நிலாமுற்றம் கதைக்களம்
சித்திரக்கதை..
14-07-21
" அவள் வருவாளா?"
"ஏங்க..ஞாபகம் இருக்குல்ல..
ஆபீஸ் முடிஞ்சு நேரா வீட்டுக்கு வந்துடுங்க..
நம்ம மாரியம்மன் கோயிலுக்கு போய்ட்டு, வழக்கமா போகிற இடத்துக்கும் போய்ட்டு வந்துடலாங்க..கரெக்டா ஆறு மணிக்கு அங்கே இருக்கணும்..லேட்டாக்காதீங்க"..
நானும் ஜானு குட்டியும் தயாராக இருப்போம்"..வாசலில் வழி அனுப்ப வந்த புவனா..கணவன் தியாகுவுக்கு கட்டளை இட்டுக் கொண்டிருந்தாள்.
" ஏம்மா..மூணு வருஷமா..இதே நாள் ..இதே நேரம்.. தேவையா..யோசி'..
சொல்லியபடி ஸ்கூட்டரை கிளப்பினான்.
அன்று ஆடி மூன்றாம் வெள்ளி.. பூஜை முடித்து,ஜானு குட்டிக்கும் சாப்பாடு கொடுத்து தூங்க வைத்தபின்னும், ஏனோ புவனாவுக்கு சாப்பிட மனமில்லை..
ஏதோ ஒரு துக்கம் தொண்டையை அடைத்தது. ஜானுவையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஜானு குட்டிதான் அவள் உலகம்.
டாண்ணென்று வந்தான் தியாகு.
கைப்பையும், ஜானுவின் பையையும் அவன் காலுக்கடியில் வைத்தாள்.
கோயிலிலிருந்து கிளம்பும்போது மீண்டும் கேட்டான் தியாகு..' குழந்தையை அங்கே கட்டாயம் அழைச்சுக்கிட்டு போகத்தான் வேணுமா?"..
அவள் மெளனம்.. அவனுக்கு புரிந்தது.
அதோ..மதுரைக்கு செல்லும் ரயில் எப்போதும் போல அந்த இடத்தில் சிக்னலுக்காக காத்துக் கொண்டிருந்தது.
ஊருக்குள் செல்லும் பலர் ,இங்கேயே வண்டியிலிருந்து குதித்து இறங்கி நடையைக் கட்ட ஆரம்பிப்பார்கள்.
புவனாவும் தியாகுவும் கூட இப்படித்தான். ஸ்டேஷன் சென்று வீட்டுக்கு போகும் நேரத்தை விட,இந்த வழி சுலபம் என்று குதித்து நடக்க ஆரம்பித்து விடுவார்கள்..
அங்கே வந்து நின்றதும்.புவனாவின் நினைவு பின்னோக்கி நகர்ந்தது.
நான்கு வருடத்துக்கு முன் , இதே போல ஒரு இரண்டாம் ஆடி வெள்ளிக்கிழமை
மதுரைக்கு செல்லும் அந்த ரயிலில் , புவனாவும் தியாகுவும் தங்கள் இறங்கும் இடம் வரக் காத்திருந்தார்கள். அன்று ஏனோ கூட்டமே இல்லை.
அப்போது ஒரு குழந்தையின் அழும் குரல் எங்கிருந்தோ கேட்டது.
சத்தம் வந்த அடுத்த பெட்டி நோக்கி நடந்தார்கள். யாருமே இல்லை ..ஒரு பிஞ்சுக் குழந்தை மட்டும் அங்கே.
' யாருங்க அங்கே..குழந்தை அழுகிறதே..வந்து பாருங்க..'..
அவர்கள் இருவருக்கும் பதில் சொல்ல யாரும் அங்கில்லை..
குழந்தையை அங்கே தனியாக விடவும் மனமில்லை.
" இங்கே இறங்க வேண்டாங்க..ஸ்டேஷன்ல போய் இறங்கலாம். அதுவரைக்கும் இந்தக் குழந்தையோட இருக்கலாம். அவங்க அப்பா இங்கே தான் இருப்பாங்க"
வண்டியிலிருந்து இறங்கி, ஸ்டேஷன் மாஸ்டர் ரூம் நோக்கி நடந்தார்கள்.
தியாகு ரயில்வே பணியில் இருப்பதால், அங்கு ஸ்டேஷன் மாஸ்டரிடம் விவரத்தை சொன்னான்.
" பச்சிளங் குழந்தை சார். எங்க வீட்டுக்கு எடுத்துட்டு போறோம். யாராவது வந்து கேட்டால்,எங்க வீட்டுக்கு அனுப்புங்க..'..
குழந்தையை எடுத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார்கள்.
ஜானு என்ற பெயர் சூட்டி,அந்த வீட்டில் ஜம்மென்று வளர்ந்தாள்.
குழந்தையில்லாத அவர்கள் வீட்டில், கொஞ்சி விளையாட ஒரு ஜானு கிடைத்த மகிழ்ச்சியில் தியாகு புவனாவின் நாட்கள் பறந்தது..
போலீஸ் ஸ்டேஷனுக்கு பல முறை அலைந்தது தான் மிச்சம். குழந்தையைக் கேட்டு யாரும் வரவே இல்லை.
ஆனாலும், வருடா வருடம் இந்த நாள், குழந்தையைத் தூக்கிக் கொண்டு ரயில் வந்து நிற்கும் நேரம் வந்து விடுவாள்.
ஜானுவைப் பெற்ற தாய் வந்து காத்திருப்பாளோ என்ற ஒரு உணர்வுதான் காரணம்..
இன்றும் அதே போல வந்தாள்.
யாரும் அங்கே காணவில்லை..
அந்தி மயங்கும் மாலையில், தன் வாழ்வின் ஒளி மங்கி விடுமோ என்ற பயத்தில் இருந்தாள் புவனா..
ரயில் கிளம்பத் துவங்கியது.
குழந்தையை இறுக்க அணைத்தபடி
வேக வேகமாகத் திரும்பி வந்தவள்..நிம்மதி பெருமூச்சுடன்..' அங்கே யாரும் இவளைத் தேடி வந்து நிக்கலைங்க' ..
சந்தோஷமும் நிம்மதியும் கலந்த கண்ணீருடன் நின்றாள் புவனா..இங்கே..
அங்கே..
கிளம்பிய ரயிலின் பெட்டியிலிருந்து இரண்டு கண்கள்..ஆனந்தக் கண்ணீரில்..
வளர்ப்பு அம்மாவின் தோளில் இருந்து தன்னை திரும்பிப் பார்க்காத , ஜானுவுக்கு கை காட்டியபடி..
அகிலா ராமசாமி
எண்; 1892
No comments:
Post a Comment