Friday, September 6, 2019

என் ஜீவன் நீதானே

#படம்_பார்த்து_கதை
#madhyamar_Sunday_special க்காக எழுதிய so called என் கதை.

#என்_ஜீவன்_நீதானே

"ஏங்க..அந்த நியூஸ் பேப்பரை நொட்டுறு பண்ணது போதும்.மடமடனு குளிச்சு டிஃபன் சாப்பிட்டு கிளம்பலாம் .

 மார்க்கெட்டில் போய் ஃப்ரஷ்ஷா காய் வாங்கிட்டு, அப்படியே அரிசி மண்டில சாமான் லிஸ்ட் கொடுக்கணும். பாங்க் வேற நாலு நாள் இருக்காதாம் . கொஞ்சம் பணம்  எடுக்கணும். ஒரேடியா முடிச்சுட்டு வந்துடலாம்' கட்டளை பறந்தது காவேரி அம்மாளிடமிருந்து.

"ஏம்மா..உன்னோட வேடிக்கை பார்த்துண்டு வரதுக்கு ..நீ ஒரு ஒரு காயும் பழமும் வாங்கறதுக்குள்ள காலெல்லாம் வலிக்க ஆரம்பிச்சுடுமே..

நான் பாட்டு அக்கடானு டீவி பார்த்துண்டு இருப்பேனே' ..சுந்தரம் சொன்னதை கண்டுக்காமல் ஜருகண்டியில் இறங்கினாள் காவேரி.

சுந்தரம் ஒரு துணிக் கடையில் வேலை பார்த்தார். காலையில் போனால்..வீடு வர பாதி ராத்திரி ஆகிடும். பசங்க படிப்பு, ஸ்கூல், வீடு ,உள் வேலை, வெளி வேலை எல்லாம் காவேரி தான். பையன்கள் ரெண்டு பேரும் நல்ல வேலையில் வந்த பிறகு ..வயதும் ஆகி விட்டதால் கடை வேலைக்கு போவதை நிறுத்தி இரண்டு வருடமாச்சு.

தினமும் இதே கூத்துதான். தினமும் குறைந்தது 2 மணி நேரம் வெளியே இழுத்துச் சென்று விடுவாள்.

அன்றும் அப்படித்தான்..வெளியே போய் வந்து..சாப்பிட்டு கொஞ்சம் கண்ணசர, ஏதோ முனகல் சத்தம் அவரை எழுப்பியது. காவேரி தான். நெஞ்சைப் பிடித்துக் கொண்டு தவித்துக் கொண்டிருந்தாள்.

மின்னல் வேகத்தில் எல்லாம் நடந்து முடிந்தது. "காவேரி.".. "காவேரி"..அவர் குரல் காதில் விழவில்லை அவளுக்கு...கண் மூடினாள்.
சுந்தரம் சுருண்டு போனார். தன் அறைக்குள்ளேயே முடங்கிப் போனார். விட்டத்தை் பார்த்தபடி..

" நாளையிலேர்ந்து காரியம் ஆரம்பிக்கணும். காய்கறி லிஸ்ட் எல்லாம் போட்டாச்சு..சாமான் ஒண்ணு விடாம ரெடி பண்ணி வெச்சுக்கணும்.."
மருமகள்கள் பேச்சுக் குரல்..

ஏதோ மண்டையில் அடித்தாற்போல ஒரு உணர்வு. வேகமாக எழுந்து எப்போதும் எடுத்துப் போகும் பைகளை எடுத்தார்.
"கொடுங்கம்மா..எல்லாத்தையும் பார்த்து நான் வாங்கி வந்துடறேன்.."..

"மாமா..நீங்க?...மருமகள்கள் கேட்க..
" எனக்கு ஒவ்வொண்ணும் உன் மாமியார் சொல்லிக் கொடுத்திருக்காம்மா..நீங்க உள் வேலையை கவனிங்கோ..நான் போய்ட்டு வரேன்".
அவர்கள் எப்போது காய்கறி வாங்கும் பெருமாள் கடை முன் நின்றார்..

"நல்ல பிஞ்சா பார்த்து நானே பொறுக்கி எடுத்துக்கறேனேப்பா..'..காவேரியின் குரல் அங்கே அவருக்கு மட்டும் கேட்டது..

No comments: