Monday, September 10, 2018

வேடிக்கை மனிதர்கள்

வேடிக்கை மனிதர்கள்

வேடிக்கை மனிதரை
வலைவீசி தேடாதே
வீண்சிரமம் ஏனுனக்கு
வேறெங்கும் தேடியேதான்..
நாடித்தான் ஓடாதே
நானிருக்கேன் உன்னுள்ளே
நையாண்டி தான்பேசி
நகைத்தது என்மனமே..!!!


கண்விழித்த வேளை முதல்
கண்ணுறங்கும் வேளை வரை
கண்கட்டி வித்தை காட்டும்
கள்ளமில்லா வேடிக்கை மனம்.

 என்வீட்டு தோட்டத்தில்
ஏராள மலருண்டு
எண்ணமது தோன்றிடுமே
அடுத்தவிட்டு அடுக்குமல்லி
எட்டித்தான் பறித்திடவே !!!!
வேடிக்கை மனமிதுவே..

 
கொத்தவால் சாவடி சென்றே
மொத்தமாய் விலை பேசினாலும்
கொத்தமல்லி கொசுறு தந்த
கடைக்காரன் பேர் சொல்லி
கொடைவள்ளல் பட்டம் சூட்டும்..
வேடிக்கை மனமிதுவே..

  பிள்ளைகளே உலகமென்றே
பிணைந்தே கிடக்குமே-அவர்
சுண்டுவிரல் பிடித்தே
தண்டையுடன் நடந்தவேளை
கண்டதுவே ஓர்சுகமே -அவர்
 சிரிக்கும் வேளை
தெறிக்கும் கண்ணீரும்
சென்றிதயம் சுட்டிடுமே
வேடிக்கை மனமதுவே

 
அடித்தே அடக்க எண்ணும்
அடம் பிடிக்கும் பிள்ளைதனை
லாடம் அடித்த குதிரையாய்
பாடம் படிக்கும் பிள்ளைக்கும்
ஓட்டமே வெற்றிக்கு வித்தென
ஊட்டியே தான் வளர்க்கும்
வேடிக்கை மனமதுவே


 காலதோஷமது கழிந்திடவே
 கோயிலது சென்றிடினும்
கதவோரம் கழற்றிய 
காலணியது காணாமல்
களவாகி விடுமென்ற
கலக்கமுடன் கைக்கூப்பி
 கடவுளை தொழுதிடும்
வேடிக்கை மனமதுவே


நாடிய வளமெலாம்
நலமாய் கிட்டிடவே
கோடிகள் பலசேர
வரமொன்று கோரியே
கேடுதரும் முன்வினைகள்
 தீங்கின்றி நீங்கிடவே
நாடிபிடி ஜோசியரை
 தேடித்தான் ஓடிடுமே
வேடிக்கை மனமதுவே

 இப்பிறவி போதுமென்றே
இறைவனடி நாடிடுமே
இறைஞ்சிடுமே எப்போதும்
இன்னல் இல்லா
இன்னொரு பிறவி
இனியேனும் தாஎன்றே
வேடிக்கை மனமதுவே..


வேடிக்கை வாழ்க்கையிது
தத்துவங்கள் இங்குண்டு
கற்பனைகள் பலவுண்டு
கனவுக்கும் மடலிட்டு
நல்லசேதி ஒன்று
நாளையாவது நல்கு நீ -என்ற
நம்பிக்கை மனமுண்டு.


வயதொரு பொருட்டில்லை
படிப்பொரு தடையில்லை
ஒளிந்து கிடந்திடுமே
ஒவ்வொரு மனிதனுள்ளும்
ஒன்றிபோன இயல்புடனே...
வேடிக்கை மனமிதுவே..

No comments: