Monday, January 24, 2022

திண்ணை_villa_in_Texas

 #குறுங்கதைப்_போட்டி


#திண்ணை_villa_in_Texas



" என்னால உன்னோடெல்லாம்.வந்து இருக்க முடியாதுடா..வேணுன்னா.. எப்போ உனக்கு லீவு கிடைக்கிறதோ வந்து பாரு' கறாராக சொல்லி அனுப்பி விடுவாள் ரகுவின்  அம்மா லக்ஷ்மி.


அப்பா காலமாகி அஞ்சு வருஷமாகியும் அந்தக் கிராமத்தையும் முக்கியமா அவளுக்கு பிடிச்ச திண்ணையையும் விட்டு வர மாட்டேன்னு ஒரே அடம்.


நாலே தெரு உள்ள கிராமத்தில் ..தன் வீட்டு திண்ணையிலே அந்த ஊர் பொண்களுக்கு கை வேலை, சமையல் குறிப்புகள், கைமருந்து எல்லாம் சொல்லிக் கொடுப்பாள். அவளைத் தேடி யாராவது வந்த வண்ணமிருப்பார்கள் .


ரகுவுக்கு எப்போதும் அம்மா பற்றி கவலை தான்.  அவன் மனைவி பைரவிக்கும் நல்ல வேலை. பையன் கள் நல்லபள்ளியில்.படித்துக்கொண்டிருக்கிறார்கள்.

இப்போது வீடும் டெக்ஸாஸில் கட்டிக் கொண்டிருக்கிறான்.


பைரவிக்கு பட்டென்று ஒரு ஐடியா வந்தது. " ஏங்க ..இந்த திண்ணை..இந்த கிராம செட்டப் ..அம்மா ரூம் ..அங்கே இருக்கிற மாதிரி நம்ம ஆர்க்கிடெக்ட் கிட்ட சொல்லி பண்ணிட்டா என்ன? என்று கேட்க..

அவர்கள் 'திண்ணை வில்லா' ..

வீட்டின் ஒரு பக்கம் இந்த  டிசைன் உருவானது.


இந்த முறை அழுது புரண்டு ஒரு ஆறு மாசத்துக்கு அம்மாவை  அங்கே வர சம்மதிக்க வைத்தான்.


'நான் "டேக்ஸா" கிளம்பறேன்..என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

"அம்மா..அது டெக்ஸாஸ் ம்மா.."ரகு எத்தனை முறை சொல்லியும் அவள் டேக்ஸா என்றே சொன்னாள்.

"ஏண்டா..பேரே வாய்ல நுழையாத ஊருல நான் என்னத்த குப்பை கொட்டப் போறேன்னு ஒரே கவலை அவளுக்கு.


ரகு வீட்டில் முதலில் அவளை வரவேற்றது..அந்த அழகான விசாலமான மிகப் பெரிய  திண்ணை.

" என்னடா ரகு இதெல்லாம்?' கலங்கியவளை கட்டிக் கொண்டான்.

ஸ்வீம்மிங் பூல் பார்த்ததும்.' ஏண்டா ஆத்துக்குள்ள குளம் வெட்டி வெச்சிருக்கே..பொது எடத்தில் இருந்தாலும்..நாலு பேருக்கு வசதியா இருக்கும்னு விசனப்பட்டாள்.


அடுத்த நாள் காலை..

டொப்பு டொப்புனு ஒரே சத்தம்.

அலறி அடித்து ரகு போய்ப் பார்க்க..அம்மா ஸ்வீம்மிங் பூலில் துணியை அடிச்சு தோச்சுண்டிருந்தா ஒருவழியா ..சமாதானம் பண்ணி..உஸ்..அப்பாடா என்பதற்குள்..

சூலமங்கலம் சிஸ்டர்ஸ் கந்த சஷ்டி கவசம் கணீர்னு பாட ஆரம்பிக்க..கிணி கிணி மணி சத்தத்துடன் அம்மாவின் பூஜை ..

" ஏம்மா.. பூஜை பண்ணும்போது..எதுக்கு சூலமங்கலம் சஷ்டி கவசம் சொல்றா..நீ உள்ளே சஹஸ்ரநாமம் சொல்லிண்டிருக்கே' என்று கேட்க.."அதெல்லாம் நம்ம குடும்ப வழக்கம்டா' என்று சமையல் கட்டுக்குள் நுழைந்தாள்.


வீடே மணக்க மணக்க..டிஃபன் சாப்பாடு.. பைரவிக்கும் பசங்களுக்கும் ரொம்ப பிடிச்சு போச்சு லக்ஷ்மியை..

கடை கண்ணியெல்லாம் தானே போக ஆரம்பிச்சுட்டா..

' நீங்க லக்ஸ்ஸோட புள்ளதானே' ..இப்படி அறிமுகம் ஆனார் பலர்.

பக்கத்து பங்களா கேத்ரீனாவை அம்மாவுக்கு அறிமுகம் செய்து வைத்தான் ரகு.


"ஹேய்..லக்ஸ் " என்று அவள் சொல்ல.." "டேய் ..என்னை என்னடா  லக்ஸு,மார்கோனு கூப்பிடறா..இவ சங்காத்தமே வேண்டாம்டா ' என்றாள்.


"அவா பேரு கேத்ரீனா..ரொம்ப நல்ல மாதிரி " என்றான் ரகு.


"என்னது.."கதறினாவா?..இப்படியெல்லாம் பேர் வெச்சுப்பாளாடானு ரொம்ப அப்பாவியாய் கேட்ட அம்மாவை என்ன செய்யறதுனு புரியல ரகுவுக்கு.

ஆனால்..என்ன மாயமோ,மந்திரமோ..செம்ம ஃப்ரண்ட்ஸ் ஆகிட்டா அவங்க ரெண்டு பேரும்.

 ஒன்றரை மணி நியூஸ் ஸ்டைல்ல மணிக்கணக்கா திண்ணையிலே  பேச்சு.

 இவர்கள் கூட அரட்டை அடிக்க சேர்ந்து கொள்ளும் பல சீனியர் சிட்டிசன்ஸ்.

 

மருமகள் கார் நிறுத்தும் சத்தம் கேட்டவுடன் காஃபி கலந்து ரெடியா அவள் கையில் கொடுப்பாள்..அம்மா..

"ஏன்ம்மா உங்களுக்கு சிரமம் "என்று பைரவி சொன்னால்.. அவள் தலையை அன்பாகத் தடவி.. களைச்சு போய் வர..இது கூட செய்ய மாட்டேனா உனக்கு' லக்ஸ்ஸின் ஆசையைப் பார்த்து ஆச்சரியமாகும் கேத்துக்கு.


எப்படி இப்படி மாமியாரும் மருமகளும் பேரன் களும் இவளை சுத்தி சுத்தி வரா' என்று.. பொறாமையுடன் பார்ப்பாள் கேத்.

மஃப்பின்ஸ் கூட ஸ்விக்கி யிலிருந்து ஆர்டர் செய்து சுகம் கண்ட அவள்..


லக்ஸைப் பார்த்து..தானும் ஏதாவது தன் மகனுக்கும் மருமகளுக்கும் தன் குட்டிப் பேத்திக்கும் செய்து வைக்க ஆரம்பித்தாள்.

பேத்தியை கண்டாலே ஓடுபவள் குழந்தையோடு நிறைய நேரம் செலவழித்தாள்.

சோர்ந்து போய் வரும் மருமகளை சிடுசிடுப்புடன் வரவேற்ற காலம் போய்..சுடச்சுட அவளுக்கு ஏதாவது செய்து வைத்தாள்.


' இந்த ஜெயிலில்இருக்கமாட்டேன்.

என்னை ஏதாவது ஹோமில் கொண்டு போய் விடு என்று கத்திக் கொண்டிருந்தவள்..லக்ஸோடு பழகிய சில நாட்களிலேயே..குடும்பம் என்பது..வெளியில் சென்று தேட வேண்டிய ஒன்றல்ல என்று புரிந்து கொண்டாள். 

வாழ்க்கைப் பாதையே மாறிப் போனது கேத்ரீனுக்கு. அவள் கொடுக்காத வரை கிடைக்காத அன்பு..இப்போது மகனிடமிருந்தும் மருமகளிடமிருந்தும் கிடைக்க..நன்றி சொன்னாள் லக்ஸுக்கு.


.லக்ஸும் கேத்தும் எல்லாரும் வேலைக்கு போனதும்..

வாரத்தில் இரண்டு நாள்..  ஒரு rehabilitation centre க்கு போய் வருவதை வழக்கமாகக் கொண்டார்கள்.


லக்ஸ் அங்கே ஆதரவிழந்த பெண்களுக்கு சிறுசிறு கை வேலைகள் சொல்லித் தர ஆரம்பித்தாள்.

கேத் ..பெர்சனாலிடி டெவலப்மெண்ட் பற்றி நிறைய வொர்க்‌ஷாப் நடத்துவாள்.

அங்கே..சின்னஞ்சிறு பிஞ்சுக் குழந்தைகள் பெயரே வாயில் நுழையாத குறைகளுடன் இருப்பதைக் கண்டு..

அவர்களுக்கெனவே தன் நேரத்தை ஒதுக்க ஆரம்பித்தாள் லக்ஷ்மி.

குழந்தைகள் அவளோடு ஒட்டிக் கொண்டது. கை தட்டக்கூட சேராத கைகளுள்ள குழந்தைகளின் மனது இவளோடு ஒட்டிக் கொண்டது.


கேத்தும் லக்ஸும் ...அந்த ஏரியா முழுதும் பிரபலம் ஆனார்கள்..

நாமே ஏன் இப்படி ஒரு மையம்.ஆரம்பிக்கக் கூடாது என்று யோசிக்க..அந்த திண்ணை..பலர் வாழ்வுக்கு திருப்பு முனை தரும் ஒரு தளமாக அமைந்தது.


அமெரிக்காவில் ஒரே ஒரு நாள் தான்

thanks giving day..


ஆனால் ..நம்ம லக்ஸ் வீட்டு திண்ணையிலே தினமும் ஏதாவது ஒரு க்ரூப் வந்து உட்கார்ந்து செல்லும் .' "திண்ணை living day' கொண்டாட..


கேத் லக்ஸ் இருவரின் சமூகத் தொண்டு பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.


லக்ஷ்மி தன் கிராமத்து வீட்டையும் ஒரு புனர்வாழ்வு மையமாக மாற்றினாள்.

கிராமத்தில் ஆறு மாதம்..பிள்ளையுடன் ஆறு மாதம் என்று கழித்தவள்..

அங்கும் இங்கும் தன் பொது நலப் பணிகளைத் தொடர்ந்தாள். எத்தனையோ குடும்பங்கள் இவளை வாழ்த்தினர்.


க்ரீன் கார்டும் கிடைச்சாச்சு  லக்ஸுக்கு.


இப்போவும் காத்துக் கொண்டு இருக்கா..கேத்ரீனுக்காக..

இங்குள்ள புகழ் பெற்ற பொதுநலத் தொண்டு நிறுவனம் அவர்கள் இருவருக்கும் அளிக்க இருக்கும் பெரிய விருதை வாங்கச் செல்ல..


#திண்ணை_வில்லா என்றால் தெரியாதவர்களே இல்லை அங்கும் இங்கும் இப்போது.


"பேரே வாய்ல நுழையலடா'..என்று வெளிநாடு வந்தவளின் பெயர் ..


இப்போது இங்கும் அங்கும் எல்லாரின் மனதிலும் பதிந்த பெயரானது..

அன்பு சூழ் உலகு..

No comments: