Thursday, June 17, 2021

Madhyamar- நெஞ்சம்_மறப்பதில்லை

 #நெஞ்சம்_மறப்பதில்லை.


#குட்டிக்கதை..என் கதையும் கூட


"லிஸ்ட் படி எல்லாம் எடுத்துக்கணும். அங்கே போய் திண்டாடக் கூடாது. கடை கண்ணிக்கு ஒரு குறைச்சலில்லை..

ஆனா நேரம் எங்கே?. போனவுடன் ஒரு காப்பி ☕குடிக்கணும் .

காப்பி பவுடர் ஒரு நாலு ஸ்பூன் எடுத்து வெச்சாச்சு. ஃபில்ட்டர் ஞாபகமா எடுத்துக்கணும். சக்கரை அங்கே எப்படியும் இருக்கும். 


வெளில கிளம்பறத்துக்கு முன்னாடி ஒரு ஸிம்ப்பிள் டிஃபன் சாப்பிடணும்.


 வெண்பொங்கல் கூட ஒரு பருப்பு கொத்சு பண்ணிடலாம். ஒரு டம்ளர் அரிசி, பயத்தம்பருப்பு, இஞ்சி,பச்சை மிளகா, இரண்டு வெங்காயம்,தக்காளி கடுகு,ஜீரகம்,மிளகு ஒரு குட்டி பாட்டில்ல எண்ணெய், நெய் எல்லாம் மூட்டை கட்டியாச்சு. கிளம்பியாச்சு . 

 

விடியகாலம் ஊர் வந்து சேர்ந்தாச்சு.

 plan பண்ணினபடி ஒவ்வொரு வேலையும் செஞ்சு ரொம்ப நாளா பட்டினியா ் காத்திண்டு இருக்கும் சாமிக்கு நைவேத்தியம் பண்ணிட்டு காக்காவை கூப்பிட ஒண்ணு கூட திரும்பிப் பார்க்கலை. 


 பழக்கமான காக்கா எல்லாம் இப்போ எங்கே போச்சு. என்னோட குரல் மறந்து போச்சா..என்ன? விஜிக்கு சங்கடமாக இருந்தது.

 

அவள் கரைஞ்சது தான் மிச்சம் .  


வாசலில் காவலுக்கு உட்கார்ந்திருந்த சுந்தரம் ஐயாவைக் கூப்பிட்டு டிஃபனையும்  கொடுத்து அவரோட ஆஸ்தான கப்பில் காப்பி கொடுத்த போது..


'எம்புட்டு நாளாச்சும்மா.. இப்படி கூப்பிட்டு சாப்பாடு போட ஆளே இல்லாம போச்சு.


 " நான் அருகம்புல் பறிச்சு வெக்கற நேரம்..

 "சுந்தரம் காஃபி ,பிஸ்கட் வெச்சுருக்கேன்னு' குரல் வந்துடும்.

 

  அதெல்லாம் ஒரு காலமா போய்டிச்சு.

   இப்போ கூட இங்கே நம்ம அம்மா நடமாடற மாதிரியே இருக்கும்மா..அவர் சொல்லவும் மளுக் கென்று அவள் கண்ணில் நீர்..

   

ஆமாம்..அம்மா இல்லா அம்மா வீட்டுக்கு வருவது ..இப்போ பழகிப் போனாலும் ..அவள் சுற்றி சுற்றி வந்த வீடு, அவள் சுவாசம் நிறைந்த வீடு,

அவள் குரல் எதிரொலித்து கொண்டிருந்த வீடு,அவள் தொடாமல் ஏங்கிக் கொண்டிருந்த பாத்திரங்கள்...

 கலைக்க மனமில்லாமல் சிந்தனைகளுடன் விஜி.

 


தோட்டத்தில் வளர்ந்திருந்த துளசியும், அதில் அமர்ந்த்திருந்த பட்டாம்பூச்சியும் ..எப்பவும் போல சந்தோஷமாய்..

No comments: