Wednesday, September 18, 2019

சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலு

சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலு..

ப்ளாட்ஃபார்மில் டிரெயின் வந்து நின்னதும், தடக் தடக் சத்ததோடு என் லப் டப்பும் ஜாஸ்தியாச்சு..்.இருக்கிற மூட்டை முடிச்சை இடம் பார்த்து உள்ளே தள்ளணுமே..பகவானே என் பெர்த்ல வர யாரும் சாமானே கொண்டு வரக்கூடாதுனு அராஜகமா ஒரு வேண்டுதல் வேற.
எல்லாத்தையும் ஒரு வழியா அடியில தள்ளி நிமிர்ந்தா..நங்குனு மண்டையில் ஒரு அடி..வேறென்ன..விரிக்கப்பட்ட மிடில் பர்த் வீங்க வெச்சது என் முன் சொட்ட மண்டையை. என் பொண்ணோ ..full energy ல் ஆட்டம்..மிடில் பர்த்தை போட்டு நொக்கு நொக்குனு நொக்கி தாளம் போட..மிடில் பர்த் மாமா குறட்டையில் ஆலாபனை செய்ய.எங்க கூ..சிக்கு புக்கு ரயில் பயணம் ஆரம்பம்..
நமக்குத்தான் 4 மணிக்கு முழிப்பு வந்துடுமே..வீட்டு ஞாபகத்தில் எழுந்திருக்க..மீண்டும் டொங்னு மண்டையில் ஒரு அடி..எங்கயும் காலை வெக்க முடியல..மெதுவா....முதுகை கோணலா ஒரு வளை வளைச்சு...தலையை மெதுவா நீட்ட..என் சிண்டை பிடிச்சு இழுக்க ஆரம்பிச்சது மிடில் பர்த் சங்கிலி ..ஆ..வலி..கத்த கூட முடியல..
கால் எங்க வெக்கறது..சாமானெல்லாம் தூங்கிண்டிருக்கே..ஒரு வழியா சமாளிச்சு எழுந்து ..அப்பர் பர்த் ல் அக்கடானு தூங்கிண்டிருந்த அகத்துக்காரரை எழுப்பி..கொஞ்சம் குழந்தையைப் பார்த்துக்கோங்கோ..நான் போய் ஃப்ரஷ் ஆகிட்டு வரேன்..அப்ப்போதான் முதல் ரவுண்ட் வர காபி எனும் கஷாயத்தை குடிக்க முடியும்னு சொல்ல..அம்மா தாயே..வீட்ட்ல தான் அட்டகாசம்னா..இங்கேயுமா..சரி சரி போய்ட்டு வானு வழியனுப்பி வெச்சுட்டு..வாய் பிளந்து தூங்க
. டாண்ணு ஆறு மணிக்கு என் காது குளிர' காபி..காபி'..'சாய்..சாய்' சத்தம்..என் பெர்த் கிட்ட வந்துட்டார் ..ஒரு காபி குடுங்க..சொன்னதுதான் தாம்தம் கொதிக்க கொதிக்க பேப்பர் கிளாஸில் ரொப்பிட்டு..madam 10 ரூபாய் தாங்க..
ஒரு நிமிஷம் ப்பா..பர்ஸ் பெண்ணின் தலைகாணிக்கடியில்...மெதுவா உருவலையோ.நான் அம்பேல்..ஆட்டம் ஆரம்பிப்பாளே..ஒரு கையில் காபி..மறு கையில் காசு..அப்பத்தான் ட்ரெயின் டிஸ்கோ டான்ஸ் ஆட ஆரம்பிக்க..என் கையிலிருந்த காபியும் சேர்ந்து ஸ்டெப்ஸ் போட..கடைசியில் எனக்கு கிடச்சது 2 ரூபாய் காப்பிதான்.
காபி குடிச்சா எப்படி தூக்கம் வரும்..ஆனந்த சயனத்தில் என்னை சுத்தி எல்லாரும். எனக்கோ வேடிக்கை பார்க்கணும்..
சூரியன் அழகா வெளிய வருமே..மேகமெல்லாம் என்னோட ஓட்டமா ஒடி வரதைப் பாக்கணும்..
மரம் வேகமா ஓடும்..சின்ன சின்ந பாலங்கள்..வயல்வெளி..மாட்டு வண்டி..
ஒவ்வொரு ஊர் ரெயில்வே கேட் கிட்ட நிக்கற ஸ்கூல் பசங்கள் பார்க்கணும்.
குட்டி ஸ்டேஷன் எல்லாம் ஓடி ஓடி வந்து தண்ணியும் ஒட்டகப் பாலும் விற்கும் குட்டீஸ். கொய்யா..ஆரஞ்சு வித்து ரெயில் கிளம்பிடுமோங்கிற பயத்தில் சிறு வியாபாரிகள்..
இத்தனையும் பேரழகன் சூர்யா போஸ்ல உட்கார்ந்த படியே ரசிச்சபடி ..
கொஞ்ச நேரமா ஒரே சைடாகிப்போன கழுத்தை அம்மா...என்று அழைத்தபடி என் பெண் ஒரு திருப்பு திருப்ப..ஆ..வலி..வலி..

அந்தக் கோணக் கழுத்தோடயே பால் கரைத்து கொடுத்தாச்சு்....கொஞ்ச நேரத்தில் இட்லி ஊட்டல்..தோசை தோசை விளையாட்டு .. தண்ணி கொட்டி ஈரமான துணியை மாற்றல் எல்லாம் இனிதே நடந்தேற..' சார்..லஞ்சுக்கு என்ன வேணும் உங்களுக்குனு pantry service கேட்க..
ஒண்ணுமே தெரியாதது போல மிடில் பர்த் மாமா..என்ன லஞ்ச்சா..நான் இன்னும் breakfast ஏ சாப்பிடலையேனு (விவேக் ஸ்டைலில)் ..இந்த மாதிரி long journey ல தான் நம்மைஅறியாம தூங்க முடியறது.. சரிப்பா..வெஜிடேரியன் மீல்ஸ் ஒண்ணு கொண்டு வந்துடு என்றபடி பல் தேய்க்கப் போனார்..எனக்கோ அப்பா..விடுதலை..திரும்பி வந்து பர்த்தை மடிச்சுடுவார்..மடங்கின என் கழுத்தும் பிழைக்குங்கிற நினைப்பில் மண்ணைப் போட்டார் மகானுபாவர்..மீண்டும் தன் berth ல் ஏறி படுத்தபடி..
ஆங்..சொல்ல மறந்துட்டேன்..upper berth ல் படுத்திருந்த என்னவரை நாங்கள் அடித்த லூட்டி ஒரு வழியாய் எழுப்ப..நீயாச்சு உம்ம பொண்ணாச்சுனு  ரெண்டு பேரையும் கோர்த்து விட்டு..நான் கொட்டாவிக்கு பதில் சொல்ல குறட்டை விடலானேன்.
ரயில் பயணம் என்றும் சுகம்..மிடில் பெர்த் இடித்தாலும்..
இனிமே ஆறு மணிக்கு எல்லாரையும் எழுப்பிடுவாங்களாமே..
பரிதாபம்..அந்தோ பரிதாபம்..பாட்டு தான் இப்போ மனசில ஓடறது

Tuesday, September 10, 2019

Ammaa

10 th September.

கவனிப்பார் யாருமில்லையென
கலங்காத என் வீட்டு செடிகள்.

வறண்ட நாட்களும்
வர்தா புயலும்
வந்தும் தான் போயின.
வாடிப் போனாலும்
வாரி அடித்து சென்றாலும்.
மீண்டு(ம்) எழுந்தது
மருந்தான மணத்தக்காளியும்..
மணம்  தரும் கருவேப்பிலையும்.

அம்மா..இட்ட உரம்..
மரஞ்செடிக்கு மட்டுமல்ல..என்
மனதுக்கும் கூடத்தான்..
miss u maa

Friday, September 6, 2019

என் ஜீவன் நீதானே

#படம்_பார்த்து_கதை
#madhyamar_Sunday_special க்காக எழுதிய so called என் கதை.

#என்_ஜீவன்_நீதானே

"ஏங்க..அந்த நியூஸ் பேப்பரை நொட்டுறு பண்ணது போதும்.மடமடனு குளிச்சு டிஃபன் சாப்பிட்டு கிளம்பலாம் .

 மார்க்கெட்டில் போய் ஃப்ரஷ்ஷா காய் வாங்கிட்டு, அப்படியே அரிசி மண்டில சாமான் லிஸ்ட் கொடுக்கணும். பாங்க் வேற நாலு நாள் இருக்காதாம் . கொஞ்சம் பணம்  எடுக்கணும். ஒரேடியா முடிச்சுட்டு வந்துடலாம்' கட்டளை பறந்தது காவேரி அம்மாளிடமிருந்து.

"ஏம்மா..உன்னோட வேடிக்கை பார்த்துண்டு வரதுக்கு ..நீ ஒரு ஒரு காயும் பழமும் வாங்கறதுக்குள்ள காலெல்லாம் வலிக்க ஆரம்பிச்சுடுமே..

நான் பாட்டு அக்கடானு டீவி பார்த்துண்டு இருப்பேனே' ..சுந்தரம் சொன்னதை கண்டுக்காமல் ஜருகண்டியில் இறங்கினாள் காவேரி.

சுந்தரம் ஒரு துணிக் கடையில் வேலை பார்த்தார். காலையில் போனால்..வீடு வர பாதி ராத்திரி ஆகிடும். பசங்க படிப்பு, ஸ்கூல், வீடு ,உள் வேலை, வெளி வேலை எல்லாம் காவேரி தான். பையன்கள் ரெண்டு பேரும் நல்ல வேலையில் வந்த பிறகு ..வயதும் ஆகி விட்டதால் கடை வேலைக்கு போவதை நிறுத்தி இரண்டு வருடமாச்சு.

தினமும் இதே கூத்துதான். தினமும் குறைந்தது 2 மணி நேரம் வெளியே இழுத்துச் சென்று விடுவாள்.

அன்றும் அப்படித்தான்..வெளியே போய் வந்து..சாப்பிட்டு கொஞ்சம் கண்ணசர, ஏதோ முனகல் சத்தம் அவரை எழுப்பியது. காவேரி தான். நெஞ்சைப் பிடித்துக் கொண்டு தவித்துக் கொண்டிருந்தாள்.

மின்னல் வேகத்தில் எல்லாம் நடந்து முடிந்தது. "காவேரி.".. "காவேரி"..அவர் குரல் காதில் விழவில்லை அவளுக்கு...கண் மூடினாள்.
சுந்தரம் சுருண்டு போனார். தன் அறைக்குள்ளேயே முடங்கிப் போனார். விட்டத்தை் பார்த்தபடி..

" நாளையிலேர்ந்து காரியம் ஆரம்பிக்கணும். காய்கறி லிஸ்ட் எல்லாம் போட்டாச்சு..சாமான் ஒண்ணு விடாம ரெடி பண்ணி வெச்சுக்கணும்.."
மருமகள்கள் பேச்சுக் குரல்..

ஏதோ மண்டையில் அடித்தாற்போல ஒரு உணர்வு. வேகமாக எழுந்து எப்போதும் எடுத்துப் போகும் பைகளை எடுத்தார்.
"கொடுங்கம்மா..எல்லாத்தையும் பார்த்து நான் வாங்கி வந்துடறேன்.."..

"மாமா..நீங்க?...மருமகள்கள் கேட்க..
" எனக்கு ஒவ்வொண்ணும் உன் மாமியார் சொல்லிக் கொடுத்திருக்காம்மா..நீங்க உள் வேலையை கவனிங்கோ..நான் போய்ட்டு வரேன்".
அவர்கள் எப்போது காய்கறி வாங்கும் பெருமாள் கடை முன் நின்றார்..

"நல்ல பிஞ்சா பார்த்து நானே பொறுக்கி எடுத்துக்கறேனேப்பா..'..காவேரியின் குரல் அங்கே அவருக்கு மட்டும் கேட்டது..

Tuesday, September 3, 2019

கொடுப்பினை..படம் பார்த்து கதை

#சண்டே_ஸ்பெஷல்...
#madhyamar_Special. எல்லா வாரமும் ஒரு புது விதமாக தலைப்பு கொடுத்து ..சிந்தனை தூண்டும் விதம் எழுதத் தூண்டும் இடம்.

இந்த வாரம்  #படம்_பார்த்து_கதை.
4 படங்களில்..மூன்று படத்திற்க்கு எழுதினேன்.
அதில் இந்த படத்துக்கு என் கதை..

#கொடுப்பினை

"ஏங்க..இந்த அரை டிராயரைப் போட்டுண்டு வெளிய வராதீங்கனு எத்தனை தடவை சொல்றது..அவங்க எல்லாம் என்ன நினைச்சுப்பாங்க" என்று கிரிஜா கேட்கவும்.."போடி போ..என் ட்ரஸ்ஸை யார் பார்க்கப் போறாங்க அங்கேனு" நக்கலடித்தபடி கைலாசம் மாமா.

அந்த பெரிய பில்டிங்கின் கேட் முன் சென்றதும்..வாசலில் நின்றிருந்த செக்யூரிட்டி சலாமடித்தபடி.." எல்லாரும் உங்களுக்காக தான் காத்துக்கிட்டிருக்காங்க ..போங்க சீக்கிரம் நு வாய் நிறைய வரவேற்றான்.
இண்டர்காமில் சொன்னது தான் தாமதம்..

"சகலை..வந்துட்டீங்களா..' மூணாவது மாடிலேர்ந்து மாதவன்.
டேய்..கைலாசம்..சீக்கிரம் வர மாட்டியா..கிளம்பணும் கிளம்பணும்னு கால்ல கஞ்சியோட பறப்பியே அப்பறம்..சீனு பெரியப்பா சிட்டாய் வந்தார்.
அங்கே இவரைப் பார்த்து ஓடி வந்த சேகர்..வாரத்தில் இந்த ஒரு நாளுக்காக தாண்டா காத்திண்டு இருக்கேன் என்று நட்பின் உரிமையோடு..

ஏய கிரி்ஜா..வந்தாச்சா..வா..வா..இங்க க்ளப் ஹவுஸில் எல்லாரும் உனக்காக தான் காத்திட்டிருக்கோம். அவள் கையை இழுத்தபடி..கோமதி மாமி.

தன் கையில் கொண்டு வந்திருந்த கிருஷ்ண ஜயந்தி பட்சணமெல்லாம் எல்லாருக்கும் கொடுத்தாள் கிரிஜா

சொல்லு சொல்லு ..போன வாரம் கல்யாணத்துக்கு போனியே..எப்படி இருந்தது..?
யார் யார் வந்தா..என்ன மெனு.. வரிசையாக் கேள்விகள்.
இவர் செளக்கியமா..அவர்கள் செளக்கியமா.. ஒருத்தரை விடாமல் விசாரிப்புகள்.
அந்தப் பக்கம்..கைலாசம் மாமாவுடன் சேர்ந்து வெடிச் சிரிப்பு சத்தம் அந்த காம்பவுண்ட்டிலே எதிரொலித்தது..

மணி அஞ்சு அடிக்கவும்..கைலாசமும் கிரிஜாவும் கிளம்ப ஆரம்பிக்க..இன்னும் ஒரு பத்து நிமிஷம் இருந்துட்டு போங்களேன் என்று அன்புக் கட்டளைகள்.

ஒரு வழியா..அஞ்சே முக்காலுக்கு..இனிமே ரொம்ப நேரமாகிடும்..கிளம்பிடுங்கோனு அவர்களே சொல்ல..அடுத்த வாரம் பார்க்கலாம்
அந்த காம்பவுண்டு கேட்டை கடக்கையில்..
"happy old age home ' என்ற பெயர்ப் பலகையின்  பின்..கலங்கிய கண்களுடன் .கை..வலிக்க வலிக்க ..டாட்டா காட்டிய உறவு மற்றும் நட்புகள்.

"அப்பா..எங்கே இருக்கீங்க..நான் வந்து பிக் அப் பண்ணட்டுமா?"..என்ற மகனின் குரல் தேனாய் காதுகளில்..

Monday, September 2, 2019

Bandh day

எழுந்திருக்க மனமிலா..
சோம்பலான காலை..
எடுப்பாரன்றி..
வீசி எறியப்பட்ட...செய்தித்தாள்
தூக்கில் தொங்கும் பால் பாக்கெட்..
எதுக்குமே வாசப்படி இறங்க வேண்டாம்..
எது இருக்கோ..அதே போதும்..
அடைப்பட்ட குழந்தைகள்..
சனி ஞாயிறை விட..
சுகம் தருதோ..??

சுற்றி எல்லாரும் இருக்கும்..
சுறுசுறுப்பை சூறையாடும்
சிற்றின்பம் சிலருக்கும்..
பேரிழப்பு ..
பொருளாதாரத்துக்கும்..
தரும்..
வேலை நிறுத்தங்கள்..
வழி காட்டுமா..
வளர்ச்சிக்கு..!!!!