Sunday, March 29, 2015

தங்கமணி…

வித்தை உன்னுள் உள்ளதென்று
அத்தையவள் சொன்ன வேளை
சித்தம் சிதறியதோ என்றே
சத்தம் மிட்டு சிரித்தேனே

சிந்தையினை சீராய் செலுத்து
விந்தை பல காண்பாய் என்றே
விதை ஒன்றை விதைத்தாளே
கவிதைக் கனலதை மூட்டினாளே

படைத்தவனுக்குத் தானா பாசுரங்கள்…?
அடைபட்ட  அடையாள மொன்றை
தடை யுடைத்து வெளிக் கொணர்ந்த
தாயுமான தங்கமணிக்கு தலைவணக்கம்.


Tuesday, March 24, 2015

முருகனை நினை மனமே



பச்சை மயில் வாகனனே
பழனி மலை பாலகனே
பிச்சை ஏந்தும் பக்தர்தம்
இச்சை ஈந்து அருள்பவனே..

பாகமது கிட்டா வேளை
கோபமது கோட்டைத் தாண்ட
கோபுரம் ஏறி நின்றாய்
கோதண்ட பாணி ஆனாய்.

சித்தராம் போகர் அன்று
செதுக்கிய சிற்பம் நீயே
சக்திகிரி மலை நின்று
பக்தர் பாவம் தீர்ப்பவனே..

முத்துக் குமரன் நீ
மூவுலகும் ஆள்பவன் நீ
சங்கத் தலைவன் நீ
தங்க வடிவேலன் நீ.

அழகன் உனை வேண்ட
ஆறாய் மக்கள் பெருக்கிங்கே
அருமுகன் அருள் பார்வை
ஆற்றுமே தீரா நோயும்.

சுமந்து வந்த காவடிகள்
சுகம் பெறவும் செய்யுமே
சுருட்டி இழுத்த தங்கத்தேரும்
சூழும் வினை தீர்க்குமே..

குலதெய்வம் உனை வேண்ட
குடும்பம் சூழ வந்தேனே
குறை எல்லாம் தீர்த்தெங்கள்
குடி விளங்கச் செய்வாயே.

திரு ஆவினன்குடிப் பெம்மான்
திரு அருள் புரிவாயே
திரு நீறு அணீந்தோமே
வருந் துயர் காப்பாயே

மருந்தாம் உன் மந்திரமே
தருவாய் தயை புரிவாய்
தரிசனம் தந்து நீயும்
கரிசனம் காட்டு கந்தா..
(தரு-மரம்)



Thursday, March 19, 2015

தங்கமணி …. எங்கே நீ?



தங்கமணி ….
எங்கே நீ?
ஓராண்டு ஓடியதே
ஒருநொடியும் போலத்தான்…

தாயும் தந்ததையும்தான்
தேடித்தான் வைத்தனரோ
தன்னிச்சையாய் இட்டாரோ
தங்கமணி உன் பெயரை

இடியாய் இடைஞ்சல்கள்
கடுமையான காலகட்டம்
கடுஞ்சொல் ஒன்றுகூட
கண்டதில்லை உன் நாவும்.

காலம் மாறியது
கவிதாயினி ஆனாய் நீ
கணினி யுலகினிலே
கொடிகட்டிப் பறந்தாயே

கயிலாயவன் கருணை
கவிதையிலே கண்டாயே
மையல் கொண்டாயே
பைந்தமிழின் பண்மீது

வலைவழிப் பாடம்
சளைக்காமல் கற்றாயே
தலையிலே கங்கைகொண்டான்
கலை நயமாய் உன்கவிதையிலே

சொந்தமது கூடியது
சந்தவசந்த பிணைப்பாலே
மந்தமான வாழ்க்கையுமே
பிந்தித்தான் ஓடியதே


பிறை சூடும் பெம்மானை
சிறை இட்டாய் உன்பாட்டில்
பிரதோஷ நாளினிலே
பரமனுனை அழைத்தானே

காரைக்கால் அம்மைஎன்று
கற்றறிந்தோர் புகழ்ந்தாரே
மற்றுமொரு பிறவி எடு
மீதமுள்ள கவிபாட

கண்ணின் மணி போல
காத்தாயே எம்மையுந்தான்
காணாமல் போனாயே
தங்கமணி.. எங்கே நீ


Monday, March 16, 2015

பரீட்சைக்கு நேரமாச்சு- 4


கணக்குப் பரீட்ச்சையின்று
கலங்காதே கண்ணே நீ

தலையணையாய்ப் புத்தகங்கள்
தலைசுத்தும் கணக்குகளும்
பிழையின்றி செய்திடவே
பிள்ளையாரை வேண்டுவனே..

வரைபடமும் வடிவியலும்
வளைகோடும் நேர்கோடும்
வளையாது வரைந்திடவே
வேலவனே அருள்வாயே..

மனப்பாடம் செஞ்சுவைத்த
கன அடியும் பரப்பளவும்
நினைவினிலே வந்திடவே
வாணியுனை வேண்டுவனே

பிணக்கிங்கே கணக்கென்ற
மனக்கணக்கை மாற்றியிங்கே
மனதுவைத்து படித்தாலே

மாமலையும் ஓர்கடுகாம்..

Friday, March 13, 2015

பரீட்சைக்கு நேரமாச்சு -3




இரண்டாம் மொழியாம்

இந்திப் பரீட்சையின்று..

இலக்கணமும் இலக்கியமும்

இயல்பாக அழகாக…..

ஈரடிச் செய்யுளிங்கே

ஈர்க்குதே காந்தமென…

தாகூரின் தங்கவரிகள்

தலைநிமிரச் செய்திடுதே

கபீரிவரின் கவிதைகளோ

களிப்பின்பம் ஊட்டிடுதே..

வாழ்க்கை வரலாறுகளோ

வாழும்நெறி சொல்லிடுதே


படைப்பாற்றல் சோதிக்க

பாகமொன்று உண்டுங்க 

கட்டுக்கதை எழுதாமல்

கட்டுரையை எழுதிடுங்க..

பிட்டுபிட்டு வையுங்களேன்

புரட்சியான சிந்தனையை

எட்டிக்காய் இல்லங்க 

எகிறியுமே  ஓடாதீ ங்க  

கிட்டுமுங்க  மதிப்பெண்ணும்

நாட்டமுடன் படித்தாலே..

இந்தியென்ன தமிழென்ன

இன்பமுடன் படியுங்க.

இந்தியாவின் குடிமகனாய்

இறுமாந்து நில்லுங்க....

Tuesday, March 10, 2015

பரீட்சைக்கு நேரமாச்சு -2


 

இரண்டாவது பரீட்சை இன்று

இரண்டானது வீடு இங்கு

 

வரலாறும் பூகோளமும்

வகைவகையாய்  வரைபடமும்

குடியியலும் பொருளியலும்

குவிந்தனவே பாடங்களாய்..

 

ஆழமாய் அணுகினாலே

ஆர்வந்தான் பொங்கிடுமே

அழகான அவணிதனை

ஆராதிக்கத் தோன்றிடுமே…

 

ஆடுபோல   மேய்ந்தபடி

ஆசையொன்று இல்லாமல்

அங்குமிங்கும் படித்ததனால்

அல்லல்தான்  மிச்சமிங்கே..

 

சமூகவியல் பாடமிதை-

சங்கடமாய் நினையாமல்-வரும்

சந்ததிகள் உணர்ந்தாலே

சமூகமிங்கே உயருமன்றோ?

 

Monday, March 9, 2015

பரீட்சைக்கு நேரமாச்சு


பத்தாம் வகுப்பு பரீட்சை இன்று
பத்தாம் வகுப்பு பரீட்சை இன்று
பதற்றத்தில் இங்கே வீடுகள் பலவும்
பத்தாம் வகுப்பு பரீட்சை என்று

பாலை சாப்பிடு பாதாம் சாப்பிடென
பார்த்து வளர்த்த பச்சைக் குழந்தையின்
பத்தாம் வகுப்பு பரீட்சை இன்று.
பத்தாம் வகுப்பு பரீட்சை இன்று.

பட்டியல் போட்டு படிக்க நினைத்தும்
பத்தலயெ நேரம் என்பாடம் முடிக்கவென
புலம்பும் புதுயுக என் பெண்னவளின்
பத்தாம் வகுப்பு பரீட்சை இன்று.

பாங்குடன் படித்த பாடமெல்லாம்
பதிய வைத்த விதி முறையுடனே
பட்டென பதிலாய் எழுதனுமே என்று
படபடப்பில் பெற்ற உள்ளமிங்கே..


பத்தாம் வகுப்பு பரீட்சை தானே
பதட்டம் ஏனென்று ஒரு பக்கம்
பட்டம் வாங்க முதல் படியாய்
பத்து தானே பாதை காட்டும்

பாதை ஒன்று தெரிந்துவிட்டால்
பதைபதைப்பும் கொஞ்சம் குறையுமடா..
பத்தாம் வகுப்பு பரீட்சையடா
பார்த்து நன்றாய் எழுதுங்கப்பா