Thursday, January 2, 2020

எண்பதிலும் ஆசை வரும்

#குறுங்கதைப்_போட்டி
எண்பதிலும் ஆசை வரும்

' இம்புட்டு நேரமாச்சு..இதோ வரேன்னு போன பேரப்புள்ளையை இன்னும் காணுமே.'
மருமவளுக்கு தெரிஞ்சா ஊரைக் கூட்டி , என்னை உண்டு இல்லனு ஆக்கிடுவாளே..
முனீஸ்வரா.. புள்ளையை பத்திரமா வூட்டுக்கு கொண்டு வந்து சேர்த்துடப்பா..'
மனசு பதை பதைக்க தங்கம் பாட்டி திண்ணையில் நிலை கொள்ளாமல் உட்கார்ந்துருக்கா..

எல்லாம் இந்த டீவியால் வந்தது. சீரியல் பார்த்துக் கிட்டு சும்மா இருக்காம..
நடுவில் வரும் விளம்பரத்தை பார்த்து பேரனிடம்..' இதெல்லாம் நமக்கு கொடுத்தே வைக்கலப்பா..இப்படியே இந்த ஜன்மம் போய்டும்' புலம்பியபடி உள்ளே சென்றது தான் காரணமாப் போச்சு.

அவள் பேசியதைக்  கேட்டபடி இருந்த பட்டிணத்திலேர்ந்து ஊருக்கு வந்திருந்த பேரன் சைக்கிளை எடுத்து விருட்டுனு கிளம்பிட்டான் . பாட்டிக்கு ஒன்றும் புரியவில்லை. ஐயோ தப்பா எதுவும் சொல்லிட்டோமோ என்று தவிக்க ஆரம்பித்தாள்.

ஆசை யாரை விட்டது. கேட்டிருக்க வேண்டாமோ..தெய்வமே..எப்புடி இந்தப் புள்ளையப் போய்த் தேடுவேன் என்று விசனத்தில் திண்ணையில் கவலையோடு இருப்புக் கொள்ளாமல் உட்கார்ந்திருந்தாள்.
யார்க்கிட்டயாவது சொல்லி தேடச் சொல்லலாமா..?
அவங்க அம்மாவுக்கு போன் போட்டு சொல்லிடலாமா..?
'என்ன பாட்டி..வெளியே உட்கார்ந்திருக்கேனு கேக்கறவங்களுக்கு பதில் சொல்ல சொல்ல இன்னும் படபடப்பு கூடிப்போச்சு.
உட்கார்ந்தபடியே அப்படி கண்ணசர்ந்தாள்..

" பாட்டி..பாட்டி..'தூக்கி வாரிப் போட்டு முழிப்பு வந்து பார்த்தபோது..
கண்முன்னே பேரன்.

"ராசா..எங்கப்பா போய்ட்ட? ' அழுகை யும் கோபத்தோடும் அவள் கேட்க..
சைக்கிள் காரியரில் இருந்து மெதுவாக அந்த பெரிய கலரான டப்பாவை எடுத்து

"இந்தா பாட்டி  நீ கேட்டது'..

திறந்து பார்த்தவளுக்கு ஆச்சரியம்.பார்க்கவே கொள்ளை அழகு. அவள் நினைச்ச மாதிரியே அலங்காரத்துடன்.

" சூடு ஆறதுக்குள்ள சாப்பிடு' பேரன் சொல்லச் சொல்ல.

 பாசத்தோடு பார்த்தாள் பேரனையும் அவன் வாங்கி வந்த பிட்ஸாவையும்.

No comments: