Monday, December 24, 2018

முதுமையின் அடையாளங்கள்

முதுமையின் சில அடையாளங்கள் என Mythili Varadarajan mam பதிவுக்கு..என் பதில்..என் அப்பாவின் மன நிலையிலிருந்து..

தூக்க மருந்து  தாலாட்டுமுன்
தூக்கிப் போடுமே இருமல்
என் லொக் லொக்  சத்தம்
கொர் கொர் குறட்டைக்காரரையும்
கூப்பிட்டு எழுப்புமே..
தலைகாணி உயரமாகும்..
தலை விதி நொந்து..
தாரையாய் கண்ணீர் அருவி..
.
கோழிக் கூவும் நேரம்..
கண்ணும் சொக்கும் தூக்கம்..
எட்டு மணி ட்ரெயின் பிடித்து
எட்டிப் பாய்ந்து பஸ் பிடித்து
ஓட்டமும் நடையுமாக..
ஓவர் டைமும் பார்த்த நாட்கள்..
ஓரமாய்..சின்ன நினைவாய்..
 விழிப்பும் ஒரு வழியாய் வர..
வேகத்தில் இயங்கும் வீடு..
பெண்ணும் பேத்தியும்..
பேச்சா..சண்டையா..??
புரியாத புதிராய் நான் முழிக்க..
சூடாக் குடித்த காபி..
சுட சுட செய்தியுடன் பேப்பர்
வெது வெது நீரில் குளியல்..
வேண்டுதல் நாளின் இனிமைக்கு..
பசித்து புசித்த காலம்..
பழங்கதையான ஏக்கம்..
மாத்திரைகள் பாதி உணவாக..
மருந்தாய் தோன்றும் சாப்பாடும்..
ஒற்றை வரியில் பேசிய நானோ
ஒன்றையே இரண்டு மூன்று முறை...!!
வலிகள் தரும் வேதனை..
விடுதலை வேண்டி ப்ராத்தனை..
கடந்தது எல்லாம் கனவாய்க் கலைய
நிகழும் காலம் நீளமாய்த் தெரிய
வரப்போகும் விடியல்..
விரட்டுமென் சோதனையென
விழித்தபடி படுத்திருக்கேன்..
விடிய இன்னும் நேரம் இருக்கே..

I feel women are more positive and energetic to surpass the ageing.
Thanks Mythili Varadarajan mam for kindling my thoughts.

Thursday, December 20, 2018

கா..கா..கா

@myclick ...
Chandrashekar Ramaswamy sir..ரொம்ப கேட்டேளே..காக்கா

அக்கம் பக்கம் பாருடா..சின்னராசா.
ஆகாஸப் பார்வை என்ன..
சொல்லு ராசா..
சிக்னல் என்ன மந்திரமா..
மனுஷன் என்ன எந்திரமா..
சார்ஜண்ட்டு..அங்கே இல்லை..
அர்ஜண்ட்டு ..உனக்கு என்ன..
அம்புக்குறி பார்த்து நீயும்.
வம்பு ஏதும் பண்ணாம..
தடத்திலே  ஓட்டு சாமீ
வழியும் கிடைச்சு விடும்..
வீடும் விரைவில் வரும்..
அக்கம் பக்கம் பாருடா..சின்ன ராசா

Friday, December 14, 2018

அழியாத கோலங்கள்

அழியாத கோலங்கள்..

அழியவே எழுதப்பட்ட
அழகான கோலங்கள்..
அழிக்கப் படும்போது..
அழுமே நெஞ்சமுமே..

கலைந்து சிதறிய கோலம்..
கொட்டிக் கவிழ்த்த எண்ணெய்..
குட்டி எலி வேலையோ ..இல்லை
குட்டிச் சாத்தான்களின்
கும்மாளம் ..குதூகலம்..

துடைப்பத்துடன் வந்த
துப்புரவு பணியாளர்..
சுத்தம் சுத்தம்னு
சத்தம் போடுவியே..
அசுத்தம் இங்கே..
ஆசிட் கொண்டா..
அழுக்கு போகலையோ..
ஆளைத் தூக்கிடுவான்..
அலம்பல்..புலம்பலுடன்..

தூக்கில் ஏற்றி என்னை
தூ இவ்வளவுதானா..
தூசியாய் பார்த்த வேளை..
வாதம் என்னுடையது
வாதத்தில் தவித்த வேளை..

வாழ்க்கை பாடம்..
வளரும் வயதிலே..
வகையாய் கற்பித்தால்..
வாழ்வும் செழிக்குமே..
வளமை பெருகுமே..

நாகரீக நண்டுசிண்டுகள்..
நுனி நாக்கில் ஆங்கிலம்
நாலும் தெரிந்த பேச்சு.
'நான்' என்ற எண்ணம்..

வாண்டுகளின் வால்த்தனம்..
கண்டும் காணாமல்...
காணாமல் விட்ட தொடரின்
கதை கேட்டும் அம்மா ..

குறை சொல்ல நானில்லை..
கற்றுத் தரலாமோ கொஞ்சம்..
சுற்றியிருப்பதெல்லாம்..
சொத்து உனதல்ல வென்று..

நாளைய மன்னர்கள்..
நல்லது கற்கட்டும்..
நல்லாட்சி அமைக்கட்டும்
நலமோடு வாழட்டும்..

Wednesday, December 12, 2018

புயல் நாள்

வேரோடு வீழ்ந்த மரங்கள்..
வெறிச்சோடிய தெருக்கள்....
விளக்கில்லா வீடுகள்..
விரும்பாத இவைகள்..
வருடாந்திர விருந்தாளி..

வேலை பளுவில்லா அம்மா..
வீட்டுக்குத் திரும்பிய அப்பா..
வெட்டி அரட்டை அடிக்க ஆளில்லா அண்ணா..
வெறுமனே ஃபோனை நோண்டாத தங்கை..
மெகா சீரியல் இல்லா தாத்தா பாட்டி..
உருண்டை பிடித்து கையில் சாதம்..
ஊர்க்கதை பேச நேரம்..
விளையாட்டும் சிரிப்பும்..
வேடிக்கை பேச்சும்..
விடியும் வரை ஓடும்..
விளக்கில்லா ஒரு நாள்..
விளக்கிடுமோ..
வாழ்வின் பிடிப்பை..

ek KitKat break tho bantha hai Yar

Saturday, December 8, 2018

கூட்ஸ் வண்டியிலே..ஒரு காதல் வந்துருச்சு

கூட்ஸ் வண்டியிலே..ஒரு காதல் வந்துருச்சு

 '25 தானே.'.
இல்ல்..லை 32..
டாட்டா காட்டி முடித்தபின் ..தொடங்கும் டிஷ்யூம்..டுஷ்யூம்..தோழிகளுடன் எப்போதும்.
என்னிக்கு ஒழுங்கா எண்ணி இருக்கோம் இந்த பாரம் ஏற்றி..ப்ளாட்ஃபார்மில் ஊர்ந்து செல்லும் கூட்ஸ் வண்டி பெட்டிகளை
  tally ஆனதே இல்லை..
சில இடத்தில் பாரம் குறைக்கப்படும்..சில இடத்தில் ஏறும்..
சில நேரம் வேகம்..சில நேரம் ஊரல்..
வண்டியும் சொல்லும் வாழ்க்கைப் பாடம்..
அரைக்கிழம் ஆனபோதும்..
ஆசை விடுவதில்லை..
ஆடி அசைந்து செல்லும்..
பெட்டிகளின் கணக்கு
பெரும் புதிரே என்றுமெனக்கு..
ஒண்ணு.இரண்டு ..மூணு..
எண்ணத் தொடங்க..
அம்மா..ப்ளீஸ் என்றாள்..
அவளுக்கென்ன தெரியும்..
அதிலிருக்கும் மகிழ்ச்சி..
அடப்போடா..
யார் பார்த்தால் என்ன..
தொடர்ந்தேன்..
நாலு..அஞ்சு..ஆறு..

கடைசி பெட்டி போயாச்சு..கணக்கு மட்டும் இன்னும் முடியல..போன வண்டியும் திரும்பி வராது..
கடைசி மாசமும் முடிவுக்கு வரப்போக..
கடந்த நாட்கள் கசப்போ..தித்திப்போ..
போனது போகட்டும்..
புதுசாய் துவங்குவோம்..
புது வருடக் கணக்கை
Advance happy new year friends

Tuesday, December 4, 2018

நம்பிக்கை

நம்பிக்கை
"எத்தனை தடவை சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிண்டு..reminder கொடுத்துண்டே இருப்பியா...?" சீறினேன்   சின்னவளிடம்..
சாமியிடம் கைக்கூப்பி  வரங்கள் வரிசையாய்க் கேட்டபடி பூஜையிலிருந்த நான்..
'சாமி பாவம் ம்மா'..நமுட்டுச் சிரிப்புடன் நகர்ந்தாள்.. எப்படியும் தன் வேலை அம்மா செய்து முடித்து விடுவாள் என்ற நம்பிக்கையில்..