#நிலாமுற்றம்_கதைக்களம்..
#மந்திரக்கதை..
#வள்ளி_காட்டிய_வழி
மதியம் 1 மணி..
செங்கல்பட்டிலிருந்து பீச் வரை செல்லும் மின்சார ரயில் ..தாம்பரம் ஸ்டேஷனில் சிறிது நேரம் இளைப்பாற நின்றது..
"வள்ளி..ஓடிப்போய் அங்கன பைப்பிலேர்ந்து இந்த பாட்டில்ல தண்ணி ரொப்பியாந்துரு..பக்கத்திலே குந்திகினு இருப்பாரே. அந்த சமோஸா விக்கற அண்ணன் கிட்ட ரெண்டு வாங்கியாந்துரு..'
வண்டியிலிருந்து இறங்கி ஓடினாள் வள்ளிக் குட்டி..
வள்ளிக்குட்டி..
அவள் அம்மாவுடன் தினமும் இதே ட்ரெயினில் காலையிலிருந்து இரவு வரை..அவள் அம்மா வேணியுடன் பழ வியாபாரம் செய்வாள்.
இந்த நேரம் விட்டால் அப்புறம் சோறு தின்ன முடியாது..இந்தா..துன்னு..
வேணி அவள் தட்டை நிரப்பிக் கொடுக்க..
"அம்மா..தாயே..வயிறு பசிக்குதம்மா.."..
ஒரு வயதான தாத்தாவின் இந்தக் குரல்..
வள்ளிக் குட்டியை என்னமோ செய்தது..
கடகடனு எழுந்தவள்..
' இந்தாங்க தாத்தா..சாப்பிடுங்க'..
அவள் குரலில் இருந்த கருணை..
' ரொம்ப நன்றி கண்ணு..உன்னோட சோறைக் குடுத்துட்டியே கண்ணு'..
அவர் சொல்ல..
ஐயோ தாத்தா..எங்கம்மா வேற சோறு எனக்கு தரும்..உங்களுக்கு தெரியாதா என்ன?..ஒவ்வொரு 🍛 அரிசியிலும் அவரவர் பெயர் இருக்குமாம் உண்மையா தாத்தா..உங்களுக்குத் தான் இது..'
துள்ளிக் கொண்டு ஓடி விட்டாள்.
ஏம்புள்ள சோறு எங்க?..கேட்ட அம்மாவுக்கு அதோனு..தாத்தாவைக் காட்டினாள்..
மின்சார ரயில் கிளம்ப.." அக்கா..சூப்பர் டேஸ்ட்க்கா.." கொய்யாப்பழத்தை அங்கிருந்த பயணிகளிடம் நீட்டிக் கொண்டிருந்தாள்.
அந்த ரயிலில் லேடீஸ் கம்பார்ட்மெண்டில் பலருக்கும் வள்ளி செல்லக் குட்டி..
பிறந்தநாள், வீட்டு விசேஷம் என்றால்..வள்ளிக்கு குட்டி குட்டியாக பரிசும் உணவும் கொண்டு வந்து தருமளவுக்கு.. வள்ளி அந்த ரூட்டில் பிரசித்தம்.
"அம்மா..கொஞ்சம் ஜாஸ்தி சோறு வைம்மா..இன்னிக்கும் அந்த தாத்தா வந்தாங்கனா..தரலாம் இல்ல.."..
வேணியும் அவளும் அரக்க பரக்க ரெயில் ஏற..
தாம்பரம்..
" அம்மா..பசிக்குது'..
அதே தாத்தா..புளி சோறு கை மாற..அவர் ப்ளாட்பார்மில் நடந்து ..ஒரு இடத்தில் உட்காருவதைப் பார்த்து..
அம்மா..இரு வரேன்..
ஓடினாள்.
" இந்தாப்பா.சாப்பிடு'..
தாத்தா..தன் கையிலிருந்த தட்டை..அங்கே நடக்க முடியாமல் வண்டியில் உட்கார்ந்திருந்த ஒரு பையனிடம் கொடுப்பதை பார்த்தாள் வள்ளி..
மூச்சு வாங்க ஓடி வந்தவள்.." தாத்தா..உங்களுக்கு பசிக்குதுனு சொன்னீங்களே?'..கேட்க..
"இது என் 👦 பையன் வீரா.. என் மனைவி இவன் பொறந்ததுமே கண்ணை மூடிட்டா..பிறவியிலேயே கால் ஊனம்'..
அவர் சொல்வது பாதி புரிந்து பாதி புரியாமல் இருக்க..
அங்கே ஒரு கப்பில் அரிசியும் , ஒரு சில கண்ணாடி குமிழ்களும், கீ செயின்களும் இருப்பதைக் கண்டாள்..
வண்டி விசில் கொடுக்கவே. ஓடிப் போய் ஏறிக் கொண்டாள்..
அடுத்தநாள்.. தாத்தாவின் தட்டை நிரப்ப..
"வள்ளி..இந்தா கண்ணு.. " நடுங்கிய கைகளுடன் அவர் அவள் கையில் எதையோ திணிக்க...
ஒரு கீ செயின்...அதன் நுனியில் கண்ணாடிக் குமிழில்.வள்ளி என்று அவள் பெயரை சிவப்பு நிறத்தில் எழுதிய 🍛 அரிசி ஒன்று..
" இக்குணூண்டு அரிசிக்குள்ள இது என் பேரா..தாத்தா?..துள்ளிக் குதித்து ஓடினாள்.
"அக்கா அக்கா இங்கே பாருங்களேன்..இதுல என் பேர் இருக்கு..'..
அந்தப் பெட்டிக்குள் எல்லாருக்கும் காட்டி மகிழ்ந்தாள்..
தாத்தாவும் வள்ளியும் இப்போ ரொம்ப நெருக்கமானார்கள்..
" தாத்தா..ஒரு அரை மணி நேரம் இவளைப் பார்த்துக்கோங்க..நான் ஒரு சீட்டுப் பணம் கட்டிட்டு ஓடியாந்துடறேன்..'..
தாம்பரம் ப்ளாட்பார்மில் வள்ளியை விட்டு ஓடினாள் வேணி.
"வீரா அண்ணா..நான் சொல்ற பேரெல்லாம் அரிசில எழுதித் தரீங்களா?'..
கீதா,ராணி,பாக்யா,சிவா..
பெயர்களை அவள் அடுக்கிக் கொண்டே போக.....
கடகடவென்று வீரா ஆசையாக செய்து கொடுத்தான்..
அவள் அம்மா வர..ட்ரெயினில் ஏறியவள்..
கீதாக்கா..இந்தாங்க..உங்களுக்கு..
அங்கே உட்கார்ந்திருந்த அவள் ரயில் ஸ்னேகங்களுக்கு கொடுக்க..
" ஐயோ..எவ்வளவு அழகா இருக்கு?..
ஹேய்..வள்ளிக் குட்டி..இந்தா..'..
அவள் கொடுத்த அரிசி கீ செயினுக்கு ஆளாளுக்கு ஐந்து பத்து ரூபாய் என்று கொடுக்க..
'வேண்டாங்க்கா..' என்று நெளிந்தவள்..கை நிரம்பியது.
அடுத்த நாள்..
எப்போதும் போல தாம்பரம் ஸ்டேஷன்..
தட்டில் சோற்றுடன்.. தனக்கு கிடைத்த பணத்தையும் சேர்த்து கொடுத்தாள்..
" உன் கையால சோறு போதும்மா..காசு வேணாம்'..
தாத்தா சொல்ல...
" ஒவ்வொரு அரிசியிலும் அவங்கவங்க பேரு எழுதித் தாங்க வீரா அண்ணா..'..
பழத்தோடு இப்போது அவள் அரிசி கீசெயினுக்கும் ஏக டிமாண்ட்..
உட்கார்ந்த இடத்திலிருந்து..வீரா பணம் சம்பாதிக்க ஆரம்பித்தான்..அவனுக்கு கை வந்த கலை கொண்டு..
ஆனால்..இன்னும் தாத்தாவுக்கு வள்ளிக் குட்டியின் கையிலிருந்து சோறு வாங்கிச் சாப்பிட்டால் தான் திருப்தி..
"தேவதை..ஒரு தேவதை..பறந்து வந்தாள்.."
எங்கோ ரேடியோவில் பாட்டு ஒலித்துக் கொண்டிருந்தது..
அகிலா ராமசாமி
எண் 1892
No comments:
Post a Comment