Thursday, June 17, 2021

எந்தன் பொன் வண்ணமே..

 எந்தன் பொன் வண்ணமே..


To all the wonderful daughters..


ஓடி யாடும் இவள் பின்னே

ஓடுமென் காலம் ஓர் நொடியில்..


கொலுசின் ஓசை சொல்லிடுமே

குறும்பாய்  இவளும்  ஒளிந்தாலும்..

கலகல சிரிப்பில் கவலையோடும்

கண்ணும் கலங்கையில் பூமி நழுவும்.


பூப்போட்ட பாவடை சரசரக்க

பார்த்துப் பார்த்து நடந்தபடி

புன்னகை பூத்து வருவாளே

புவியின்பம் யாவும் தருவாளே


உற்றத் தோழி இவளெனக்கு

ஊர்கதை பேசும் வேளையிலே..

கையும் கோர்த்திவள் நடக்கையிலே

கோடியின்பம் வந்து கூடுமங்கே..


கல்வி,கடமை, கல்யாணமென்றே

கடலும் கடப்பாள் ஒருநாளில்


உடுத்திய உடைகளும் புகைப்படமும்

உள்ளத்தில் என்றும் பசுமையாகும்.


நாட்கள் ஓட நரையும் கூட

நடையும் தளரும் நாளும் வரும்

தாயாய் அவ ளங்கே மாறிடுவாள்

தள்ளாமை எனக்கும் வரும் போது..

No comments: