Saturday, May 30, 2020

கடிதம்

#எழுதுகிறேன் ஒர் கடிதம்- சீஸன் 3
2 வது கடிதம்

அன்புள்ள ஆனந்திக்கு

அம்மா எழுதுவது. புது ஊர் எப்படி இருக்கு?
கடையெல்லாம் பக்கத்தில் இருக்கா? குழந்தைகளுக்கு புது இடம் பிடிச்சிருக்கா?
ஸ்கூல் போய்ட்டு வருவது வசதியா இருக்கா?
அங்கே குளிர்காலம் முடியட்டும். நானும் அப்பாவும் வந்து கொஞ்ச நாள் இருக்கணும்னு ஆசையா இருக்கு.

நீ இருக்கிற ஊரில் தான் இப்போ நம்ம சுப்பு அத்தை இருக்கா. அங்கே புதுசா , நிறைய வசதியோட முதியோர் இல்லம் ஒண்ணு இருக்கே. அதிலதான் இப்போ இருக்கா. மணி,ரவி ரெண்டு பேரும் அமெரிக்காவில் செட்டில் ஆகியாச்சு. மீனா துபாய்ல் இருக்கா. அத்திம்பேர் தவறிப் போனப்பறம் பாவம் அத்தையை இங்கே பார்த்த்துக்க யாரும் இல்ல. பெரிய வீட்டில் தனியாவும் இருக்க முடியாது. அப்பா கூட இங்கே எங்களோட வந்து இருக்கச் சொன்னா. ஆனா..வீட்டை வித்து எல்லாரும் பங்கு போட்டு இப்போ அத்தையை உங்கூரில் அந்த இல்லத்தில் சேர்த்துட்டு போய் இருக்கா.

நீ அங்கே வந்ததை சொன்னப்போ அத்தை ரொம்ப சந்தோஷப்பட்டா.
உனக்கு இது பிடிக்காதுனு தெரியும். இன்னும் பழசையே நினைச்சு உறவுகளை ..அதுவும் வயசானவர்களை நாம உதாசீனப் படுத்த கூடாது.

அந்த நாள்ல எல்லாரும் அத்தையை சுத்தி இருந்த காலத்தில் உன்னை  'ஒத்தை பொண்ணு நீ..உறவெல்லாம் உனக்கென்ன தெரியும்'னு எதோ ஒரு வேகத்தில் சொன்னதை இன்னும் மனசில வெச்சுண்டு உழப்பிக்க கூடாது. அந்த வார்த்தை அவா சொன்னப்பறம் நீ அத்தை கூட பேசறத நிறுத்தி பல வருஷமாச்சுனு எனக்கு தெரியும்.

தள்ளாமையை விட தனிமை ரொம்ப கொடுமை ஆனந்தி.
பழசெல்லாம் மறந்துட்டு அத்தையை இந்த வாரம் போய் பார். வாய்க்கு பிடிச்சா மாதிரி எதாவது பண்ணி எடுத்துண்டு போ.
முடிஞ்ச போது ஒரு ரெண்டு மூணு நாள் கூட்டி கொண்டு வந்து உன்னோட வெச்சுக்கோ.
நீ போய் பார்த்துட்டு வந்த விவரத்திற்கு கடுதாசு போடு. மாப்பிள்ளையை விசாரித்தாக சொல்.
கண்டிப்பா நீ போவேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.
அன்புடன்
அம்மா.

No comments: