காலை நேர ராகமே..
கோயில் மணி யோசை..
குயில்களின் குக்கூ..
பூவெல்லாம் ..கேட்டுப்பார் என் விலை
என்று பெருமையில்..
மூட்டையிலிருந்து விடுதலை மூச்சு விட ..
உருண்டோடிய உருளையும் கோஸும்.
களை கட்டிய.. காலை மார்க்கெட்.
அருகம்புல்லும் அலோவேராவும்
அதிகாலைப் பானமாய்..பாண்டத்தில்
முளை கட்டிய பயறு
மும்முரமாய் வியாபாரம்.
ஓலாவும் ஊபரும்..ஒட்டமாய் ஓட்டம்.
கம்பெனி பஸ்ஸுக்கு காத்திருக்கும் கூட்டம்.
காண்ட்ராக்டர் வேலை தருவாரா என
கவலையுடன் தினக் கூலி ஆட்கள்.
ப்ராஜக்ட் ..PTA .
படு கவலையில் அம்மாக்கள்
வண்டியில் பசங்களை இறக்கிவிட்டு
வெயிட்டைக் குறைக்க.
ஜாகிங் போறேன்னு
ஜகா வாங்கும் அப்பாக்கள்
அம்பது ரூபாய்க்கு பூ வாங்கின பின்னும்
அடுத்த வீட்டு காம்பவுண்டிலிருந்து
அலாக்காய் பறிக்கும் செம்பருத்தி
அம்பாளுக்கு உகந்ததென்று
அசட்டுச் சிரிப்புடன் ..மாமி.
இதெல்லாம் எப்போதும் தானே..
இழுத்து நிறுத்தியது ஒரு காட்சி.
' அங்கே சரியா குப்பையை பெருக்குங்க'
வாக்கருடன்..வயது முதிர்ந்த பாட்டி
அவர் ஆணைப்படி ..
' சொல்லு வேற எங்க குப்பை இருக்குனு '
சுவற்றைப் பிடித்தபடி..வாசலை
சுத்தம் செய்த தாத்தா..
ஒவ்வொரு விடியலும் ஒரு சேதி தரும்.
இன்று ஒரு சேதி எனக்கு கிடைத்தது..
உங்களுக்கு?
( வேலைக்கு ஏன் ஆள் வெச்சுக்கலை..இந்த கேள்வி மனசில் எழுந்தாலும்..இதில் அவர்களுக்கு ஒரு திருப்தி கிடைப்பது.வேறு எங்கு கிடைக்கும்)
No comments:
Post a Comment