Sunday, June 18, 2017

அப்பாவும் நானும்..

அப்பாவும் நானும்..
மோட்டார் ரிப்பேரா..
த்ண்ணீர் ஊற்றி அவர் air lock சரிபண்ண..
தண்ணீர் வருதானு மொட்டை மாடியில் நான் பார்ப்பேன்.
TV ல கோடு கோடாய் வரும்..
திருப்பிச் சரி செய்வார் ஆண்ட்டெனாவை..
இன்னும் கொஞ்சம் திருப்பு..தெளிவா இல்லையென்பேன்.
சைக்கிள் துடைத்தால்..
துணியோடும் எண்ணோயோடும்
துணையாய் இருப்பேன்..
புதிதாய் செடி வைத்தால்..
அழகாய் அவர் குழி தோண்ட
அதில் உரமும் நான் இடுவேன்.
பரணியில் சாமான் எடுத்தாலோ
படுகெட்டியாய் ஏணியைப் பிடித்திடுவேன்.
ட்யூப் லைட் மாற்றயிலே
டார்ச்சாய் நான் இருப்பேன்
இரண்டு சக்கர வாகனத்தில்
இருவரும் வலம் வந்தோம்..

அன்று கற்றது
இன்றும் கைக்கொடுக்குது.

பழுதென்றவுடன் பதறாமல்
பார்ப்போம் ஒருகையென்று
மராமத்து வேலையெல்லாம்
மகிழ்ச்சியாய் செய்வேனிங்கே

மழையும் ரசித்தோம்..
மாட்சும் ரசித்தோம்.
எதிரணி அடித்தாலோ
எகிறிடும் இவர் ரத்த அழுத்தம்
இந்தியா விளையாடையிலே
இருப்புக் கொள்ளாமல் தவிப்பு
இன்றும் அப்படியே
மழையும் இங்கே..
மாட்ச்சும் அங்கே.
எண்பதை தாண்டினாலும்
இளமை திரும்பும் இவருக்கு
இந்தியா- பாக் மாட்ச் என்றால்..

Happy father's day

சும்மா எதாவது அவளைச் சொல்லிண்டே இருக்காதே...
அன்று என் அப்பா..இன்று என் பெண்களின் அப்பா..
மாறவே மாட்டீங்களா ..அப்பாக்களே!!


திரையின் பின் நின்று
திறமைகளை வளர்க்கும்
நானிருக்கேன்டா என்று
நல்லூக்கம் நாளும் தரும்
அடக்கி வாசித்தாலும்
ஆட்சி புரிபவர் என்றும்
தந்தை எனும் மந்திரம்
தடைகளைச் தாண்டச் சொல்லும்
வாழ்த்துக்கள் ..
இந்நாளுக்கு மட்டுமல்ல்
நீ வாழும் வரைக்கும்..
நீ வாழ்ந்த பின்னரும்..

Happy father's day

Friday, June 16, 2017

பூபாளம்...இசைக்கும்..

பூபாளம்...இசைக்கும்..

இளங் காற்று  இசைபாட
கூவிக் குயில் அழைக்க
பூக்கள் சோம்பல் முறிக்க
காலை நடை துவக்கம்.
சுப்ரபாதமும் சினிமாப் பாடலும்
சத்தமாய் அலறிய தள்ளுவண்டிகள்
காயும் பூவும் கட்டவிழ்த்து
கடவுளை வேண்டும் வியாபாரிகள்
'coffee mane'க்கள் க்யூவில்
கால்கடுக்க  காப்பி பிரியர்கள்
கைப்பேசியில் கட்டளை இட்டபடி
கணிணி உபாசகர்கள்
கைக் கோர்த்து நடந்தபடி
காலத்தை அசைப்போட்ட முதியோர்கள்
புகார் பல சொல்லியபடி
பொரிந்து தள்ளிய மனைவிகள்
கையும் காலும் முறுக்கியபடி
கடும் பயிற்சியில் ராம்தேவ் பாபாக்கள்
காலைக் கடன் முடிக்க
எசமனை இழுத்த செல்லக் குட்டிகள்
வாசல்கள் எல்லாம் வழியடைத்த
வால் சுருட்டிய  வாண்டுகள்
வாயைப் பிளந்த கொட்டாவியுடன்
வாய் மூடா பொதிமூட்டையுடன்
வரப் போகும் பஸ்ஸுக்காக.
சூரியனும் சுறுசுறுப்பாக
சுற்றியது போதுமென்றெ
வேகமாய்  வீடு வந்தேன்
வீதி் உலா முடித்தபடி

என் வீட்டுத் தோட்டத்தி

என் வீட்டுத் தோட்டத்தின்...

வருட மொரு விடுமுறை வரும்
விடாமல் செல்லும் அம்மா இடம்.
வளர்ச்சிப் பாதையில் ஊர் செல்ல
வாயைப் பிளந்து நான் பார்ப்பேன்.

மாறிப் போச்சே ஊர் என்றே
மலைப்பும் மகிழ்ச்சியும் தான் கூடும்.
அடிக்கொரு கடையென களை கட்டி
அணிவகுத்த பல மாடிக் கட்டிடங்கள்
நகையும் ஜவுளியும் நடக்கும் தொலைவில்
நள பாகமெல்லாம் செயலி வழியில்.

அல்லாடிய நாட்கள் இப்போ இல்லை
இல்லை என்பதெ இங்கு எதுவுமில்லை.
பாலைவனமாய் இருந்த இடம்..
பளபளப்பாய் இப்போ மாறிப்போச்சே.

வரவு அறிந்து வந்தார் பலர்.
'ஆளே மாறிட்டே' என் கண்ணே
அழுத்தி தலையை வார லையோ
அம்புட்டு முடியும் கொட்டிப் போச்சேனு
ஆதரவாய் என் தலை தடவி
அன்பில் அணைத்தாள் அம்மாவின் வலக்கரம்.

தோட்டத்தை சுற்றி வந்தேன்
தோண்டிய பல நினைவோடு..
புயலும் மழையும் வந்தாலும்
பூமியும்  காய்ந்தே போனாலும்
மாறாதது என்றும் ஒன்றுண்டு
மண்ணின் வாசத்துடன் என்வீடு
அதில்.
மலரத் தயாரான மல்லிமொட்டு.

Wednesday, June 14, 2017

ஒடும் மேகங்களே.ஒரு சொல் கேளீரோ

பஞ்சு பஞ்சாய் மேகங்கள்
பரபரப்பாய் ஓட்டமெங்கே
பருவ மழை பெய்யுமெப்போ
பாவி சனமும் வாடுதிங்கே..

கூடிக் கூடி கும்மியடித்து
கொட்டாமல் கலையும் கர்வமென்ன
மாநாடு கள் போதும்
மசோதாக்கள் போதும்
நிறைவேறட்டும் தீர்மானம்
நிறையட்டும் குளமும் ஏரியும்
வருத்தியது போதும் வருணா
வரம் தா நீயும்
வான்மழை பொழிந்திடவே
வையகம் உயிர் பெறவே..

Friday, June 2, 2017

Happy birthday ilayaraja sir

டூயட்டோ..
 டப்பாங்குத்தோ..
rock ம்யூஸிக்கோ
ராக ஆலாபனையோ
பக்திப் பாடலோ
பாப் பாடலோ
நாட்டுப்புறப் பாட்டோ

மழைப் பாட்டோ
குயில் பாட்டோ
தாலாட்டுப் பாட்டோ
துள்ளல் பாட்டோ
சோகப் பாட்டோ
சுகப் பாட்டோ

சொக்க வைக்கும்
சொல்லி லடங்கா
சொர்க்கம் என்றும்
செவிக் குணவு
பிணிக்கு மருந்து
தனிமைக்கு தோழமை
தனித்துவம் என்றும்
ஞானி உனது இசைதானே









எழுதுகிறேன் ஒரு கடிதம்

அன்புள்ள பவித்ரா அக்காவுக்கு
ஷேமம்.ஷேமத்திற்கு பதில். அம்மா என் பக்கத்திலே உட்கார்ந்து சொல்ல சொல்ல எழுதறேன்.அங்கு உன்னோட ஆபீஸ் வேலையெல்லாம் எப்படி இருக்கு? நீ கிளம்பினதும் வீடே வெறிச்சுனு போச்சு. குழந்தை ராத்திரி பூரா அழுதா..உன்னைத் தேடிண்டே இருந்தா. இப்பொ நாலு நாளா அழுகை கொஞ்சம் குறைஞ்சுருக்கு. அம்மாவோடயும் என்னோடயும்  பழகிட்டா. பவுடர் பால் கொஞ்சம் கொஞ்சமா குடிக்கிறா. உன்னை பத்தி தான் நினைப்பு அம்மாக்கு எப்போதும்.
உடம்பை ஒழுங்கா பார்த்துக்கோ. பளுவான வேலையெல்லாம் செய்யாம இருக்கச் சொன்னா..இன்னும் நீ பச்சை உடம்புக்காரிதான். இப்போ சரியா கவனிச்சுக்கலைனா பின்னாடி ரொம்பா வீக்காகிடுவேனு அம்மாக்கு கவலை.
அப்பா வார்த்தை க்கு வார்த்தை உன்னையே சொல்லிண்டு இருக்கா. குழந்தையப் பத்தி கவலைப் படாதே..இப்போ கூட இங்கேதான் என் மடியில் படுத்துண்டு தூங்கறா. உன் உடம்பைப் பார்த்துக்கோ.அத்திம்பேரைக் கேட்டதா சொல்லு.அடுத்த லீவு உனக்கு எப்போ?
அம்மா இப்போ எழுந்து போயாச்சு.
அக்கா..உனக்கு கண்டிப்பா ஞாபகம் இருக்கும்.அடுத்த வாரம் புதன்கிழமை க்குள்ள ஃபீஸ் கட்டணும்.இல்லனா பரீட்சை எழுத விடமாட்டா. இந்த லெட்டரை தந்தி போல பாவித்து மணியார்டர் அனுப்பிடுக்கா..போன வருஷத்துக்கு முந்தின வருஷம் வாங்கின இங்க் பேனா.ரொம்ப இங்க் கொட்டறது. அதுக்கும் சேர்த்து ஒரு அஞ்சு ரூபா அனுப்ப முடியுமாக்கா..
இங்கே எல்லாரும் செளக்கியம். குழந்தை சமத்தா இருக்கே. கவலைப்படாதே.
இப்படிக்கு
அன்புத் தங்கை
சந்திரா

ரிசல்ட்டுக்கு நேரமாச்சு


ரிசல்ட்டுக்கு நேரமாச்சு

முடிவு வருமுன்னே
மூச்சடைத்து போகும்
தேர்வோ..வாழ்வோ
தேறுவது நம்மிடமில்லை.

சுற்றித் திரிந்த சிட்டுகள்
சுருட்டும் வாலை இப்போது
சுற்றும் கோயில் பிரகாரம்
சமத்தா யிருக்க பிரயத்தனங்கள்.


தெரியா விடையைத்
தேடுதல் வாழ்க்கை.
முறையீடு இல்லாத
 முடிவான தீர்ப்புகள்.

தேர்வின் முடிவோ..
தெரிந்ததே விடையானாலும்
திருத்துவோர் கையில்தானே
திரும்பும் பல வாழ்க்கை.

keyword இருந்தால்தான்
கிடைக்கும் மதிப்பெண்ணும்
கிலியில் குழந்தைகள்
கிழியும் திரையென்றே..

வாழ்க்கை நிற்காது என்றும்
வெறும் மதிப்பெண்ணால் மட்டும்
வாழணும் நீ என்றும்
வரும் புயலையும் எதிர்த்தென்று
வழங்குவோம் அறிவுரை இன்று
வரும் சந்ததி இவருக்கே..

(அம்மாக்கள் தவிப்பு..அதானிங்கே)
உன் பேனா என்ன தூரிகையா
இத்தனை வண்ணம் எண்ணம் தெளிக்கிறதே