#திரைக்குப்பின்
#குட்டிக்கதை
"காக்க ..காக்க ..கனகவேல் காக்க..' சஷ்டிக் கவசம் பாடிக் கொண்டிருக்க..சாம்பிராணி மணம் அந்த வீட்டையே பக்தியில் ஆழ்த்திய அந்தக் காலைப் பொழுது..
" கண்ணா..டிஃபன் ஒழுங்காச் சாப்பிட்டு போப்பா..இந்த வயசில் சாப்பிடாமல் எப்படி?' வாஞ்சையுடன் தன் மகனின் தலையை வருடிய அந்த வீட்டு எஜமானி சிவகாமி.
டேபிள் மேல் லேசாக சாம்பார் சிந்திக் கிடந்தது..வந்ததே..கோவம்..' " "உங்களையெல்லாம் கட்டி வேலை வாங்கறதுக்குள்ள..வாங்க சம்பளத்துக்கு ஒழுங்கு வேண்டாம்..' அவள் அதட்டல் ..
அதற்குள் டிரைவர் வாசலில் வந்து நிற்க' என்ன கண்ணன்..குழந்தை உடம்பு எப்படியிருக்கு..? செலவு பத்தியெல்லாம் கவலைப்படாதே..' அவளின் கருணை முகம்.
" அம்மானா அம்மா தான்' மகிழ்ச்சியில் காரை ரெடி செய்ய கிளம்பினான்.
சிவகாமி எண்டர்பிரைஸ் எம்.டி என்றால் சும்மாவா?
கணவன் இறந்த பிறகு, அந்த பிஸினஸ் முழுதும் கவனித்து கொள்பவளாச்சே..
ஃபாக்டரிக்குள் நுழையும்போதே அவள் கண்ணில் படாமல் எதுவும் தப்பிக்க முடியாது.
" செக்யூரிட்டி..யூனிஃபார்ம் ஏன் கசங்கி இருக்கு? என்பதில் தொடங்கி..
" இந்த மிஷினின் சத்தம் ஏன் சரியா இல்லை..ஆறுமுகம் என்ன கவனிக்கிறீங்க நீங்க?..குரலில் ஒரு அதிகாரத்துடன் தன் கேபினில் நுழையப் போனவள்..
"ஹேய்..ரோஸி...இன்னிக்கு இந்த புடவையில் ரொம்ப அழகா இருக்கே?..'
மேடம் தன்னை கவனித்து பாராட்டியது செக்ரட்டரி ரோஸிக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை..
தன் சீட்டில் உட்காரப் போனவள் அங்கே போட்டோவில் மாலையுடன் சிரித்துக் கொண்டிருந்த கணவனைப் பார்த்து..
' இப்படி என்னை தனியா விட்டுட்டு போய்ட்டீங்களே..நம்ம பையன் இந்த நாற்காலில வந்து உட்காரும் வரைக்கும் எனக்கு மனசுலயும் உடம்புலயும் தெம்பு கொடுங்க..' நடுங்கும் குரலில் வேண்டிக்கொண்டு..
கண்ணீரைத் துடைத்துக் கொண்டு..
இருக்கையில் அமர்கையில்..
"மேடம்..பிரமாதமா பண்ணிட்டீங்க..
ஒவ்வொரு ஷாட்டும் அற்புதம்..அந்த மெகா சீரியல் யூனிட்டே கைத் தட்டியது .
'டைரக்டர் சார்..நம்ம சுதா எங்க கூப்புடுங்க"....சொல்லிக் கொண்டிருந்தாள்
சிவகாமி ..அதான் சின்னத்திரை ஸ்டார் ஊர்வசி.
" சொல்லுங்க மேடம்'..வந்தாள் சுதா.
"இதப்பாரும்மா..கஷ்டப்பட்டு நடிச்சிருக்கேன்.. எல்லா expression ம் உங்க குரலில் அமர்க்களமா.. டப்பிங்கில் கொண்டு வந்துடணும்..சரியா?'..
அந்த காரெக்டராவே மாறிடணும் ..புரிஞ்சதா..?
நாளைக்கு டெலிகாஸ்ட்டில் நம்ம சீரியல்
டி.ஆர்.பி ஏறணும்..'..
ஊர்வசி சொல்லிக் கொண்டே போக..
அவள் சொந்தக்குரல்..
கேட்கும்படி இல்லை..
No comments:
Post a Comment