Thursday, December 21, 2017

நிமிஷாம்பாளென நாமம் கொண்டவளே

காவிரி் கொஞ்சி ஓடும்
கரை அருகே அமர்ந்தவளே
'க'ஞ்சம் எனும் திருநகரில்
காட்சி தந்து காப்பவளே..

தஞ்சம் புகும் பக்தர்களின்
நெஞ்சின் பாரம் இறக்குபவளே..
காந்தக் கண் உடையவளே
சாந்த சொரூபி நீயே..

நிமிஷத்தில் குறை தீர்ப்பவளே
நிமிஷாம்பாளென நாமம் கொண்டவளே
தடை யாவும் நீக்குபவளே
கரை சேர வழி காட்டுபவளே

வேதனையும் விக்கினம் யாவுமே
விட்டகல அருள் புரிபவளே..
விருப்பங்கள் வரிசையில் நிற்க
திருப்பமும் திருப்தியும் தருபவளே..

வரிசைப் படுத்தினேன் வேண்டுதலை
வரிசையில் நின்ற வேளை
தரிசனம் கிட்டிய நொடியில்
தெரியலையே என் குறை சொல்ல..

ஒன்றிரண்டா என் கோரிக்கை
ஓராயிரம் மனக் கிலேசம்..
ஒரு நிமிஷம் போதாதே
ஒவ்வொன்றாய் எடுத்தி யம்ப..


சன்னதியில் உன் திருக்கோலம்
ஜன்ம வினை தீர்த்ததம்மா..
திரும்பி நானும் வரணுமென்ற
தீராத ஆசை பொங்குதம்மா..

அறியாதவள் நீ அல்ல
ஆராய்ந்து அருள் புரிவாய்
கரம் குவித்து தொழுகின்றோம்
வரமும் நீ அள்ளித்தா..



No comments: