணம் பாடாம..
பட்டும் படாமலும் இருக்கணும்..

வேறு கோணத்திலே..
வாழ்க்கையை ரசிக்கணும்..

ஏட்டிக்குப் போட்டி..
எப்போதும் வாதங்கள்..

வீட்டிலே..சிங்கம்..
வெளியிலே தங்கம்...

எதிர் வீட்டு மாமி
ஏகமாய்ப் புகழ்வாள்..
என்ன ஒரு சமத்துக் குழந்த..
என்னமா வளர்த்திருக்கே..
எனக்கும் சொல்லிக் கொடேன்னு..

அற்ப சந்தோஷங்கள்..
அரை நொடியில் பறக்கும்..
அனல் தெறிக்கும்...argument..
அடச்சீ..போ..விலகல்கள்..

அந்த நாளும் வரும்..
....
'என்ன இருந்தாலும்..
என் அம்மா போல வருமா.'.!!!
இன்று நான் சொல்வதை..
இவர்களும் சொல்லும் ..
இனிய காலம் வரும்..!!!