Saturday, December 21, 2019

கல்லாய்_இருந்தேன்

#குறுங்கதைப்_போட்டி.

#கல்லாய்_இருந்தேன்...

" கலை ' சிற்பக்கூடம்.
மகாபலிபுரம் கடற்கரை அருகில் அமைந்த ஒரு புகழ் பெற்ற சிற்பங்கள் செய்யுமிடம்

உளியின் ஓசையில்லாது ஒரு நாளும் இருந்ததே இல்லை.

ஸ்தபதி ராமன். அவர் கை பட்டால் போதும் உயிரோட்டமுள்ள ஒரு சிற்பம் உருவாகிவிடும்.
வேலையாட்கள், வருவோர் போவோர் என ஜே ஜேனு எப்பவும் இருக்கும் அவர் இடம்.

பக்கத்திலிருக்கும் சிற்பக் கூடமெல்லாம் பொறாமையில் பார்ப்பார்கள் இந்தக் கடையை.

அன்று.. அந்த பெரிய கார் வாசலில் வந்து நிற்க..அதிலிருந்து இறங்கிய பெரிய மனிதர்..அவருடன் புடை சூழ அவர் உதவியாளர்கள்.

கூடமே பரபரப்பானது.
அவர் உதவியாளர்கள் தங்கள் கையில் இருந்த ப்ரிண்ட்டை காண்பிக்க ஸ்தம்பித்து போனார் ஸ்தபதி ராமன். ' "இத்தனை அழகான லக்ஷணமான சிற்பங்களின்  டிசைன்கள்.

' இதை முடிச்சு கொடுங்க..வீட்டுக்குள்ளே ஒரு சின்ன கோயில் கட்டுறோம். உங்க திறமையைப் பார்த்து தான் இந்தப் பொறுப்பை ஒப்படைக்கிறேன். எல்லா சிற்பங்களும் அருமையா வரணும் ' சொல்லிக் கொண்டே..அவர் அட்வான்ஸாக தந்தார் ஒரு தொகை.

பெரிய இடத்து ஆர்டர் என்பதால் ஒவ்வொருவரும் மிகுந்த சிரத்தையுடன் வேலை செய்து கொண்டிருந்தனர்

நானும்  உருவாக ஆரம்பித்தேன்.

"எனக்கு ஒரே ஆர்வமா இருக்கும் .. இவர்கள் என்னை முழுமையாக செய்து முடித்ததும் எப்படி இருப்பேன் என்று..கனவுலகில் நான் இருப்பேன்.

 பக்கத்து கூடச் சிற்பிகளெல்லாம் தினமும் ஒரு முறையாவது என்னை வந்து எட்டி பார்த்துட்டு போவாங்க..மூக்கும் முழியுமாக நான் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாய் வளர்ந்தேன்..

ஸ்தபதி ராமனுக்கு ஏகப்பட்ட ஆர்டர் குவிய..தான் மட்டும் அதில் லாபம் ஈட்டணுங்கற எண்ணமில்லாமல்.. தன்னோட பக்கத்தில் கடை வெச்சிருந்தவங்களுக்கும் சிறு சிறு வேலைகள் தருவார். நல்ல மனுஷன்.

சிலைகள் எல்லாம் அம்சமாக ரெடியாச்சு.

 மற்ற  சிலைகளெல்லாம் ஒவ்வொண்ணா  வண்டில போயாச்சு.

  ஜல வாசம்,தானிய வாசம், ரத்தின வாசம்னு இருக்க நானும் தயாராகிக் கொண்டிருந்தேன்.
 
  ஆனால்..நடந்ததோ..?

 அன்னிக்கு வந்த நியூஸ் பேப்பர் இடி ஒன்றைப் பெரிதாக தாங்கி வந்தது.
 எங்களையெல்லாம் செய்யச் சொன்ன பணக்காரர் சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டாராம்.

 எங்க ஸ்தபதி உடைஞ்சே விழுந்துட்டாரு. முதலில் வாங்கின அட்வான்ஸுக்கு அப்பறம்..வேலையை முடிச்சப்பறம் மீதியை வாங்கிக்கலாம்னு நினைச்சவர் நினைப்பில் மண் விழுந்தது.

 பெரிய மனுஷர் வீட்டில யாரையும் தொடர்பும் கொள்ள முடியல..

 ஒடிஞ்சு போய்ட்டார் ஸ்தபதி. எத்தனை உழைப்பு..எல்லாருக்கும் கூலி கொடுத்து , கடனை அடைச்சு...அப்பப்பா அவர் பட்ட கஷ்டம்.

 ' என் உயிரைக் கொடுத்து உன்னை செஞ்சேன்..நீ ஒரு நல்ல இடத்திற்கு போகணும்னு நினைச்சேன்' தழுதழுக்கும் குரலில் என்னைப் பார்த்து சொல்லியபடி
 கடையின் ஷட்டரை இழுத்து பூட்டி விட்டு என்னை வெளியே நிற்க வைத்து விட்டு போனவர்தான் ..அப்புறம் வரவே இல்லை..

 தெய்வமாகிட்டார்னு எல்லாரும் பேசிக்கிறாங்க..
 இனிமே..என்னோட நிலை?

 ஸ்தபதியின் ரெண்டு பசங்களும் அமெரிக்காவில் செட்டில் ஆனவங்களாம். அவங்களுக்கு இந்த சிற்பக் கலை பத்தியே ஒண்ணும் தெரியாதாம். அதனால் பக்கத்து கடைக்காரர் கிட்ட அவங்க ஃபோன் நம்பரைக் கொடுத்துட்டு போயிருக்காங்க..
யாராவது வந்து கேட்டால் என்னை விலை பேசி முடிக்க..

விலை கொடுத்து வாங்க யாரையும் காணோம்!
ஒரே ஒரு அலை வந்து என்னை இழுத்துச் செல்லக் கூடாதோ?
காத்திருக்கேன் நானும்..🙏

No comments: