Thursday, June 17, 2021

குட்டிக்கதை- அப்பா

 #அப்பா

#குட்டிக்கதை


' இந்த வீட்டை வாடகைக்கு விட்டுட்டு..நீயும் அம்மாவும் என்னோட பெங்களூருக்கு கிளம்புங்கோப்பா.

அம்மாவுக்கு உடம்பே முடியல..உங்களுக்கும் ஏதோ ஒண்ணு படுத்தறது..எங்களுக்கும் ஸ்ரீரங்கத்துக்கும் பெங்களூருக்கும் ஷட்டில் அடிக்க முடியலை'..

மகன் சிவா ..அவன் பிறந்து வளர்ந்த அந்த "சுகவிலாஸ்' வீட்டின் ஹாலில் சோபாவில் உட்கார்ந்து கொண்டு தன் விண்ணப்பத்தை வைத்தான்..


"ஆமாம்ப்பா..இப்போ ..ஸ்வாதியும் 11 வது போயாச்சு.. ஸ்கூள்,ட்யூஷன், இத்யாதினு..ஒரு சனி ஞாயிறு கூட ஃப்ரீ இல்ல..நீங்களும் அம்மாவும் எங்க கூட இருந்தால்..உங்களுக்கும் நல்லது ப்பா..'மருமகள் ரேவதி சொல்லி கொண்டிருந்தாள்..


" அவா சொல்றதும் சரிதான்.. பாவம் மாசம் பதினைஞ்சு நாள் டூர் வேற போக வேண்டியிருக்கு அவனுக்கு..இங்க வருவானா..ஆபீஸ் வேலையை பார்ப்பானா..? ' அம்மா வசந்தா தன் பங்குக்கு பேசினாள்..


" போடி போ..எதோ இந்த காவிரிக் கரையில என் கடைசி மூச்சு விடணும்னு ஒரு ஆசை..அந்த ரங்கநாதன் இருக்கற ஊரை விட்டு என்னை கிளப்பறியா?" கோபத்தில் விருட்டென்று உள்ளே சென்று விட்டார் ராமநாதன்.


" நான் அப்பாவை சமாதானப் படுத்தறேன்..நீங்க ஊருக்கு கிளம்புங்கோ' அம்மா தைரியம் கொடுத்தாள்.


பாவம் .ஓடியாடி வேலை செய்த அம்மாவுக்கு, ஒரு வருஷம் முன்னாடி பாத் ரூமில் வழுக்கி விழுந்ததிலிருந்து ஒன்று மாற்றி ஒன்று படுத்திக் கொண்டே இருக்கு.

வெளிச் சாப்பாடும் பிடிக்க வில்லை..


ஒருவழியா..அப்பா அம்மாவும் பெங்களூர் வந்தார்கள்.


அபார்ட்மெண்ட் வாழ்க்கை..


அப்பா கீழே போய் பார்க்கில் உட்கார்ந்து ,குழந்தைகள் விளையாடறதைப் பார்ப்பார். சாக்லேட் எடுத்துண்டு போய்டுவார்.

சாக்லேட் தாத்தா..அவருக்கு அது தான் பேர்.


இருந்தாலும்..அவருக்கு ஸ்ரீரங்கம் நினைப்பு தான். தினமும் யாராவது ஒரு ஃப்ரண்டுக்கு ஃபோன் பண்ணி, பெருமாளுக்கு அலங்காரம் , கடைத்தெரு பத்தி பேசாமல் இருக்க முடியாது.


பெங்களூர் குளிர். ஒத்துக் கொள்ளவில்லை அவருக்கு..

அடிக்கடி இருமல்,சளி கட்டல்..

சில நாள் கீழே கூட போக முடியாமல் ரூமில் அடைந்து கிடக்க ஆரம்பித்தார்.


ஏன் ஆச்சு..எப்படி..?

கண் சிமிட்டும் நேரத்தில் ..மூச்சு விட கஷ்டப்பட்டவர்..தன் இறுதி மூச்சை விட்டார்.


"ரெடியா இருங்கோ நாளைக்கு..ஸ்ரீரங்கப்பட்டினம் போய் அப்பாவோட அஸ்தியைக் கரைக்கணும்..'..


" மாமா..இங்கேயே பண்ண முடியாதா?'


" அங்கே பண்ணால் விசேஷம்..என்ன ஒரு மூணு மணி நேரம் கார்ல போய்ட்டு வந்துடலாம்' வாத்தியார் சொல்லிவிட்டு கிளம்பிட்டார்.


அங்கே..பொங்கும் காவிரியில்..ஆதிரங்கம் தல வாசலில்..அவர் அவனோடு கலந்தார்.


வீட்டுக்கு வந்தவனை..சிரித்தபடி அவர் ஃபோட்டோ வரவேற்றது..

" நீ லக்கிப்பா' ..நீ ஆசைப்பட்ட காவிரிக்கரையில் அந்த ரங்கனோட சேர்ந்திட்ட'/என்று அழ ஆரம்பித்தான் சிவா..

No comments: