Thursday, November 14, 2019

Children's day

Myclik @ mullandiram.. A small village with big hopes..
Happy children's day

போட்டோ புடி என்னை'
பொங்கும் ஆசையில்..என்
பின்னே வந்தாள்.
பிரகாரம் சுற்றினாள்.

நில்லென்றேன்..நின்றாள்..
சிரியென்றேன் சிரித்தாள்..
நல்லா வருமா..என்றாள்
நண்பர்களும் சேர்த்தாள்.

உடுத்திய சீருடை..
உணரவைத்தது..
உள்ளூர் பள்ளியில்
ஒண்ணாம் வகுப்பென்று

வீடெது என்றேன்..
விரல் நீட்டி காட்டினாள்
கோயில் கோபுரம் முன்
குடிசை எனதென்றாள்..

பெயர் கேட்டேன்..
பூரிப்புடன்..
பிரியா..
விஷ்ணுப் பிரியா என்றாள்.

விலாசமிலா ..இவ்
விண்மீன்கள்..
விண்ணை எட்டட்டும்..
வெற்றி வாகை சூடட்டும்..

அடுத்த முறை போகணும்..
அவளிடம் கொடுக்கணும்..
அவளின் முக மலர்ச்சியை..
அழகா படம் பிடிக்கோணும்..

பட்டது மனதில்..
பளிச்சென்று உண்மை
படிக்கும் இவளோ..
படு அதிர்ஷ்ட்டக்காரியென்று

விட்டேன் ஊரை..
வழியில் கண்டேன்..
வழி பிறக்கா
வாண்டுகளை..

மாறுமெப்போ இந்நிலை..

பூ ..கட்டும்.. பூக்கள்
பூமி ஆளட்டும்..
பாத்திரம் விளக்கும்..
பிஞ்சுக் கரங்கள்..
பாரை வெல்லட்டும்..

தம்பியை தாலாட்டும்..
தளிர்கள் பலவும்..
தடையை உடைக்கட்டும்..
தரணி ஆளட்டும்..

கூலிக்காக..
பள்ளி மிதிக்கா..
பாலகரும்..
காலணி துடைக்கும்..
கறுத்த கரங்களும்
காவியம் படைக்கட்டும்

சின்ன பசங்களெல்லாம்
சிறை உடைக்கட்டும்..
சிட்டாய்ப் பறக்கட்டும்
சீறாய் வாழட்டும்..

நமக்கும் பங்குண்டு..
நல்லதை செய்வோமே..
நாலு காசு தருவதை விட்டு
நம் நேரமதை தருவோமே..
நல்ல சமுதாயம் படைப்போமே..

No comments: