Pratilipi story
நினைவோ ஒரு பறவை.. 2011
கிளியைப் புடிச்சு கூண்டில் அடைச்சு
" அம்மா..எனக்கு நாய் வளர்க்கணும்னு ' என் சின்ன பொண்ணு சொன்னப்போ..
எனக்கு..'ஆத்தா ..ஆடு வளர்த்துச்சு..கோழி வளத்துச்சுனு' பதினாறு வயதினிலே கமல்
மாதிரி .. ..டயலாக் நினைவுக்கு வர..
' கண்ணே..மணியே..உன்னை வளர்க்கறது போறாதா.. புது வேலை எல்லாம் கொடுக்காதே டா' ஒரே கெஞ்சலும் கொஞ்சலும்..
நான் இப்படி ஒரு ட்ராக்கில் போக.." அம்மா..அக்ஷயா வீட்டில் அழகா ஒரு குட்டி இருக்கும்மா..ஸ்ருதி கிட்ட..சூப்பரா சிங்கம் போல்..சிங்கம் போலனு ஒண்ணு இருக்கும்மா..இல்லாட்டி..வோடஃபோன் குட்டி வாங்கலாமா?.
வோட ஃபோன் குட்டியா..விலை என்ன தெரியுமா..எனக்கு வெறியே பிடிக்க ஆரம்பித்த கால கட்டம்..
" நாய்க் குட்டி வந்தால் எத்தனை வேலை தெரியுமா..வாக்கிங் கூட்டிண்டு போகணும்..செளகரியமா அதுக்கு ஒரு மரம் இல்ல..கார் அடியைக் காட்டணும்..
பெடிக்ரீ கொடுக்கணும்...முடியை ட்ரிம் பண்ணணும்..குளிச்சு விடணும்..டாக்டர்கிட்ட கூட்டிண்டு போகணும்' மூச்சு விடாமல் SPB போல நான் பேச..
" அவ்வளவுதானே ம்மா..எனக்கு பண்றதை அதுக்கும் சேர்த்து பண்ணிடு ..அவ்வளவு தானேனு" குண்டைத் தூக்கிப் போட..
ஐயா..மாட்டிக்கிட்டாரு..வசமா மாட்டிகிட்டாருனு பாட்டு மனசில் ஓட..
மிக நீண்ட நாள் யோசனைக்குப் பிறகு..
' நாயெல்லாம் வேண்டாம்டா..கிளி வளர்ப்போமா?..என்று சமாதானப் புறாவை அனுப்ப..
நாயிடமிருந்து தப்பிச்சு..கிளியிடம் நானே போய் மாட்டிக் கொண்டேன்..
Pet shop ல் போய் " ஜோடிக் கிளி எங்கே ..பக்கத்திலேனு' தேட ஆரம்பிக்க..
மூக்கும் முழியுமா ஒரு கிளி ஜோடி ..இப்ப அந்த ஜோடிக்கு ஒரு ஜாடி..சாரி..சாரி..ஒரு கூண்டு வாங்கணுமே..' கிளியைப் புடிச்சு கூட்டில் அடைச்சுனு' துக்கம் தொண்டை யடைக்க..
' ஜோடிக் கிளிகள் ஜாலியாக எங்க வீட்டுக்குள் வந்தனர்.
கொள்ளையழகு இரண்டும்..
ஜாலியா பேசிப்பாங்க..சில நேரம் சண்டை மண்டை பிச்சுக்கும்..சில நேரம் உர் உர்ருனு ..ஊடலும் கூடலும் அந்தக் கூண்டுக்குள்ளே..
சாப்பாடு குடுக்கறது முதல் பிரச்சனை. காரட் போடறதா..காரமான பச்சை மிளகாயா..ப்ரெட்டா..பிஸ்கட்டா..தயிர் சாதமா..ரொட்டியா..நூடுல்ஸானு ..ஒரே குழப்பம்.
நம்ம வீட்டு குழந்தைகள் போலத்தான்..ஒரு நாளைக்கு பிடிச்சது..அடுத்த நாள் தொடாது..
மம்மினு கூப்பிடும்..சொக்கிப் போய்டுவேன்..
என் பொண்ணு பேர் சொல்லிக் கூப்பிடும்போது.."கிளியே கிளியே..கிளியக்கா..கூட்டுக்குள்ள யாரக்கானு" சுஹாசினி ஆகிடுவேன்..
யாரோ கூட துணைக்கு இருக்கற மாதிரி ஒரு எண்ணம்..வடக்கில் இருந்ததால்..குளிருக்கு அதன் கூண்டிலும் கம்பளி போர்த்தி..பொத்திப் பொத்தி வளர்த்தோம்.
ஒரே ஒரு விஷயம்..அதோட கழிவுகளை சுத்தப்படுத்தும் போதுதான்..கோபம் வரும்..
இப்படி..கிளியும் நாங்களும் ஒரே குடும்பமாக..
இருந்தாலும் எனக்கு ஒரு உறுத்தல்..
ஆகாசத்தில் பறக்க வேண்டியதை அடைத்து வைத்திருக்கோமே என்று..
என் பெண்ணிடம் சொன்ன போது..
" அம்மா..அது நம்மளோட சந்தோஷமா தானே இருக்கு..நீ வீணாக ஏன் டென்ஷன் ஆகிறே" என்று சமாதானம் சொல்வாள்.
அன்று..பொங்கல் தினம். பண்டிகை கொண்டாட என் பெண்ணின் வட இந்தியத் தோழி தோழர்கள் எல்லாரும் ஆஜர்.
எல்லாரும் முக்கியமாக ஒரு ஃபோட்டோ கிளிக் கூண்டோடு எடுத்துக் கொண்டாச்சு..
மொட்டை மாடியில் அவர்கள் எல்லாரும் ஆட்டம் போட்டபடி இருக்க..கிளிகளும் ஜாலியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தன..
"அம்மா..அம்மா..சீக்கிரம் மேலே வாயேன் '
என் பெண் குரல் கேட்கவும்..
என் சப்த நாடியும் ஒடுங்கி..யாருக்கு என்ன ஆச்சோ என்று படபடப்பில் ஓடினேன்..
அங்கே..நான் கண்ட காட்சி..
கூண்டைச் சுற்றி குழந்தைகள்..
இன்னும் படபடப்பு அதிகமாக..
ஐயோ..கிளிகளுக்கு என்ன ஆச்சோனு என் லப்டப் அதிகமாக..
"ரெடி..ஒன்..டூ..த்ரீ.."என்று கோரஸில் இவர்கள் கத்த..
கூண்டைக் கையில் தூக்கி.. என் பெண்...மெதுவாக அதன் கதவைத் திறக்க..
படபடவென்று அடித்துக் கொண்டு..நீ முந்தி நான் முந்தி என இரண்டு கிளிகளும் விண்ணை நோக்கி "சிறகுகள் விரித்தே..போகிறேன்..நான் போகிறேன் "
என்று விட்டுப் பிரிந்து வந்த குடும்பத்தை தேடிப் பறக்க..
ஒரே கைத்தட்டு மழை..
' இப்போ..சந்தோஷமா அம்மா..' என் பெண் கேட்டபோது ..கண்ணோரேம் துளிர்த்த கண்ணீர்..
" இவள் வளர்ந்து விட்டாள்'..நிம்மதி பெருமூச்சில் நான்..
பல நாட்கள்..எங்கள் வீட்டு மொட்டை மாடிக்கு சென்று..மேலே பறக்கும் கிளிக்கூட்டத்தின் நம் வீட்டுக் கிளி எது என்று தேடும் வேளையில்..
" நாம இங்கே தானே இருந்தோம்' என்று நம் வீட்டைத் தாண்டும்போது நினைத்துக் கொள்ளுமோ என்று ஒரு ஆதங்கத்துடன் அவர்கள் ஆரவாரத்தை ரசிப்போம்.
கிளிப் பேச்சு ..பிறகு கேட்கவே இல்லை..