Wednesday, August 29, 2018

பிடிக்கும்..பிடிக்கும்..

பிடிக்கும்..பிடிக்கும்..

அடித்து அணைத்த அலாரம் பிடிக்கும்
அப்போது காணும் கனா பிடிக்கும்.
சுப்ரபாதம் பிடிக்கும்..பாடும்
சுப்புலக்ஷ்மி அம்மா பிடிக்கும்.
இழுத்துப் போர்த்தி தூங்கப் பிடிக்கும்..அங்கே
இழுக்கும் காபி மணம் பிடிக்கும்

என் வீட்டுத் தோட்டம் பிடிக்கும் ..அங்கே
கூடு கட்டும் குருவி பிடிக்கும்.
கரைந்துண்ணும் காகம் பிடிக்கும்..அங்கே
காத்திருக்கும் அணில் பிடிக்கும்.

கொள்ளை அழகு கனகாம்பரம் பிடிக்கும்...அங்கே
 துரத்தும் பட்டாம்பூச்சி பிடிக்கும்.
பக்கத்து வீட்டு மாங்காய் பிடிக்கும்..அதை
பறித்துத் தரும் பாட்டி பிடிக்கும்.

கொட்டும் மழை பிடிக்கும்..அதில்
குட்டிக் கப்பலோட்டப் பிடிக்கும்.
ஐந்து ஓட்டையிட்ட அடை பிடிக்கும்..அதோடு
ஆனியன் ரவாவும் பிடிக்கும்(திருச்சியில்ல நாங்க)

அரட்டை ரொம்ப பிடிக்கும்..அதோடு
நொறுக்கும் தீனி பிடிக்கும்..

வாழ்க்கை இதை மிகப் பிடிக்கும்..அதில்
வரும் சவால்கள் அதைவிடப் பிடிக்கும்..
என் சிறு உலகம் பிடிக்கும்..அதில்
சிறகடிக்கும் நட்புப் பறவைகள் பிடிக்கும்

பிடிக்குமென்பது பல இருக்கு
பிடிக்காததைப்  பேசியே..
பொழுதும் போகுமிங்கே..
நேர்மறைச் சிந்தனையது
நாளும் வழிகாட்ட
நாமும் வாழ்ந்து காட்டுவோம்..
நமக்குப் பிடித்தபடி
நல்லதை அனுபவித்தபடி..

Thanks Saratha Sanal for your thought provoking post.
And Shiv K Kumar Sir's poetic comments

No comments: