காலை வணக்கத்துடன் கண்ணில் பட்டது முதலில் Kovai Anuradha Kovai sir post..
உடற்பயிற்சி, நம் பெரியோர்கள் பற்றி அழகாக எழுதியிருந்தார்..அதை யோசித்த வேளை ..கண் முன் வந்தாள்..இந்த அத்தை பாட்டி
உறவுகள்..தொடர்கதையல்ல..
அத்தை பாட்டி..
ஆங்கரைப் பாட்டி..
ஆரஞ்சு மிட்டாயோடு..
மஞ்சப் பைக்குள்ளே..
மடிப்பு கலையா
மடிப் புடவையோடு..
கூன்விழுந்தாலும்..
கண் மங்கினாலும்..
குழந்தைகள் என்றால்..
குதூகலம் இவளுக்கு..
எச்சில் பத்து பார்ப்பாள்..
எட்ட நில்லு ..
மடி என்பாள்.
சினிமா டிராமா..
சீச்சீ என்பாள்..
சிவ நாமம் ஒன்றே
சிந்தனையில் கொள்வாள்.
'திரிசூலம் ' பார்த்தோம் என்றால்..
வெள்ளியா..தங்கமா என்பாள்
சிவாஜி படம் என்றால்..
சீறுவாள்...காசு கரியென்பாள்..
வந்த நாள் முதல்..
விரட்டி வேலை வாங்குவாள்..
வயசாகலையா...
வரணும் புத்தி என்பாள்..
சுருக்குப் பைதான்..
சொத்து எனதென்பாள்..
கசங்கிய ஒரு ரூபாய்..
காலணா..எட்டணா..
கணக்கு வைத்திருப்பாள்..
ஒரு வாரம் இருப்பேனென்பாள்..
ஒயாமல்..
ஊர் புராணஞ் சொல்வாள்...
வரேன் போய்ட்டு என்பாள்..
வெளிச்சமாகும் ..எம்முகமே..
விதிகள் தளரும்..கொஞ்சம்
வெறுமையும் சூழுமே..
வரவில்லை ..அவளும்..
வாரங்களான போதும்..
வினவிய போது..
விம்மலுடன்..
விண்மீன் காட்டினர்..
வீட்டுப் பெரியோர்..
புரிதலுக்குமுன்..
பறந்து போன...
உறவுப் பறவைகள்..
உள்ளத்தில் எத்தனையோ..!!
No comments:
Post a Comment