#கதை_எழுதலாம்_வாங்க_5
#முள்வேலி
"ரேணு..ரேணு..இப்ப நான் சொல்றதை கேட்கப் போறியா இல்லையா?"
கோபத்தின் உச்சஸ்தாயியில் கத்தினான் சந்துரு.
"நீங்க கொடுக்கற மருந்தை நான் சாப்பிட மாட்டேன்.. என்னை கொல்லலாம்னு பார்க்கறீங்களா இந்த மருந்தை கொடுத்து..???"வெறி பிடித்துக் கத்தினாள் ரேணு.
"ரேணு..உனக்கு ஏன் புரிய மாட்டேங்கிறது. இந்த மருந்து நீ டயத்துக்கு எடுத்துக்கலை என்றால் உன் உயிருக்கே ஆபத்துனு டாக்டர் சொன்னது உனக்கு ஞாபகமில்லையா?.."
கெஞ்சலும் அதட்டலுமாக அவன் அவளை விடாமல் தொடர்ந்தான்.
டாக்டர் கண்டிப்பாகச் சொல்லி இருக்கிறார். ஒரு மாதத்திற்கு இரவில் டிப்ரஷனுக்காக கொடுத்த மாத்திரைகள் ரேணு சாப்பிட்டே ஆகணும் என்று.
இன்று அடம் கொஞ்சம் அதிகமாகவே பிடித்தாள்.
"அவளோட சந்தோஷமா இருந்துட்டு வந்துட்டு எனக்கு மருந்து கொடுத்து கொல்லப் பாக்கறீங்களா?'..அவள் கத்த..கத்த..இழுத்து பிடித்து அவளை உட்கார வைக்க முயல..ரேணு திமிறினாள்..
"மாட்டேன் மாட்டேன்..என்னை விட்டுடுங்க...என்னை விட்டுடுங்க..'
அவள் கத்திக் கொண்டிருந்த நேரம் ....
ரேணுவின் அலறல் கேட்டு வாசல் கதவின் பக்கம் செருப்புகள் போட இருந்த சிமிண்ட் ஸ்லாபில் ஏறி..ஜன்னல் வழியே பார்த்தாள் பக்கத்து வீட்டுக்கு புதிதாகக் குடி வந்திருந்த சுஜா..
கலங்கிப் போனாள்.
"என்ன நடக்கிறது இங்கே?'
" ஐயோ இப்படி ஒரு முரடனா?'.பயந்து போனவள் வாய் திறக்காமல் வந்து வீட்டின் கதவை தாழிட்டாள்.
"பெண்டாட்டியை இப்படி கொடுமைப் படுத்தறானே?..
போலீஸ்ல சொல்லலாமா?"
வீட்டுக்கு வந்து கணவனிடம் சொல்ல.." "அவங்களுக்குள்ள என்ன பிரச்சனையோ?..நீ எதுக்கு இப்போ தலையை நுழைச்சுக்கிட்டு' வெடுக்கென்று பேசி விட்டுச் சென்றான்.
அடுத்த நாள் காலை..
சந்துரு வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தான். ரேணு ஓடி வந்து..
"இந்தாங்க இன்னிக்கு உங்களுக்கு பிடிச்ச புலவ் ரைஸ் வெச்சிருக்கேன். இன்னிக்கு ஈவினிங் ஷோ புக் பண்ணி இருக்கோம் .ஞாபகம் இருக்குல்ல..சீக்கிரம் வந்துடுங்க'..அவள் பேசுவதை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் சுஜா..
மண்டையே சுற்றியது..
நேத்து ராத்திரி எதுவுமே நடக்காதது போல ..எப்படி இப்படி இருக்கறா இவள்? '..
என்னமோ போ என்று நினைத்தபடி உள்ளே சென்று விட்டாள்.
அன்று மார்க்கெட்டுக்கு போன சுஜா...ரேணுவின் அம்மாவைப் பார்த்தாள்.
நலம் விசாரித்து முடித்த பின்..
" வாம்மா..வீட்டுக்கு வந்து ஒரு காபி குடிச்சுட்டு போயேன்'
ஒத்துக் கொண்டாள் சுஜா.
பேச்சு எங்கெங்கோ சுற்றிக் கொண்டிருக்க ..மனசில் அரித்துக் கொண்டிருக்கும் அந்த விஷயத்தை கேட்டு விடலாமா ? தயக்கம் தடை போட்டது..
" உங்க வீட்டுக்காரர் என்ன வேலை பாக்கறாரு? ..என்று ஆரம்பித்த ரேணுவின் அம்மா..' என் மாப்பிள்ளை சொக்கத் தங்கம். என் பொண்ணுக்கு இப்படி ஒரு நல்ல மாப்பிள்ளை கிடைப்பாருனு நாங்க கனவில கூட நினைக்கலை..'..
அவள் பேசிக் கொண்டே போக..சுஜாவுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை..
" இது அவங்க ரெண்டு பேருக்குமே இரண்டாவது கல்யாணம்ம்மா..
ரேணுவுக்கு முதல் கல்யாணம் ரொம்ப விமரிசையாச் செஞ்சோம். யார் கண்ணு பட்டதோ..மாப்பிள்ளை மூணே மாசத்தில் ஒரு கார் ஆக்ஸ்டெண்ட்டில் இறந்துட்டார்.
ரேணுவுக்கு கொஞ்சம் மாறுதல் கிடைக்கட்டுமேனு அவங்க அத்தை வீட்டுக்கு அனுப்பி வெச்சோம்.
என் நாத்தனார் பையன் தான் சந்துரு.
"ஏன் மாமா ..ரேணுவுக்கு சம்மதம்னா நான் அவளைக் கல்யாணம் செஞ்சுக்க தயார்னு அவன் சொன்னபோது எங்களுக்கு கிடைச்ச சந்தோஷம் இருக்கு பாரு....".
ஆனால்..
ஆனால் ..ஆனால்..என்ன? ஆர்வத்தில் சுஜா கேட்க..
" சந்துருவுக்கு ஏற்கனவே திருமணமாகி, விவாகரத்து ஆனவன். அவனுக்கும் அவளுக்கும் ஏதோ ஒத்தே போகவில்லை. பிரியறது தான் உசிதம்னு டைவோர்ஸ் வாங்கிட்டாங்க..
எங்களுக்குத் தான் பயம்..இது சரிப்படுமானு..
" அதெல்லாம் ஒண்ணும் இல்லை மாமா. எதிர்காலம் தான் முக்கியம். போனதை நினைப்பதில் என்ன பிரயோசனம்?.. சந்துரு எங்க எல்லாரையும் சம்மதிக்க வைச்சான்.
எல்லாம் நல்லாத்தான் போய்க்கிட்டு இருந்தது. ரேணு அப்ப மாசமா இருந்தா.. அப்படித் தாங்குவான் சந்துரு. எங்களைக் கூட எதுவும் செய்ய விட மாட்டான்.
ஆனால் எங்க கெட்ட நேரம் ..குழந்தை இறந்தே பொறந்தது. '
அழ ஆரம்பித்தாள் ரேணுவின் அம்மா..
" அப்பலேர்ந்து பிரமை புடிச்ச மாறி ஆகிட்டா ரேணு. போகாத கோயில் இல்ல..பார்க்காத வைத்தியமில்ல.. அவ எப்போ நல்லா இருப்பா..எப்போ கத்துவானு யாருக்குமே புரியலை..ஆனால் சும்மா சொல்லக் கூடாது என் மாப்பிள்ளை.. அவளைக் குழந்தை மாறிப் பாத்துக்கறாரு..நாங்க செஞ்ச புண்ணியம் ம்ம்மா அது..' விக்கி விக்கி அவள் அழுதபடி
" அந்தக் குழந்தை அவ கை விட்டுப் போனதிலேர்ந்து அவ மனசுக்குள் சந்தேகப் பேயும் வந்து உட்கார்ந்துடுச்சு..'..
ஒரு நாள் என் மாப்பிள்ளை ஆபீஸிலேர்ந்து லேட்டா வந்தாலும்..அவனோட முதப் பொண்ட்டாடியோட இருந்துட்டு வரியானு..மல்லுக்கு நிக்கறா..அதுவும் இப்போ கொஞ்ச நாளா ..ரொம்ப அதிகமாக் கத்தி அமர்க்களம்.
எங்க பார்த்தாலும் சந்துருவின் முதல் மனைவி முகம் தான் தெரியுதாம்.
" இங்கேயே தான்ம்மா இருக்கா அவ..எங்களை விட்டு போகலைம்மா..இந்த ரூம்ல என் படுக்கைல இருக்கா ம்மா..இவரு அவளோடயும் குடும்பம் நடத்தறாரும்மா..'இப்படியேத்தான்ம்மா புலம்பல்.
டாக்டர் கொடுக்கற மருந்தை அவளுக்கு கொடுக்கறதுக்குள்ள அவர் படற பாடு இருக்கே..தெய்வம் ஏன் தான் இப்படி எங்களை சோதனை பண்ணுதோ தெரியல..'..தன் மனசின் பெரிய பாரத்தை இறக்கினாள் ரேணுவின் அம்மா.
ச்சே..ஒரு நல்ல மனுஷனை தப்பா நினைச்சிட்டோமே என்று எண்ணியபடி சுஜா கிளம்பினாள்.
மனசெல்லாம் அதே நினைப்பாக இருந்தது.
அன்று இரவும்
'என் புடவையைக் கட்டிட்டு இருக்கா பாரு உன் முதல் பொண்டாட்டி..எப்படி தலை விரிச்சுப் போட்டு என்னைப் முரைக்கறா பாரு " ..ரேணுவின் அலறல் சத்தம்.
சுஜாவிற்கு பாவமாக இருந்தது.
அவள் வீட்டிக்கு பக்கத்தில் இருந்த கோவிலுக்குச் சென்று ரேணுவுக்காக வேண்டிக் கொண்டாள்.
அங்கே இருந்த பூசாரிக்கும் ரேணுவைப் பற்றித் தெரியும்.
" சாமி..ரேணுவுக்கு குணமாகற வழி இருந்தால் சொல்லுங்களேன்..அந்தக் குடும்பத்துக்கு நிம்மதி கிடைக்கணும்' ..சுஜா கேட்க..
கொஞ்ச நேரம் கண் மூடி தியானத்தில் இருந்தவர்..' நம்மூரு எல்லையில சுடுகாட்டுக்கு பக்கத்திலே ஒரு காளி கோயில் இருக்கு. அங்கே யாரும் போகறதில்ல..ஒரு பூசாரி மட்டும் இருக்காரு. அவருக்கிட்ட சொல்லி ..அந்த உக்கிரக் காளிக்கு ஒரு பூசை பண்ணச் சொல்லுங்க..எல்லாம் அவ பார்த்துப்பா..என்ன முடியுமோ அதை காணிக்கையா அவருகிட்ட கொடுங்க போதும்..'..
பூசாரி சொன்னதை ரேணுவின் அம்மாவிடம் ஃபோன் செய்து சொன்னாள்..
ஆபீஸில் சந்துருவின் லஞ்ச் டைம்.
ஃபோன் அடிக்க..மறுமுனையில் ரேணுவின் அம்மா.
மாப்பிள்ளை.. இதை மட்டும் செஞ்சு பார்க்கலாமா? ..தயங்கித் தயங்கி சுஜா சொன்னதைச் சொன்னாள்.
" அவ்வளவுதானே..செய்யறேன்ம்மா'..
மறுபேச்சு பேசவில்லை..
ஞாயிற்றுக்கிழமை மாலை.
" கிளம்பு ரேணு..கார்ல ஒரு ரவுண்ட் போய்ட்டு வரலாம்..அப்படியே ரெஸ்டாரெண்டல் டின்னர் முடிச்சுடலாம்'..
கண் சிமிட்டினான்..
குழந்தை இறந்து மூன்று மாதமாகி..இன்றுதான் ரேணு அவனுடன் வெளியே வரச் சம்மதித்து இருக்கிறாள்.
ஒரு லாங் ட்ரைவ் போகலாம்..
' ஒரு நாள் உன்னோடு ஒருநாள்'..ஜானகியின் குரல் எஃப்.எம்மில் ஒலிக்க..
" என்ன ..சார் இன்னிக்கு செம்ம மூட்ல இருக்கப்போல இருக்கு'..
ரேணு கேட்க..
தலையாட்டிக் கொண்டே வண்டியை ஓட்டியவன்..ஊர் எல்லையில் இருந்த அந்த சுடுகாட்டின் பக்கத்தில் காரை நிறுத்தினான்.
" ஒரு நிமிஷம் உள்ளே உட்கார்ந்திரு..இதோ வந்திடறேன்'...
இறங்கி...அங்கிருந்த காளி கோயில் நோக்கி நடக்க..
ஓடி வந்தார் பூசாரி..
" இந்தக் கோயிலிலுக்கு இனிமேல் மாசா மாசம் விளக்கேற்ற எண்ணெய்க்கு ஆகும் செலவை நான் ஏத்துக்கறேன்..இந்தாங்க ..இரண்டு மாசத்துக்குரிய பணம் இதில் இருக்கு..'..
அவன் அவர் கையில் பணத்தைக் கொடுக்க..
" எங்கடி இங்கே வந்தே..என்னை நிம்மதியா இருக்க விட மாட்டியா நீ'??.
காரின் கதவைத் திறந்து கொண்டு..
வானத்தைப் பார்த்தபடி..
' பாருங்க..நான் சொன்னா நம்ப மாட்டேங்கறீங்களே..அதோ .தலை விரி கோலமாய்..கண்ல வெறியோடு..உங்களை என்கிட்டேர்ந்து பிரிக்க வரா பாருங்க'..அடங்காமல் ஓட ஆரம்பித்தாள்.
ஒருவழியாக அவளைச் சமாதானப்படுத்தி காரில் அமர்த்தி..ஆசுவாசப்படுத்தியவன்..
ஏதோ தோன்றியது போல காரை வேகமாகச் செலுத்தினான்.
' நிதானத்துக்கு வந்தவள்..' நான் ஏன் இப்படி இருக்கேன்னு..என்னை மன்னிச்சுடுங்க' ..அவள் பேசியது எதுவுமே காதில் விழவில்லை அவனுக்கு..
கார் ..கிரீச் என்ற சத்தமிட்டு ஒரு வீட்டின் முன் நின்றது.
காரை விட்டு இறங்கியவன்..
வெளியே வா..ரேணு என்றான்..
ஒன்றும் புரியாமல் திருதிருனு அவள் முழித்த வேளை..
"வாங்க சந்துரு..வாங்க..எப்படி இருக்கீங்க? இது தான் உங்க வைஃபா..?
வாட் எ ப்ளஸண்ட் சர்ப்ரைஸ் ..!!
வேறு யாருமல்ல..சந்துருவின் முதல் மனைவி ரம்யா..
இவளை ஃபோட்டோவில் மட்டுமே பார்த்திருக்கிறாள் ரேணு.
"ஏங்க ..யாரு வந்திருக்காங்கனு பாருங்க..'
என்று கூப்பிட...
வெளியே வந்தான் மிடுக்கான அவள் கணவன்.
"ஐ ஆம் குமரன்' ..அறிமுகப்படுத்திக் கொண்டவன்..
மிக ஜாலியாகப் பேச ஆரம்பித்தான்.
"இவ்வளவு தூரம் வந்திருக்கீங்க..இங்கேயே நாம எல்லாரும்.ஒண்ணா சாப்பிடலாமே..அரை மணியில் ரெடி செய்யறேன் ' கிச்சனுக்குள் நுழைந்த ரம்யாவின் பின்னால் .." நானும் உதவறேன் வாங்க' சகஜமாக உள்ளே நுழைந்தாள் ரேணு.
பேச்சும் அரட்டையும் முடிந்து பை சொல்லி விட்டு கிளம்பும்போது..
' சில விஷயங்கள் நம் கை விட்டுப் போறதும் நல்லதுக்குத்தான். அது ஒரு புது ஆரம்பத்துக்கும் வழி காட்டலாம். பிடிக்கலை..ஒத்துப் போகலைனு பிரிஞ்சோம். ..ஆனா..நாம நல்ல நண்பர்களாக இருக்கலாம் இல்ல?'..
ரம்யா சொன்னபோது....
தன்னைச் சுற்றி அமைத்துக் கொண்டிருந்த ஒரு முள்வேலியிருந்து வெளியே வந்து..
தன் கணவன் சந்துருவைக் காதலுடன் பார்த்தாள் ரேணு..
'இனி எலாம் சுகமே'..எஃப் எம்மில் ராஜாவின் பாட்டு ..
அடுத்த நாள் முதல்..அந்த வீட்டிலிருந்து எந்த சத்தமும் இல்லை..
" நாம சொன்னது..இவங்களுக்கு நல்லதாப் போச்சு என்று சுஜா நினைக்க..
சந்துரு....தன் ஐடியா ஜெயித்தது என்று நினைக்க..
என்னவாக இருந்தால் என்ன...?
அவர்கள் வாழ்வில் இனி ஆனந்த ராகம் தான்.