Thursday, March 19, 2015

தங்கமணி …. எங்கே நீ?



தங்கமணி ….
எங்கே நீ?
ஓராண்டு ஓடியதே
ஒருநொடியும் போலத்தான்…

தாயும் தந்ததையும்தான்
தேடித்தான் வைத்தனரோ
தன்னிச்சையாய் இட்டாரோ
தங்கமணி உன் பெயரை

இடியாய் இடைஞ்சல்கள்
கடுமையான காலகட்டம்
கடுஞ்சொல் ஒன்றுகூட
கண்டதில்லை உன் நாவும்.

காலம் மாறியது
கவிதாயினி ஆனாய் நீ
கணினி யுலகினிலே
கொடிகட்டிப் பறந்தாயே

கயிலாயவன் கருணை
கவிதையிலே கண்டாயே
மையல் கொண்டாயே
பைந்தமிழின் பண்மீது

வலைவழிப் பாடம்
சளைக்காமல் கற்றாயே
தலையிலே கங்கைகொண்டான்
கலை நயமாய் உன்கவிதையிலே

சொந்தமது கூடியது
சந்தவசந்த பிணைப்பாலே
மந்தமான வாழ்க்கையுமே
பிந்தித்தான் ஓடியதே


பிறை சூடும் பெம்மானை
சிறை இட்டாய் உன்பாட்டில்
பிரதோஷ நாளினிலே
பரமனுனை அழைத்தானே

காரைக்கால் அம்மைஎன்று
கற்றறிந்தோர் புகழ்ந்தாரே
மற்றுமொரு பிறவி எடு
மீதமுள்ள கவிபாட

கண்ணின் மணி போல
காத்தாயே எம்மையுந்தான்
காணாமல் போனாயே
தங்கமணி.. எங்கே நீ


No comments: