Thursday, June 17, 2021

குட்டிக் கதை-மன_நிறைவு

 #மன_நிறைவு

#குட்டிக்கதை


அந்த ரிஸார்ட்டை நோக்கி கார் கிளம்பியது. ஸ்டியரிங்கை பிடித்திருந்த லாவண்யாவுக்கு ஒரே டென்ஷன்.


"இந்த வேலை நமக்கு தேவையா? எத்தனையோ பேரை பார்க்கிறோம்..இவனிடம் மட்டும் எனக்கு ஏன் இப்படி ஈர்ப்பு ஏற்பட்டது?


நாம் செய்யறது பைத்தியக்காரத்தனமோ?

அங்கே போய்ட்டு அவன் இல்லனா..?

சிட்டியை விட்டு இவ்வளவு தூரம் ஓட்டிண்டு வந்தது வேஸ்ட்டாப் போய்டுமே?


அவன் சொன்ன இடத்தில் இருப்பானா?

அவனுக்கு என்னை ஞாபகமாவது இருக்குமா?


கூகிள் மேப் வழி சொல்ல..எங்கே செல்லும் இந்தப் பாதை பாட்டு கூட வர..


இவ்வளவு தூரம் போகிறேன் என்றால் அம்மாவும் விட மாட்டாள்.

பகவானே..பத்திரமா போய்ட்டு திரும்பணுமே..


போன மாதம்..

 இதே நாள் அவள் இங்கு வந்திருந்தாள்.

இந்த ரிஸார்ட்டில் தான் அவள் நெருங்கிய தோழியின் திருமணம்.

லாவண்யா உள்ளே நுழைந்ததுமே..

"ஹைய்யா..நம்ம குடும்ப ஃபோட்டோகிராஃபர்  லாவா வந்தாச்சு ' என்று பட்டுப் புடவையிலும் நகை ஸ்டாண்டிலும்.ஜொலித்தவர்கள் இவளைச் மொய்க்க ஆரம்பித்தனர்.


ஆம்..லாவண்யாவுக்கு போட்டோ எடுப்பது ரொம்ப பிடிக்கும். எந்த கல்யாணம் , பார்ட்டி என்றாலும் அவளை எல்லாரும் எதிர்ப்பார்ப்பார்கள்.

"நான் இப்படி நிக்கட்டுமா..இங்கே ஓக்கே வா..என் ஸ்மைல் ஓகேவா.. புடவை சரியா இருக்கா?'

ஆயிரெத்தெட்டு கேள்வி கேட்டாலும் புன்னகையோடு ஆசை ஆசையாய் எல்லாருடைய ஃபோட்டோவும் எடுப்பாள்.


அவளோட ஸ்பெஷாலிட்டியே..ஃபோட்டோ எடுத்த சூட்டில் எல்லாருக்கும் அழகாக ஆல்பம் செய்து அனுப்பி விடுவாள்.


கல்யாண ஃபோட்டோகிராஃபர் ஒரு மாதம் கழித்து , 

"சார்..இதிலேர்ந்து ஒரு நூறு ஃபோட்டோ செலக்ட் பண்ணி கொடுங்கனு சொல்லும்போது மாப்பிளைக்கும் பெண்ணுக்கும்  ஸ்வாரஸியமே இருக்காது.

candid pics எல்லாம் ஏற்கனவே வாட்ஸப்பில்லும் face book லயும் வலம் வந்து கொண்டு இருக்கும் ..லாவண்யா உபயத்தில்..


அன்றும் அப்படித்தான்..கல்யாண சாப்பாட்டை ஒரு பிடி பிடித்து விட்டு..அங்கேயே ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு..அப்போது எடுத்த ஃபோட்டோக்களையெல்லாம் ரசித்தபடி..அவரவருக்கு அனுப்பிக் கொண்டிருந்தாள்..


திடீரென்று..தன் பின்னால் யாரோ நிற்பதை உணர்ந்தாள்.

' ரொம்ப அழகா இருக்கு இந்த ஃபோட்டோ எல்லாம்' கண்கள் விரிய பேசினான்.


தன்  கசங்கிய வெளுத்துப் போன சட்டையை சரி செய்தபடி..

" என்னை ஒரு ஃபோட்டோ புடிப்பீங்களா? என்று கேட்டான்.


"அவ்வளவுதானே..இங்கே நில்லு..தலைய லேசா சாய்..கையைக் கட்டாதே..கொஞ்சம் சிரி..' ஆணைகளை பிறப்பித்து க்ளிக்கினாள்.

 ..' ..எனக்கு இந்த போட்டோ வேணுமே'..

 

 "உன் மொபைல் நம்பர் கொடு..அனுப்பிடறேன் ' லாவண்யா அவன் நிலைமை புரியாது பேச..

 

 "மொபைலா..அதெல்லாம் எங்கிட்ட ஏது?' அவன் பதில்.

 

" சரி..உன் அட்ரஸ் கொடு..நான் போஸ்ட்ல அனுப்பறேன்..'


 "அ..ட்...ரஸா.?


" அதோ அங்க கோயில் தெரியுது இல்ல..அதுக்கு எதிர்த்தாப்பல இருக்கு இல்ல..அதுதான் எங்க குடிசை..அனுப்பிடுவ இல்ல..' 

 ஆணை இடுவது போல பேசினான்.

 

 

 உன் பேரு?

 ' விஷ்ணு'..

 "அங்க வந்து கூப்டீங்கன்னா நான் வந்துடுவேன்..'

 

 " அழகா ..கண்ணாடிக்குள்ள இருக்கற மாதிரி ..செவுத்தில மாட்டற மாதிரி..செஞ்சு தாரீகளா..?

 

 சொல்லிவிட்டு ஓட்டம் பிடித்து ஓடினான் அந்த குட்டி வாண்டு விஷ்ணு..

 

 இன்று அவனைத் தேடித்தான் லாவண்யா வந்து கொண்டிருக்கிறாள்.

 

 அவள் கார் அங்கே நின்றதும் வேடிக்கை பார்க்க கூடி விட்டனர்.

 "விஷ்ணு..விஷ்ணு.." இங்க தானே விஷ்ணு வீடு? அவள் கேட்டுக் கொண்டிருக்கும்போதே ...தலை தெறிக்க ஓடி வந்தான் விஷ்ணு.

 

 "இந்தா..நீ கேட்ட..உன்னோட ஃபோட்டோ.."

 கண்ணாடிச் சட்டத்திற்குள் கண் சிமிட்டியது அவன் கள்ளம் கபடமில்லாத சிரிப்பு.

 

 வெட்கத்துடன் சட்டைப் பொத்தானைத் திருகியபடி .."டேங்க்ஸ் " என்று  நாணிக் கோணி நின்ற அவனை..

 அந்த அழகான தருணத்தை க்ளிக்கினாள் லாவண்யா..தன் ஆல்பத்தில் சேர்த்தாள்..

 

இந்த ஃபோட்டோவும்..அதன் ஃப்ளாஷ் பேக்கும் எப்போது நினைத்தாலும்  அவளையறியாமல் ஒரு புன்னகையும் சேர்ந்து வரும்..


எதிர்ப்பாராத ஒன்று ..நம் கைக்கு கிடைக்கும் சந்தோஷமே அலாதி தானே?

அத்தகைய  சந்தோஷம் பெறுவதை விட..தருவது இன்னும் சிறப்புதானே?


(அது லாவண்யா கதை..அவள் கொடுத்து விட்டாள்..

இங்கே விஷ்ணுப் பிரியாவுடன் அகிலா...அடுத்த முறை போகும்போது தருவதற்கு ..ரெடியாக..😃)

No comments: