Thursday, June 17, 2021

குட்டிக்கதை-முதிர்ச்சி

 #முதிர்ச்சி


#குட்டிக்கதை


" அம்மா..எனக்குத்தான் ஜன்னல் சீட் வேணும்' ட்ரெயின்ல் ஏறினதுமே குதிக்க ஆரம்பித்தான் ஆகாஷ்.


" கண்ணா..முதல்ல நம்ம லக்கேஜ் வெக்கலாம்டா..கொஞ்சம் சும்மா இருக்கியா..அனும்மா..இவனைப் பிடிடா '..

பெண்ணுக்கு கட்டளை இட்டுக் கொண்டிருந்தாள் ஜமுனா..இந்த வாண்டுகளின் அம்மா..

" அம்மா..நோ..எனக்குத் தான் அந்த விண்டோ சீட் வேணும்..' அனுவும் சுருதி சேர்க்க ஆரம்பித்தாள்..

வியர்க்க விறுவிறுக்க ..சூட்கேஸ்களை அடுக்கிக் கொண்டிருந்தவளுக்கு கோபமாய் வந்தது..

" கண்ணப்பா..அவன் உன் தம்பி தானே..

அவனுக்கு நீ அட்ஜஸ்ட் பண்ணிக்க வேண்டாமா?..

"போம்மா..எப்பவுமே நீ இப்படித்தான்..' அழ ஆரம்பித்தாள்.

" சரி..பாதி நேரம் நீ..பாதி நேரம் அவன்'..

ஜமுனா சொல்ல..அனு ஒத்துக் கொண்டாள்.

இருந்தாலும் ஆகாஷோடு இடுக்கி உட்கார்ந்து கொண்டு . வேடிக்கைப் பார்த்துக் கொண்டு வந்தாலும்..அந்த ஜன்னல் ஓரம் காற்று முகத்திலடிக்க உட்காரும் சுகம் ..கிடைக்காத சோகம்.

பாதி தூரம் வந்ததும் ..

அம்மா..இப்போ என் டர்ன்..நான்தான் ஓரத்திலே உட்காருவேன்' ..அனு வேடிக்கை பார்க்க ஆசையாய் ஓரத்தில் உட்கார்ந்தாள்.

ஆனால் அவள் அதிர்ஷ்டம்....இருட்ட ஆரம்பித்தது..

"ஒண்ணுமே தெரில போம்மா'..சொல்லிக் கொண்டே தூங்கி விட்டாள்.


ஒவ்வொரு பயணமும் இப்படித்தான்..


அனுவுக்கும் ஆகாஷுக்கும் வெறும் இரண்டு வயது வித்தியாசம் தான்.

" அக்கா..நீதான் விட்டுக் கொடுக்கணும்..'.." நீ பெரியவ இல்ல..பாவம் இல்லையா தம்பி'..

எல்லா விஷயத்திற்கும் இதே பேச்சு கேட்டு வளர்ந்தவள் அனு.

ஆனால்..என்றுமே தம்பி மீது அலாதி பாசம்..


பள்ளிப் படிப்பு,கல்லூரி முடித்து...இப்போது ஒரு நல்ல வேலையில் அமர்ந்தாள் அனு.


மாதத்தில் பதினைந்து நாள் வெளியூர்ப் பயணங்கள் தான்.


"விண்டோ சீட்".. புன்னகையுடன் விமானப் பணிப் பெண் அவள் சீட் நம்பர் சொல்லும்போது  ஒரு அலாதி சந்தோஷம்.


ஆகாஷும் இப்போது கடைசி வருடம் படிக்கிறான்.அதற்கு பிறகு அவனும் மேல் படிப்புக்கு சென்று விடுவான்..


இப்போதெல்லாம் இவர்களும் இருவரும் சேர்ந்து பயணம் செய்யும் வாய்ப்பே கிட்டவில்லை..


இதோ..இன்றும்..மீண்டும் அவள்..அதே ட்ரெயினில்..ஏஸி கம்பார்ட்மெண்ட்டில் ஜன்னலோர சீட்டில் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள்..


அம்மாவுடனும் ஆகாஷுடனும் பாட்டி வீட்டுக்கு சென்ற பயணங்கள்..அந்த ஜன்னல் சீட்டுக்கு நடந்த சண்டைகள்,அழுகை ..ஒவ்வொன்றும் அவள் கண் முன் வந்தது..


மனதுக்குள் சிரித்துக் கொண்டாள்.


எதிர் சீட்டில் ஒரு பெண்மணி வந்து உட்கார்ந்தாள்..கூடவே இரண்டு குட்டிப் பையன்கள்.


" அம்மா..எனக்குத்தான் ஜன்னல் சீட்' சின்னனவன் அழ..

" நான்தான் உட்காருவேன் ..' பெரியவன் மல்லுக்கு நிற்க..


" நீ பெரியவன் இல்லையா..தம்பிக்கு விட்டுக் கொடுப்பா' ..அந்த அம்மா பேசினாள்..


அன்று ஜமுனா பேசிய அதே வசனம்..

சின்னவன் ஜன்னலோரம் உட்கார..பெரியவன் பாவம்..இடுக்கிக் கொண்டு அவன் பக்கத்தில்..


இவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த அனு..அந்த பெரிய பையனைப் பார்த்து..


" வரியா இங்கே..என்னோட இந்த விண்டோ சீட்ட்ல உட்காறியா?'

கண் சிமிட்டி கேட்கவும்..துள்ளி குதித்து ஓடி வந்தான் .


.அவர்கள் இருவரின் உரையாடலைக் ரசித்தபடி..

ஏதோ சாதித்து விட்ட மகிழ்ச்சியில் அனுவுக்கு இந்த ஜன்னலோரச் சீட் கிடைக்காத பயணமும் இனித்தது.

No comments: