#நிலாமுற்றம்_கதைக்களம்
#சித்திரக்கதை
#கனவு மெய்ப்படும்
14-03-21
எண்: 1892
" அம்மா..இப்போ எனக்கு கல்யாணம் வேண்டாம்மா..நான் இன்னும் கொஞ்சம் படிக்கணும்னு ஆசைப்படறேன்"..
வசந்தாவின் பேச்சைக் கேட்க அம்மா அங்கே நிற்கவில்லை..
" ஃபர்ஸ்ட் க்ளாஸ் பையன்.குடும்பம் ரொம்ப நல்ல மாதிரியா இருக்கா..நம்ம பொண்ணு அங்கே போய் ஜாம் ஜாம்னு இருப்பாள்'..அப்பா சந்தோஷத்தின் உச்சத்தில் பேசிக் கொண்டிருந்தார்.
" இப்ப என்ன..உனக்கு டீச்சர் ட்ரெயினிங் படிக்கணும் ..அவ்வளவுதானே..தஞ்சாவூரை விட..இன்னும் நிறைய உனக்கு படிக்க சான்ஸ் கிடைக்கும்' ..தங்கை ஜானு அட்வைஸ் மழை பொழிந்தாள். அவள் கவலை அவளுக்கு..இவள் கல்யாணமாகி சென்றால்தானே ஜானுவின் லைன் க்ளியராகும்.
"உனக்கு பின்னால இன்னும் ரெண்டு பேரை கரையேத்தனும்மா.." எழுபதுகளில் இருந்த அப்பாக்களின் அதே வசனம் ..வசந்தாவின் அப்பாவும் பேச ..
தலை ஆட்டி விட்டாள்.
கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாம் நடக்க..வெங்கடேஷை கைப் பிடித்தாள் வசந்தா..
நாக்பூர் அருகே ஆர்டினன்ஸ் ஃபாக்டரி குடியிருப்பில் குடித்தனம் ஆரம்பம்.
ஒரு ரூமும் ஒரு சின்ன கிச்சனும் தான் .
பெரிசாக சாமான் ஒன்றுமில்லை..
இதுவரை பேச்சிலர் வாழ்க்கையில் இருந்ததால் ஒரே ஒரு பம்ப் ஸ்டவ் மட்டும் அந்த குட்டியூண்டு மேடையில் இருந்தது.
தஞ்சாவூர் வீட்டின் அடுக்களை அவளுக்கு நினைவுக்கு வந்தது..
நாள் முழுவதும் அம்மாவின் கைப்பக்குவம் மணக்கும்.
இங்கே..தான் ஒருத்திக்காக என்ன சமைப்பது?
வெங்கடேஷ் காலையில் சென்றால் ..இரவு பத்து மணி ஆகிவிடும் அவன் வீட்டுக்கு வருவதற்கு..
அவனுக்கு மதிய உணவு அங்கேயே காண்டீனில் கிடைத்துவிடும்.
காலையில் கஞ்சி போட்டு குடித்துவிட்டு..
மத்யானம் நிதானமாக சமையல் ஆரம்பித்தால்..பம்ப் ஸ்டவ்வுடன் அவள் பொழுது போய்விடும்.
இதற்கிடையில்..
"மேடம்..மேடம்.." யாராவது கூப்பிடும் குரல் கேட்டாலே பயம்.
தெய்வமே..இவங்க என்ன கேள்வி கேப்பாங்களோ..நான் என்ன பதில் சொல்லுவேனோ தெரியலையே..முருகா..காப்பாத்து '..
ஒவ்வொரு முறையும் வாசல் கதவு தட்டும்
போதும் தவறாமல் வேண்டிக் கொள்வாள்.
ஹிந்தி,மராட்டி என்று கலந்து கட்டி பேசுபவர்கள் ..
இவள் புதுசாய் வந்ததால் ..அவளோடு பேச நினைக்கும் பக்கத்தில் இருக்கும் குவார்ட்டர்ஸ் குடும்பத் தலைவிகள்.
" ஏங்க எனக்கு ஹிந்தியில நாலு வார்த்தை கத்துக் கொடுங்கனு'.. எழுதி வைத்து மனப்பாடம் செய்தால்..
சோதனையாய் ..பக்கத்து வீட்டுக்காரி வந்து மராட்டியில் மழையாய் பொழிந்து விட்டு ..கடைசியில் சைகை பாஷை துணை கொடுக்க..அவர்கள் சம்பாஷனை நடக்கும்.
வலதுகரம் வந்ததுமே..அங்கே நர்த்தனம் ஆரம்பிக்கும்..இவள் சொல்றது அவளுக்கு புரியாது..ஒரே குண்டக்க மண்டக்க தான்..
இவள் ஒவ்வொரு நாள் அனுபவமும் கேட்டு கண்ணில் தண்ணீர் வர சிரிப்பான் வெங்கடேஷ்.
பாரத விலாஸ் போல அந்தக் குடியிருப்பில் எல்லா மொழியினரும் இருக்க...வசந்தா மிரண்டு போனாள்.
ஆச்சு..வந்தது தலை தீபாவளி.
தஞ்சாவூருக்கு அம்மா வீட்டுக்குக் கிளம்பியாச்சு.
எதற்கெடுத்தாலும் "அச்சா..அச்சா'..என்று இவள் சொல்வதைப் பார்த்து அங்கே எல்லாருக்கும் ஒரே சிரிப்பு..
"ஆறு மாசத்தில அச்சா சொல்ல கத்துண்ட்டியா?..ஒரே கேலி எல்லாரும்.
" ஏண்டி..அங்கே இத்தனை நேரம் உனக்கு ஃப்ரியா கிடைக்கிறதே..எதோ படிச்சு கிழிக்கணும்னு சபதம் போட்டுட்டு போனே..இப்போ..அதெல்லாம் அவ்வளவுதானா?..அக்கா .கொஞ்சம் கிண்டலாகக் கேட்டாள்..
புரியாத பாஷை பேசற ஊரில் நான் படற கஷ்டத்தை சொன்னால் இவளுக்கு எங்க புரியும்?..
மூட்டை முடிச்சு கட்டி ஊருக்குப் புறப்பட்டாச்சு..
..
வசந்தாவின் குடும்பமே ஸ்டேஷனில் கண்ணீருடன் அவளை வழி அனுப்ப காத்திருக்க..தஞ்சாவூர் ஸ்டேஷன் கொஞ்சம் வெள்ளத்தில் தான் மிதந்தது.
ட்ரெயின் கிளம்ப சிக்னல் கொடுத்து லேசாக வண்டி நகர ஆரம்பிக்க..
' அப்பா..அப்பா.."..வசந்தாவின் குரல்
"அப்பா..அந்த வண்டியை நிறுத்துப்பா'...
திரு திரு என்று எல்லாரும் விழித்து..
என்னாச்சு இவளுக்கு..சந்தோஷமாகத் தானே ஊருக்கு கிளம்பினாள்..தெய்வமே இது என்ன சோதனைனு ப்ளாட்ஃபார்மில் கை காட்டியபடி நின்றிருந்த அவள் குடும்பம் கலங்க..
' ஐயோ அப்பா..டக்குனு அந்த புக் விக்கிற தள்ளுவண்டிலேர்ந்து எனக்கு ' முப்பது நாளில் இந்தி,மராட்டி கத்துக்கற புக்கை வாங்கி போஸ்ட்டல அனுப்புப்பா..'வசந்தா சொன்னது தான் தாமதம்..
வெங்கடேஷுக்கும் அப்போதுதான் உயிரே வந்தது..
"சரியான மக்கு'..அம்மாவும் அக்காக்களும் சிரித்தபடி அவள் சொன்னவற்றோடு சேர்த்து இன்னும் ஒரு நாலு மொழி புத்தகம் சேர்த்து வாங்கி அனுப்பினர்.
அப்புறம் என்ன..
தூங்கும் நேரம் தவிர , புத்தகமும் கையுமா தான்.
பம்ப் ஸ்டவ்வுடன் அவள் படிப்பு..அதான் முப்பது நாளில்..
பாரத மொழி பாதியையும் இப்போது கற்றுக் கொண்டு விட்டாள்.
அந்த குடியிருப்பில் இப்போது ஆஸ்தான மொழி பெயர்ப்பாளினி வசந்தா தான்.
பாபிஜி..பாபிஜி என்று அவளைச் சுற்றி எப்போதும் நண்பிகள்.
அங்குள்ள பள்ளிகளில் பல் மொழி வகுப்பு எடுக்க ஆரம்பித்தாள்.
ஃபாக்டரியில் வேலை செய்யும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு அவர்களுக்கு புரிந்த மொழிகளில் பாடம் சொல்லிக் கொடுத்தாள்.
வெங்கடேஷை விட..வசந்தா தான் அங்கே இப்போ பிரபலம்.
' சார்..நீங்க வசந்தா மேடம் ஹஸ்பெண்ட் தானே? ' அவன் அடையாளம் அவள் பெயரில் இப்போது.
ஒரு நாள் இவள் குக்கும் புக்குமாக இருக்கும் வேளையில் வெங்கடேஷ் எடுத்த ஃபோட்டோ.. அவர்கள் அடுத்தடுத்து சென்ற பல குவார்ட்டர்ஸ் வீடுகளின் சுவரை அலங்கரித்தது.
அந்த விடுமுறைக்கு தங்கை ஜானுவின் குடும்பம் வந்திருந்தார்கள்.
" ஏன்க்கா..டீச்சர் ட்ரெயினிங் படிக்கணும்னு ஆசைப்பட்டியே..அத்திம்பேர் கிட்ட சொல்லவே இல்லையா? ..மெல்லிய குரலில் ஜானு ..
" அதெல்லாம் அப்போ..இங்கே வந்தப்பறம் நான் கற்றுக் கொண்ட விஷயம்.ஏராளம்.
இப்படி வேற வேற மொழிகள் கத்துண்டதால என்னால எல்லாரோடயும் சகஜமா பழக முடிஞ்சது. நிறைய மாணவர்களுக்கு உதவ முடியறது. இவருக்கோ கை நிறைய சம்பளம்.வரது. அதனால் என்னால முடிஞ்ச மொழிக் கல்வியை இங்கே பக்கத்தில் இருக்கும் கிராமக் குழந்தைகளுக்கு சொல்லித் தரேன்'..
அக்காவை ஆச்சரியத்துடன் பார்த்த ஜானுவை ..
' அடுத்தது அப்பா..ஜப்பான் சைனா எல்லாம் போனால் அதையும் கத்துக்க ஆரம்பிச்சுடுவாள் அம்மா..' கலாய்த்தபடி நுழைந்தான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் வசந்தாவின் மகன் ஆதித்யா.
"அடடே....ஒரு நாள் கூட இதைப் பற்றி தன்னிடம் சொல்லவே இல்லையே..'
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின் ஒரு பெண் என்பது மட்டுமல்ல..அதே கடமை தனக்கும் உண்டு என்று ..
' இவர்கள் பேச்சைக் கேட்டபடி தன் ரூமில் வேலை செய்து கொண்டிருந்த வெங்கடேஷ் ..கூகிளில் இப்போது தேட ஆரம்பித்தான்
' டீச்சர் ட்ரெயினிங் கோர்ஸ்'..
அகிலா ராமசாமி
எண்: 1892
No comments:
Post a Comment