Saturday, December 21, 2019

முள்ளண்டிரம்

ஊரும் உறவும் கூடி நடத்திய குடமுழுக்கு விழா

குடமுழுக்கு,கும்பாபிஷேகம்,ஜீர்ணோத்தாரணம்.. இப்படி பத்திரிகை வீட்டுக்கு வந்தால் என்ன செய்வோம்?
நமக்கு தெரிந்தவர் கொண்டு வந்து கொடுத்தால் ஒரு நூறோ இருநூறு கொடுப்போம். எங்கோ நடக்கிறது..போகிற அன்று உண்டியலில் பணம் போட்டு விடலாம் என தள்ளிப் போடுவோம்.
கும்பாபிஷேகம்.அன்று கூட்டம் அதிகமாக இருக்கும் என்று போகத் தயங்குவோம்.

இப்படித்தான் நானும் எங்கள் குடும்பமும் இருந்தோம் மூன்று ஆண்டு முன்பு வரை.

எங்கள்  குடும்பங்களில  குழப்பமும் குறைகளுமே நிரம்பி வழிய..வழி என்ன இதற்கு என்று தேடிய போதுதான் விஷயம் அறிந்தோம். குலதெய்வ வழிபாடு சரியாக நடக்கவில்லை என்று.
ஒவ்வொரு தலைமுறைப் பெரியோரும் ஒவ்வொரு கோயில் பேர் சொல்ல..பொதுவாக எல்லாருமே உச்சரித்த பெயர் ' முள்ளண்டிரம் பெருமாளும் சிவனும்'. (வேலூரிலிந்து 30 to 35 km)
இதென்ன பெருமாளும் சிவனும்..கேள்வி எழுகிறதா?
ப்ரசன்னம் போட்டு பார்த்து பல வகை ஆய்வுக்கு பின் முள்ளண்டிரம் ஊரில் இருக்கும் கோயில்கள் தான் முன்னோர் வழி பட்டது எனத் தெரிய வந்தது. அருணகிரி நாதரும் அப்பய தீக்ஷதரும் சிறப்பித்த பாடல் பெற்ற தலம் என்று அறிந்தோம்.

குல தெய்வம்  கோயிலை தரிசிக்க படையெடுக்க..் கண்முன்னே கண்டது
 புதர் மண்டிய பெருமாளும் சிதிலமடைந்த சிவலிங்கமும் தான்.
களையிழந்த கர்ப்பக்கிரஹம், ஒட்டடை மாலையில் உலகை அளந்த எம்பெருமான்.
அலங்காரப் பிரியன் அலங்கோல நிலையில் கண்டு அதிர்ந்தது ..அழுதது இதயம்.
வெளவால்கள் ஆக்கிரமித்த இடத்தை..அங்கிருந்த பொருள்களை வைத்து சுத்தம் செய்து, கிடைத்த மலரை சூட்டி, விளக்கு ஒன்று ஏற்றி வைத்து..மனமுருக வேண்டினோம் மனக்குறைகள் தீரவே..இது நடந்தது 2016 ம் ஆண்டு.
அயர்ந்து தூங்கும் போதும் அரங்கனும் சிவனும் நினைவினிலே..
எங்கேயிருந்து தொடங்குவது?
அடுத்து என்ன? கேள்வி மலையாய்த் தெரிய..
மனது இறங்கினான். வழியும் காட்டினான் அரங்கன்.
பல தலை முறையைச் சேர்ந்த குடும்பங்கள் ஒன்றானோம்.ஒரே ஒரு இலக்கு.
 கோயில்கள் கட்டுவது ...கட்டியே தீர்ப்பது என்று
அரசு சம்பந்தப்பட்ட வேலை , கட்டட வேலை, நிதி திரட்டுவது, ஸ்தபதி, சிலை வடிவமைப்பு என்று பல வேலைகள் வரிசையில்.
மலையாய் தெரியும் துயரெல்லாம் பனி போல விலகச் செய்யும் பெருமான்..ஒவ்வொன்றுக்கும் வழி வகுத்தான்.
இருண்டு கிடந்த ஊர் பிரகாசமாகத் தொடங்கியது. ஊர் மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில். நம்மூரு கோயில் பழையபடி நல்லா ஆகணும் என்று ஒவ்வொரு அடியிலும் கை கொடுத்த #ஊர்மக்கள் அன்பு, ஆதரவு..என்ன சொல்வேன்.
#முள்ளண்டிரம்_இளைஞர்கள் இழுத்து போட்டுக் கொண்டு வேலு ,அன்பு என்ற இருவரின் தலைமையில் கல் பொறுக்குவதிலிருந்து, கற்சிலைகள் தூக்கி,கட் அவுட் வைப்பது, அன்னதானம்  வரை..அவர்களின் பங்கு சொல்லி மாளாது.

வீட்டில் நடக்கும் ஒரு கல்யாணத்தில் எத்தனை இடைஞ்சல்கள் , அவதிகள் வருமோ எல்லாம் பன் மடங்கில் இங்கே.
இடையூறுகள் எல்லாம் உடைத்து..கருவறை யில் குடியேறினான் பால வரதராஜப் பெருமான் ஸ்ரீதேவி பூதேவியுடன் சென்ற ஞாயிறன்று.
கும்பாபிஷேகம் நடக்க..குடும்பத்தில் எல்லார் கண்களும் நிரம்பியது குளமாய் ஆனந்தக் கண்ணீர்.

செய்யமுடியுமா..என்று நினைத்தோம். எங்கள் குடும்பத்தை கருவியாக்கினான் வரதன்.
குடும்பங்களைக் காக்க கோயிலுக்குள் மீண்டும் பொலிவுடன் இப்போது.

பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கி,இன்று புனருத்தாரணம் வரை வடமிட்டு அவன் இழுக்க ,
வருவோரும் போவோரும் கூட உதவிக் கரம் நீட்ட உருவாகியது ஊருக்குள் உறங்கிக் கிடந்த எம்பெருமான் ஆலயம். கம்பீரமாய் இப்போது..
வரதன் வந்து விட்டான்..
அடுத்து சிவன் கோவில் வேலை ஆரம்பமாகும் சில நாளில்.
ஓய்வு பெற்றதும் என்ன செய்ய்ப் போகிறோம் என்று பலர் யோசனையில் நாட்கள் கடத்த என் அருமை அண்ணா ஷங்கர் பலருடைய ஆதரவு திரட்டி இக்கோயில் திருப்பணி செய்தது ,அதில் என்னையும் அணில் போல சேர்த்துக் கொண்டது.
முதல் முறையாக அஷ்டபந்தன கும்பாபிஷேகம் அருகில் இருந்து பார்த்து..படங்கள் எடுத்து..
சிறு உதவிகள் செய்ய அருள் பாலித்தான். இந்தப் பிறவியில் வேறென்ன வேண்டுமென்று வேண்டுவேன்?

பலம் கொடு பகவானே அடுத்த கோயிலையும் புனருத்தாரணம் செய்து முடிக்க என்ற தொடரும் வேண்டுதல்கள்.
ஊரும் உறவும் ஒன்று கூடினால்..
முடியாதது எதுவும் உண்டோ?

#ஒற்றுமையாய்_வாழ்வதாலே_உண்டு_ நன்மையே..கண்கூடாகக் கண்டேன் முள்ளண்டிரம் ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தில்.

No comments: