Tuesday, December 29, 2020

Late 'ஆகுமுன் ஒரு letter.

 Late 'ஆகுமுன் ஒரு letter.


அன்புள்ள அகிலா..


நலம் நலமறிய ஆவல்னு எழுதக் கூட நேரமில்லை இப்போது என்னிடம்.


உன்னை விட்டு போகற சமயம் வந்தாச்சு..

என் முடிவை யாராலும்  தடுக்கமுடியாது..


பிரிவு கொடுமைதான்..ஆனால்..

விதியின் வழியை யார் மாற்ற முடியும்?


உன் கூட இருந்த கணங்கள் என் வாழ்க்கையில் மறக்க முடியாது..மறக்க வே முடியாது.


எத்தனை பல்பு நான் வாங்க வெச்சாலும்..

பயில்வான் போல...பலம் காட்டுவாய் நீ.


தத்துவம் பேசுவே..தாங்க முடியாது எனக்கு.

தத்துபித்துனு உளறுவ..தலை தெறிக்க ஓடி இருக்கேன்.


தத்தளிச்சு நின்னாலும்..தன்னம்பிக்கை விட மாட்டாய் நீ..


கைகோர்த்து ஒவ்வொரு நாளும் ..கல்லும் முள்ளும் கூட காலுக்கு இதமான cotton ஆக இருக்க..நாம் நடந்த பாதைகள்..


எல்லாத்தையும் விடு..உன் கை மணத்தில் கட்டிப் போட்ட நாட்கள் இருக்கே..!! ஆஹா..


உன்னை எப்படி பிரிவேன்?

.எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு கம்மியா வாழ்க்கை கொடுத்தான் இந்தக் கடவுள்..

இப்படி மனசு கிடந்து அடித்துக் கொள்(ல்)கிறது.


ஆனா..ஒண்ணு.. உன்னோட இருந்த நாட்கள் என்னிக்கும் பசுமையாய்  இருக்கும்..


ஒரே ஒரு request..

நான் இல்லைனு சோர்ந்து போகாதே..

அடுத்த கட்டத்துக்கு அடி எடுத்து வைக்க..

சில இழப்புகள் கண்டிப்பாகத் தேவை..நம் வாழ்க்கையில்..


அதனால்..மனசை திடப் படுத்திக் கொள்..


இது முடிவல்ல..உன் வாழ்வின் அடுத்த கட்டத்தின்  ஆரம்பம்னு நினைத்துக் கொள்.


உன்னை விட்டு போனாலும்..மீண்டும் வேறு பிறப்பாய் உன்னை எப்படியும் வந்து சந்திக்கணும்னு ஆசை.


உன்னை ஆட்டிப் படைச்சிருக்கேன்..

ஆறுதலாகவும் இருந்திருக்கேன்..

அட்டகாசம் செய்திருக்கேன்..

"இதுவும் கடந்து போகும்னு ' நம்பிக்கை என்ற ஒரே ஒரு அஸ்திரத்தை கெட்டியா பிடித்துக் கொண்ட உனக்கு..


என் வாழ்த்துக்கள்..


பிரிய மனமில்லாமல்..

#இப்படிக்கு

உன்..

...

..

...

...


....

....

...

....

....

...

2019

Wednesday, December 23, 2020

Halo..hello

 #காது_கொடுத்துக்_கேட்டேன்_ஆஹா_ஹலோ_ஹலோ_சத்தம்..


ஹலோ டாடி ..எப்போ வருவீங்க..உங்க பாஸ் ஏன் லீவு தரலை.. இழுத்து இழுத்து பேசும் குட்டிப் பொண்ணு..

ஃபோனை பிடுங்கியபடி 

ஹலோ என்னங்க அந்த தயிர் வெளியே இருக்கு . ஃப்ரிஜ்ல வெச்சுடுங்க.. அவள் அம்மா


ஹலோ...ஹலோ..மத்யானம் விசாகா ஹரி கேட்டு முடிச்சுட்டு கிளம்பியாச்சு..என்னமா பிச்சு உதறா

தாத்தா ஒருத்தர் .


ஹலோ..ஹலோ...என் லாப்டாப்பில் கீ போர்டு வேல பண்ணலை சார். so எல்லாமே வாட்ஸப்பு மெசஞ்சர் தான்.. ஒரு tech savvy.


ஹலோ..ஹலோ..40 பேர் target. இன்னிவரைக்குமே 167 பேர் ஆன்லைன் payment பண்ணிட்டாங்க..

சக்ஸஸ் ..சக்ஸஸ் ..சீட்டு கம்பெனி காரர் போலருக்கு..


ஹலோ..சொல்றதைக் கேளு ராத்திரிக்கு சாப்பாடு வெக்க வேணாம்.

வீட்டு சாப்பாட்டில் விடுதலை ஆன ஒரு மாமா..


ஹலோ ..ஹலோ...நான் சொல்ற steps எல்லாம் நோட் பண்ணிக்கோ அப்போதான் இந்த sum solve பண்ண முடியும்.. பையன் பரீட்சைக்கு on the wheels இலும் கருமமே கண்ணான அப்பா..


ஹலோ..ஹலோ..லக்‌ஷ்மி..நான் தான் பேசறேன்.

நாளைலேர்ந்து வேலைக்கு வந்துடு ..

வலது கரத்துக்கு ரிமைண்டர் கொடுக்கும் என்னை மாதிரி ஒரு பெண்..


இரண்டு மணி நேரமா..இதே மாதிரி ஹலோ ஹலோ ஹலோனு ..என்னை சுத்தி..

earphone போட்டுக்காமல் travel செய்யணும் என்கிற என் பாலிஸி ..

இன்று பல ஹலோக்கள் கேட்கணும்னு ஆசீர்வதிக்கப்பட்டிருக்கோ?

Tuesday, December 22, 2020

கூட்ஸ் வண்டியிலே

 கூட்ஸ் வண்டியிலே..ஒரு காதல் வந்துருச்சு


 '25 தானே.'.

இல்ல்..லை 32..

டாட்டா காட்டி முடித்தபின் ..தொடங்கும் டிஷ்யூம்..டுஷ்யூம்..தோழிகளுடன் எப்போதும்.

என்னிக்கு ஒழுங்கா எண்ணி இருக்கோம் இந்த பாரம் ஏற்றி..ப்ளாட்ஃபார்மில் ஊர்ந்து செல்லும் கூட்ஸ் வண்டி பெட்டிகளை

  tally ஆனதே இல்லை..

சில இடத்தில் பாரம் குறைக்கப்படும்..சில இடத்தில் ஏறும்..

சில நேரம் வேகம்..சில நேரம் ஊரல்..

வண்டியும் சொல்லும் வாழ்க்கைப் பாடம்..

அரைக்கிழம் ஆனபோதும்..

ஆசை விடுவதில்லை..

ஆடி அசைந்து செல்லும்..

பெட்டிகளின் கணக்கு

பெரும் புதிரே என்றுமெனக்கு..

ஒண்ணு.இரண்டு ..மூணு..

எண்ணத் தொடங்க..

அம்மா..ப்ளீஸ் என்றாள்..

அவளுக்கென்ன தெரியும்..

அதிலிருக்கும் மகிழ்ச்சி..

அடப்போடா..

யார் பார்த்தால் என்ன..

தொடர்ந்தேன்..

நாலு..அஞ்சு..ஆறு..


கடைசி பெட்டி போயாச்சு..கணக்கு மட்டும் இன்னும் முடியல..போன வண்டியும் திரும்பி வராது..

கடைசி மாசமும் முடிவுக்கு வரப்போக..

கடந்த நாட்கள் கசப்போ..தித்திப்போ..

போனது போகட்டும்..

புதுசாய் துவங்குவோம்..

புது வருடக் கணக்கை

Advance happy new year friends

Friday, December 18, 2020

Jog with joy

 #jog_with_joy

ஜில்லுனு காத்து முகத்தை ஜவ்வுனு இழுக்கும் வேளையிலே..ஜக்கு அதான் ஜகதீசன் மாமா ஜாகிங் போவார் தினமும் ஜவ்வாது செண்ட்டோட லெதர் ஜாக்கெட்டோட ..

லிஃப்ட் கிட்ட என்னைப் பார்த்ததும்.

'ஜோல்னா எடுத்துண்டு எங்கே கிளம்பிட்டே' என்றார்.

' ஜோலி ஏகத்துக்கு இருக்கே மாமா' நு நான் சொன்னேன்

ஜாலியா ஜாகிங் பண்ணு..அப்போதான் ஜிம் போகாம ஜம்முனு இருக்க முடியும்நு சொல்லிண்டே..

' இந்த மெட்ரோ வேலை நடக்கறதுனால் வர வர ஜன்னல் கூட திறக்க முடியலை .ஜெயில்ல இருக்கற மாதிரி இருக்கு.

ஜனங்களுக்கு எத்தனை கஷ்டம்..அதுசரி

 அந்த நாலாம் நம்பர் ஜாகைக்கு இன்னும் யாரும் வரலையா இன்னும்..பூட்டியே கிடந்தா ஜகன் மோகினி வந்துடுவாளே' நு கவலையா இருக்ககுனு பொலம்பல்.

ஜக்கு மாமா மூக்கு நுழைக்காத ஜகாவே கிடையாது.

ஜாம் ஆகாமல் எங்க லிஃப்ட் அதிசயமா திறக்க..இவரைப் பார்த்ததும் ஜம்ப் பண்ணி ஓடினான் புதுசா வந்த 'ஜம்ப்பர்' சாரி..சாரி..'ப்ளம்பர்'

' ஜிங்க் டீக் கர்னே கே லியே ஜரூர் ஆவூங்கா'னு ஜூட் விட்டான் ஜாம்ஷெட்பூர் ஜா (jha)


படி வழியா இறங்கி வந்தார் ஜரிகை வேட்டி ஜம்பு மாமா . சாயங்கால  ஜானவாசம் attend பண்ண..ஜனசந்தடிக்கு பயந்து  ஜல்தியாவே கிளம்பினவர் நம்ம ஜக்கு மாமாவைப் பார்த்து ஜகா வாங்கினார்.

 'என்னைப் பார்த்தாலே ஜன்னி வந்தவன் மாதிரி ஏன் இப்படி ஓடறார்' நான் என்ன ஜங்கிள் லேர்ந்தா வந்தேன்.. ரொம்பத்தான் ஜம்பம் . அவனுக்கு ஜெம்மாட்டம் ஒரு பையன்னு எனக்கென்ன jealousy ஆ.. பேசிண்டே வந்தவர் தன்னோட ஜாகிங் ஜோடியைப் பார்த்து விட்டார்.

 

'சொல்ல மறந்துட்டேன்..ஒரு முழம் ஜாதி மல்லி வாங்கி மாமி கிட்ட கொடுத்துடுன்னார்.


சரி மாமானு சொல்லி ஜல்லி போட்ட ரோடில் ஜாக்கிரதையா நடந்து  ஜாமான் எல்லாம் வாங்கும் போது தான் ' ஊறப்போட்ட ஜவ்வரிசி 'ஜவ்' வரிசியாகிடுமே..அப்பறம் ஜாம் கூட செய்ய முடியாதேனு ஓட ஆரம்பிச்சேன்.


ஜக்கு மாமா ஜக் நிறைய MTR Grand ல்  காஃபி குடிச்சுட்டு வருவதற்குள் 

 மாமி ஜுவல்லரி ஷாப்புக்கு 'ஜனவரி வருதே..ஜனவரி.வருதே' நு. பாடிண்டு..ஜலஜாவோட கிளம்பிட்டா..காலண்டர் வாங்கறதுக்கு..


 ஜாகிங் போய் வரதுக்கள்ள மாமி ஒரு ஜாலி ரைடு போய்டறாடீமா..ஒரு டம்ளர் ஜலம் கொடுனு சாவிக்காக வந்து நினார்.


இருந்தாலும் ரெண்டு பேரும் நல்ல ஜோடினு பேர் வாங்கினவா..அதானே முக்கியம்.


அந்தாக்‌ஷரி என்ன..பாட்டு வெச்சு தான் விளையாடணுமா..பதிவுலும் விளையாடலாம்.

Mahadevan Srinivasan sir ' சா' போஸ்ட் எனக்கு inspiration 

.நான் 'ஜா'..

அப்போ நீங்க?

Tuesday, December 15, 2020

என்னை மறந்ததேன்...???

 என்னை மறந்ததேன்...??? 


நன்னா தேடு...அந்த புஸ்தக மூட்டைக்குள்ளே இருக்கா பாருடா..அதுலதான் இருக்கு அந்த  பழைய டைரி கடுப்பில ஏணியில் ஊஞ்சல் ஆடிண்டு இருந்த பையன்...அதே எல்லாம் எப்பவோ எடைக்கு போட்டு அம்மா mug வாங்கிட்டாப்பா..இப்போ எதுக்கு என்னை ஏத்தி வைச்சு உயிர வாங்கற...ஏணியில் இருந்து குதித்து மகன் ஓட..டேய்..அவசரமா ஒரு நம்பர் வேணும்டா....அங்கு வந்த தர்மபத்தினி.. க்கும்..செல்லுல எல்லாம் இருக்கும்போது..எதுக்கு இந்த லொள்ளு உங்களுக்குனு வசைபாட..ஐயோ..செத்துப் போன செல்லே..உயிர் உடனே வந்த Bsnl வழியா பேசக்கூட..இப்போ நீ வேண்டியிருக்கே....


காசு இல்லாம இருக்கலாம்..ஆனா..கைப்பேசி இல்லனா  ..technology க்கு salute செய்தாலும்..ரொம்ப அடிமையாகிட்டோமோ...எண்ணம் அப்பப்போ வரும்.

ஒரு flash back..

ரொம்ப கஷ்ட்டப்பட்டு ஆளைப் பிடிச்சு Bsnl connection வாங்கி..அதுக்கு ஒரு opening and closing password போட்டு பூட்டிப் பூட்டி..பில்லுக்கு பயந்து பேசிய காலம்..

எல்லாரோட டெலிஃபோன் நம்பரும் alphabetical order ல அழகா..அட்ரஸும் சேர்த்து எழுதி இருக்கும்.. புது வருஷ டைரி வந்ததும் அச்சு பிசகாம அதை copy வேற பண்ணி, பழைய டைரியயும் தூக்கிப் போடாம reference வெச்சுண்டு வாழ்ந்த நாட்கள்..

எல்லா நம்பர்களும் மனப்பாடம்..இப்போ மாதிரி வீட்டு நம்பரே செல் பார்த்து சொன்னதில்ல..

என் அம்மாவுக்கு ஆசையா வாங்கி கொடுத்தேன் ஒரு Nokia..அதை நோக்கியதே இல்லை அவள்..

அம்மா..இந்த landline phobia வை விடேன் என்றால்..இது தான் செளகரியம்...cost effective என்பாள்.அம்மா grow up என்பேன்..நான் தான் வளரல

எத்தனை digit ஆ இருந்தாலும் மூச்சு விடாம சொன்ன அம்மா எங்கே.. அந்த நம்பர் 23 ல முடியுமோ..இல்ல இல்ல..94 னு ஆரம்பிக்கும்....சட்டுனு ஞாபகத்துக்கு வர மாட்டேங்கிறது..அந்த செல்லைக் கொண்டா..சொல்லிடறேன்.. அந்த செல்லில் உள்ள contact list ஐ google ல வேற save பண்ணி இருக்கேன்..என்ன ப்ரயோசனம்..

ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும்...


மின்சாரம் இல்லாத போதும்..முழுமுச்சில் வேலை செய்யும் மூளையே..இன்னும் உன்னைக் கொஞ்சம் உபயோகிச்சு இருக்கலாமோனு தோணறது..


பழையன் கழிதலும்..புதியன புகுதலும் ஆனாலும்..இன்னும் என் அம்மா வீட்டில் அந்த ஃபோன் stand அதில் இருக்கும் telephone directory ம் அவள் கையெழுத்தில் எழுதப்பட்ட systematic telephone டைரியும்..nostalgic தான்.

Monday, December 14, 2020

அவளுக்கும் அச(ட்)டு என்று பேர்.

 14-12-18

அவளுக்கும் அச(ட்)டு  என்று பேர்.


அவள் நெஜமாவே இப்படித்தான் சொன்னாளா? இல்லை எனக்குத்தான் காதில அப்படி விழுந்ததா?

சே..சே..அவளுக்கு தான் தமிழ் தெரியாதே..

என் மை.வா. எனக்கு ஆறுதல் சொல்ல..

நடந்தது இதுதான்ங்க


morning walk முடிச்சு திரும்பி வரும் போது ரொம்ப நாளா பார்க்காத ஒரு தோழி எதிரில் வந்தாள்.

அபார்ட்மெண்ட் அரசல் புரசல் அரட்டை எல்லாம் முடிச்சோம். 

"உன்னோட NGO வேலையெல்லாம் எப்படி இருக்குனு 'நான் கேட்க ..அங்கே அவள் கொடுக்கும் training பற்றி சொல்லி சிலாகித்தாள்.

'ஒரு நாள் நானும் உன்னோட இதில் இணையணும் ' நு நான் சொல்ல..


சொன்னாளே ஒரு வார்த்தை.' you will be an asset' to us'. ஆ...மயக்கமே வந்துடுத்து.

பட்டர்ஃப்ளை தேவதை போல வந்தவள் bye சொல்லிச் சென்றாள் .


'அசடு' என்று எனக்கு நானே கொடுத்துக் கொண்ட டைட்டிலுக்கு..ஒரே ஒரு 'ட்' சேர்த்து

"asset' அசால்ட்டா சொல்லி அல்லேக்கா என்னை அந்த் வானத்துக்கே தூக்கிச் சென்ற அந்த வார்த்தை....அந்த நொடி..

இன்னிக்குப் பூரா..asset is the secret of my energyநு ..நடைப்பயிற்சியிலிருந்து வந்த என்ன ஓட ..பறக்க விட்ட வார்த்தை..


( நட்பூக்களே..'அகிலா நீ அசடு இல்ல'னு எனக்கு ஐஸ் வைக்காம..நீங்க இன்னிக்கு சொன்ன ..சொல்லப் போற அந்த வார்த்தை என்ன?..முடிவு பண்ணுங்க..

அன்புடன்

அகிலானந்தமயி

Sunday, December 13, 2020

சக்குளத்து பகவதி

 பழம் மட்டும் சாப்பிட்டு 

ஞானப் பழமாகும் Sumathi Manivannan எங்கே..

சான்ஸ் கிடைச்சா போதும்..

சாக்கு போக்கு சொல்லி

சக்கரைப் பொங்கல் தின்னும்

அகிலா எங்கே..


இன்னிக்கு எதுக்கு சக்கரைப் பொங்கல்னு கேட்பவர்களுக்கு இதோ..


ஆசாமி வந்தாலும்..சாமி வந்தாலும்..முதல்ல நம்ம வேலை..அவங்களுக்கு படைச்சு பொடைச்சு எடுக்கறதுதான்.


சக்குளத்துக்காவு அம்மன்..என் வீட்டை தேடி படம் உருவில் என்னைக் காக்க வந்தாள். பயம் கஷ்டம்,சந்தோஷம் எதுவெனிலும் அம்மா கிட்ட ஷேர் பண்ணிப்பது போல இவளிடம்..

சண்டையும் சமாதானமும் கூட உண்டு..


கார்த்திகை அன்று பொங்கலிட்டால்..பூரித்து போவாள் தான்..

அன்னிக்கு செய்யமுடியலை..அதான் வெள்ளிக்கிழமை இன்னிக்கு பகவதிக்கு பிரசாதம் செஞ்சாச்சு..


சக்குளம் காவில் தேவி நமோஸ்துதே

சக்குளம் காவில் தேவி நமோஸ்துதே..


நல்ல செயல் செய்ய நீ வைக்கணும்

நல்ல வார்த்தை சொல்ல நீ வைக்கணும்

நல்லவர்களின் நட்பு நீ கொடுக்கணும்

அல்லல் நீக்கி எம் குலத்தை காக்கணும்..


என்று சொல்லும்போதே ஒரு பாஸிடிவ் எனர்ஜி நமக்குள் பாய்ந்தோடும்..


" உடலை விட்டெந்தன் உயிர் பிரியும் போது 

உடனே வருவாய் ஒளி மின்னல் போல் ' என்று உருகும்போது..உனக்கு நானிருக்கேன் என்பாள்..


"காமமும் க்ரோதமும் லோபமும் மோஹமும் ..என்னில் வராமல் நீ காத்திடுவாய் .

சாமகானப்ரியே சண்டிகே 

என்னை நீ..

ஹோமாக்னி குண்டத்தில் ஹவிஸாக்குவாய் ". சொல்லும்போதே சூழ்ந்த இருள் எல்லாம் விலகும் மாயம்.


சக்குளம் காவில் தேவி நமோஸ்துதே

சக்குளம் காவில் தேவி நமோஸ்துதே..


அன்புடன்.

பத்து வரிக் கதை

 #பத்து_வரிக்_கதை.


'

#மாத்தி_யோசி' ..இந்த concept எனக்கு கத்துக் கொடுத்தது bala Hari


அவரோட இன்றைய ' பத்து வரியில் படம் பார்த்து அவர் எழுதிய கதைக்கு'  


என் எச.


மன்னிச்சு மக்களே..🙏🙏


#பிக்சர்_பர்ஃபக்ட்..


எப்போதுமே கிளிசரின் போட்ட கண்கள், கழுத்தும் கையும் நகை ஸ்டாண்டாக..பாத்திரம் கழுவும்போதும் பட்டுப் புடவையில் பளபளக்கும்..சீரியல் நடிகை ரோனிலா..


" மேடம்..இந்த ரோல் பண்ணிப் பாருங்க..இண்டஸ்ட்ரில உங்க இமேஜே மாறிடும்' ..காரட் காட்டினார் டைரக்டர் காத்தமுத்து..


" சார்..எதுக்கு சார் இந்த விஷப் பரீட்சை ..என்னை இந்த மாதிரி ஆடியன்ஸ் ஒத்துக்க மாட்டாங்க சார்' கெஞ்சி கூத்தாடியும் மசியவில்லை டைரக்டர்..


பின்னி பூ வெச்ச கூந்தல்.. இப்போதுகோல்டன் ப்ரவுன் ஹேர் டையில் மினுமினுக்க..லிப் க்ளாஸ் சுண்டியிழுக்க,கசகசனு அந்த கோட் மட்டும் கெட்டியாக அவளைப் போட்டு இறுக்கியது .


கண்ணாடியில் தன்னை பார்த்துக் கொண்ட அவளுக்கு..'ஓ..மை காட்..நானா இது..இவ்வளவு நாள் எங்கே இருந்தது இந்த அழகு..' 


அவள் யோசனையைக் கலைத்த டைரக்டர்.." மேடம்..இந்தாங்க ..இந்த பிஸ்டலைப் பிடிங்க..லாவகமா அந்த ஓட்டைக்குள் கை விட்டு உங்க கண்ணில் ஒரு குரூரம் , ஒரு கொலை வெறி தெரியணும்..காத்தமுத்து பேசப் பேச..


காந்தக் கண்களுடன் ..கூந்தல் ஒருப்பக்கம் கண்ணில் விழ, நடுங்கும் கைகளுடன் துப்பாக்கியை முதல் முதலாக வாழ்க்கையில் தொட்ட நேரம்..


"மேடம்..அப்படியே இருங்க..ப்ரமோவுக்கு இந்த ஷாட் அற்புதமா இருக்கும்' லைட் ,காமெரா ஆக்‌ஷன் அவர் ஆணைக்காக முழு யூனிட்டும் காத்திருக்க..


"டைரக்டர் சார்.. நிறுத்துங்க ..எல்லாம் கச்சிதமா இருக்க, என் நெயில் பெயிண்ட்டை  மாத்தாமல் இப்படி விட்டுட்டீங்களே..ஷாட்ல என் கைவிரல் கூட க்ரைம் க்கு தகுந்த மாதிரி இருக்க வேண்டாமா?' ..

 ரோனிலாவின் குரல்..முழு யூனிட்டும் ஸ்தம்பிக்க வைத்தது.


துப்பாக்கி ..நல்லவேளை டைரக்டர் கையில் இல்லை

Thursday, December 10, 2020

Happy karthigai

 Happy karthigai


நேத்திக்கி சாயந்தரம் அப்பாவுக்கு ஏதொ பொறி தட்ட..


"ஏம்மா.கார்த்திகை நாளைக்கு தானே..இன்னும் நீ பொரியே பண்ணலையேனு கேட்க..


"அப்பா..என் பொறுமையை சோதிக்கும் பொரியைப் பத்தி ஒரு வரி கூட பேசாதப்பானு" அவரை பொரி கலங்க வைக்க..

பொரினு கேட்டத்துக்கு இவ எதுக்கு இப்படி எறிஞ்சு விழறானு என்னை பார்க்க..

"பின்ன என்னப்பா..பாதி பொரி கூட்டணிலேர்ந்து பிரிஞ்சு தனிக் கட்சியா பேந்தப் பேந்த முழிக்கும். அதனால பொரிக்கு நான் பிரியா விடை கொடுத்துட்டேன்.."

ஏதோ பாவம் ..பொரிஞ்சு தள்றானு..


 அடுத்த பொறியில் என்னை மாட்ட வைக்க திட்டம் போட்டார்..


"அப்போ..அப்பம் பண்ணிடேன்.. "

"அப்பமா..அதுக்கு பழுத்த வாழைப்பழம் இல்லனு" நான் அப்பீல் தர..


"சரி..அப்போ..அடை.."

"அடை....அதான் டாக்டர் உங்களுக்கு தடை போட்டிருக்காரே.."

"அதனால்..இந்த தடவை பழமும் பாயசமும் மட்டும் நெய்வேத்தியம்.."


இன்னிக்கு மத்யானம்..

வெல்ல அப்பம் எண்ணெயில் துள்ளி விளையாட.

தோசைக் கல்லில் அஞ்சு ஓட்டை அடை ..

தயாராகிக் கொண்டிருக்க..

தூங்கி எழுந்த வந்த அப்பா..

" எனக்குத் தெரியும்..நீ எப்படி பண்ணாம இருப்ப? ..கண்ணால் பேசிட்டு ..


"கொடு..இந்த விளக்குக்கு எல்லாம் திரி போட்டு எண்ணெய் விட்டு,சந்தனம் குங்குமம் இட்டு கொடுத்துடறேன்..நீ சீக்கிரம் நல்ல புடவை கட்டிண்டு வந்து விளக்கேத்து'..


அந்த அன்பு.. அந்த வாத்ஸல்யம்..


கற்றதும் பெற்றதும்  இந்நாளில் இதுவே..


அன்பு சூழ் உலகு

Sunday, December 6, 2020

தேடல்

 06-12-18

#மனதில்_தோன்றிய_முதல்_வார்த்தை.

#தேடல்

மூக்கு கண்ணாடி எங்கேனு தேடலோட ஆரம்பிக்கும் விடியல்.

மூக்குக்கு மேல இருந்தாலும்..துழாவித் துழாவி..எங்கே வெச்சேன்னு சில சமயம்..

கண்ணுக்கெதிரிலேயே இருக்கும் சாவி கொத்தை கண்ட இடமெல்லாம் தேடல்.

வீட்டிலும் தேடல்..வெளியிலும் தேடல்..


தேடல் இல்லாத் வாழ்க்கை...தொய்ந்து போன ஒரு நடைப் பயணம்.


" அம்மா..என்னோட நோட் எங்கனு பாரு' இது கேட்காத வீடு இல்லை..சரினு தேடப் போனால்..எப்பவோ தொலைந்து போனது என்று முடிவு கட்டின முக்கியமான பொருள் ஒண்று கிடைக்கும்.


தேடல் ..ஆனால் நிறைய பாடம் கற்றுத் தரும்.

முதலில் எதைத் தேடறோம் என்கிற தெளிவு வேண்டும்.

அடுத்து, சில தேடல்கள்..பழசை தூசி தட்ட வைக்கும். புதுசாவும் வழிகாட்டும்.


இரையைத் தேடும்போது கொஞ்சம் இறையையும் தேடுவோம்.


" நான் இங்கிருக்கேன்..நான் இங்கேயும் இருக்கேன் ' என்று நம்மை கூப்பிட்டபடி இருக்கும் இறைவனைக் காண்போம்.


கடுமையா பேச நினைக்கும் போது இனிமையான வார்த்தை தேடுவோம்.


' உனை எங்கேத் தேடுவேன்..'என்று சும்மா இருக்காமல்..சுறுசுறுப்பாக இருப்போம்.

தேடிக் கொண்டே இருங்கள் எதையாவது.

வாழ்க்கையின் பக்கங்கள் வழி காட்டும் தேடல் வரிகளால் நிரம்பட்டும்.


#அதுசரி..இன்னிக்கு உங்களுக்கு தோன்றிய முதல் வார்த்தை என்ன மக்களே?

December

 #டிசம்பர்..டிசம்பர்..ஹாலிடே moodu..


( december போஸ்ட் ..கொஞ்சம் delay ஆச்சு..

என்கிட்டேர்ந்து தப்ப முடியாதே நீங்க ..நட்பூஸ்😀)


வருடத்தின் கடைசி மாதம்

வந்தாச்சு டிசம்பர் மாதம்..


நாட்கள் நொடியாய் பறந்திட

நாமும் வந்தோமே டிசம்பர்..


சுகமும் சோகமும் கலந்திங்கே

சுவையான பல அனுபவங்கள்.


திரும்பிப் பார்க்க வைத்திடுமே

கடந்த தடங்கள் யாவையுமே..


வாழ்க்கை தரும் பாடமுமே

வருடம் முழுதும் நடந்திடுமே


கற்றதும் பெற்றதும் பலவிங்கே

முற்றுப் புள்ளி ஏதிங்கே..


இருபதில் அடி எடுத்து வைக்க..

இருப்பதோ இன்னும் சில நாள்..


ஜனவரியில் போட்ட சபதங்கள்

ஜனித்ததா? ஜன்னியில் படுத்ததா..?


அசை போடும் நேரமிதுவே..self

Appraisal ஒன்று செய்வோமே..


Nineteen இப்போ சோகத்திலிருக்கோ..?

Teenage முடிந்து போச்சென்றே..!


 வருஷமும் வயதும் போனால் என்ன?

 வாழ்ந்தும் காட்டுவோம் ..வழியும் காட்டுவோம்..


அன்புடன் ...

Saturday, December 5, 2020

அன்பு_சூழ்_உலகு

 நேத்திக்கு  என் ஃப்ரண்டோட ஃப்ரண்ட் ஆஷ்னா வீட்டுக்கு போனேன். 

ஜாலியா பேசி அரட்டை எல்லாம் நடக்க..


அவங்க வீட்டு இன்னொரு ரூமிலிருந்து வெளியே வந்தார்கள்..ஒரு நடுத்தர வயது பெண்மணி..


என் ஃப்ரண்டு ..' இவங்கதான் ஆஷ்னாவோட "mom in law " என்று அறிமுகப்படுத்த..


அமைதியா ..அந்த அம்மா சொன்னாங்க..

' I am not her mom in law..

I am her #mom_in_love.


ஆஹா..மண்டையில் நறுக்குனு யாரோ குட்ற சத்தம்..


எத்தனை அழகான வார்த்தை..

சொல்லிச் சொல்லி பார்த்துக் கொண்டே திரும்பும்போது..


" I love you maa' என்று என் மாமியாரை கட்டிக் கொள்ளும்போது..

" ஐயோ..எனக்கு வெக்கமா இருக்கு' என்று அவள் முகம் சிவந்த  ஞாபகம் ஏனோ இன்னும் மனதில் ஓடிக் கொண்டிருக்கு..


#அன்பு_சூழ்_உலகு...

கடவுள் முன்

 #05-12-18

"இது போதும்..இதுவே எனக்கு போதும்'் என்று வாய் சொல்லியபடி இருக்க....இனிப்புக்கு கை நீட்டும் குழந்தையாய் நான்..

கடவுளின் முன்..

சந்திப்போமா..இன்று சந்திப்போமா

 சந்திப்போமா..இன்று சந்திப்போமா..


அங்கங்கே தலை காட்டிய வெள்ளிக் கம்பிகளுக்கு 'டை ' அடிச்சாச்சு.. எந்த புடவை பாந்தமா இருக்கும்..தேடலுக்கு பின் தேர்ந்தெடுப்பு ஒரு சிவப்பு கறுப்பு புடவை..

ஃபோட்டோவில் இருப்பது போல இருக்கணுமே ..ஒரு கவலை..சின்ன விபூதிக் கீற்று பயம் போக்க இட்டாச்சு..வாட்ச் வடிவில் அம்மாவையும் கூட கூட்டிண்டாச்சு.

என்ன வாங்கிண்டு போகலாம்..?.பழமா..பலகாரமா..

வென்றது பழம்..பொறுக்கி எடுத்து வாங்கியாச்சு..புஸ்தகம் நிறைய படிப்பார்னு கேள்விப் பட்டிருக்கோமே..சரி ..புக் ஹவுஸில் ஒரு மேய் மேய்ந்து மனசுக்கு ஓகேனு சொன்ன ஒரு எழுத்தாளர் படைப்பை pack செய்தாச்சு..

எதில் ஆரம்பிக்கலாம்  பேச்சை...? இதுவரையில் எழுத்தில் தானே அறிமுகம்...

இந்த சந்திப்பு ஒரு மிக சந்தோஷமான ஒன்றாக இருக்கணுமே...ஆட்டோ பிடித்த வேளை..லேசாக ஒரு excitement. அபார்ட்மென்ட் வாசல் இறங்கியதும் பேரும் ஃபோட்டோவும் பிடித்த  செக்யூரிட்டி 'உள்ளே காத்திருக்கிறார்கள்' வழி சொன்னான். பிள்ளையார் சிலை ஒன்று போய் வா உள்ளே என்றது..வழியெங்கும் வண்ணப் பூக்கள்..சிவப்பாய் ஒரு மைக் பூ ஒன்று தலையாட்டி வரவேற்க..துறு துறு கைகள் காமிராவில் படம் பிடிக்க..அங்கே அழகான குழலூதும் கண்ணன் முன்  கானமிசைத்தபடி அங்கிருந்த வயதில் மூத்தோர்..

மணிகளும் தோரணமும் தொங்கும் வாசல் முன் நிற்க..படபட மனசை அடக்க..மணிச் சத்தம் கேட்டு வந்து திறந்தாள் ..பதிவுகள் மூலம் பரிச்சயமான saraswathi..நம்ம் Mythili Varadarajan  aunty ந் வலது கரம்.


எங்கே வந்தேன்னு புரிஞ்சதா..great meeting with such a wonderful fb friend Mythili Varadarajan aunty. 


'உன்னை first time பார்க்கிற மாதிரியே இல்லையே.'.அவர் உதிர்த்த முதல் வாசகம்..சந்தோஷம் சந்தோஷம்.அப்பப்பா...

பேச்சு..பேச்சு..பேச்சு..

அடக்க முடியாமல் ஃபோட்டோ எடுக்கும் போது சிரித்துத் தள்ளும் Mythili aunty. கன்னடத்தில் செல்லமாய் கண்டித்த சரஸ்வதி..

அவரது அக்கா சரயூ aunty வீடு..

வீடல்ல..அது ஒரு அழகான art gallery.. ஒரு கோயில் போல..எல்லா ஊர்களையும் ஒரே இடத்தில் சுற்றி வந்த பிரமிப்பு.. 

பசுமையான செடிகள் தொட்டிகளிலும்.. தொங்கிக் கொண்டும்..

ஒவ்வொன்றும் ஒரு பொக்கிஷம். 


நேரம் போனதே தெரியவில்லை..

மீண்டும் வந்து meet பண்றேன்..வாக்கு கொடுத்தபடி மனசில்லாமல் நான் கிளம்ப..

வீட்டில் கொடியிலிருந்து வெத்தலை பறித்து தாம்பூலம் கொடுத்து மிக அன்பாய் வழியனுப்பிய அவர் அக்கா.. (அந்த வெத்தலை மென்ற சுகம்..இன்னும் நாக்கில்)

வாசலை அடைவதற்கு முன் ..Facebook status போட்டு மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட...ஒரு அருமையான நட்பை..

.என்ன தவம் செய்தனை..இத்தனை அன்பும் ஆசையும் கிடைக்கச் செய்த மார்க்குக்கு ஒரு சலாம் ..

FB உங்களைப் பொறுத்த வரை என்ன என்று பதிவில் கேட்டிருந்த Shankar Rajarathnam sir..

பதிவுகளும்..அதைத் தொடரும் unconditional அன்பு காட்டும் இந்த பந்தங்கள் தான் என் பதில்.

நாளை..உனதே..

 நாளை..உனதே..


வீசி எறியப்பட்ட புத்தகப்பை..

விடுமுறை நாளையென சொல்லிடுமே


திறந்து கிடக்கும் பேனாவோ..

டீவிக்கு ஓடும் அவசரம் சொல்லிடுமே


_off செய்யாத மடிக்கணினி..

online இருப்பதை சொல்லிடுமே


போட்டுப் பார்த்து பரத்திய துணிகள்..

போக வேண்டிய பார்ட்டி சொல்லுமே.


அடுக்கி அழகாக்கிய அலமாரி.

அவள் தோழி வருவதை சொல்லிடுமே..


Green tea யில் காய்ந்த கப்

காலை வரை படிப்பை சொல்லிடுமே


கழுத்தைக் கட்டி கொஞ்சையிலே..

காரியம் எதுவென்று புரிந்திடுமே..


உருட்டல் மிரட்டல் வேகாது பருப்பு..

உனக்கு வேலையே இல்லையானு சலிப்பு


கிளிக்கு அங்கே இறக்கை முளைக்கும்..

விடுதலை பெற்று வெளியே பறக்கும்..


சத்தம் அடங்கும்..

சுத்தம் பெருகும்..

கத்தலில்லா..வாழ்வு..

கசக்கும் எட்டிக்காயாய்..

 காத்திருப்பு அதிகமாகும்..

ஏக்கம் நிறையுமங்கு..

வழி பார்த்து ..

விழி ஏங்கும்..

சீறியது போய்..

சிறுபிள்ளையாய்..

சின்ன மனம் ஏங்கும்..

செல்லமே..

எப்போ நீ வருவாயென்று..


வருவாய் நீயும்..

வீடே மாறி ப் போகும்

அம்மா..

ஏன் இப்படி அழுக்கா இருக்கு..

என்னை கேட்க ஆளாவாய் நீயும்..

Sunday, November 29, 2020

Food for thought

 #sunrise_with_struggles_face_with_a_smile

அடக்குமுறையை அலாரத்தில் காண்பித்த ஆணவம்

அடங்கிப் போனது.

அழிச்சாட்டியம் செய்த காஃபி ஃபில்டரால்..


ஃபில்டர் காஃபி கிட்டா வேளை..'டீ'யும் ம் குடிக்கப் பழகணும்.


don't fear about the deadlocks . There is always a vast universe to show the alternatives.


அகிலானந்தமயி

சகிப்புத்தன்மை

 சகிப்புத் தன்மை..


வாயில போடுமுன்னே

வளையல் போடணுமே..

வக்கணையா சமைச்ச கைக்குனு..

விழுங்கி முடிக்கும்....வீட்டுக்காரர்..

சகிப்புத் தன்மை தொடங்குமங்கே


வாரி இறைத்த புடவைக் குவியலில்..

வரிக் குதிரை டிசைன்..

வாங்கினதே இல்லனு..வாங்கி

விமர்சனமே இல்லையேனு..

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சல்..

சகிப்புத் தன்மை...உண்டிங்கே


amazon ல் ஆடித் தள்ளுபடி.

அலுக்காமல்..ஆயிரம் தந்து

அதே செருப்பை வாங்கி..

அப்பா..எப்படி இருக்குனு

அருமை மகள் கேட்க..

அப்பா ..சகிப்புத் தன்மை..


மாப்பிள்ளைக்கு பிடிக்கும்னு

மாறாத மெனுவுடன்..

மாமியாரும் பறிமாற..

மண்டையாட்டி...

மாறாத அசடு வழிதலுடன்..

மாப்பிள்ளை..சகிப்புத் தன்மை..


senti போடாத..

சிரித்தே மழுப்பும்..

சகிப்புத் தன்மை..

சரிதானே..

Monday, November 23, 2020

கார்த்திகை தீபம்.

 கார்த்திகை தீபம்.


விளக்குகள் வரிசையாய்

விண்ணிலிர்ந்து இறங்கிய

விண்மீங்களாய் ஜொலிக்க..

வண்ண மயமான கோலங்கள்

வாசலை அலங்கரிக்க..

வந்தது கார்த்திகை..

விலகட்டும் அக இருள்

வரும் காலம் யாவும் 

வசந்தமாய் இருக்க

வாழ்த்தொன்று அனைவருக்கும்.

எனக்கொரு மிஷின் வேண்டு..மடா..

 எனக்கொரு மிஷின் வேண்டு..மடா..


நெல்லு பொரியா..அவல் பொரியா..

எந்த பொரியானால் என்ன..?


எலி கூட சிக்கும் பொறியில்..ஆனால் இந்த சின்னப் பொரி இருக்கே சிக்காது என்னோட சின்ன கையில்..


பாகு பதம் பல இருக்காம். கம்பிப் பதம், தக்காளிப் பதம்..டங் பதம்

கம்பியில நடக்கற மாதிரி தான். balance கொஞ்சம் போக ..கம்பி ..கயிறு மாதிரி ஆகும்..கம்மர்கட் கண்டிப்பா கிடைக்கும்.

பொரி உருண்டை ...


பொல பொலனு கொட்டும் சில சமயம்..

'பா'ல் மாதிரி போட்டு விளையாடலாம் சில சமயம்.

பிடிக்க வந்தா உருண்டை...இல்லாட்டி தூள்தும்பட்டை.

இதுதான் நம்ம பொரி பாலிஸி.


ஒட்டுகிறதே பாகு என்று பொரியோடு கலக்க..

மாலில் கிடைக்கும் caramalised popcorn மாதிரி தனித்தனியா முழித்து நிற்கும்..


கூட்டணி முறிந்து தனி சீட்டு கேட்டு பொரி(றி) பறக்கும்.

நாலு உருண்டை பிடிப்பதற்குள் நாக்கு தள்ளிடும்.

சுடறதேனு சும்மா இருக்க முடியாது...உஸ் உஸ்னு கைக்குள் அமுக்கினாலும் உனக்கும் 'பெ'ப்பேனு ஓடிப் பிடிச்சு விளையாடும்.


உதிர்ந்து போனாலோ..

உருவாகும்  பல பலகாரம்.

அதுக்கு Meena Anand Bhavani Santhanam mam எல்லாரும் நம்மை enlighten பண்ணுவார்கள்.


விக்ரம் வேதாள் மாதிரி..

விடாது முயற்சி..

வருஷா வருஷம்.


எதற்கெல்லாமோ மெஷின் இருக்க..

இதுக்கு ஒரு மெஷின் வேண்டுமடானு..

கேட்கறது யாராவது காதில் விழட்டும்.

வெல்லமும் பொரியும் கலந்து போட்டதும்..

வெளியே வரணும் வட்டமாய் ஒரு பொரி உருண்டை..


நம்ம புலம்பல் எல்லாம் முடிந்து..இப்பொழுது ப்ராத்தனையும் செய்யலாம்.


அப்பமோ அடையோ..

அலண்டு போன

அவல் பொரி உருண்டையோ..

ஆசையாய் படைக்க..

அங்கே வருவான்..

அருணாச்சலன் அவன்தான்..

அருளும் தருவான்..

இருளும் அகற்றுவான்.


பொறுமையா படிச்சவங்களுக்கு பொரி உருண்டை கொடுக்கத்த்தான் ஆசை.

(அடடா..இது என்ன சோதனை நு உங்க மை.வா. கேட்கிறது)

அடுத்த வருஷம் பார்ப்போம்..

மெஷின் வருதா இல்லை..

முன்னேறுகிறேனா நான் என்றே..


மிக இனிய தீபத் திருநாள் வாழ்த்துக்கள்

Saturday, November 21, 2020

அழகே அழகு

 எங்கே தேடுவேன்..அழகை எங்கே தேடுவேன்..


கடவுள் படைப்பிலேயே உங்களுக்கு ரொம்ப பிடிச்சது எதுனு கேட்டால் ..என்ன பதில் சொல்வோம்?


உடனே..ஒரு குட்டி கவிதை ஓடும்..


விடியும் காலை..

விரியும் பூக்கள்

விழும் அருவி

வீசும் தென்றல்

ஓடும் நதி

ஒருமிக்கும் கடல்

ஓயாத அலை

ஓங்கி வளர்ந்த மரம்

வலம் வரும் நிலா

வானத்து விண்மீன்கள்

நகரும் மேகம்

நல்ல மழை..

மலைப்பாக்கும் மலைகள்

மருள வைக்கும் பள்ளத்தாக்குகள்.


இப்படி லிஸ்ட் நீளும்..


ஆனால்..இதையெல்லாம் விட பெரிய அழகு எது?


#நாம்_தாங்க  அவன் படைப்பில் மிக அழகு .


மறைந்திருக்கும் ..

#நம்_மனம் தாங்க  அவன் படைப்பில் அழகோ அழகு..


எத்தனை அன்பு அவனுக்கு நம் மேல்..

போ..போய் ரசித்து வா உலகை என்று நம்மை படைத்து அனுப்பி இருக்கான்..


வாங்க..ரசிப்போம்..

அவன் நமக்காக படைத்த இந்த ரம்மியமான உலகை..

Limitless list

Friday, November 20, 2020

காக்குருவி.. கதைகேளு..

 Thanks Shiv K Kumar sir Chandrashekar Ramaswamy Muralidharan Rajagopalan for the poetic touch and naming my bird ...


காக்குருவி.. கதைகேளு..


ஒத்தையா.. நீ..?

ஒடன்பொறப்பு...???

ஒட்டு உறவெல்லாம்..

ஒனக்கெங்கே புரியும்..

மறைவிலும்..முகத்திலும்..

மோவாகட்டை இடித்து பேசி

மனசை புண்ணாக்கிய..

மஹானுபாவர்களுக்கு..


ஒட்டி உறவாடுனதெல்லாம்..

வெட்டியே..வெளியே போக..

ஒத்தை காக்குருவிக்கு

ஊரெல்லாம் சொந்தமாக..தன்

குஞ்சு குட்டிக்கெல்லாம்..

கத்து கொடுத்துச்சாம்..

கூடப் பொறந்தாதான்..

சொந்த பந்தமில்ல..

காட்டு ..உன் அன்பை

கலப்படம் இல்லாம..நீ.


கூவிக் கரஞ்சா போதும்.

கூட்டம் ஒண்ணும் வந்திடுமே..

காலமது் போனாலும்..

காக்குருவி எங்கூடு..

கலகலப்பா இருந்திடுமே..

பலகூட்டு பறவைங்க..

பறந்து தான் வந்திடுமே..

விருந்தொன்னு..உண்பதற்கே..

Saturday, November 14, 2020

Happy childrens day

 மலர்கள் கேட்டேன்..வனமே தந்தனை..


ipad ல் ஆழாமல்

eye ஆக காக்கும்

 அப்பா அம்மா..


மெகாசீரியலுடன்

மூக்கை சிந்தாது

'midas touch' கதையால்

மகிழ்விக்கும் பாட்டி

 

senior citizen group ல்

சிலாகித்து போகாமல்

சீராட்டி ..காரோட்டி 

விளையாடும் தாத்தா


அஞ்சலி.படம் போல

அண்ணா..அக்கா

சுத்தி சுத்தி வரும்

சித்தி அத்தை எல்லாம்


பின்னலும் பாவாடையும்

பளிச்செனெ அலங்காரம் 

பாங்காய் செய்யும் மாமா..


'குடும்பமும'் 'வம்சமும்'

கூவிக் கதறாத டீவி.


வட்டமாய் அமர்ந்து

வேடிக்கை பேச்சோடு

வேளா வேளைக்கு

வயிற்றுப் பசியாற்றல்..


school எப்போதும்

cool ஆன இடமாச்சு..


குழந்தைகள் தினமதிலே

கொத்தாய்ப் பூக்களுடன்..

கொள்ளை அன்புடனே

கொண்டாடும் ஆசிரியர்..

fete உண்டு

photo உண்டு

போட்டிகள் உண்டு..

tasty food உண்டு.


இப்படி வளர்ந்தனரே

என் வீட்டுச் செல்லங்கள்..

திரும்பிப் பார்க்கிறேன்..

திரும்பி வரா நாட்களை..


சேமித்தது போதும்..

செலவழித்து மகிழுங்கள்

செல்லப் பொடிசுகளுடன் 

கைகோர்த்தே காலமதை.


போனால் வராது..

பொன்னான நேரமிது


கிளிகள் பறந்து போகும்..

கிடக்குமே நினைவிலென்றும்

நித்தமும் கொண்டாடிய...

குழந்தைகள் தினம்தானே..


Happy children's day

Monday, November 9, 2020

Happy birthday yoga

 Happy birthday yoga


ஜாம்ஷெட்பூர் ஜெம்மு

ஜம்முனு புன்னகையில்..

நம்மிடம் ஒட்டும் gummu.


Lightning speed ல் லைக்கு கமெண்ட்டு

Light க்கு கொண்டுவருவாள் போஸ்ட்டு


கொஞ்சும் தமிழுடன் இவள் அன்பு

நெஞ்சை விட்டகலா அம்பு..


யோகா கிடைத்தது நமக்கு..பெரிய

யோகம் என்று நீ நம்பு..


சவால்களை  சமாளிக்கும் பண்பு

இவள்

பதிவுகள் தருமே புதுத் தெம்பு..


பிறந்தநாள் காணும் உனக்கு

பதிவில் அனுப்பினேன் வாழ்த்து..


வாழ்க நீ பல்லாண்டு..

வாழ்க நீ பல்லாண்டு..


அடுத்த வருஷமாவது சந்திப்போமா Yoga Yogambal

Friday, November 6, 2020

Happy biryhday appa 06-11-2020

 இன்னிக்கு எங்க வீட்டு ஹீரோ..என் அப்பாவின் birthday..


#Happy_birthday_Appa..


புதுக்கோட்டை புத்திரனுக்கு..

பிறந்த நாள் இன்னிக்கு..

பாரதியின் பாட்டுதான் 

பொருந்தும் என் அப்பாவுக்கு..

என்னனு கேக்கறேளா..?


காலை எழுந்தவுடன் படிப்பு

பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு..

மாலை முழுதும் விளையாட்டு 

என் வழக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா..


இது தான் என் அப்பாவும்..

காலையில் எழுந்ததும்..

படிப்போ படிப்பு..நியூஸ் பேப்பர்..

பின்பு கனிவு கொடுக்கும் ..

நல்ல கர்னாடிக் பாட்டு..காதோடு பேசிக் கொண்டே இருக்கும்..

மாலை முழுதும்..

சப்த ஸ்வரங்களோடு..விளையாட்டு..


அப்பு ..அப்புனு..அவரைச் சுற்றி ஒரு 

அன்பு வட்டம்..

அதனால் இல்லை அவர் வாழ்வில் வாட்டம்..


அப்பா..என் தோழன்..

மழையும் மாட்சும் 

ஒண்ணா ரசிப்போம்..

மராமத்து வேலையும்

மகிழ்ச்சியாய் செய்வோம்..


அப்பா என் ஆசான்..

எதிலும் இருக்கும் ஒழுங்கு..

வயதோ எண்பத்தி நான்கு..

வாழும் பாங்கோ மிக அழகு..


அப்பா..ஒரு ஞானி..

அவருக்கென்று ஒரு தனி பாணி..

அவருக்குள்ளே அமர்ந்த 'வாணி'..

இன்னும் கொஞ்சம் வெளியே வா..நீ..


Appa is a wonderful guide

And i always love to abide


வார்த்தைகள் வரிசையில் நிற்கிறது..

வாழ்த்தொன்று உனக்கு சொல்ல..

வயது என்பது just a counttu..

நாங்க கொடுப்போம் ஒரு big soundu..

அதைக் கேட்டு நீயும் மயங்கு..


Happy happy birthday to you Appu..


அப்பாவுக்கு பிடிச்ச பாட்டை keyboard ல் try பண்ணினேன்..

என்ன பாட்டுனு கண்டுபிடிக்க முடியற அளவு வாசிச்சு இருக்கேனா?😀



இந்த YouTube link click செய்தால்..அவர் மாப்பிள்ளையும் ..அதான் என் வூட்டுக்காரரும்..அவரோட பேத்தியும் அட்டகாச performance கொடுத்திருக்காங்க...



Have a musical birthday Appa

Happy birthday appa 06-11-2019

 #Happy_birthday_appa..


எங்க வீட்டு சூப்பர் ஸ்டார்

நடக்கும் எங்களுக்குள் அடிக்கடி "war"


செல்லமாய் எல்லார்க்கும் இவர் "அப்பு'..

வைக்கத் தெரியாது யாருக்கும் 'ஆப்பு'


(புதுக்)கோட்டையில் பிறந்த மகாராஜா

(குரோம்)பேட்டையில் வாழ்ந்த தனிக்காட்டு ராஜா..


வேலையில் எப்போதும் புலி..

வூட்டுக்கார அம்மாவைப் பார்த்தால் எலி..


பேத்திகள் தான் இவரின் pet

 அவர்கள் பேச்சுக்கு ஆடும் puppet.


அவரின் சிறு உலகில்..

எல்லாம் நாங்கள் தான்..


Kids ..cake கொடுக்க..

Kheer ம்..பூரியும் நான் சமைக்க..

கடந்து போகணும் கடைசி நாட்கள்

கவலை கண்ணில் தோன்ற..

கண்ணீரை மறைத்து..

கலகலப்பாய் என் அப்பா..


வாழ்த்தோடு நான் சொல்வேன்..உன்னை

விடமாட்டேன் என்றும் என்று..

Rangoli

 happy diwali.

புள்ளிகள் ஒன்றில்லாமலே

'பா'ட்டில் மூடியும்..

பெயிண்ட் ப்ரஷின் முனையுடன்

புதுமையான கோலம்.


'you too can do ' என்று

YouTube உறுதியளிக்க..

உருவான சின்னகோலம்.


வண்ணங்கள் விளையாட

வெடிச்சத்தம் வான் பிளக்க

வந்தது தீபாவளி..

வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

Sunday, November 1, 2020

மழை

 Rains..Refresh..relive...

சின்னச் சின்ன தூறல் என்ன..


மழை தூறல் போல இருக்கே..குடை எடுத்திண்டியா..extra socks ஒன்னு bag ல இருக்கா..ஈரக் காலோட இருக்காதே...

கொசு கடிச்சுட போறது..என் friend க்கு 4 th type dengue ..careful ஆ இரு..(school கிளம்பிய பெண்னுக்கு advice மழை..எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்..!!.)

மழை நாட்கள்..சின்ன சின்ன இன்பங்கள் அனுபவங்கள்..

சின்னச் சின்ன தூறல்..

சின்ன சின்ன சந்தோஷம்

சின்னதாய் குளம் கட்டும்..(பத்து germs பத்தி பாடம் சொல்லாத அம்மா..dengue கொசு ..அப்படினா என்னனே தெரியாது)

சீறிப் பாயும்..கப்பலும்..கத்திக் கப்பலும்..

கரையேர முயற்சிக்கும்..கை தட்டி competition..

கொஞ்சம் வளர்ந்த நேரம்..படிப்பு சுமை ஏற ஆரம்பிச்ச நேரம்..maths test லேர்ந்து தப்ப..மழை வேண்டி மனு... கண்டிப்பா...தள்ளுபடியாகிடும்..

மொறு மொறுனு வடாம் காயணும்..அம்மா வேண்டிப்பா..

மொட மொடனு கஞ்சி போட்ட ஆர்கண்டி புடவை காயணும்..சித்தி வேண்டுதல்..(காய்ஞ்ச புடவை மடித்து எடுத்துவைக்கிற வேலை நம்முது..எங்கேயானும் ஒடஞ்சிடுமோனு ஒரே tension ஆகிடும்..தப்பித் தவறி மழை வந்ததோ...ஊருக்கே கூழ் ஊத்தலாம்..)..

மழை வந்தா..lending library காரன் இன்னியொட விகடன் தரமாட்டானே...ஐயோ வருண பகவானே..கொஞ்சம் கருணை காட்டுப்பா..பாட்டி வேண்டிப்பா..

ஒருவழியா ஒரு நாள் மழை வரும்.புக் நனையாமல் அதுக்கு கவர் போட்டு...rain coat ஐ மழையில் ஒரு நனை நனைச்சு...பத்தரமா உள்ள வைச்சுட்டு..சொட்ட சொட்ட நனைஞ்ச நாட்கள்...(அடுத்த நாள் தொண்டை வலியுடன் சரவணன் டாக்டர் கிளினிக்கில் முனகும் நேரம்..உண்மைவிளம்பி  தோழி ஒருத்தி பத்த வைப்பாள்...aunty aunty..இவ என்ன பண்ணா தெரியுமோனு...வெந்த புண்ணுல வேல்..வரேன் இரு மவளே..கருவிக் கொண்டே நான்...'அதான் விஷயமா..ஆத்துக்கு வா..இருக்கு உனக்கு...  மீதி வெள்ளித்திரையில்.).நினைக்க நினைக்க சுகம்..

அப்பறம் சைக்கிள் கத்துண்ட கொழுப்பில்..உயிர்த் தோழியுடன் ஒரு கை விட்டு..ஒஹோ..மேகம் வந்ததோ பாடி மழையில் ஊர் சுற்றி (பெரிய ரேவதினு நினைப்பு)...

நினைவலையில் இருந்து வெளி வரச் சொன்னது ...வாசல் calling bell..

சொட்ட சொட்ட மழையில் நனைந்த என் பெண்..

ஐயோ ...நாந்தான் குடை எடுத்துண்டு கீழ வறேனே..அதுக்குள்ள..ஏண்டா நனைஞ்சிண்டு வந்தே..

it was fun maa..

ஒன்றும் பேசாமல் உதவினேன்..

Monday, October 26, 2020

Diwali_அலப்பறைஸ்

 #Diwali_அலப்பறைஸ்


நமக்கு தெரிஞ்ச gold biscuit இதுதானுங்கோ..


Gold(&)en diamond பிஸ்கோத்து.....😀😀

Sunday, October 25, 2020

Diwali

 Prelude to diwali..

ஒரு மாசம் முன்பே..

அட்டை டப்பாவில்..

புஸ்வாணமும்..சக்கரமும்..

லக்‌ஷ்மியும்..குருவியும்..

மத்தாப்பும்....ராக்கெட்டும்.

அட்டத்தை அடையும்..


வெயில் இருக்கானு பார்த்து..

வடாம் மாறி பரப்பி...

வரிசையா அடுக்கி வெச்சு..

தம்பியுடன் பாகம் பிரிச்சு..

தப்பக் கூடாது வாக்குனு..

தலையிலடிச்சு..சத்தியம் வாங்கி..

திருட்டுத் தனமா..

திருடு போகலயேனு..

திடம் பண்ணிண்டு..

தீபாவளி சூடுபிடிக்கும்..


முதல் நாள் சாயந்திரமே..

மூக்கை பிடிக்க..

மெனுக்கள் துவங்கும்..

போட்டது போட்டபடி..

கோப்புகளை விட்டுவிட்டு..

அம்மா ஓடி வருவாள்..

ஆபீஸ் வேலை விட்டு..


புகுந்த வீடு பெருமை காக்க

புதுக்கோட்டை வழக்கம்..

பஜ்ஜியும்..பக்கோடாவும்..

பறிமாறியே ஆகனும்..

இரவுச் சாப்பாடு..

இருக்குமே ஒரு லிஸ்ட்.

சேமியா பாயசமும்..

சின்ன வெங்காய சாம்பாரும்..

உருளைக்  கறியோடு..

அப்பளம் பொரியலோடு..

ஆடைத் தயிரோடும்..

கண்ணை சொருகும் தூக்கம்..


மூணு மணி அலாரம்..

முணுமுணுக்க தொடங்கும்...

பல் விளக்கி வருமுன்..

பலகையில் போட்ட கோலம்..

பாத்திர த்தில் நல்லெண்ணெய்..

பாங்காய் மடித்த ..

பாக்கு வெத்தலையுடன்..

கெளரி கல்யாணம் பாடி..

சொட்ட சொட்ட எண்ணெய்..

சீயக்காய் போட்டு நீராடி..

குங்கும மிட்ட துணியுடுத்தி..

பட்டாசு வெடிக்க..

சிட்டாய் பறக்கும் வேளை..

சின்ன கிண்ணியில்..

சுருளக் கிளறிய

மருந்து உருண்டை.

விடாது கருப்பாய் தொடர..

விட்டேன் ஜூட்டென்று..

வாசலுக்கு ஒடிப் போய்..

வெடிக்க துவக்கம்..

தம்பி..தைர்யசாலி..

நீள ஊதுவத்தி..

ஊதி ஊதி..

ஓடிப் போய் வைப்பான்..

சரமும்..யானையும்..

அட்டகாச atom bomb ம்..


அடுத்த வேலை..

பக்கத்து வீட்டுக்கெல்லாம்

பக்‌ஷண பரிமாறல்..

அங்கொரு பாட்டி உண்டு..

பத்து ரூவாய் தருவாள்..

பக்கத்து கடைக்குப் போய்..

கேப்பு வாங்கி வந்து.

சுத்தியலை வெச்சு..

ஒவ்வொண்ணா..அடிச்சு..

மிஞ்சிய ஒத்தையும் .

ஊசி வெடியும் 

மனசு வராமல்..

காலி பண்ணி. 

கடைசியில்..

சுருளும் பாம்புடன்..

குப்பையயும் சேர்த்து கொளுத்தி..

குட்பை...சொல்லி விட்டு..

குட்டித் தூக்கம் போட்டு..

புதுப்படம் ஒன்னு பார்த்து..

புதுத் துணிகள் கதை பேசி..

வந்திருந்த சித்தி சித்தப்பா..

தம்பியுடன் கிளம்பியதும்..

வெறிச்சோடிப் போகுமே..

வீடும் மனமும்..

ஆண்டுகள் போனாலும்..

அசை போடும் எண்ணங்கள்..

என்றென்றும்..சுகமே..சுகமே..

பரீட்சைக்கு நேரமாச்சு

 பரீட்சைக்கு நேரமாச்சு..


பாசுரம்...போய் இப்போ படிப்புசுரம் பரவி இருக்கும் எல்லா வீடுகளிலும் இந்த மூன்று நான்கு மாதம். 

பத்தாம் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு  சுரம் மேள தாளத்துடன் தொடங்கியாச்சு.

படி படி என்று ் பாட்டு ஒரு பக்கம்..

பாரு பாரு பக்கத்து வீட்டுப் பையனைப் பாரென்று படுத்தல் மறுபுறம்.

அந்தக் காலத்தில் நாங்களெல்லாம் என்று சுயபுராணம் ..


பொதுத் தேர்வு வரும் பின்னே

போகும் நிம்மதி முன்னே..

பசங்களுக்கு அட்வைஸ் செய்வதில் சளைக்காத பெற்றோரே..உங்களுக்கும் சில டிப்ஸ்.


1. நீ தான் இந்த குடும்பத்துக்கே ஒரு bench mark fix பண்ணனும் என்று பயமுறுத்தாதீர்கள்.


2. compare செய்வதைக் கைவிடுவோம்.

அவர்கள் பலத்தை கண்டுபிடிப்போம்

பலவீனத்தை ஓரளவு சரி செய்ய உதவுவோம்.


3. என் பெண்/பைய்யன் இப்படித்தான் செய்தனர் என்ற வீட்டுக்கு வருவோர் போவோர் எல்லாரும் அறிவுரை அள்ளி வழங்கும் போது..அதையெல்லாம்  திணிக்காமல் நிதானமாகச் செயல்படுவோம்்.


4.வேலைக்கு போகும் பெற்றோர் எனில் , study leave சமயத்தில் விடுப்பு எடுத்து அவர்கள் தனிமையை விரட்டுவோம்.


5. time table போடுவதில் help செய்வோம். theory and practical சரி விகி்தத்தில் தினமும் படிக்கும்படி செய்வோம்.


6. every one hour eye exercise and simple hand and leg back stretch exercise செய்யச் சொல்வோம்.


7. காலையில் எழுந்ததும் உடம்பையும் மனத்தையும் ஒருமிக்கும் பயிற்சிகள் செய்ய உதவுவோம். நாமும் கூட செய்தால் அவர்கள் இன்னும் சந்தோஷமாக செய்வார்கள்.


8.படிக்க ஆரம்பிக்கும் போது ஒரு சின்ன prayer. 

' நீ படிச்சதெல்லலாம் அப்படியே கேள்வியா வருமென்று நினைக்காதே.எந்தக் கேள்வி எந்த ரூபத்தில் வந்தாலும் I should be able to apply my wisdom and intelligence while writing my exams. give me the strength and courage 'என்று பிரார்த்தனை செய்ய சொல்லிக் கொடுப்போம்.


9. கடவுளுக்கு காணிக்கை செலுத்தறேன் என்று வேண்டும் முன், என் குழந்தை நல்ல உழைக்கணும்..படிக்கணும் என்ற பிரார்த்தனை முன் வைப்போம்.


10. healthy food is more important. especially say no to oil fried items.  salad, fruits , sprouts , dal எல்லாம் சேர்ந்த balance diet கொடுக்கணும்.

பழச்சாறு, இளநீர் வெய்யிலுக்கு இதமாய் தரணும்.

 வெளிச் சாப்பாடு கொஞ்சம் தள்ளி வைக்கலாமே


11. குழந்தைகளிடம் ஏதாவது மாற்றம் தெரிந்தால்..சோர்ந்தோ..தூங்க முடியாமல் இருந்தாலோ அவர்கள் மன அழுத்தத்தை குறைக்க வழி வகுப்போம். அதற்காக எப்போது பார்த்தாலும் அறிவுரை வேண்டாம்..ஓடி விடுவார்கள்.


12. டீவி பார்க்காதே, வாட்ஸப் போகாதே, face book ஆ..கூடவே கூடாது என்று சொல்லி விட்டு..நாள் முழுவதும் நாம் அதில் மூழ்கி இருக்கலாமா?


13. சில குழந்தைகளுக்கு பாட்டு டான்ஸ் வரும், சிலர் படம் வரைவர், சிலர்  வாத்தியம் இசைப்பர், சிலர் கதை படிப்பார்.stress reliever இவையெல்லாம்.சும்மா எதுக்கு டைம் வேஸ்ட் பண்றனு சிடுசிடுக்காமல் இருப்போம். பிடித்ததை செய்யும்போது மனம் கொஞ்சம் லேசாகும் அவர்களுக்கு.


14. குழந்தைகளுக்கு இருக்கும் பெரிய பயம் ..'என் பெற்றோரின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டுமே' என்பதுதான். 

பலமாய் இருப்போம் அவர்கள் பயம் நீக்கி.


15. எல்லாவற்றிற்கும் மேலே..ஆதரவாய் ஒரு hug ..அன்பாய் ஒரு pat on the back.

வேறென்ன எனர்ஜி தரும் இதைவிட..


உங்களுக்கு தோன்றுவதையும் பகிருங்கள்.

All the best to the parents and students.

Monday, October 19, 2020

தீபாவளி

 அனுபவம் பழமை..


தீபாவளி ..குளித்து புதுத்துணி உடுத்தி, பட்டாசை ஒரு ரவுண்ட் வெடித்ததும் காத்திருக்கும் முக்கிய வேலை நகர்வலம்.

"பட்சணத்தை கொடுத்துட்டு தட்டை ஞாபகமா வாங்கிண்டு வந்துடுனு" அம்

மா instructions. ( paper plate ம், zip lock ம்  இல்லாத காலமாச்சே).

 நீட்டும்போதே .'மாமி..தட்டை அம்மா வாங்கிண்டு வரச் சொன்னா' வெக்கமில்லாமல் சொன்ன காலம். அடுக்களைக்குள் புகுந்த மாமிகள் அடுத்த வேலை பார்க்க..அவஸ்தையில் நாம்் நெளிய..நம்ம வீட்டு நெய் வாசனை தூக்கின தூக்கில் இட்லி சாப்பிட்டு தூங்கிண்டிருந்த மாமா எழுந்து வருவார்..ஐயோ பாவமாய் நாம் நிற்க.."ஏண்டி மங்களம்..குழந்த எதுக்கு இங்கே பாவம் நிக்கறா..நம்மாத்து அந்த மைசூர்பாக்கை கொஞ்சம் கொடேன் அவளுக்கு '..குரல் கொடுப்பார்..

தியானத்திலேர்ந்து கலைந்தாற் போல மாமி..'ஐயோ..மறந்தே போய்ட்டேன் அவாத்து தட்டை கொடுக்கனும்'..தான் எக்ஸ்பரிமெண்ட்  செய்த புது பட்சணம் ரொப்பிக் கொடுப்பார்..


இப்படி வந்து குவிந்த பட்சணம் டப்பாவில் ரொம்பும்..அதுதான் சீக்கிரம் காலியும் ஆகும்..என்ன இருந்தாலும் பக்கத்தாத்து மாமிகள் பண்ற மாதிரி வருமானு மொக்கித் தள்ளுவோம்..


2.  பக்கத்து வீடு,எதிர்த்த வீடுநு எல்லா வீட்டு பெரியவர்களைத் தேடிப் போய் ' அம்மா..நமஸ்காரம் பண்ணிட்டு வரச் சொன்னானு சொல்லில் நமஸ்காரம் பண்ணும்போது ஓரக்கண்ணால் பார்ப்போம்..பர்ஸிலிருந்து காசு எடுக்கறாளா இல்லையானு..பத்து ரூபாய் கொடுத்தா அவாளுக்கு 'பெஸ்ட் பெரியவா 'பட்டமும் உண்டு..


3. நூறு ரூபாய்க்கு ரெண்டு பெரிய அட்டை டப்பாவில் பட்டாசு இருக்க.."நமஸ்கார கலெக்‌ஷனும் அம்மா காசை இப்படி கரியாக்கறேனு" அலற அலற யானை வெடியாய் மாறும்..


4. ஒரு கம்பி டப்பா, இரண்டு சரம், நாலு புஸ்வாணம் கார்த்திகைக்கு ஒதுக்கப்படும்..


picture abhi baaki hai..

5. diwali release சினிமா பார்த்துவிட்டு ஊரெல்லாம் உறங்கப் போக..அப்போது தான் பல்பு எரியும் மண்டையில ஐயோ..home work'..

time table check பண்ணுவோம்...தலை தீபாவளிக்கு போயிருக்கற கணக்கு டீச்சர்..கண்டிப்பா திட்ட மாட்டா..சயன்ஸ டீச்சர் ரெண்டு நாள் லீவ்..வீட்டில பட்சணம் experiment பண்றதுக்கோ என்னமோ..தமிழ்..நினைப்பு வந்ததும்..'அம்மா'..என் போன வருஷ கட்டுரை நோட் எங்கே காணும்..அதுலதான் நான் 'தீபாவளி' பத்தி எழுதின கட்டுரைக்கு ஆசிரியை/(அப்படித்தான் கூப்பிடணும்னு ஆணை)

'மிக்க நன்று'னு போட்டிருந்தாளே..அதை எங்கம்மா ஷெல்ஃப் க்ளீன் பண்றேனு தூக்கிப் போட்ட என்று  கத்த..கொர் கொர்னு குறட்டை விட ஆரம்பிச்சிருப்பா அம்மா..

வேற வழி..திருப்பியும் மூளையைக் கசக்கி எழுதியே ஆகணும்..

சாப்பிட்ட பட்சணம் எல்லாம் என்னமோ வயத்தை பண்றதுனு அப்பா அங்குமிங்கும் லெஃப்ட் ரைட் போட..ஜெலூஸில் டைஜின் எதுவுமே இல்லாமல்..வீட்டுப்பாட பயம் ஜீரணம் லேகியமாய் மாற..


தீவளிக்கு தீவளி எண்ணெய் தானே தேச்சு குளிக்க்ணும்..இப்படி கட்டுரை எழுதி முடிக்கணும்னு வழக்கம் வெச்ச மஹானுபாவர் யாரோ..

நன்ன்னா இருக்கட்டும்.


#Diwalidelights

Saturday, October 17, 2020

பூம்பூம் மாட்டுக்காரன்..

 பூம்பூம் மாட்டுக்காரன்..


பார்த்ததுமே..

பயந்து நகருவேன்..

அவன் விதவித முண்டாசும்..

அவன் சொல்லுவதெற்கெல்லாம்..

புரிந்ததோ..இல்லையோ..

பூரிப்பாய் தலை யாட்டும் 

பூம்பூம் மாடும்...


இன்றும் கண்டேன்...

சின்னத் தெருவொன்றில்..

நகர்ந்து ஓடிடலாம்..

நினைத்த நேரம்..

நிற்க வைத்தது..

அவன் சின்ன நாதஸ்வரம்..

அதிலிருந்து எழுந்த நாதம்..


ஆனந்த பைரவியில்..

palukke bangaramayena.வை

பிசகாமல் வாசித்து..

அவனோடு அழகாய்

தலையாட்டியபடி.. மாடு..


இவன்..

கற்றதா..

காற்றில் கேட்டதா....


அம்மணி...

எதனாச்சும் இருந்தா கொடு...

அவன் குரல்...

எண்ணத்தை..கலைக்க..


கோதண்டராமா..

எப்போ உன் கடைக்கண் அருள் கிட்டும்.?

Friday, October 16, 2020

Shopping

 Shopping அலப்பறை இல்லாத தீபாவளி உண்டா?


வாங்க போகலாம் shopping 

 #kaun_banega_crorepati..ஸ்டைல்ல😀


Sony TV ல அமிதாப் பச்சனோடவா?


Ha..ha..haa..

எல்லாம் நம்ம தீபாவளி ஷாப்பிங்கல தான்.


வாங்க... ஆரம்பிக்கலாம்..நம்ம KBC.


முதல்ல #hotseat..க்கு போகணும் தானே


So #fastestfinger விளையாடணும்..

Options only 4 இல்ல..4000 கடைகள் இருக்கே.


ஆதி காலத்து ஆவி வந்த குமரன் ,நல்லி, சுந்தரி, ரங்காச்சாரி , போத்தீஸ், rmkv, nalli 100, Chennai silks, prasidhi , prashanthi..

அப்பறம் பக்கத்தில் இருக்கும் boutiques, apartment புடவை வியாபாரிகள்..

ரவுண்டு ரவுண்டா deletion பண்ணி.கடைசி கடைசியாக..

எங்கம்மாவும் அதே கடையில் வாங்குவா..பாட்டி கூட அங்கேதான் வாங்குவான்னு....  ஆவி வந்த கடை..as usual select ஆச்சு.

ஒரு பார்வையில் ஓராயிரம்..புடவகள் பார்த்தேன்..கவுண்ட்டரில் நானேனு..பாட்டு பாடிண்டே உள்ளே நுழைஞ்சாச்சு..


சரி..இங்கும் அங்கும் ஓடினாள் ஓடினாள் ஒரு புடவை எடுக்கனு டயலாக் மனசில் ஓட..

இப்போ ..முதல் #lifeline..

அதாங்க..#audiencepoll..


நம்ம எடுத்த புடவையை  கண்ணாடி கிட்ட போட்டு பார்க்கும்போது..

இது எந்த கவுண்ட்டரில் இருக்கு?..

நீங்க செலக்ட் பண்ணலைனா சொல்லுங்கனு ஒரு சில பேர் சொன்னாலொ..தூரத்திலேர்ந்து ஏக்கமா பார்த்தாலோ.


" அதை தனியா வெச்சுடுங்கனு' சொல்லி அடுத்த கவுண்ட்டருக்குள் நோட்டம் விடணும். கலர் கலராய் புடவை தோளில் சேர..

..நான் தேடும் செவ்வந்திப் பூ இதுனு பாடறதா..இல்ல..பச்சை நிறமே பச்சை நிறமே.. இல்ல..பிங்க்கு தான் எனக்கு புடிச்ச கலருனு எடுக்கறதா

இப்போ..confusion start..


 ஆனதும்..வீட்டுக்காரர் கிட்ட போய்..


#fifty_fifty  life line கேட்க..அவரு inky pinky ponky போட..

இது ரெண்டும் ஓகே..வா பில்லு போட்டுடலாம் உன் லொல்லு தாங்கலைனு அவர் நொந்து நூடுல்ஸ் ஆகும் வேளை..


ஐயோ..ஐத்தான்..அந்த கவுண்ட்டர் பார்க்கவே இல்லையேனு நான் ஓட

திரும்ப முதல்லேர்ந்தானு ..அவரு மண்டை காய..


நான் #flipthequestion ..life line க்கு போய்.."வேற என்ன புது டிசைன் இந்த தடவை introduce பண்ணி இருக்க்கீங்கனு சேல்ஸ்மேனை கேட்க..


அவரும் பாவம் ' இது கதக்கு..இது பரதநாட்டியம்' நு கமல் ஸ்டைல எடுத்துப் போட..


நான் முதல் முதல்ல ஒரு புடவை உங்க கிட்ட கொடுத்தேனே..உள்ளே வெக்க சொல்லி..அதையே அனுப்புங்க பில்லிங்க்கு சொல்லும் வேளை..


ஐயோ..wait wait..#phone_a_friend life line ல expert advice கேட்கணுமே என் உயிர் தோழி கிட்ட...

மயக்கமே வந்த வூட்டுக்காரர்.."ஏம்மா..நீ உன் ஃப்ரண்டையே கூட்டிண்டு வந்திருக்கலாமே..நான் நிம்மதியா வூட்ல KBC பார்த்திண்டு இருந்திருப்பேன் இல்ல 'என்று சோக கீதம் பாட..


சார்..இங்கே நாள் பூரா KBC தான் ..

எங்க நிலைமையை யோசிச்சு பாருங்க சார்னு அங்கே ஒரு சங்கம் கூட..


நாம நைஸா..அடுத்த ஃப்ளோரில்..


சீஸனுக்கு சீஸன்..புதுப் பொலிவுடன் #KBC..மட்டுமா..

#Kanjeevaram #Banaras #cottonsilk ம் தான்..


Group ல படிச்சவங்க...பாவம்..second time. ..என் சுவற்றில் மீண்டும்😀😀


படத்தில் ஒரு பக்கம் 

#amitabh_paa..

இன்னொரு பக்கம்..#என்னோட_paa😀

Monday, October 12, 2020

கெளரி கல்யாணம் வைபோகமே.

 கெளரி கல்யாணம் வைபோகமே..


'சுகன்யா..ரெடியா..நாழியாச்சும்மா..

ப்ளான் பண்ணபடி எல்லாம் எடுத்து வெச்சியா? வாட்சப் க்ரூப்பில எதுக்கும் செக் பண்ணிடு..அப்பறம் அது இல்ல இது இல்லனு சொன்னா கூட அங்கே எதுவும் கிடைக்காது..நாணா அடுக்கிக் கொண்டே போனான். ராதுக் குட்டி தன் பையுடன் ரெடி..அப்பா..அப்பா.. அண்ணா..அக்கா எல்லாரும் வராளாப்பா..ஜாலியா இருக்குப்பா..என்றாள்..

நாணா ஃபோனும் கையுமா..டேய் சுந்து கிளம்பிட்டியா ..map அனுப்பி இருக்கேன் பார் க்ரூப்பில..

அதுக்குள்..மூர்த்தி கிட்டேர்ந்து ஃபோன் வரதுடா..நாம நேரா பேசலாம்..

லலிதா அக்காவையும் அத்திம்பேர் குழந்தைகளை நீ பிக் அப் பண்ணிடுடா..

ராமு  குடும்பம் சுகந்தி கார்ல வந்துடுவா.. பாட்டி, தாத்தா, பெரிம்மாவுக்கு நான் வண்டி அனுப்பிச்சுட்டேன'்..ரெடியான 

சுகன்யா கிளம்பலாமானு முறைக்க..ஒரு வழியா கேட் பூட்டி கிளம்பியாச்சு..

வழியெல்லாம் ராஜா ரஹ்மான் துள்ளல் இசையில் பயணம்..

ஹையா..அப்பா resort வந்தாச்சு..ராது குட்டி குதிக்க..அங்கே ஏற்கனெவே சுந்து வந்தாச்சு. ஒவ்வொருவரா வர..பொண்டுகள் எல்லாம் பளபளனு ..புடவை,நகை,சீரியல்..

பேச்சுக்கா பஞ்சம்..

குழந்தைகள்..ஒரு சூப்பர் மழலைப் பட்டாளம்..இங்கேயும் அங்கேயும் ஓடி ஒடி ஆட்டம்..தாத்தாக்கள் ஒரு க்ரூப்..சித்தி,பெரிம்மா அத்தை எல்லாம்

இன்னொரு க்ரூப்..கும்மாளம் தான்..

சிரிப்புதான். குழந்தைகளா எல்லாரும் காலம்பற மூணு மணிக்கு எழுந்துக்கணும் ..போய்த் தூங்குங்கோ..பெருசெல்லாம் மிரட்டிட்டு சீட்டு கச்சேரியில் மூழ்க

அலாரம் அடிக்கும் முன்னாடியே கண்ணைக் கசக்கிண்டு ஒவ்வொருத்தரா முழிக்க..பாட்டி சூடாக் காய்ச்சின எண்ணெயும் கையுமா..மணையில் உக்கார வெச்சு..வெத்தலை குடுத்து கெளரிக் கல்யாணம் பாடி எண்ணை வெக்க..சீனு சித்தப்பா பட படனு ஒரு 1000 வாலா கொளுத்த..குளிச்சுட்டு வந்தவாளுக்கு ரெடியா மருந்து..குட்டீஸ் எல்லாம் புதுத் துணி போட்டுண்டு மத்தாப்பு கொளுத்த..டிபன் சாப்பாடு, ஃபோட்டோ என ....சந்தோஷம் பொங்கும் வேளையில் நாணாவுக்கு நாலு வருஷம் முன்னாடி அவன் வீட்டு தீபாவளி க்கு வந்த அத்தை கண் முன்னே வந்தாள்.

'நாணா..பண்டி்கைக்கு தான் எல்லாம் ரெடிமேட் ஆ வாங்கி வெச்சுருக்கே..எனக்கு ஒரே ஒரு ஆசை..

இங்கே இருக்கிற ராமு, சுந்து, மூர்த்தி லலிதா எல்லாரையும் தீபாவளிக்கு கூப்பிடேன் என்றதுதான்.. முதலில் தயங்கி சாக்கு போக்கு சொன்னவர்கள் , அத்தையின் ஆசை என்றதும் ஆமோதித்தார்கள். அன்று ஆரம்பித்தது தான் இந்த family reunion. ஒவ்வொரு வருஷமும் ஒரு ஒரு cousin வீட்டில்..குழந்தைகளுடன்..

அவள் செய்த பெரிய புரட்சி.. எல்லா உறவுகளையும் ஒன்று சேர்த்ததுதான்.. இந்த வருஷம் ஒரு மாறுதலா..

ஏன் resort ல கல்யாணம் தான் பண்ண்னுமா..கங்கா ஸ்நானமும் பண்ணி தீபாவளியும் கொண்டாடலாமே..அதான் இன்னிக்கு ஒண்ணா இங்கே எல்லாரும்..அத்தை நம்மள பார்த்து இப்போ சந்தோஷப்படுவா டா..மூர்த்தி கலங்கினான்...டேய்..FB ல நம்ம ஃபோட்டோ எல்லாம் பாத்துட்டு கலிஃபோர்னியா லேர்ந்து கண்ணன் புலம்பித் தள்றாண்டா..தானும் அடுத்த வருஷம் வருவானாம்..

சந்தோஷத்தில் மிதந்தபடி ..கார்கள் கிளம்பத் தொடங்கின..அவரவர் வீடு நோக்கி.. நெஞ்சு நிறைய ஆனந்தத்துடன்..

பண்டிகை அப்படி கொண்டாடினோம் இப்படிக் கொண்டாடினோம்..இப்போ ஒண்ணுமே இல்ல என்று ஒரு பக்கம் இருக்க..

இப்படி பாலமாய் ஒரு அத்தையோ சித்தியோ..எத்தனை சுகம்

அப்ப்டி யாருமே இல்லாவிட்டால்..நாமே ஏன் செய்யக்கூடாது..

பணம்..பொருள் விட்டுப் போகும் வேகத்தில் உறவுப் பாலம் அமைக்க மறக்கலாமோ..நமக்கு பின் நம் குழந்தைகளும் நாம் பெற்ற இன்பம் பெறட்டுமே..

time and place are not constraints if we have the will..

Brother

 For your eyes Shiv K Kumar

அறியா வயதில்

அப்பா..மரணம்..

அம்மா ்தம்பி தங்கையுடன்.

தாத்தா வீடு வாசம்...

தத்தித் தடுமாறி 

வாழ்க்கை..

வசவுகள்..

வைராக்கியம் ஒன்றே..

வஜ்ராயுதம்..

உள்ளூர் வேலையில்..

கொள்கை விட மறுத்து..

பெட்டியெடுத்து..

பொருள் தேட..

பெருநகர வாசம்.. 

புரியாத மொழி

புழங்க இம்மி இடம்

பொங்கிப் போட ஆளில்லாது

பொட்டல சாப்பாடு.

பொறுப்பாய் பணம் சேர்த்து..

உடன்பிறப்புகளை ..

கரையேற்றி..

விடுப்பில் ஊர் சென்று..

விடைபெறும் வேளை..

காலமெலாம் கஷ்டப்பட்ட 

அம்மாவின் கைபிடித்து..

அடுத்த லீவு வரும்வரை..

இவளுயிர் இருக்க ப்ராத்தித்து..

திருமணம் புரிந்து

தூக்கிப் போட்ட இடமெலாம்..

தனியாய் போய் பணியாற்றி

்தன்குழந்தைகள்..

தவிக்காமலிருக்க..

தனிமையில்..

தவமிருக்கும்..

தந்தைகள்..

தரணியில் பல உண்டு..

Sunday, October 11, 2020

Dusherra

 Bury the demon inside you...

ultimate victory lies there..


சூலமேந்திய..

சக்தி நானும் தான்

தேடும் அசுரன் ..

வேறெங்குமில்லை..


என் கோபத்திலே..

என் குரூரத்திலே..

என் ஆசையிலே..

விளையும் பேராசையிலே..

என் எண்ணத்திலே..

என் செயல்களிலே...

என் பேச்சினிலே..

என்னை ஆட்டுமிவனை..

தசமி நாளிதில்..

தகனம் செய்கிறேன்..

தேவியே..

உயிர்த்தெழுதல்...

வேண்டாமே இவனுக்கு..

அவன் ஒரு தொடர்கதை

 அவன் ஒரு தொடர்கதை..எச to Shiv K Kumar sir post


தலைச்சனாய்ப் பிறந்தது

தலைவவிதி இல்லையென்று

தலை நிமிர வைப்பான்..

தலைமுறைகள் புகழ்ந்திடவே..


பெட்டி போல அறையிலே

படுப்பர் நால்வர் அங்கே

பொட்டலச் சாப்பாடு வரும்

புளித்த தயிர் சாதத்துடன்.


உணவகம் பல உண்டு

ஊர் சுற்ற இடமுண்டு

முடங்கிக் கிடப்பா நினவனே

கிடங்கு அறை தனிலே


விடுப்புக்கு வரும் ஆசையிலே

விடிய விடிய உழைப்பான்

வளையலும்்  செயினு மாகும்

வங்கியில் சேர்த்த பணம்


சிக்கனம் நீயப்பா என

சுற்றம் கேலி செய்தாலும்

சிரித்தே மழுப்பிடுவான்..

சிந்தையில் ஆழ்ந்திடுவான்.


கடமைகள் முடிக்க..

கல்யாணம் நடக்கும்.

குழந்தைகள் வர

கதையும் தொடரும்.


வெளியூர் மாற்றலாகும்.

விட முடியா பள்ளிச்சீட்டு

வாட்ஸப்பும் வீடியோவிலும்

வாழ்க்கை நடத்திடலாம்

வந்த சந்தர்ப்பமிது

விட்டு விடாதே என்பாள்.


விடை கொடுத்தனுப்புவாள்

விலைவாசியும் கைகாட்டி..


பொட்டி அறை வாழ்க்கை

பொட்டலச் சாப்பாடு..

"செல்"லிலே வாழ்க்கை..( செல்- சிறிய அறை. ,ஃபோன்)

சேர்க்கணுமே இப்போது

செல்லங்கள் கண்மணிகள்

செழிப்பாய் வாழ்ந்திடவே..


அவன்..

ஒரு தொடர்கதைதான்

Happy birthday lalitha padma

 Happy happy birthday my dear friend Lalitha Padma Balachandran.


ஜெர்மனியின் செந்தேன் மலரிவள்

ஜெம் போன்ற இதயம் கொண்டவள்.


திருச்சி வாசம் வீசும் பேச்சில்

திரும்பிப் பார்க்க வைப்பாள் அழகில்..


பாலச்சந்திரனின் பாரியாள் இவள்

பாரெல்லாம் பவனி வருவா ளிவள்..


லுக் இவளுடையது majestic

முகமோ என்றும் photogenic.


பேரப் பசங்களின் favorite பாட்டி

போட்டி போட்டு அடிப்பாள் லூட்டி..


பிறந்தநாள் காணும் LPB ( உங்க பேரோட  short from😀)

பெறணும் வாழ்வில் ..நீ..

எல்லா வளமும்...

நலமும்..ஆரோக்கியமும்.


அன்புடன்..

உன் தோழி..

Akila

Saturday, October 10, 2020

அம்மா

 ஏதாவது ஒரு விஷயம் நிச்சயம் அம்மாவை ஞாபகப்படுத்தி விடும்.

இன்றும் அதேபோல.. போன வருடம் எழுதிய பதிவு..

நினைவலைகள் தொடரும்..


அரசுப் பணி வேலை..என்

அம்மா ஞாபகம் வரவைத்தது..

SSLC தேர்வில் ..

மாவட்ட முதலவள்..

தலைமை ஆசியிரியை.

தாராளமாக சொன்னார்..

மருத்துவ படிப்புக்கு..

மானியம் நான் தரேன்னு..

குடும்ப நிலமை..

கூறாமல் புரிய..

அரசு வேலை..

அவள் பருவம் பதினாறில்

குட்டிப் பெண்ணவளுக்கு.

எட்டா மேசை..

உயரமாய் நாற்காலி..

சிறிய வேலையில் சேர்ந்து

பெரிய பதவி வரை.

அம்மா..ஒரு all rounder

உள்ளத்தில் உறுதியோடு..

ஊறுகள் வந்த போதும்..

உறுதியாய் நின்று..

உடன் பிறந்தோருக்கு

புது உலகம் அமைத்தவள்..

என்னைப் பொறுத்தவரை..

இவளும் ...

 சக்தியின் வடிவந்தான்..

இவள் போல்..

பல சக்திகள் இங்குண்டு

வெளியே வராத..

வெளிச்சம் போட்டு காட்டப்படா..

எத்தனையோ..

சாதனையாளிகள்..

Friday, October 9, 2020

தையல் கடை

 தையல் நாயகர்கள்..


புடவை கடைக்கு அடுத்தபடி கூட்டம் பொங்கி வழியும் இடம் இப்போ டைலர் கடைதான். சின்ன கடைதான் எங்க டைலருடையது..ஆனா..ரொம்பி வழியும் எப்போதும்..

தீபாவளி என்பதால் waiting க்கு ரெண்டு மூணு ஸ்டூல் வேற போட்டிருந்தார். கால் வலினு யாரும் கடையை மாத்திடக்கூடாதேன்னு கவலைதான்.

யாரோ ஒரு கஸ்டமருக்கு கடைசி வேலையாய் ப்ளவுஸ் அயர்ன் பண்ணிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

மத்தவங்களுக்கெல்லாம் மெளன ராகம் கார்த்திக் எல்லாரையும் புக் படிக்க சொல்றமாதிரி எல்லார் கையிலும் latest blouse design books கொடுத்து சமாளிச்சுஃபையிங்..

.மாடல்ஸ் அணிந்திருந்த வித வித டிஸைன் ப்ளவுசிலும் புடவையிலும் காத்திருந்த பெண்கள் கொஞ்சம் கனவுலகத்தில் இருந்தனர். அவர்களில் முதலில் இருந்த ஒரு office goerஐத் தட்டி எழுப்பி , வாங்க மேடம்..என்ன டிஸைன்

select பண்ணிட்டீங்களா என்றார்.. தனக்கு பிடித்ததை அவர் ஆர்வமா காட்ட..மேடம்..நீங்க வெச்சிருக்கிற மெட்டீரியல்ல இந்த டிஸைன் வராது ..வேற தேடுங்க..அந்தப் பெண் கூகிளின் உதவி நாட....

next token ..ஒரு வயசான அம்மா...வெளி நாட்டிலிருந்து வரும் தன் மகளுக்கு தைக்க கொண்டு வந்த் துணியுடன் ஆஜர்.. இதப் பாருப்பா..என் பொண்ணுக்கு இந்த சம்கி, எம்பிராய்டரி எல்லாம் பிடிக்காது..சிம்ப்பிளா ஒண்ணு தைக்கணும்னு ஒரு படு சிக்கலான டிஸைன் காண்பிக்க..விட்டேன் ஜூட் என்பதை படு technical ஆ ..நீங்க வெச்சிருக்கிற துணி போறாதேம்மா..

என்று சொல்ல..அந்த அம்மா வாட்ஸப் காலில் தன் மகளுடன் discussion..pics எல்லாம் அனுப்பி.. செலக்ட் பண்ணி பில் போட அந்தம்மா பதறிண்டு ..இவ்வளவெல்லாம் தர முடியாது..ஒரு துணி தைக்க 20 டாலரானு என் பொண்ணு சொல்வா குறைச்சுக்கப்பா என்று கெஞ்ச..நீ...ண்ட வாக்குவாதம்.. 25 ரூபாய் குறைப்புக்கு..

..ஒரு வழியாய் அவர்கள் அந்த இடத்தை விட்டு நகர..

கூகிளை நாடி ஓடிய பெண்..கண்டேன் என் ப்ளவுஸ் டிஸைன் என்று ஓடி வந்த்ாள். அரை மணி நேர instruction ..crop top ஆ இருக்கணும்..

collar neck , பின்னாடி போஸ்ட் பாக்ஸ் ஓட்டை..அப்பப்பா..நிறைய விஷயம் கற்றேன். இதுக்கு நடுவில ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுனு ஒரே ஒரு துணி வைத்திருந்த பெண் பொறுமையிழந்து கிளம்ப எத்தனிக்க..

பதறிப் போன டைலர்..திருப்பதி மொட்டை ஸ்டைலில்..நீங்க வாங்க..உங்களோடது முடிக்கிறேன் அவங்க டிசைட் பண்றதுக்குள்ளனு ..செம்ம வியாபார யுக்தி..

அடுத்த்து என் turn..உங்களொடதும் அக்காவோடதும் இன்னும் எதுனாச்சும் இருக்கா மேடம்..குடுங்க..நீங்க ரெகுலரா வரவங்க..தீபாவளி இரண்டு நாள் முன்னமே தந்துடறேன் என்றவரிடம்..

அண்ணா..(அப்படித்தான் அழைப்பேன்)..

துணியெல்லாம் இல்ல.( நாம தான் முன் ஜாக்கிரதை முத்தண்ணி ஆச்சே..எப்பவோ வாங்கி தைச்சு வெச்சுட்டோமே)

.போன வாரம் ஒரு வேஷ்டியை லுங்கியாக்க மூட்ட கொடுத்தேனே..அது ரெடியா..

ஙே என்று முழித்தபடி..இதுக்காகவா இப்படி wait பண்ணீங்க..தீபாவளி முடிஞ்சு தரேன் madam..பவ்யமாய் அவர் சொல்ல..

கடை விட்டு வெளியே வந்தேன்..

தையல்காரரின் கை

 வண்ணத்தில் கலர் கலராய் ஹாங்கரில் தொங்கியபடி இருந்த சூடிதார், ப்ளவுஸ் எல்லாம் கண்ணை விட்டு அகலாமல்..

அடுத்த புடவைக்கு என்ன டிசைன் ப்ளவுஸ் தைக்கலாம் என்ற யோசனையில்..நானும்..

நவராத்திரி

 Flashback இல்லாத festival உண்டா என்ன?


அதுவும் 

நவராத்திரி நினைவுகள்..

நிலைக்குமே என்றும்


சாயங்காலம்  நேரம்

சக தோழிகளோடு..

சரசரக்கும் பாவாடையும்.

சரமாய்த் தொடுத்த மல்லியும்..

சளைக்காமல் அலங்கரித்து..

சுண்டல் மாமி ..சுண்டல்னு..

சுத்து சுத்துனு..சுத்தி வந்து..

சரளி வரிசையை..

சிரத்தையாய் பாடி..

சுருக்கு பையிலே..

சில்லறை சேர்த்துண்டு..(தீபாவளிக்கு யானை வெடி வாங்க)

தினங்கள் ஓடும்..


சரஸ்வதி பூஜை..

பிடிச்ச பண்டிகை

பூஜையறையில்..

புகலும்.. புத்தகங்கள்


ஆஹா..படிப்பில்லை..

படி படினு தொல்லையில்லை..

நகரக் கூடாதே

இந்த நாள்னு வேண்டிப்போம்..


விஜயதசமி பூஜை..

விழிக்குமுன்னே..

விறுவிறுனு பண்ணும் அம்மா.

புத்தகங்கள் எடுத்து கொடுத்து..

போய் படி இப்போ என்பாள்..

விரியும் புத்தகம்..

சுருங்கும் முகம்..


குரு ஆசி வாங்க..

கூட்டமாய் போவோம்..

வீணை மாமி வீட்டில்..

கலை வாணி அவளுக்கு

வாழ்த்தொன்று வாசித்து..

வழிபாடும் முடித்துவிட்டு..

வீடு வந்து சேர்வோம்..


விடுமுறையும் முடியும்..

விடிஞ்சா பள்ளிக்கூடம்..

காலாண்டுத் தேர்வின்..

வண்டவாளம் தண்டவாளமேறும்..

கவலையுடன் கண்மூட

கணக்கு மார்க்கு ..

காலைக் கனவில் வர

முப்பெரும் தேவியும்..

மீண்டும் வருவாள்..

அம்மா..சித்திகளின் வடிவில

கலங்கி விழித்து..

காத்து போன பலூனாய்

விடுமுறையின் சந்தோஷம்..

நடுக்கத்தில் முடியும்...😀😀

Wednesday, September 23, 2020

Pratilipi story

 Pratilipi story

நினைவோ ஒரு பறவை.. 2011


கிளியைப் புடிச்சு கூண்டில் அடைச்சு


" அம்மா..எனக்கு  நாய் வளர்க்கணும்னு ' என் சின்ன பொண்ணு சொன்னப்போ..

எனக்கு..'ஆத்தா ..ஆடு வளர்த்துச்சு..கோழி வளத்துச்சுனு' பதினாறு வயதினிலே கமல் 

மாதிரி .. ..டயலாக் நினைவுக்கு வர..

' கண்ணே..மணியே..உன்னை வளர்க்கறது போறாதா.. புது வேலை எல்லாம் கொடுக்காதே டா' ஒரே கெஞ்சலும் கொஞ்சலும்..


நான் இப்படி ஒரு ட்ராக்கில் போக.." அம்மா..அக்ஷயா வீட்டில் அழகா ஒரு குட்டி இருக்கும்மா..ஸ்ருதி கிட்ட..சூப்பரா சிங்கம் போல்..சிங்கம் போலனு  ஒண்ணு இருக்கும்மா..இல்லாட்டி..வோடஃபோன் குட்டி வாங்கலாமா?.

வோட ஃபோன் குட்டியா..விலை என்ன தெரியுமா..எனக்கு வெறியே பிடிக்க ஆரம்பித்த கால கட்டம்..

" நாய்க் குட்டி வந்தால் எத்தனை வேலை தெரியுமா..வாக்கிங் கூட்டிண்டு போகணும்..செளகரியமா அதுக்கு ஒரு மரம் இல்ல..கார் அடியைக் காட்டணும்..

பெடிக்ரீ கொடுக்கணும்...முடியை ட்ரிம் பண்ணணும்..குளிச்சு விடணும்..டாக்டர்கிட்ட கூட்டிண்டு போகணும்' மூச்சு விடாமல் SPB போல நான் பேச..

" அவ்வளவுதானே ம்மா..எனக்கு பண்றதை அதுக்கும் சேர்த்து பண்ணிடு ..அவ்வளவு தானேனு" குண்டைத் தூக்கிப் போட..

ஐயா..மாட்டிக்கிட்டாரு..வசமா மாட்டிகிட்டாருனு பாட்டு மனசில் ஓட..

மிக நீண்ட நாள் யோசனைக்குப் பிறகு..

' நாயெல்லாம் வேண்டாம்டா..கிளி வளர்ப்போமா?..என்று சமாதானப் புறாவை  அனுப்ப..

நாயிடமிருந்து தப்பிச்சு..கிளியிடம் நானே போய் மாட்டிக் கொண்டேன்..

Pet shop ல் போய் " ஜோடிக் கிளி எங்கே ..பக்கத்திலேனு' தேட ஆரம்பிக்க..

மூக்கும் முழியுமா ஒரு கிளி ஜோடி ..இப்ப அந்த ஜோடிக்கு ஒரு ஜாடி..சாரி..சாரி..ஒரு கூண்டு வாங்கணுமே..' கிளியைப் புடிச்சு கூட்டில் அடைச்சுனு' துக்கம் தொண்டை யடைக்க..

' ஜோடிக் கிளிகள் ஜாலியாக எங்க வீட்டுக்குள் வந்தனர்.

கொள்ளையழகு இரண்டும்..

ஜாலியா பேசிப்பாங்க..சில நேரம் சண்டை மண்டை பிச்சுக்கும்..சில நேரம் உர் உர்ருனு ..ஊடலும் கூடலும் அந்தக்  கூண்டுக்குள்ளே..

சாப்பாடு குடுக்கறது முதல் பிரச்சனை. காரட் போடறதா..காரமான பச்சை மிளகாயா..ப்ரெட்டா..பிஸ்கட்டா..தயிர் சாதமா..ரொட்டியா..நூடுல்ஸானு ..ஒரே குழப்பம்.

நம்ம வீட்டு குழந்தைகள் போலத்தான்..ஒரு நாளைக்கு பிடிச்சது..அடுத்த நாள் தொடாது..

மம்மினு கூப்பிடும்..சொக்கிப் போய்டுவேன்..

என் பொண்ணு பேர் சொல்லிக் கூப்பிடும்போது.."கிளியே கிளியே..கிளியக்கா..கூட்டுக்குள்ள யாரக்கானு" சுஹாசினி ஆகிடுவேன்..

யாரோ கூட துணைக்கு இருக்கற மாதிரி ஒரு எண்ணம்..வடக்கில் இருந்ததால்..குளிருக்கு அதன் கூண்டிலும் கம்பளி போர்த்தி..பொத்திப் பொத்தி வளர்த்தோம்.

ஒரே ஒரு விஷயம்..அதோட கழிவுகளை சுத்தப்படுத்தும் போதுதான்..கோபம் வரும்..

இப்படி..கிளியும் நாங்களும் ஒரே குடும்பமாக..

இருந்தாலும் எனக்கு ஒரு உறுத்தல்..

ஆகாசத்தில் பறக்க வேண்டியதை அடைத்து வைத்திருக்கோமே என்று..

என் பெண்ணிடம் சொன்ன  போது..

" அம்மா..அது நம்மளோட சந்தோஷமா தானே இருக்கு..நீ வீணாக ஏன் டென்ஷன் ஆகிறே" என்று சமாதானம் சொல்வாள்.

அன்று..பொங்கல் தினம். பண்டிகை கொண்டாட என் பெண்ணின் வட இந்தியத் தோழி தோழர்கள் எல்லாரும் ஆஜர்.

எல்லாரும் முக்கியமாக ஒரு ஃபோட்டோ கிளிக் கூண்டோடு எடுத்துக் கொண்டாச்சு..


மொட்டை மாடியில் அவர்கள் எல்லாரும் ஆட்டம் போட்டபடி இருக்க..கிளிகளும்  ஜாலியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தன..

"அம்மா..அம்மா..சீக்கிரம் மேலே வாயேன் '

என் பெண் குரல் கேட்கவும்.. 

என் சப்த நாடியும் ஒடுங்கி..யாருக்கு என்ன ஆச்சோ என்று படபடப்பில் ஓடினேன்..


அங்கே..நான் கண்ட காட்சி..

கூண்டைச் சுற்றி குழந்தைகள்..

இன்னும் படபடப்பு அதிகமாக..

ஐயோ..கிளிகளுக்கு என்ன ஆச்சோனு என் லப்டப் அதிகமாக..




"ரெடி..ஒன்..டூ..த்ரீ.."என்று கோரஸில் இவர்கள் கத்த..


கூண்டைக் கையில் தூக்கி.. என் பெண்...மெதுவாக அதன் கதவைத்  திறக்க..

படபடவென்று அடித்துக் கொண்டு..நீ முந்தி நான் முந்தி என இரண்டு கிளிகளும் விண்ணை நோக்கி "சிறகுகள் விரித்தே..போகிறேன்..நான் போகிறேன் "

என்று விட்டுப் பிரிந்து வந்த குடும்பத்தை தேடிப் பறக்க..

ஒரே கைத்தட்டு மழை..


' இப்போ..சந்தோஷமா அம்மா..' என் பெண் கேட்டபோது ..கண்ணோரேம் துளிர்த்த கண்ணீர்..

" இவள் வளர்ந்து விட்டாள்'..நிம்மதி பெருமூச்சில் நான்..


பல நாட்கள்..எங்கள் வீட்டு மொட்டை மாடிக்கு சென்று..மேலே பறக்கும் கிளிக்கூட்டத்தின் நம் வீட்டுக் கிளி எது என்று தேடும் வேளையில்..


" நாம இங்கே தானே இருந்தோம்' என்று நம் வீட்டைத் தாண்டும்போது நினைத்துக் கொள்ளுமோ என்று ஒரு ஆதங்கத்துடன் அவர்கள் ஆரவாரத்தை ரசிப்போம்.



கிளிப் பேச்சு ..பிறகு கேட்கவே இல்லை..














நிலா முற்றம்- மந்திரக் கதை

 மந்திரக்கதை


#மாய(யை) உலகமடா..


ஜீபூம்பா புரி..ஒரு மாயாபுரி என்றே சொல்லலாம்.


ஆனந்தமும் ஆரவாரமும் மகிழ்ச்சியும் பொங்கும் பூலோகத்தின் சொர்க்கபுரி.

அதற்கு காரணம்..

அந்த நாட்டின் மன்னன் ஜெய்சங்கர வர்மன் . அவன் பட்டத்து ராணி ஜமுனா தேவி.

மக்கள் நலனில் மட்டுமே நாட்டம் கொண்ட ஒரு அரசன். வளமை பெருகி வறுமை என்ற பெயரே தெரியாத மக்கள்.

 தம்பி உடையான் படைக்கு அஞ்சான். 

ஆம்..தம்பி முத்துராம வர்மன் தளபதியாய் தோள் கொடுக்க..அரசாட்சி அமர்க்களமாக நடந்த பொற்காலம்.


ஜெய்சங்கர வர்மனின் ஒரே புதல்வன் விஜயவர்மன். ஆயகலைகள் கற்று..குருகுல வாசம் முடிந்து வந்தவனிடத்தில்  ராஜ்ஜியத்தின் ஆளுமை பொறுப்பை ஒப்படைக்கக்  காத்துக் கொண்டிருந்தார் தந்தை ஜெய்சங்கர வர்மன்.


அன்று..


 அரசவையில் ஆடல் பாடல் கேளிக்கையுடன் நவராத்திரி விழா மிகச் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது.

 

 மக்களும் மன்னர் குடும்பமும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த வேளை..

 நெஞ்சைப் பிடித்துக் கொண்டு தன் அரியணையிலிருந்து உருண்டு விழுந்தார் மகாராஜா..

 

 ' ஐயோ நம்ம ராஜாவுக்கு என்னாச்சு? நாடே பதறியது.

 

 அரசவை வைத்தியர் உடனே தன் சிகிச்சையை ஆரம்பித்தார். இரண்டு நாளாகியும் எந்த முன்னேற்றமும் இல்லை.

தளபதியும் ,தம்பியுமான முத்துராம வர்மன் எல்லாத் திசைகளிலிருந்தும் வைத்தியர்கள் வரவழைத்தான்.


 ஒருவராலும் அரசனின் வியாதியை குணமாக்கும் மருந்து புலப்படவில்லை.

மகாராணி என்ன செய்வது என்று அறியாது தவித்த வேளை , அரச வைத்தியர் வந்து வணங்கினார். 


 "மகாராணி..என் அறிவுக்கு எட்டின வரையில் ஒரே ஒரு மருந்து உள்ளது. ஆனால் அதைத் தேடுவதும் கொண்டு வருவதும் மிகக் கடினம்' என்று தயங்கித் தயங்கி சொன்னார்.

 

முத்துராம வர்மன் கொதித்தான்.."இந்த மாயாபுரியில் கிடைக்காத ஒன்று உண்டா?.அது என்ன மருந்து? எங்கே கிடைக்கும் என்று சொல்லுங்கள்..நானே கொண்டு வருகிறேன் " கர்ஜித்தான்.


" தளபதியாரே..நான் ஒரு முறை மருந்துகள் தேடி ஒரு காட்டுக்குச் சென்றேன். அங்கே ஒரு அதிசய மரம் கண்டேன்.அந்த மரத்தில் இலைகளே இல்லை.ஆனால் கிளை முழுவதும் பூக்களால் நிரம்பியிருந்தது.அந்தப் பூவிலிருந்து கிடைக்கும் சாறு தான் அரசன் உயிரைக் காப்பாற்றும்..அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. பதினாறு வயது காளை ஒருவனால் மட்டுமே அந்தப் பூக்களை பறிக்க முடியும்..' 

அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே..ஓடோடி வந்தான் விஜய வர்மன்.


 "சித்தப்பா..நானே செல்கிறேன்..என் வயது இப்போது அதுதானே..உடனே புறப்படுகிறேன்..' அவன் கூற..தளபதியும் சித்தப்பாவுமான முத்துராம வர்மன்... "வேண்டாம் விஜயா..அந்தக் காட்டுக்குள் நீ போக நான் சம்மதிக்க மாட்டேன் ' என்று அவனைத் தடுக்க.."விடை கொடுங்கள் தாயே" என்று அன்னையிடம் ஆசி பெற்று/யார் சொல்லும் கேளாமல் .. கிளம்பினான் இளவரசன்.

 

அடர்ந்த காடு அது..எப்படிச் செல்வது என்று திகைத்து நின்ற வேளை..அங்கே பல விலங்குளின் ஒலிகள் அவனுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.


மனித வாசம் உணர்ந்து ஓடி வந்த மிருகமெல்லாம்..இந்த இளவரசனைப் பார்த்தும் மண்டியிட்டு வணங்கி..

 . ' விஜய வர்மரே..வணக்கம்..உங்களுக்கு என்ன உதவி வேண்டும் கேளுங்கள். இந்தக் காட்டை ஒரு ரம்மியமான சரணாலயம் போல் ஆக்கி , எந்த வித இடையூறும் இல்லாமல் எங்களைக் காக்கும் அரசருக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயார் ' என்று பணிந்து நின்றன.

 

 இளவரசன் ,அரசரின் உடல்நிலை பற்றி சொல்ல..' நாங்கள் காட்டிக் கொடுக்கிறோம் அந்த மரங்களை'.. பணிந்து வணங்கி வழிகாட்டின.

 

 பூக்கள் அடர்ந்த மந்திர மரங்கள்...அதில் ஒரே ஒரு மரத்தில் மட்டும் ஒரு இலை கூட இல்லை." 

 

"என்னை பறித்துக் கொள் இளவரசே..என்னைப் பறித்துக் கொண்டு போ இளவரசே..எங்கள் மன்னனுக்கு மருந்தாக நாங்கள் உபயோகமாக இருப்போம் எனில் எங்கள் எல்லாரையும் பறித்து எடுத்துப் போங்கள் ' ஒவ்வொரு பூவும் தலையாட்டி பேசியது.


 ஒரே ஒரு பூ மட்டும்..சோகமாக எதுவும் பேசாமல் இருந்தது.

 

 " அழகிய பூவே..உன்னை விட்டு விடுகிறேன்..ஏன் இத்தனை சோகம் உனக்கு' இளவரசன் கேட்க..

 

 " ஐயோ..இளவரசே....எப்படிச் சொல்வேன்..நீங்கள் சித்தப்பா என்று ஆசையுடன் அன்பு காட்டும் முத்துராம வர்மன்..அரசரைக் கொல்லத் திட்டமிட்டு ,அவர் உணவில் தினமும் விஷம் வைத்து வந்தான். அரச வைத்தியரிடமே அதற்கு மருந்து உள்ளது.

 ஆனால் அவரும்  உடந்தை இந்த திட்டத்தில்...உங்களையும் இந்தக் காட்டுக்கு அனுப்பி விட்டால் ,நீங்கள் திரும்பியே போக மாட்டீர்கள்.. அரியணையைக் கைப்பற்ற அவர் போட்ட திட்டம் இது.. விரைந்து சென்று தந்தையைக் காப்பாற்றுங்கள். அரசரால் தான் நாங்கள் அனைவரும் இங்கே நிம்மதியாக வாழ்கிறோம்'..

 மந்திர மரப் பூ சொல்லிக் கொண்டே போக..

 காட்டு விலங்குகள் நாட்டுக்கு வழி காட்ட..

 வந்து சேர்ந்த இளவரசனைப் பார்த்து அதிர்ந்தான் முத்துராம வர்மன்.

 

 அவன் சூழ்ச்சி முறியடிக்கப்பட்டது... அரசர் பூரண உடல் நலம் பெற்ற்றார்..முடி சூடினான் விஜயவர்மன். 

 

 "முத்துராம வர்மன் ஒழிக".."முத்துராம வர்மன் ஒழிக" என்ற கோஷம் போடும் மக்கள் கூட்டத்தின் நடுவில் .

 "ஜீபூம்பாபுரி ..ஜீபூம்பாபுரி..சித்தப்பா கெட்டவன்..சித்தப்பா கெட்டவன்'..

மந்திரக்கதை எழுத்தாளர்  அகிலனும் ஆழ்ந்த உறக்கத்தில் அவன் கனவில் .. ஊர் மக்களுடன் கோஷம் எழுப்ப..

எதுவும் புரியாமல் திகைத்தாள் அவன் மனைவி ஸரஸ்வதி.

 

அகிலா ராமசாமி

எண்; 1892




Tuesday, September 22, 2020

Daughters day

 Happy daughter's day..


என்ன பேசுவார்கள்?

எதுக்காக சண்டை போடுவார்கள்..

இதுவரைக்கும் புரிந்ததில்லை..


இவர்களுக்காக 

புதுப் புது சமையல் கற்றேன்..

மொழி கற்றேன்..

புதுப் புது நட்பு கிட்டியது..


என் பெயர் மறந்து..

இவர்களின் அம்மா என்று அழைக்கப்படுகிறேன்..

வேறென்ன ஆனந்தம் வேண்டும்.


'கப்'புகள் வாங்கிக் குவித்தாலும்..

ஒரு கப் காபியோ தண்ணியோ..

இவர்கள் கொடுக்கும்போது அலாதி இன்பம் தான்.

Stay blessed my chellams.


எனக்கு பிடித்த ராஜா சார் பாட்டு..

'அழகிய கண்ணே..உறவுகள் நீயே'..

Is the song i cherish on every daughter's day.


https://youtu.be/q2C4Su0ohOU

Monday, September 21, 2020

பாபா விஜயம்

 மத்யமர் நண்பர் Ramani யின் பதிவுக்கு என் பழைய புலம்பலை எச யாக சமர்ப்பிக்கிறேன்.


Madhya Pradesh life..


பாபா விஜயம்..


குரோம்பேட்டை குச்சு வீட்டிலும்..கரோல் பாக் கிடங்கிலும் இருந்து...மத்திய பிரதேசம் transfer.. Indore station எறங்கி நல்ல தமிழ் ஹோட்டலில் மூக்க புடிக்க மொக்கிட்டு..கடைத்தெரு எல்லாம் பராக்கு பார்த்துண்டு..பயணம் மண்டலேஷ்வர் என்ற project site நோக்கி....நாங்க போற கார் தவிர..

ஆள் அரவமே இல்லாத ரோடுகள்..இரண்டு பக்கமும் கண்ணும்கெட்டிய வரை ஒரு மனுஷப் பிறவி தெரில..

என் கூட வந்த உடன் பிறவா தம்பி..'அக்கா..நாம எங்க போறோம்.. 'என் அம்மாவோ..'இந்த எடத்துல கைக்குழந்தைய வெச்சுண்டு. எப்படி?


 'அதோ ..அந்த மலைக்கு பின்னாடி தெரியுதே..அங்கதான்..நம்ம வீடு..'

அகத்துக்காரர் சொல்ல...ஆர்வமாய் தலை ஆட்ட..ஒரு குட்டித் தூக்கம் முழிச்சு..இப்போ நாம எங்கே இருக்கோம்....திரு திரு முழியுடன் நான்


கம்பெனி கேட்டில் security salute அடிக்க..ஓ..வீடு வந்தாச்சு..

ஒரு வீட்டுக்கும் இன்னொரு வீட்டுக்கும்..போ....திய இடைவெளி... மைக் போட்டு தான் கூப்பிடணும்.


 அத்வானம்..அமைதி..இதெல்லாம் பழகாத ஒன்று..கடைத்தெருவிலே குடி இருந்து.. காட்டுக்கு நுழஞ்சாச்சு..

பக்கத்து வீட்டு பம்ப்பா(Bengali)..ஓடி வந்தாள்..அறிமுகம்..'bhabhiji ..dhyan rakhna..babaji idhar bahut hai.'...பய பக்தியோட தலையாட்டினேன்..பூச்சாண்டி பயம் ரொம்ப போல இருக்கு..கதவ சாத்தியே வைக்கணும்...


வந்து போனவரெல்லாம் இதே பாட்டு..எங்கடா..வந்து மாட்டிண்டோம்..

காலைல கண் விழிச்சா..விந்திய மலை தரிசனம்..காம்பவுண்டுக்குள் இருக்கும் கோயில் மணி..ஆஹா..சுகமோ..சுகம்..


தோட்டக்காரன் 'கல்லு'...என் பேர் என்றான்..madam..

babaji idhar bahut hai..கதவ சாத்தி வைனு..அதே பாட்டை சுருதி பிசகாம பாடினான்..


என்னடா இது வம்பு...

வேலை செய்யும் மன்னு பாய் வந்தாள் அவள் பெண் சந்தா வோடு..அவளும் அதே பாட்டு பாடினாள்..


கதவிற்க்கு அடியில் துணி அடை என்றாள்..ஷெல்ப் எல்லாம் மூடி வை..babaji ..என்றாள்..


பத்து மணி..பக்கத்து (so called) வீடு..state bank..பியூன் வந்தார்..திறந்தார்..கதவை..ஓடி வெளில வந்து நின்னார்..அட ராமா..இப்படி என்ன ஓட்டம்..கேட்டேன் அவரை..

பணப்பெட்டி திறக்குமுன்..babaji வெளிய போகணும் என்றார்..யோவ்..பூட்டின வீட்டில எங்கடா உங்க babaji....நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் நீனு..ஒரு லுக் விட்டார்....


என்னமோ போ..குழந்தை க்கு ஜுஸ் குடுக்கணும்..ஆரஞ்சு புழிஞ்சு தோலை வீசி எறிய..ஒரு army சத்தம் சரசரனு..குப்பைலேர்ந்து..


கிச்சன்கார்டன்ல..கத்திரிக்காய்..கண்ணைப் பறிக்க..பாத்தியில் கால் வைக்க..கருப்பா..பெருசா ஒண்ணு நகருது..ஐயோ..ஒட்டம் தான்..சீ..சீ..எதோ பிரம்மை..


செம்ம வெயில் கொளுத்தும்.. தண்ணீ ரொப்ப கூலருக்குள் பைப்பை சொருக....குபீர்னு எதோ ஒன்னு வெளிய ஓடித்து..ஐயோ..மூச்சே நின்னு போச்சு..


கல்லு வந்தான்..கதையெல்லாம் சொல்ல..நக்கலாய் ஒரு சிரிப்பு..woh  kuch  nahi kartha  madam..இது எங்கள் குல தெய்வம் என்றான்..


என் குட்டி வால்..காலுக்கு பின்னாடியே..babaji..ஊர்வார்....எங்க எப்பொ..ப்ரசன்னமாவார்னே தெரியாது..


பால்காரர்் வருவார்..பாபாஜி..இன்னிக்கு எங்க என்பார்..அதோ ..அந்த தண்ணி வெளிய வர குழாயில் என்பேன்..போ..ஊதுவத்தி கொண்டா என்பார்..சாக்கடைக்கு..சந்தன அகர்பத்தி காட்டுவார்..பாபாஜியோ..தலைய மட்டும் வெளியே காட்டிட்டு..உனக்கும் பேப்பே..உங்கப்பனுக்கும் பேப்பேனு..உல்லாசமா..பைப்புக்குள்ளே..


சாயந்திரம் 5 மணிக்கு கரெண்ட் கட் ஆகிடும்..அப்பறம் அடுத்த நாள் 12 மணிக்கு தான் வரும்..

காத்துக்கு கதவும் திறக்க முடியாது..காலை கீழ வைக்க கூடபயம்.வழவழனு ..எங்கியாவது..பாபாஜி..விஜயம்..பாமா விஜயம் மாதிரி..


இது என்ன மர்ம தேசம் மாதிரி.....

பயத்தில் ..பூசைகள்...இன்னிக்கு யார் உங்க வீட்ல விருந்தாளினு கேலிகள்....

இன்னிக்கு concrete jungle ல ....எந்த புத்துலேர்ந்து எந்த. பா......இருக்கும்னு புரியாமல் வாழ்க்கை ஒட்ட்ம்..

மறக்க முடியாதது..அந்த

ரம்மியமான சூழல்..நர்மதை நதி சலசலப்பு...

அமைதியான மக்கள்..கொட்டும் மழை ஒருபக்கம்..காய்ந்த பூமி மறுபக்கம்..அஹில்யா தேவி கோட்டை..chanderi புடவைகள்..

எத்தனை நினைவுகள்..

சென்னை

 #ஸண்டே_ஸ்பெஷல்

#சென்னை

காவேரிக்கரையில் பிறந்து..கூவம் நதிக்கரை வந்து சேர்ந்தபோது குழப்பம் தான் ரொம்ப அதிகம்.


படபடக்க வைத்த பட்டிணம் தான்..கூட்டுக்குள் புழுவாய் இருந்த என்னை..பட்டாம்பூச்சியாய் பறக்க வைத்தது நம்ம மெட்ராஸ் தானுங்கோ..


குரோம்பேட்டை ராதா நகருக்குள் ஒரு #மினி_இந்தியா

#பாரத_விலாஸ்


 குருவிக்கூடு வீடு தான் எங்கள் சொர்க்கம்.

சுருள் மாடி வீடு  ..சிம்ப்பிள் அடையாளம்.

மூன்றடுக்கு மாடி..


One India அப்போதே கண்டேன் அங்கிருந்த ஒன்பது வீடுகளில்..


சுந்தரத் தெலுங்கு கேட்கும் ஒரு வீட்டில்..

மலையாள மணம் வீசும் ஒரு வீட்டில்

மார்வாடி ஆண்ட்டியின் சப்பாத்தி சப்ஜியின் மணம் இன்னொர் வீட்டில்..

தம் ஆலு காந்தமாய் இழுக்கும் ஒரு வீட்டில்..

பிஸுபேளா..ப்ளேட்டில் தருவர் ஒரு வீட்டில்..

அன்புக்கு பஞ்சமில்லை..

பயமொன்று இருந்ததே இல்லை..


#கற்றதும்_பெற்றதும்_ஏராளம்.


வீடு பெரிசா இருந்தாலும் மனசு சின்னதாக இருக்கும் இந்த உலகத்தில்..

வேலைக்கு போகும் அம்மாக்களின் குழந்தகளை எந்த வித எதிர்ப்பார்ப்புமின்றி தன் குழந்தைகள் போல பார்த்துக் கொண்ட வீட்டுக்கார மாமியின் #வாத்ஸல்யம்.


பாட்டியின் புடவைத் தலைப்பில் ஒளிந்திருந்த நாட்கள் போய்..

வாழ்க்கைப் பாடம் கற்றுத் தந்த பட்டணம் இது.. என் வாழ்வில் #பட்டறையாய்..


பரீட்சையில் மார்க்கு வரதுக்கு முன்னாடி..ராமாஞ்சனேயர் கோவிலும்..ஸ்டேஷன் ரோட் பிள்ளையார் கோயில் என வளர்ந்தது #பக்தி.


மாம்பலம் போவது என்றால் #Manhattan போன ஸ்ரீதேவி மாதிரி..ட்ரெயின் ஏறி..foot board நின்று காற்று வாங்கிய #சந்தோஷம்.


சங்கீதம் என்பது ஸ்வரங்களின் ஜாலம் மட்டுமல்ல...அது ஒரு #தியானம்

என்று சொல்லிக் கொடுத்த வீணை மாமி.


வடாம்களுக்கு காவலோடு..விடலை அக்கா அண்ணாக்களுக்கு.. மெசெஞ்சர்..ஸ்பை..எல்லாமே எங்க வாண்டு க்ரூப்பு தான்.

அந்தக் கால 'அஞ்சலி' படம் போல எங்கள் அட்டகாசமான கூட்டம்.


நட்பு வட்டம்..நட்பு சங்கிலி..துவங்கியது இங்கே தான்.


Restaurants அப்போதெல்லாம் ஒன்று கூடகிடையாது..swiggy க்கு எதிர்பாக்காது ரெஸ்ட்டே எடுக்காமல் ..

அம்மாக்களின் கைமணத்திலும் காரியங்கள் கற்றபடி #வளர்ப்பு.


'வெற்றி'யின் வாசலில் அடிக்கடி நின்றதாலோ என்னவோ..

MIT..மண்ணைக் கூட மிதிச்சதில்லை.


முக்கியமாக..

வாழ்க்கையில் கடல் தண்ணீர் தவிர..உப்பு தண்ணீர் என்பது பைப்பிலும் வரும் என்ற உண்மை புரிய ..

ஒரு குடம் நல்ல தண்ணிக்கு...நடையாய் நடந்தது...தண்ணீர் சேமிப்புக்கு வித்தானது..


கிரோம்பேட்டை ..குறும்புடன் கூடிய கதம்ப வன வாச எண்ணங்களுடன் இன்றும் மனசில் .


எத்தனை வரவேற்புகள், எத்தனை வழியனுப்பதல்..கண்ட இந்த எங்க குடும்பத்து ஸ்டேஷன் இந்த கிரோம்பேட்டை ஸ்டேஷன்.


என் வாழ்க்கைப் பயணமும் தடம் புரளாமல்  சில நேரம் கூட்ஸ் வண்டி போலவும், சில நேரம் தடக் தடக் பயணமாக இருந்தாலும் இலக்கை அடைந்தே தீரணும்னு திடம் தந்த புடம் போட்ட இடம்.


புலம்பலில்லை..பொழுது போனதே தெரிந்ததில்லை.


க்ரோம் லெதர் கம்பெனிகள் இருந்ததால்  இந்தப் பெயர் வந்தது என்றால்..அவர்கள் தள்ளி விட்ட கழிவு நீர் உடலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தியது ஒரு காலத்தில் என்பது ஒரு வருத்தமே..இப்போது இல்லை என்று நினைக்கிறேன்.


கிரோம்பேட்டை க்கு #கும்மி அடித்து ஒரு #குறவஞ்சி பாடிட ஆசையும் தோணுது..

மன்னிப்பா..

 மன்னிப்பா..

(ஒரு ஜாலி போஸ்ட்)


மன்னிப்பா..என் அகராதியில.. இவங்களுக்கு கிடையவே கிடையாது.


1. உனக்கென்னப்பா ..housewife ..நீ எப்ப வேணாசமைக்கலாம்,சாப்பிடலாம்.தூங்கலாம், ஃபேஸ்புக்ல குடியிருக்கலாம், watsapp ல் வாடகையே இல்லாமல் இருக்கலாம் எனும்போது


2. அதே முன்கூறியவர் அப்பப்பா..எப்படித்தான் எல்லா நேரமும் வீட்டில இருக்கீங்களோ..எனக்கு ஒரு நாள் தள்றதே பெரிய பாடா இருக்கு எனும்போது..


3. நாம் செய்ததை எல்லாம் மூக்கைப் பிடிக்க சாப்பிட்டுவிட்டு , அந்த பக்கத்து வீட்டு மாமி தந்த புளிக்கொழம்பு ஒரு ஸ்பூன் விடேன்னு சொல்லும்போது..


4. aunty நு எப்போதும் கூப்பிட்டு ஓடி வரும் அபார்ட்மென்ட் குட்டி, பாட்டினு திடீர்னு  கூப்பிடும். அவள் அம்மா நமுட்டுச் சிரிப்பு சிரித்தபடி ' சாரிப்பா..நீங்க இந்த கண்ணாடில அசப்பில எங்க மாமியார் மாதிரியே இருக்கீங்க' சொல்லியபடி பின்பக்கம் இருக்கும் தோழிக்கு வெற்றிச் சின்னம் காட்டும்போது..


5. நல்ல தைப்பார் துணி எல்லாம் என்று தோழியை நம் ஆஸ்தான டைலருக்கு அறிமுகப்படுத்த..அவர் அவளுக்கு மட்டும் டிஸ்கவுண்ட் கொடுக்கும்போது..


6.நான் தான் எப்பவும் உங்க வீட்டுக்கு வரேன்.நீங்க ஒரு தடவை கூட வரதே இல்லைனு சொன்னதை நம்பிப் போனால்..டீவியில் கதறி அலறும் சீரியலோடு ஐக்கியமாகி..நீங்க பார்க்கறது இல்ல இந்த சீரியல்னு ஒரு கேள்வி கேட்பாங்க பாருங்க அவர்களை....


7. நம்ம கல்யாண ஃபோட்டோவை பார்த்துட்டு ' எப்படி இருந்த நீங்க ..இப்படி ஆகிட்டீங்கனு' மனசை பீஸ் பீஸா ஆக்குபவரை..

இந்த சின்ன மனசை பீஸ் பீஸாக்க எத்தனையோ பேர் காத்திருக்காங்க..

but going strong as always.

உங்களோடதையும் பகிருங்களேன்..

Live the present

 live the present


வெளியூரிலிருந்து வந்த வூட்டுக்காரர் டமால்னு ஒரு வெடிகுண்டு போட்டார்.


ஆட்டோக்காரருக்கு இன்னிக்கு இரண்டாயிரம் ரூபாய் கொடுத்தேன்.


' ஐயோ ராசா..மெளனராகம் கார்த்திக் ஸ்டைலில் Mr. ராமசாமி..Mr.ராமசாமினு முள்ளங்கி பத்தை மாதிரி இரண்டாயிரமானு நானு துரத்த..என் BP high ஆகிட்டு சொல்றேன் இருனு ஆரம்பிச்சார்.


வழக்கம்போல ட்ரெயின் லேட்டா வர ஆட்டோ தேடிய வேளையில் எல்லாரும் சகட்டு மேனிக்கு விலை ஏத்த ..ஒரு முஸ்லீம் ஆட்டோக்காரர் ( இங்கே அவர் மதம் நமக்கு தேவையில்லை) 

'சார் வாங்க இருனூற்றைம்பது கொடுங்க போதும் என்றாராம். இவரும் ஏற..வழியெல்லாம் ஒரே டென்சனாய் அவர் ஓட்ட..தானே என்ன தோன்றியதோ இவரிடம் புலம்ப் ஆரம்பித்தாராம்.


 ' என் மனைவியை இப்போ டெலிவரிக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கேன் . மூவாயிரம் காலைல பத்து மணிக்குள் க்ட்டணும் . சிசேரியன் செய்யணுமாம். என்கிட்ட காசு இல்ல சார். சொந்த பந்தம் நட்பு எல்லார்க்கிட்டயும் கேட்டேன் ..கை விரிச்சுட்டாங்க..இன்னிக்கு ராத்திரி பூரா ஓட்டினா எனக்கு எப்படியும் காசு கிடைச்சுடும். அதுக்காக அடாவடியா காசு கேட்க மாட்டேன். 

ஒரு தகப்பன் , கணவனுக்குரிய பதட்டத்துடன் அவர் பேசிக் கொண்டே வந்திருக்கார்.


வீடு வந்தாச்சு. இவர் எடுத்துத் தந்தார்..இரண்டாயிரம் ரூபாய். 'சார்..என்கிட்ட சேஞ்ச் இல்லையே..என்று அவர் சொல்ல..சீக்கிரம் மீதியை சம்பாதிச்சுட்டு ஹாஸ்பிடல் போங்க என்று கூறிய இவர் 

..' பொண்ணு பிறந்தால் 'சோனா'(sona) நு வைங்க என்று வாழ்த்திட்டு வந்திருக்கார்.

sona  என்றால் ஹிந்தியில் தங்கம்..


தன்னுடைய அம்மாவின் திதிக்காக வந்தவர் ..தன்னலமே இன்றி வாழ்ந்த அவர் அம்மாவுக்காக இதை விட வேறு என்ன செய்ய முடியும்?

அவர் அம்மா..என் மாமியாரின் பெயர் தங்கமணி.


எப்பவும் ஃபோட்டோவில் இருந்தபடி சிரித்துக் கொண்டு இருக்கும் என் அம்மா..அன்பை அள்ளித் தந்த என் மாமிியார் இருவருடனும்  அடிக்கடி பேசுவேன்.


நேற்று கூட கேட்டேன்..' தங்கமணி..நீ நாளைக்கு வருவியே..உன்னை எப்படி நான் அடையாளம் கண்டு பிடிக்கிறது ' என்று.

அவள் ..எப்போதும்போல் அவள் பாணியில் காட்டி விட்டாள் போலிருக்கு.


'ஏம்ம்ப்பா..ஃபோன் நம்பர் வாங்கிண்டேளா'னு நான் கேட்டேன்.

' எதுக்கு ..உனக்கு செக் பண்ணணுமா ' என்றார்.

இல்லை இல்லை...அங்கே 'சோனா'  வா..இல்ல 'சோனு' வானு தெரிஞ்சிக்கத்தான் ' என்றேன்.


இது என்ன சொந்த சிந்து பாடவா இந்த்க தளம்னு கேட்க்கலாம்.


நம் ..மத்யமர் மனம்.. ' செய்த தர்மம் தலை காக்கும் ' அது future tense


 தக்க சமயத்தில் உயிர் காக்கும் ..காக்கணும்னு ' என்பது present.


(ஆட்டோக்காரரே..நீங்க நல்லவரா இருக்கணும்..நல்லபடியா இருக்கணும்..

என் அம்மாவும்( மாமியாரும்) இன்று உன் குடும்பத்தை வாழ்த்துவாள்.

வாட்ச்மேன் தாத்தா.

 #எளியமனிதர்கள்


என்னடா இது..இந்த மத்யமருக்கு வந்த சோதனைனு ..உங்க மைண்ட் வாய்ஸ் வசனம் பேசினாலும் ப்ளீஸ் ..ப்ளீஸ் ..இவரை மட்டும் பற்றி கொஞ்சம் சொல்லிடறேன். 


வாட்ச்மேன் தாத்தா..


" அப்பா ..முதல்ல இந்த வீட்டை காலி பண்ணலாம்ப்பா..சொந்த வீடெல்லாம் வேண்டாம் . பழையபடி மார்க்கெட் ரோட் வாடகை வீட்டுக்கே போய்டலாம்னு ' ஒரே அழுகை அடம்..


80 களில் அத்வானத்தில் வீடு கட்டி, வெளியே போனால் வீடு வந்து சேரவே யுகமாகும்.நாலரை மணிக்கு விட்ட ஸ்கூலிலிருந்து வீட்டுக்கு வர ஆறரை மணியாகும். பஸ் என்பது இரண்டு மணி நேரத்துக்கு ஒண்ணு .அதுவும் கூட்டம் பிதுங்கி வழியும்.


வீட்டு கிட்ட வர வர கிலி பிடிக்கும். லாந்தரை விட டிம்மா எரியும் பல்பு..அதைவிட தெரு முனையில் லுங்கியை மடிச்சு கட்டியபடி பீடி பிடித்துக் கொண்டு போற வருபவர்களை ஆபாசமாகப் பேசும் ஒரு ரெளடி கும்பல்..


நடுங்கியபடி வீட்டு வாசல் வந்தால் ..மல்லாந்து மப்பில் படுத்துக் கிடக்கும் குடிமகன்கள். காலை ஜாக்கிரதையா வெச்சு போய் அந்த மூங்கில் கேட்டை திறந்து உள்ளே ஓடி க்ரில் கேட்டை தாண்டி போய் பூட்டு போட்டு உள்ளே போகும்வரை லப்..டப்..சத்தம் அதிகமாகி உயிரே போய் வெளியே வரும்.


அப்பா அம்மா ஆபீஸிலிருந்து வரும் வரை நடுக்கம் தான்.

இதுதான் என் அழுகைக்கு காரணமும் கூட.


அப்பாவின் ஃப்ரண்ட் என் பயத்தை கேள்விப்பட்டு ' சார் நம்ம கிட்ட ஒரு ஆள் இருக்கார்..அவரை வாட்ச்மேனா போடுங்க. அவரு ரொம்ப நம்பகமான ஆளு சார்னு சொல்லி அவரைக்் கூட்டி வந்தார்.


கருகருனு எலும்பு மட்டும் தெரியும் உடம்பு.குச்சி ஒண்ணு ஊன்றியபடி.

'என்ன இவரானு 'நாங்க கேட்க..'நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க..இவரு எல்லாம் பார்த்துப்பார் என்றார்.


ஃப்ரண்ட் பேச்சை தட்ட முடியல அப்பாவுக்கும்.


என் வீட்டுத் திண்ணைதான் அவருக்கு ஜாகை.குச்சியோட எப்பவும் இருப்பார்.


 தெரு முனையில் நான் வரும் நேரம் வந்து நின்று என்னைக் கூட்டி வருவார். ரெளடி கும்பல் எல்லாரும் ' ஏய் பெர்சு.இன்னா பெரிய பயில்வானா நீ ' நு கேட்டால் ஒரு முரை விட்டுட்டு நீ வாம்மா..என்று Z security மாதிரி எனக்கு காவலாக வருவார்


வீட்டுக்குள் என்னை விட்டு விட்டு ..'நீ பூட்டிகோ தாயி..நா இங்கன தான் குந்திகினுகிறேனு ' திண்ணையிலேயே உட்கார்ந்திருப்பார்.


அவரைப் பார்த்ததும் தள்ளாடி வந்தவனெல்லாம் தண்ணி தெளிச்ச மாதிரி நகர்ந்து வேறு பிளாட்டில் போய் விழுந்து கிடப்பான். ( ஒரு காலத்தில் அவரு பேட்டை தாதாவாம்..அப்படி எல்லாம் நான் சினிமா கதை சொல்ல மாட்டேன்)


மோர் சாதம் மட்டும் இரவு சாப்பிடுவார். கை தான் தலகாணி..என் வீட்டு வராண்டாவிலே படுத்து தூங்குவார். காலையில் பூ பறிச்சு கொடுத்து அம்மா கொடுக்கும் டீயும் பிஸ்கட்டும் சாப்பிட்டு  போய்டுவார்.


தாத்தா..தாத்தானு எல்லாருக்கும் அவரிடம் ஒரு பிரியம்.


அப்புறம் எதிர்த்த வீட்டு சுபாவுக்கும் அவர் தான் காவல். பக்கத்து வீட்டு அம்மாவும் சொல்லிட்டு போவாள்.' புள்ளங்க உள்ள இருக்கு ..கொஞ்சம் பார்த்துக்கோங்க தாத்தா' என்று


பெரிசா ஒண்ணும் சம்பளமெல்லாம் இல்லை..ஆனால் அவரோட நேரம் தவறாமை, பொறுப்பு , அவர் எங்களை பத்திரமாக பார்த்துக் கொண்ட விதம்.. 

இன்னும் நாங்கள் அவரைப் பற்றி பேசக் காரணமாக இருக்கு.

காலனி வளர..அவருக்கும்் வயசு ரொம்ப ஏறிபோக ..முடிவும் வந்தது அவருக்கு. 


நாம் கும்பிடும் தெய்வங்கள் இப்படி மனித உருவில் நம்மை காக்க கண்டிப்பாக வருகிறார்கள் என்பதில் அதீத நம்பிக்கை எனக்கு.


என்னைப் பொறுத்தவரை அவர் என்னையும் எங்கள் புதுசாய் முளைத்த காலனியில் உள்ள பெண் குழந்தைகளைக்  காத்த ஒரு மதுரை வீரனும், கருப்பசாமியும் தான்.

Sunday, September 20, 2020

நன்றி சொல்லவே

 நன்றி சொல்லவே'..


"பெட்டிஷன் பெரிய நாயகியா' இருக்கக் கூடாதென்று..

பிரகாரத்துக்குள் நுழையும் முன் எடுத்த பிரதிக்ஞை எல்லாம் பொடிப் பொடியாக..

 பிரார்த்தனைகள் போட்டியில் நிற்க..

 

நமஸ்கரித்த வேளையில்..

நினைவில் வந்தது..


அடடா..

நன்றி சொல்ல மறந்தேனே..நீ

நீ நடத்திக் கொடுத்த நல்லதற்கெல்லாமென்று..


'நல்ல பக்தை தான்  போ' ...நீ

நிந்திக்க மாட்டாய் ..நம்பிக்கையுண்டு..


சன்னதி தேடி ஓடினேன்..இதெல்லாம்

சகஜம் என்ற தோரணையில்

சிரித்தபடி நீ ..

சுண்டல் 2 ம் நாள்..

 மாமி சுண்டல் -2


பிக் பாஸ் day 2 மாதிரி இன்னிக்கு மாமி சுண்டல் 2 ம் நாள்..

அகம் டீவியெல்லாம் இங்கே இல்ல..அக்கம் பக்கம் எல்லாம் ஒண்ணா ஒரே frame க்குள் இந்த ஒன்பது நாளும்.

சீதாப்பழ பாயசம் ..புடவை நாளைக்கு என்ன கலர்னு எல்லாரும் பேசறத்துக்கு complan தெம்பு தர..

பச்சைக்கு ஒரு சிலர் பச்சை கொடி..மஞ்சள் தான் மங்கலம் ..இன்னொரு க்ரூப்..ரெட்டுக்கு TRP ரொம்ப கம்மி..ஒரு வழியா தலைய பிச்சுண்டு ப்ளூனு முடிவு..கூட்டம் இங்கே கலைந்து...watsapp ல் மீண்டும் கூடியது..

என் கிட்ட இருக்கிற ப்ளூ..கொஞ்சம் பழசு..ear ring என்கிட்ட quillling wala தான் இருக்கு..என்கிட்ட மயில் கழுத்து ப்ளூ தான் இருக்கு..இந்த புடவையில் இப்போதான் வாட்ஸப் profile ..no way..

ஒரே பிரச்சினை..

கடைசியில் முடிவு செய்தபடி..எல்லாரும் அவரவர்களுக்கு பிடித்த கலர் புடவையில் ப்ரகாசமாக ..பிரசன்னம்..

என்ன ஒத்துமை..ஒருத்தர் கூட ப்ளூ கட்டிக்கல..

சஹஸ்ரநாமம் படிக்க ஆரம்பிச்சாச்சு. எப்பவுமே yummy பிரசாதம் கொண்டு வரும் மாமி , டப்பாவோடு உள்ளே நுழைய ..எல்லாரும் அந்த டப்பாக்குள் என்ன இருக்கும்னு ஒரு question mark லுக் விட்டபடி தொடர்ந்தோம்..முடித்தோம்..ஆரத்தி ஆச்சு..

டப்பா திறந்தா..

நூல்கண்டா மெல்லிசா ஃபேணி..அது மேல அப்படியே சக்கரை பொடி தூவி..

இங்கே தான் மாமியின் கை வண்ணம்..

 எப்போதும்போல் அதோட ஒரு ஙேனு ஒரு சக்கரை கம்மி பால் இல்லாமல்..சூப்பரா ரோஸ் மில்க்கோடு.

( உங்க மெனுவை மாத்தி பண்ணி பாருங்கோ லேடீஸ்...மழையா பாராட்டு கொட்டும்..நான் guarantee)

ஒரு பால் ஃபேணி..

ஆஹா..பேஷ் பேஷ் ரொம்ப நன்னாருக்குனு உறிஞ்சு குடித்த வண்ணம்.

மீண்டும் ஆரம்பித்தோம் நேற்று விட்ட இடத்திலிருந்து புடவை கலர் கதை..


நவராத்திரி... நளபாகத்தோடு ...

Happy navarathri

Sunday, September 13, 2020

சதாப்தி

 வாட்ஸப்பிருக்க..வாய்ஸ் கால் எதற்கு?


சதாப்தியில் செட்டில் ஆனதுமே..

சகலருக்கும் சகட்டு மேனிக்கு ஞானம் வரும்.

ஹலோ ஹலோக்கள் லோ லோ என்று முழங்க


லோக க்ஷேமத்தில் தொடங்கி..

லோக்கல் பாலிடிக்ஸ் வரை..


பக்கத்து சீட்டு மாமா..மாமிக்கு போட்ட ஃபோன்..( ஒட்டு கேக்கலைப்பா..அவர் பேசினது ஊருக்கே கேட்டது)😀


ஒண்ணு கேட்க மறந்துட்டேனு ஆரம்பிச்சவர் தான்..


ஒருலிட்டர் பாக்கெட்டா?

இரண்டு அரை லிட்டரா.? 


ஃப்ரீஸரில் வைக்கணுமா..

Chill tray லயா?..அந்த


a2b பக்கோடா..

அந்தரா..பாஹரா..?


கல்யாண முறுக்கு

கடக்குனு போய்டாதா..?


வலது கரம் வந்தால்

வார்க்கணுமா தோசை?


அரிசிக்கு ஜலம் எத்தனை?

பருப்பும் வைக்கணுமா?..


அடுக்கிக் கொண்டே போக..

ஆவேசக் குரலில் மாமி..

'அட ராமா..

நல்லி கடையிலே..

நாலாயிரம். புடவை குவிய்லில்

நல்லதா ஒண்ணு தேடிண்டு இருக்கேன்

நிம்மதியா ஷாப்பிங் பண்ண விட மாட்டீரோ..

நானே வந்து எல்லாம் பார்த்துக்கறேன் என்று இணைப்பை துண்டிக்க..


'அவள் அப்படித்தான்" என்று ஒரு ஸ்மைலில் சொல்லி..அசடு வழிய..


அடுத்தடுத்து..செல் ஃபோன் மணிகள் சிணுங்க..

ஆறு மணி நேரம்..அட்டகாச entertainment எனக்கு.


வண்டியில் ஏறினதும் கவச குண்டலமான hearing aid ஐ switch off செய்துவிட்டு..

அப்பா..அமைதியாய்..ஜன்னலோர சீட்டில் 

தாண்டிச் செல்லும் மரம் செடியை ரசித்தபடி..பழைய நினைவுகளை அசை போட்டபடி..

Sunday, September 6, 2020

என் ஜீவன் நீதானே- கதை

 #படம்_பார்த்து_கதை


என் ஜீவன் நீதானே

"ஏங்க..அந்த நியூஸ் பேப்பரை நொட்டுறு பண்ணது போதும்.மடமடனு குளிச்சு டிஃபன் சாப்பிட்டு கிளம்பலாம் .


 மார்க்கெட்டில் போய் ஃப்ரஷ்ஷா காய் வாங்கிட்டு, அப்படியே அரிசி மண்டில சாமான் லிஸ்ட் கொடுக்கணும். பாங்க் வேற நாலு நாள் இருக்காதாம் . கொஞ்சம் பணம்  எடுக்கணும். ஒரேடியா முடிச்சுட்டு வந்துடலாம்' கட்டளை பறந்தது காவேரி அம்மாளிடமிருந்து.


"ஏம்மா..உன்னோட வேடிக்கை பார்த்துண்டு வரதுக்கு ..நீ ஒரு ஒரு காயும் பழமும் வாங்கறதுக்குள்ள காலெல்லாம் வலிக்க ஆரம்பிச்சுடுமே..


நான் பாட்டு அக்கடானு டீவி பார்த்துண்டு இருப்பேனே' ..சுந்தரம் சொன்னதை கண்டுக்காமல் ஜருகண்டியில் இறங்கினாள் காவேரி.


சுந்தரம் ஒரு துணிக் கடையில் வேலை பார்த்தார். காலையில் போனால்..வீடு வர பாதி ராத்திரி ஆகிடும். பசங்க படிப்பு, ஸ்கூல், வீடு ,உள் வேலை, வெளி வேலை எல்லாம் காவேரி தான். பையன்கள் ரெண்டு பேரும் நல்ல வேலையில் வந்த பிறகு ..வயதும் ஆகி விட்டதால் கடை வேலைக்கு போவதை நிறுத்தி இரண்டு வருடமாச்சு.


தினமும் இதே கூத்துதான். தினமும் குறைந்தது 2 மணி நேரம் வெளியே இழுத்துச் சென்று விடுவாள். 


அன்றும் அப்படித்தான்..வெளியே போய் வந்து..சாப்பிட்டு கொஞ்சம் கண்ணசர, ஏதோ முனகல் சத்தம் அவரை எழுப்பியது. காவேரி தான். நெஞ்சைப் பிடித்துக் கொண்டு தவித்துக் கொண்டிருந்தாள்.


மின்னல் வேகத்தில் எல்லாம் நடந்து முடிந்தது. "காவேரி.".. "காவேரி"..அவர் குரல் காதில் விழவில்லை அவளுக்கு...கண் மூடினாள். 

சுந்தரம் சுருண்டு போனார். தன் அறைக்குள்ளேயே முடங்கிப் போனார். விட்டத்தை் பார்த்தபடி..


" நாளையிலேர்ந்து காரியம் ஆரம்பிக்கணும். காய்கறி லிஸ்ட் எல்லாம் போட்டாச்சு..சாமான் ஒண்ணு விடாம ரெடி பண்ணி வெச்சுக்கணும்.." 

மருமகள்கள் பேச்சுக் குரல்..


ஏதோ மண்டையில் அடித்தாற்போல ஒரு உணர்வு. வேகமாக எழுந்து எப்போதும் எடுத்துப் போகும் பைகளை எடுத்தார்.

"கொடுங்கம்மா..எல்லாத்தையும் பார்த்து நான் வாங்கி வந்துடறேன்.."..


"மாமா..நீங்க?...மருமகள்கள் கேட்க..

" எனக்கு ஒவ்வொண்ணும் உன் மாமியார் சொல்லிக் கொடுத்திருக்காம்மா..நீங்க உள் வேலையை கவனிங்கோ..நான் போய்ட்டு வரேன்".

அவர்கள் எப்போது காய்கறி வாங்கும் பெருமாள் கடை முன் நின்றார்..


"நல்ல பிஞ்சா பார்த்து நானே பொறுக்கி எடுத்துக்கறேனேப்பா..'..காவேரியின் குரல் அங்கே அவருக்கு மட்டும் கேட்டது..


(வாழ்க்கையில் நாம் சந்திப்பவர்கள் தானே..நம் கதைகளுக்கும் கருவாகிறார்கள்...சென்ற வருடம் எழுதியது)


நட்பூஸ்..நீங்களும் எழுதுங்களேன்

Tuesday, August 25, 2020

Janmashtami

 வெல்ல சீடை..

உப்பு சீடை..

தட்டை..

தேன்குழல்..

அவல் பாயசம்..

வடை..

பால்..பழம்...

தயிர் ..வெண்ணை..

எல்லாம் வெச்சாச்சு..

வாசலில்லேர்ந்து..

உள் வரை..

உன் காலும் போட்டாச்சு..

விளக்கும் ஏற்றி..

ஆயர் பாடி மாளிகையில்..

cassette பூரா பாடியாச்சு..

எப்பவும்..வந்துடுவியே..

இன்னிக்கு எங்கே காணோம் இன்னும்..

பக்கத்து வீட்டில் ஏதோ சத்தம் கேட்க..

என்னனு போய் எட்டிப் பார்த்தேன்..

என்னத்த சொல்ல..

நீயுமா..கண்ணா..இப்படி..

கையில் pizza piece ம்..

வாயில் maggi யும் ரொப்பிண்டு..

ரொம்ப நன்னா இருக்கு..

பேஷ் பேஷ் னு..

இனிமே மெனுவை மாத்துங்கோ..

I need a change ..

சொல்றது நீதானா..

fast food க்கு..

flat ஆகிட்டயா நீயும்..


சந்தோஷத்தில்...

வரும் சந்ததிகள்..

கண்ணா..so sweet..

கொஞ்சலும் ..கூத்தும்..


Happy janmashtami ..

கண்ணா வருவாயா

 கண்ணா வருவாயா...???


அம்மா..

பாப்பா கூக்கி (தூக்கியின் மழலை)

குட்டிப் பாப்பா கெஞ்ச..

கொஞ்சம் இருடா..

 கிருஷ்ணா உம்மாச்சி வருவாரே..

குடுகுடுனு ஓடி விளையாடுவாரே..

அவருக்கு இன்னிக்கு  birthday ஆச்சே..

பார்ட்டிக்கு எல்லாம் ரெடியாக்கனுமே..

சிணுங்கலுடன்...பின் சமாதானம்..

பாயசம் கண்டதும்..

பரவசம் வந்தது..

என் வீட்டு கிருஷ்ணிக்கு.

கண்ணா...உம்மாச்சி வருவார்

உட்கார்ந்து சாப்பிடுவார்..

அப்பறந்தான்..நமக்கு..


தூங்க வெச்சு அவளை..

குட்டிக் கால் போட்டு..

மற்ற வேலை கவனிப்பு..

அனுமாஷ்ய சக்தி ஒன்று

ஹாலுக்கு என்னை இட்டுசெல்ல

என் சுட்டி வால்..

ஒன்னு வுடாமல்..

காலை அழிக்கும் மும்முரத்தில்..

அம்மா..அழுக்கு..!!!

என்ன சொல்வேன்?


நெய்வேத்தியம் ரெடி..

என் வீட்டு குட்டியின் ..

அலைபாயும்..

கையை கட்டி..

ஓம் பூர் புவ ஸு்வ..சொல்லி..

எல்லாம் ஆச்சு..

மம் மம் சாப்பிடலாமானு ..கேட்க..

இடதும் வலதுமாய் வேகமாய்த் 

தலை ஆட்டி..

மம் மம் வேண்டாம்....

அது கிருஷ்ணா க்கு..

பண்ணிய பட்சணங்கள்.

படைத்த பழங்கள்..

பரிதாபமாய் எனை பார்க்க..

பண்படனுமோ நாம இன்னும்..

பசினு பாயசம் கேட்டது..

அந்த மாயக் கண்ணன் தானோ..???


கண்ணா வருவாயா..

எப்போவாவது வந்திருக்கியா...???

கேள்வி ....குடைய நான்..!!!


Happy janmashtami

Sunday, August 9, 2020

ஆயிரம் இருந்தும்..வசதிகள் இருந்தும்...

 ஆயிரம் இருந்தும்..வசதிகள் இருந்தும்...


வெடித்து வெளியேறிய கடுகு..

வா வேகமா என்றது

வெந்து முடித்த வாழை

வதக்கி எடு என்றது

விசிலடுத்து ஓய்ந்த குக்கர்

வெடிக்கட்டுமா நான் என்றது..

வாசனை போய்விடுமே.

வந்தணை என்றது ரசம்

வத்தல் போட்ட குழம்போ

வாட்டாதே எனை என்றது

வெக்கையில் வெந்த இட்லி

வெளியே விடென விரட்டியது


நிமிஷத்தில் சுடும் மின்சார அடுப்பு

நாலு எரிப்பானுடன் நாகரீக அடுப்பு

நளபாகம் தயாரிக்கும்் நுண்ணலை அடுப்பு

நாலும் இருப்பினும்..நம்மிடமோ 

இரண்டே கைகள்..

இதை எடுப்பதா..அதை எடுப்பதா

இரண்டுங் கெட்டான் நிலமை..

உள்ளம் ஏங்குதே..

உருண்டோடிய நினைவாலே..


ஊதி எறிந்த விறகடுப்பு

ஊற்றி எறிந்த கெரோசின் ஸ்டவ்வு

ஊருக்கே பெரும் படையல் நடப்பு

உண்மையில் தருமே இன்றும் வியப்பு.

கும்பிடு போடச் சொல்லுதே

கூட்டத்துக்கே பசியும் ஆற்றிய

குடும்பத் தலைவிகள் அவர்களுக்கே..

Monday, August 3, 2020

போளியா..போதி மரமா

போளியா ...போதி மரமா.!!!

போகிப் பண்டிகை என்றாலே
போளியில்லாமல் உண்டோனு
புதுக்கோட்டை ராசா..(அட..என் அப்பாதான்)
போட்டாரே ஒரு போடு..
என்னடா இது..இந்த
அகிலாவுக்கு வந்த சோதனைனு..
அரண்டு போய் ஆரம்பிச்சேன்..
ஆண்டவனை வேண்டினேன்.

இளகலான மாவு..கொஞ்சம்
இறுகலான பூரணம்..
உள்ளங்கை மட்டுமே..
உற்ற துணை யிங்கே..

பதினொன்றே போதுமென்று
பாகம் பிரித்து உருண்டைகள்.

எண்ணெயில் தோய்ந்த மைதா..
என்ன பாடு படுத்துதப்பா..
ஓட்டம் பிடிக்குதப்பா..
ஓட்டையும் விழுந்ததப்பா..
இரண்டாவது உருட்டி தட்ட
இரண்டாய் கிழிந்ததப்பா..
மூன்றாவது போளியோ..
மெத்தென்று இல்லாமல்
முறுகலாச்சு ஓரத்தில்..
நாலாவதோ ..
நான் வரலை விளையாட்டுக்கென
நடுங்கி ஒளிஞ்சதப்பா
அஞ்சாவது உருண்டையோ..
அஞ்சாதே என்னைக் கண்டு
அழகாய் உருட்டி..
அடைப்பாய் பூரணம்..
அமுதமாய் இனிப்பேன்
அனைவருக்கும் படைப்பாயென
ஆசியும் வழங்க..
அப்புற மென்ன..
ஆறு ..ஏழு..எட்டு.
அருமையாய் அடுக்கினேன்..
ஒன்பது..பத்து ..பதினொன்று...
ஒரு நொடியில் முடிக்க..

கை வண்ணம் காட்ட நினைக்கையில்
கைக்கொட்டி சிரித்தது காலியான பாத்திரம்.
போளி சொல்லும் பாடமாக
போதி மர ஞானியானேன்.

பாதி வாழ்க்கை போனபின்னே
பாதை தெரிய ஆரம்பிக்கும்..
பார்த்துடலாம் வாழ்ந்தென்று
பறக்க நினைக்கையிலே
படக்கென முடிந்துவிடும்..

பிறந்ததுமே கற்றறிய
பள்ளிக் கூடமிங்கேது
படபடப்பாய் கடக்கையிலே
பாடமாகும் வாழ்க்கையிங்கே..

படைத்தவன் தந்தான்..இந்தப்
பாத்திரம் (வாழ்க்கை)நாடகத்தில்
படைப்போமே சரித்திரம்..
போளி தந்த போதனை..
போலியில்லை..உண்மை..உண்மை.

Wednesday, June 17, 2020

எந்தன் பொன் வண்ணமே..

எந்தன் பொன் வண்ணமே..

To all the wonderful daughters..

ஓடி யாடும் இவள் பின்னே
ஓடுமென் காலம் ஓர் நொடியில்..

கொலுசின் ஓசை சொல்லிடுமே
குறும்பாய்  இவளும்  ஒளிந்தாலும்..
கலகல சிரிப்பில் கவலையோடும்
கண்ணும் கலங்கையில் பூமி நழுவும்.

பூப்போட்ட பாவடை சரசரக்க
பார்த்துப் பார்த்து நடந்தபடி
புன்னகை பூத்து வருவாளே
புவியின்பம் யாவும் தருவாளே

உற்றத் தோழி இவளெனக்கு
ஊர்கதை பேசும் வேளையிலே..
கையும் கோர்த்திவள் நடக்கையிலே
கோடியின்பம் வந்து கூடுமங்கே..

கல்வி,கடமை, கல்யாணமென்றே
கடலும் கடப்பாள் ஒருநாளில்

உடுத்திய உடைகளும் புகைப்படமும்
உள்ளத்தில் என்றும் பசுமையாகும்.

நாட்கள் ஓட நரையும் கூட
நடையும் தளரும் நாளும் வரும்
தாயாய் அவ ளங்கே மாறிடுவாள்
தள்ளாமை எனக்கும் வரும் போது..

அப்பா

#தந்தையர்தினம்
அப்பாவும் நானும்..

வெளியே போய்விட்டு வந்து விட்டெறியும் ஸ்கூட்டி சாவியும் வீட்டு சாவியும் மீண்டும் அதற்கான தூக்கில் தொங்கும்.
படித்து விரிச்ச புத்தகம் சரியா அடுக்கப்படும்.
நான் வெளியே கிளம்பும் முன் வானிலை அறிக்கை படித்து குடை எடுத்துக்கோ என்று நீட்டும் கை.
'குடை எங்கே ? ' வெளியேயிருந்து வந்ததும் தேடும் கண்கள்.
'தலையை துடைச்சுக்கோ' துவாலையை ரெடியா நீட்டும் கைகள்.
மத்தியானம் கொஞ்சம் கண் அயர்ந்தால்..ஜுரமா என்று தொட்டுப் பார்க்கும் வாத்ஸல்யம்.
'அம்மா பண்ற கூட்டு பண்றியா? கேட்கும் போது அவர் இழப்பின் காயம்.
'ஒரே ஒரு அப்பளம் சுட்டுத் தரியா? கேட்கும் அந்த கண்கள்.

அப்பா..live the present நு நான் லெக்சர் அடிக்க..
கொஞ்சம் past க்கும் போவேன் அவ்வப்போது.
இப்படியும் இருந்தோம்..இருக்கிறோம் இன்னும்.

மோட்டார் ரிப்பேரா..
த்ண்ணீர் ஊற்றி அவர் air lock சரிபண்ண..
தண்ணீர் வருதானு மொட்டை மாடியில் நான் பார்ப்பேன்.

TV ல கோடு கோடாய் வரும்..
திருப்பிச் சரி செய்வார் ஆண்ட்டெனாவை..
இன்னும் கொஞ்சம் திருப்பு..தெளிவா இல்லையென்பேன்.

சைக்கிள் துடைத்தால்..
துணியோடும் எண்ணெய்யோடும்
துணையாய் இருப்பேன்..

புதிதாய் செடி வைத்தால்..
அழகாய் அவர் குழி தோண்ட
அதில் உரமும் நான் இடுவேன்.

பரணியில் சாமான் எடுத்தாலோ
படுகெட்டியாய் ஏணியைப் பிடித்திடுவேன்.

ட்யூப் லைட் மாற்றயிலே
டார்ச்சாய் நான் இருப்பேன்
இரண்டு சக்கர வாகனத்தில்
இருவரும் வலம் வந்தோம்..
அன்று கற்றது
இன்றும் கைக்கொடுக்குது.

பழுதென்றவுடன் பதறாமல்
பார்ப்போம் ஒருகையென்று
மராமத்து வேலையெல்லாம்
மகிழ்ச்சியாய் செய்வேனிங்கே

மழையும் ரசித்தோம்..
மாட்சும் ரசித்தோம்.
எதிரணி அடித்தாலோ
எகிறிடும் இவர் ரத்த அழுத்தம்
இந்தியா விளையாடையிலே
இருப்புக் கொள்ளாமல் தவிப்பு.

எண்பதை தாண்டினாலும்
இளமை திரும்பும் இவருக்கு
இந்தியா- பாக் மாட்ச் என்றாலே..

arguments இருந்தாலும் அதில் மேலோங்கி நிற்பது அன்பு ஒன்றே.

இன்னொரு கொசுறு தகவல்.
என் வூட்டுக்காரரையும் நான் 'அப்பா'னு தான் கூப்பிடுவேன்.
எல்லாப் பெண்களுக்குமே தன் அப்பா மாதிரி வாழ்க்கைத் துணை கிடைக்கணும்னு ஆசை உண்டு.
பொறுமை, எளிமை எல்லாம் சேர்ந்த என் பெண்களின் அப்பா..
எனக்கு என் இரண்டு பெண்களோடு அப்பாவையும் சேர்த்து மூன்று குழந்தை என்றால்..
என் கணவருக்கும் அதே தான்.
என் ரெண்டு பெண்களோடு சேர்த்து நானும் ஒரு வளர்ந்த குழந்தை.
எனக்கு வாழ்வைத் தந்த, என் வாழ்வில் வந்த அப்பாக்களுக்கு அன்பைத் தவிர தர வேறொன்றுமில்லைல் என்னிடம்.
The two R's  ( Raj & Ramasami Srinivasan)
Make my life beautiful.
happy father's day